’பெட்சி’யை, (அமெரிக்காவிற்கு கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்கக் குரங்கு) கள்ளச் சந்தையில் விற்க ஒருவர் முயற்சி செய்கிறார். திடீரென, அவரும் சந்தையில் இருப்பவரும் ஒரு மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள். அடுத்த சில நாள்களில் அந்த நகரின் மக்களில் பலரும் மர்மக் காய்ச்சலால் இறக்கிறார்கள். இப்படி, குரங்கில் இருந்து மனிதருக்குத் தாவிய ’மோடாபா’ வைரசு தொற்றைப் பற்றிய விறுவிறுப்பான கதை தான் ’அவுட்பிரேக்’ (Outbreak) என்ற ஆங்கிலத் திரைப்படம். 

“பூமியின் மீதான மனிதர்களின் ஆதிக்கம் தொடர்ந்து இருப்பதற்கு அச்சுறுத்தலாக இருப்பது வைரசுகள் மட்டுமே!” - முனைவர். ஜோஷுவா லெடெர்பேர்க், நோபல் பரிசு பெற்ற நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்.

அவுட்பிரேக் திரைப்படத்தின் முதல் காட்சி இந்த வரிகளுடன் தான் தொடங்கும்.

அண்மையில், மலையாளத்தில் வெளியான ’வைரசு’ என்ற திரைப்படம் கேரளத்தில் நிபா வைரசு பரவலைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது மற்றும் அதன் தோற்றத்தைக் கண்டறிவதைக் காட்சிகளாக்கிக் காட்டும். இதுபோன்ற சில முக்கியமான படங்களை மொழிபெயர்த்து தொலைக்காட்சிகளில் திரையிட்டால் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். இந்த தொற்றுநோய்களுக்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்களையும் அறிந்து கொள்வார்கள். கெட்ட வாய்ப்பாக, நாம் ஒரு இந்துத்துவ மதவெறி ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ளதால் நமக்கு காணக் கிடைப்பது எல்லாம் சமூகத்தின் மூடநம்பிக்கைகளையும் சாதி வருண வேற்றுமைகளையும் கற்பிக்கும் பிற்போக்கு கற்பனை காவியங்களே! 

எல்லாம் வல்லவனாக மனிதன் தன் வரம்புகளை மீறும் சமயங்களில் இயற்கை அவன் வரம்புகளை அவ்வப்போது அவனுக்குக் காட்டுவதுண்டு. இயற்கையின் மீது மனிதன் நிகழ்த்தும் தாக்குதல்களுக்குப் பதிலாக வரும் எதிர்த் தாக்குதல்கள் கடுமையாகவே இருந்துள்ளன.

தாக்குதல் 

“ஆகஸ்டு 2018 தொடங்கி, 12 மாதங்களில் நியூயார்க் மாநகரத்தைப் போல 12 மடங்கு அளவிலான அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன” - நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி.

“எங்கள் வளங்களை எங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறோம். இது குறித்து வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளின் அறிவுரை எங்களுக்கு வேண்டாம்” என்று பிரேசிலின் தீவிர வலதுசாரி அதிபரான அயர் போல்சோனாரோ தெரிவித்தார். பிரேசிலின் அமேசான் மழைக்காடுகள் ஆண்டு முழுவதும் எதோ ஒரு மூலையில் எரிந்து கொண்டுதான் உள்ளது.

road in amazon(“அமேசான் காடுகளுக்கு நடுவே நெடுஞ்சாலை அமைப்பேன்” என்று கூறியபடி பிரேசில் அதிபர் காடுகளை அழித்து அமைத்து வரும் நெடுஞ்சாலை.)

