கீற்றில் தேட...

மஞ்சளும் தவிட்டு நிறமும் கலந்த ஒரு ஈயின் படமும், அதற்குக் கீழே “லுக் அட் திஸ்” (Look at This) என்று எழுதப்பட்டிருந்தது, அந்த போஸ்ட்டரில்! இது சிட்னி ஆஸ்திரேலியன் அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு அறையின் வாசலில் சிறிது காலம் முன்பு வரை இருந்தது.This canusஅது டேவிட் கே மக்கால் பைன் (David K. McAlpine) என்ற பூச்சியியல் நிபுணரின் ஆய்வு அறை. அவர் உலகப் புகழ்பெற்ற டிப்ட்டராலஜிஸ்ட் (Dipterologist) விஞ்ஞானி. இரண்டு இறக்கைகள் மட்டுமே உள்ள பூச்சிகளே டிப்ட்டர (Diptera). மற்ற பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள் உண்டு. இந்தப் பிரிவில் பலதரப்பட்ட ஈக்கள், கொசுக்கள் என ஒன்றரை இலட்சம் உயிரினங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் இதில் உள்ளன.

மக்கால் பைன், கெல்ப் ஈக்கள் (Kelp flies) பிரிவில் ஆய்வு செய்தார். கெல்ப் என்பவை ஒரு வகை கடற்பாசிகள். கடலோரப் பகுதிகளில் குவியும் இவற்றில் இந்த ஈக்கள் முட்டையிடுகின்றன. புழுக்கள் வளர்கின்றன. கடற்பாசிகள், கடற்புற்கள், மற்ற கழிவுகள் குவியும் பகுதி ராக் மண்டலம் (Wrack Zone) என்று அழைக்கப்படுகிறது. இது இவற்றின் வாழிடம்.

இந்த ஈக்கள் அடங்கியுள்ள சீலோப்பிடி (Coelopidae) என்ற சிறிய குடும்பத்தில் 13 பேரினங்களும் 40 இனங்களும் உள்ளன. இவை ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற மித வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. 1981ல் வெளிவந்த ஆய்வு முடிவுகளின் ஊடாக, மக்கால் பைன் ஆஸ்திரேலியாவில் இருந்து ஐந்து புதிய பேரினங்களை கண்டுபிடித்தார். இவற்றில் ஒன்றுதான் திஸ் (This).

இந்த புதிய பேரினத்தில் திஸ் கானஸ் (This canus) என்ற ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது.

இவை ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வாழ்கின்றன. எண்ணிக்கை அதிகரிக்கும்போது நாட்டின் உள் பிரதேசங்களுக்கும் பயணம் செய்கின்றன. எடுத்துக்காட்டு கடற்கரை இல்லாத கேன்பரா நகரம்.

திஸ் கானஸ் உடல் அளவில் மிகச் சிறியவை. ஆண் ஈக்களின் இறக்கைகள் சற்று பெரியது. பெரும்பாலான ஆண் ஈக்கள் பெண் ஈக்களை விட அளவில் பெரியவை. இவற்றின் சராசரி அளவு 2 முதல் 3 மில்லிமீட்டர் மட்டுமே.

உடலமைப்பும் பண்புகளும்

வெளிறிய சாம்பல் நிறமுள்ள தலை, ஆரஞ்சு தவிட்டு நிறம் கலந்த சவ்வாலான சிறிய கழுத்து பகுதி, உணர்வு நீட்சிகள், கறுத்த உரோமங்களால் பொதிந்த இளம் சாம்பல் நிறமுள்ள தோராக்ஸ் என்ற பகுதி, மஞ்சள் நிர நரம்புகள் உள்ள இறக்கைகள் போன்றவை இவற்றின் உடலமைப்பில் காணப்படும் சிறப்பு அம்சங்கள். இது போலவே இணை சேர்வதிலும் திஸ் கானஸ், மற்ற கெல்ப் வகை ஈக்களில் இருந்து வேறுபடுகின்றன.

பெரும்பாலான கெல்ப் வகை ஈக்களிலும் பெண் ஈக்கள் இணைசேரும் ஆரம்ப விநாடிகளில் ஆண் ஈக்களை அடித்து விரட்ட முயல்கின்றன. ஆண் ஈக்கள் பெரிய அளவு உள்ள பெண் ஈக்களுடன் இணை சேர அதிகம் விரும்புகின்றன. ஆனால் திஸ் கானஸ் இத்தகைய பண்புகளை வெளிப்படுத்துவதில்லை. உடளலவில் சிறிதாக இருந்தாலும் ஆஸ்திரேலியன் கெல்ப் ஈக்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகம்.

இவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகும்போது இவை கடற்கரைக்கு செல்பவர்களுக்கு பெரிய தொல்லையாக மாறுவதுண்டு. ஆனால் இவை கடிப்பதோ, நோய்களை பரப்புவதோ இல்லை. இவை சில முக்கிய சூழல் சேவைகளை செய்கின்றன. கடலோரப்பகுதியில் குவியும் கடற்பாசிகளை உணவாக உண்பதன் மூலம் இவை அவற்றை சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடலோரத்தில் வாழும் பறவைகள், மற்ற உயிரினங்களுக்கு இவற்றின் புழுக்கள், இளம் உயிரிகள் ஒரு முக்கிய உணவாகப் பயன்படுகின்றன.

மக்கால் பைன் நகைச்சுவை உணர்வு உடையவர் என்றாலும், இந்த ஈ இனத்திற்கு வெறும் தமாஷுக்காக அவர் இந்தப் பெயரைக் கொடுக்கவில்லை. இந்த ஈ-இன் பெயரில் இருக்கும் திஸ் என்ற சொல் ஆங்கிலத்தில் வரும் வெறும் திஸ் என்ற சொல்லைக் குறிக்கவில்லை. மாறாக புராதன கிரேக்க மொழியில் உள்ள திஸ் என்ற சொல்லே இந்த திஸ்! இதன் பொருள் கடற்கரை (Sea shore). கடலோரத்தில் வாழும் இந்த உயிரினத்திற்கு இந்தப் பெயர் மிகப் பொருத்தமானதுதானே?

வாழ்க்கைமுறை

பாக்டீரியாக்கள் நிறைந்த அழுகிய கடற்பாசிகளே இவை முட்டையிடும் இடங்கள். ஏப்ரல், ஜூநாகஸ்ட், டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மற்ற மாதங்களிலும் இவை காணப்படுகின்றன. என்றாலும் அந்த சமயங்களில் இவற்றிக்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசிகள் அழுகும்போது பலவித வாயுக்களை வெளிவிடுகின்றன. அந்த வாயுக்களால் இந்த ஈக்கள் கவரப்படுகின்றன.

கழிவுகளில் கூட்டமாக இடப்படும் முட்டைகள் விரிந்து வெளிவரும் புழுக்கள் அழுகிய கடற்பாசிகளையும் அதில் உள்ள பாக்டீரியாக்களையும் உண்டு வளர்கின்றன. இளம் உயிரியாக மாறுவதற்கு முன் கடற்பாசி குவியல்களில் இருந்து வெளிவரும் புழுக்கள் மணற்பரப்பிற்கு வருகின்றன. பின் இவை இளம் உயிரிகளாக மாறுகின்றன. முழு வளர்ச்சி அடைய ஆறு முதல் ஒன்பது வாரங்கள் எடுத்துக் கொள்கின்றன.

இந்த ஈக்களின் வண்ணப்படங்கள் பொது இடங்களில் காணப்படுவதில்லை. கறுப்பு வெள்ளையில் உள்ள ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மக்கால் பைனின் அறை வாசலில் காணப்பட்ட இந்த ஈயின் படத்தை அவருடைய சக ஆய்வாளர் டானியல் பிக்கல் (Daniel Bickel) வெளியுலகிற்கு வழங்கினார்.

1977ல் தெற்கு ஆஸ்திரேலியா ரோஃப் மாவட்டம் (Robe district) லாங் கல்லி (Long Gully) என்ற இடத்தில் மக்கால் பைன் சக ஆய்வாளர் ஷீனருடன் இணைந்து இந்த ஈயின் படத்தை எடுத்தார். இந்த ஆய்வுகளுக்கு பிறகு 1991ல் தெற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த ஈக்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள் நடந்தன.

பெயரில் மட்டும் வினோதமானதில்லை இந்த ஈ! இதன் வாழ்க்கை கதையும் பல விசித்திரங்கள் நிறைந்ததே. இவை பற்றி அதிகம் ஆராயப்பட வேண்டும். இயற்கையின் படைப்பில் உள்ள அதிசயங்களில் இன்னமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன என்பதை இந்த சின்னஞ்சிறிய ஈ நமக்கு உணர்த்துகிறது.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/creature-chronicles-on-this-canus-1.9532270

&

https://www.giand.it/diptera/morph/?id=2&lang=en