இந்திய விடுதலைப் போராட்டம் அல்லது பிரித்தானிய எதிர்ப்புக்கான போராட்டக் களத்தில் முன்னிலை வகித்தது தமிழ்ச் சமூகம்தான். இந்த உண்மை நிலையை எடுத்துச் சொல்ல எனக்குக் கிடைத்த ஒரு பெருஞ் சான்று மாவீரன் ஒண்டிவீரனின் வரலாறு.

கி.பி. 1857இல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் அல்லது அச்சமயத்தில் வட இந்தியாவில் எழுந்த கிளர்ச்சிகளையே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் சிப்பாய்க் கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போராட்டம் என வர்ணிக்கிறார். எனினும் பிரித்தானிய அரசு நிர்வாகம் உருவாக்கப்படுவதற்கு முன்னதாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்திலிருந்தே, அதாவது சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாகவே பிரித்தானிய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி விட்டது.

தென் தமிழகத்தில் பாளையக்காரர்களாக விளங்கி பிரித்தானிய எதிர்ப்பால் தம் உயிரை ஈந்த மாவீரர்களும் உண்டு. புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் இவர்களின் பங்கு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே.

ஆனால் சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக மாபெரும் போராளிகளின் வரலாறு குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. அதை மீட்டெடுக்கின்ற மாபெரும் பணியில் இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவான சனநாயகச் சக்திகளும் எடுத்துள்ள முயற்சியின் வெளிப்பாடே ஒண்டிவீரன், சுந்தரலிங்கம் போன்றோரின் வரலாற்றுப் பதிவுகள். அந்த வரிசையில் வரலாற்றில் தனித்து நிற்கின்ற ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரனின் வரலாற்றை நாம்தான் அறியச் செய்ய வேண்;டும்.

இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கே அமைந்துள்ள 'நெற்கட்டும் செவ்வல் கிராமமும்' அதனைச் சுற்றி 20 கி;.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமங்களுமே 'நெற்கட்டும் செவ்வயல் பாளையமாகும்'. கி.பி.1750 காலகட்டத்தில் விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் தமிழகம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் நெற்கட்டும் செவ்வயல் பாளையம். அக்காலகட்டத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்புள்ளது.

விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் நெற்கட்டும் செவ்வயலிலிருந்து வரி வசூலிக்கும் உரிமையை முகலாய மன்னர்கள் பெற்றிருந்தனர். தங்களது ஆடம்பரமான செலவினங்களாலும், சூழ்ச் சியாலும் முகலாய மன்னர்கள், வரி வசூலிக்கும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களின் கிழக் கிந்தியக் கம்பெனிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். வணிகம் செய்து பிழைக்க வந்த பிரித்தானியர்கள் மிகக் கடுமையான வரிகளை உருவாக்கிச் சுரண்டலின் உச்சகட்டத்தை அடைந்தனர். இந்தச் சுரண்டலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்; மாவீரர் புலித்தேவன.; அவருக்குத் தலைமைப் படைத் தளபதியாய் ஒப்பில்லா வீரனாகக் களத்தில் நின்றவர்தான் ஒண்டிவீரன்.

வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியாரும் இணைந்து கி.பி.1755இல் முதல் போரைத் தொடுத்தனர். இப்போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் ஒண்டிவீரன். தொடர்ந்து கங்கை கொண்டார் போர், ஆழ்வார் குறிச்சிப் போர், வாசுதேவ நல்லூர்ப் போர் என மூன்று தாக்குதல்களைக் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய போதும் மண்டியிடவில்லை மானமிகு ஒண்டிவீரனும், புலித்தேவனும்.

எனினும் தொடர்ந்து அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆங்கிலேயரின் நவீன பீரங்கிகள், துப்பாக்கிகளுக்கு முன்னால் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குத் தமிழர் படையின் வாளும் ஈட்டியும் தாக்குப்பிடித்ததே மாபெரும் வெற்றியாகும். மூன்று முறை தோற்று ஒடிய ஆங்கிலேயத் தளபதிகள் ஹெரான், ய+சுப்கான், மாப+ஸ்கான் போன்றோர் மிகப் பெரிய படைபலத்தோடு கி.பி.1767இல் நெற்கட்டும் செவ்வயலைத் தாக்கிய போது புலித்தேவன், சங்கரன்கோவிலில் உள்ள ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்தார். ஒண்டிவீரன் தன் மக்களோடும், புலித்தேவனின் வாரிசுகளோடும் பாளையத்தி லிருந்து வெளியேறி அடுத்த கட்டத் தாக்குதலுக்குத் தயாரானார். இந்நிலையில் ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்த புலித்தேவன் அங்கேயே சோதியில் அய்க் கியமானதாகச் சொல்லப்படுகிறது. வழக்கமாகத் துரோகத்தால் அல்லது சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர்களைத்தான் சோதியானதாகக் குறிப்பிடுவார்கள். (உதாரணமாக நந்தனார் வரலாறு)

தலைவனை இழந்த பாளையத்து மக்களுக்குத் தலைவனாகப் பொறுப்பேற்று அடுத்த கட்டத் தாக்குதலுக்கு நேரம் பார்த்துக் காத்திருந்தார் ஒண்டிவீரன். அப்போது ஆங்கிலேயர் இப்படிச் சவால் விடுத்தனர்: “உங்களில் எவனாவது வீரனாயிருந்தால், எங்கள் முகாமிற்குள் ஊடுருவிப் பட்டத்துக் குதிரையையும் பட்டத்து வாளையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கின்ற வெங்கல நகராவை ஒலிக்க வைத்து விட்டால் நாங்கள் நெற்கட்டும் செவ்வயல் பாளையத்தை உங்களிடமே தந்து விடுகிறோம்.”

இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த ஒண்டிவீரன், தன்னந்தனியாக, ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியைப் போல் ஆங்கிலேயர் முகாமிற்குள் ஊடுருவினார்.

யாரென வினவிய ஆங்கிலேயருக்கு, குதிரைக்கு வார்த்தைக்கக் கூடியவன், போர்வீரர்களின் காலணிகளை (ப+ட்ஸ்களை) செப்பனிடக் கூடியவன் என்று பதில் கூறி ஒண்டிவீரன் உள்ளே புகுந்தார்;. சில நாட்கள் அந்த முகாமில் தங்கிப் பட்டத்துக் குதிரை மற்றும் வாள் போன்றவை வைக்கப்பட்டிருந்த இடத்தை முதலில் அறிந்தார். வெங்கல நகரா கட்டி விட்டிருப்பதையும், மணி ஒலித்தவுடன் எதிரிகளைத் தாக்கக் கூடிய பீரங்கிகள் தயார் நிலையில் இருப்பதையும் கண்டுணர்ந்த ஒண்டிவீரன் சவாலில் வெல்ல அமாவாசைக் கும்மிருட்டைத் தேர்வு செய்தார்.

முதலில் முகாமின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கிலேயர் பக்கமே திருப்பி அமைத்தார் ஒண்டிவீரன். தடுக்க முயன்ற காவலர்களைக் குத்திக் கொன்றார். பட்டத்து வாளை எடுத்துத் தனது இடுப்பில் செருகிக்கொண்டு, குதிரையைக் கிளப்ப முயன்;ற போது குதிரை ஒத்துழைக்க மறுத்துக் கனைத்து ஓடியது. குதிரை வீரர்;கள் என்னவென்று காண ஓடி வந்தனர். ஒண்டிவீரன் குதிரைக்குத் தீனி போடுகின்ற காடியில் படுத்துப் புற்களைத் தன்மேல் பரப்பி ஒளிந்து கொண்டார். இருட்டில் யாரெனக் கண்டறிய முடியாத சூழலில் குதிரையை மீண்டும் காடிக்குப் பக்கத்திலேயே ஒரு ஈட்டியை அறைந்து, அதில் குதிரையைக் கட்டி விட்டுச் சென்றனர் குதிரை வீரர்கள்.

ஈட்டி தரையில் அறையப்படும் போது ஒண்டிவீரனின் கையும் சேர்த்து அறையப்பட்டது. ஒண்டிவீரன் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு காடியிலேயே படுத்துக் கிடந்தார் என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன் கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. மீண்டும் குதிரை கணைத்து விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து தான் இடுப்பில் செருகியிருந்த பட்டத்து வாளால் தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு மேலெழுகிறார்.

குதிரையைக் கிளப்பிக்கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புயலெனப் புறப்பட்டார் ஒண்டிவீரன். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வீரர்கள். பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடிப்பதைக் கண்டு அதிர்ந்தது ஆங்கிலேயர் படை. அழிந்தது வெள்ளையர் முகாம். ஆயிரக் கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர்.

விடுதலைப் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்த வீரர்களும் உண்டு. அதே நேரத்தில் பகைவர்களை அவர்களின் ஆயுதத்தைக் கொண்டே அழித்தொழித்த வீரர்களும் உண்டு. இதில் இரண்டாவது வகையின் முன்னோடியாக ஒப்பில்லாப் போராளியாக விளங்கியவர் ஒண்டிவீரன்.

கையை இழந்து விட்டாயே என்று கதறிய குடும்பத்தினரிடமும் பாளையத்து மக்களிடமும் - 'இந்தக் கை போனால் என்ன? எனக்குத் தங்கக் கை கொடுப்பீர்கள் நீங்கள்" என நம்பிக்கை ஊட்டியவர் ஒண்டிவீரன். தாய் மண்ணை மீட்டெடுக்கக் கை மட்டுமல்ல உயிரையும் கொடுப்பேன் என சூளுரைத்தார் ஒண்டிவீரன்.

புலித்தேவன் கி.பி. 1767இல் மறைந்த பிறகும் 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்ததாகச் சொல்லப் படுகிறது.

 அண்ணன்... எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும் என்பது ஒரு தமிழ் வழக்காறு. புலித்தேவன் தேவர் சமூகத்தில் பிறந்தவர்! ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் வல்லாதிக்க எதிர்ப்புப் போரில் புலித் தேவன் மறைந்த பிறகும் எதிரிகளுக்கு விலை போகாமல் மீண்டும்............ போராட்டத்தைத்.............; தொடர்ந்த நேர்மையான தமிழன் ஒண்டிவீரன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை புலித்தேவனின் மக்களை, குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தவர் ஒண்டிவீரன். அதனால்தான் இன்றும் தேவர் சமூகம் ஒண்டிவீரனைக் காவல் தெய்வமாகவும், ஒண்டிவீரனின் சமூகம் புலித் தேவனை நன்றியுணர்வோடும் வழிபட்டு வருகிறார்கள்.

 தேவர் சமூகத்தில் பிறந்த முனைவர் இராசய்யாவும், இறைப்பணி செய்து வரும் அருட்தந்தை மார்கு அவர்களும் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த வரலாற்றாசிரியர் எழில் இளங்கோவனும் எழுத்தாளர் பிரபஞ்சனும் இணைந்து ஒண்டிவீரனின் வீரஞ் செறிந்த வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்தனர்.

தமிழர்களின் வீரம் -

தமிழர்களின் விவேகம்

தமிழர்களின் போர்த் தந்திரம்

ஒண்டிவீரனின் வரலாற்றின் மூலமாகவும் இனி முன்னெடுத்துச் செல்லப்படும்.

(சமுக நீதித் தமிழ்த் தேசம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It