பிரேசிலின் மழைக்காடுகளை அழித்து வளங்களைச் சூறையாடுவதற்குத் தடையாக உள்ள பூர்வகுடி செவ்விந்தியர்களை “அவர்கள் நிலத்தைவிட்டு தூக்கியெறிந்து, அங்கு அமைக்கப்படும் விவசாய பண்ணையார்களுக்குப் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கிகளை வழங்குவேன்” என்று கூறினார் அயர் போல்சோனாரோ. தில்லியில் நடைபெற்ற 2020 இந்தியக் குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றவர் இவரே.

destruction of amazon(அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாக்கப்படுகிறது)

பிரேசில் அதிபரின் நெருங்கிய நண்பராகப் பெருமை பேசும் இந்திய ஒன்றிய பிரதமர் மோடி, காடுகளையும் அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் தூக்கியெறிவதில் போல்சோனாரோவிற்கு சளைத்தவரல்ல. மார்ச் 2019-ல் மோடி கொண்டுவந்த ’1927 இந்திய வனச்சட்டம்’ திருத்தத்தின்படி இந்தியா முழுவதுமுள்ள 1 கோடிக்கும் மேலான காட்டுவாழ் பழங்குடியின மக்கள் அந்த நிலத்தின் மீது சொந்தம் கொண்டாட முடியாது. காட்டு வளங்களை எடுக்கப் பழங்குடியின மக்களை இராணுவத்துணையுடன் பலவந்தமாக வெளியேற்றலாம்.

இப்படியாக, இயற்கையின் மீதும் அதன் அரவணைப்பில் தொடர்ந்து வாழும் பழங்குடியினர் மீதும் இன்றைய அரசுகளின் அக்கறைகளை உணரலாம். தனியார் முதலாளிகளின் லாப வெறிகளுக்காக வனங்கள் அழிக்கப்படுவதால், நாம் எதிர்கொள்ளும் சூழலியல் நெருக்கடிகளை அறிந்திருப்போம். வனவிலங்குகள் அழிவது முதல் நிலம், நீர், சுற்று சூழல் மாசுபடுவது; மழை பொய்த்துப் போவது, பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவது என அந்த பட்டியல் நீளும். முக்கியமாக, தற்போது நாம் கவனிக்க வேண்டியது ‘அழிக்கப்படும் காடுகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றும் நுண்ணுயிர் கிருமிகளை’ பற்றி, கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட காடுகளிலிருந்து சுமார் 300 நுண்ணுயிர் கிருமிகள் மனிதர்களுக்கு ’தாவி’ உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேகமாகப் பசுமை போர்வையை இழந்துவரும் பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் ஆர்க்டிக் உறைபனிகள் வேகமாகக் கரைந்து வருகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக உறைபனிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் நுண்ணுயிரிகள் பனி உருகினால் மீண்டும் உயிர்ப்படையும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2016-ல் சைபீரியாவில் ஒரு 12 வயது சிறுவன் ’ஆந்த்ராக்ஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தான். அது குறித்து ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், “75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்த்ராக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ’கலைமான்’ (ரெயின் டீர்) உடல் சைபீரியாவின் உறைபனியில் (perma frost) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது. 2016-ல் அங்கு நிலவிய கடும் வெப்பத்தால் உறைபனி உருகி இறந்துபோன விலங்கின் உடலிலிருந்த ஆந்த்ராக்ஸ் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கலைமான்களுக்குப் பரவியுள்ளது. பிறகு, மான்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளது” என்று கண்டுபிடித்துள்ளனர்.

மனித சமூகத்தைவிட்டு ஒழிக்கப்பட்டதாகக் கருதப்படும் பெரியம்மை, புபோனிக் பிளேக், ஸ்பானிய காய்ச்சல் வைரசுகளும் சைபீரியாவின் உறைபனிகளில் புதைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். புவி வெப்பமயமாவதால் புதைந்துள்ள இந்தக் கிருமிகள் வெளியே வர வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல், பொதுச்சமூகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதால் அவர்கள் விளிம்பு நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றனர். இப்படி ஓரம்கட்டப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி வனப்பகுதிக்குள் நுழைகின்றனர். வனத்தில் இருக்கும் அறியப்படாத நோய்த்தொற்றுக்கள் இவர்கள் மூலம் பொதுச் சமூகத்திற்குள் நுழைகிறது. கொரொனா வைரசு தொற்றுக்கும் இதுவே காரணமாகக் கருதப்படுகிறது.

ஒருபுறம் இயற்கை வனங்களின் அழிவு, புதிய கிருமிகளை மனித சமூகத்திற்கு அறிமுகம் செய்கிறது; மறுபுறம் இன்றைய இயற்கைக்கு விரோதமான உணவு உற்பத்தி முறைகள் பழைய கிருமிகளுக்கு மிக அதிக வீரியத்தை ஊட்டுவதுடன், புதிய கிருமிகளையும் உருவாக்கி வருகின்றன. இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் இந்த கிருமிகளையும் அவை ஏற்படுத்தும் தொற்றுக்களையும் உலகமயமாக்கியுள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் ஏற்பட்ட தொற்று இன்று உலகமயம் ஆக்கப்பட்டுள்ளது.

’நோய் எதிர்ப்பு, பூச்சி எதிர்ப்பு’ என்று உணவு தானிய உற்பத்தியில் தொடங்கிய மரபணு மாற்று (GM- Genetically Modified) அறிவியல் இன்று, உணவுகளின் உட்கூறு மாற்றுவது, நெடுநாள்கள் கெடாமல் இருப்பது, கவர்ச்சியான வர்ணங்களில் இருப்பது, விதையில்லாமல் இருப்பது என்று மனித மனம் போன போக்கில் பன்னாட்டு நிறுவனங்களின் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப உணவுகளும் ஆராய்ச்சி கூடங்களில் ’டிசைன்’ (வடிவமைப்பு) செய்யப்படுகிறது.

2019-ல் $55 பில்லியன் டாலராக உள்ள ’விதைகள்’ வணிகத்தின் சர்வதேச மதிப்பு 2025-ல் $86 பில்லியனாக வளர்ச்சி அடையவுள்ளது. இந்த வணிகத்தை வளர்ப்பதற்குத் தேவையான அடிப்படைக் கோட்பாடு ’விளைந்த உணவுப் பொருள்கள் தங்களுடைய அடுத்த தலைமுறைக்கான விதைகளாக மாறும் மரபணு தன்மையை இழந்திருக்க வேண்டும்.’ தன்னுடைய அடுத்த தலைமுறையை உருவாக்கிடும் இயற்கையின் விதியை இழந்த அரிசி, கோதுமை, காய்கறி, பழங்களை (Seedless) உண்ணும் மனிதர்களால் மட்டும் தங்கள் அடுத்த தலைமுறைகளை இயற்கையாக எப்படி உருவாக்கிடச் சாத்தியமாகும்? ஊரெங்கும் புற்றீசலாகக் கிளம்பும் செயற்கை ’கருவுறும் மருத்துவமனைகள்’ (fertility hospitals) இதற்கு சாட்சியாக நிற்கின்றன!

2018-ல் $1.5 பில்லியன் டாலராக இருந்த செயற்கை கருத்தரிப்பின் சர்வதேசச் சந்தை மதிப்பு 2026-க்குள் $3 பில்லியன் டாலர்களாக உயரும் என்று கணிக்கப்படுகிறது.

2017 சல்லிக்கட்டு பண்பாட்டுப் போராட்டத்தின் பின்னணியில் பிணைந்திருந்த சர்வதேச உணவு வர்த்தக அரசியலையும் நினைவில் கொள்ளவேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் மாடுகளின் விந்துகளால் செயற்கை கருத்தரித்தல் முறையின் மூலம் நாட்டு மாடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்படியாகவே, நாட்டுக் கோழிகளும் அழிக்கப்பட்டு ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் பிராய்லர் கோழிகள் சந்தை படுத்தப்படுகின்றன. 2018-ல் $1.66 பில்லியன் டாலராக உள்ள கால்நடைகள் செயற்கை கருத்தரித்தல் வணிகம் 2026-க்குள் சுமார் $2.5 பில்லியன் டாலர்களாக வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த சந்தையைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக பால் கொடுக்கும் மாடுகள்; கூடுதல் எடை இறைச்சி கொடுக்கும், நோய் தாக்குதலுக்கு உள்ளாகாத கால்நடைகள் என ’டிசைனர்’ கால்நடை மரபணுக்களையும் உருவாக்குகின்றன.

இப்படி, ‘டிசைனர்’ கால்நடைகள் கருத்தரிப்பது முதல் பண்ணைகளில் மருந்துகள் மற்றும் செயற்கை உணவுகளை உட்கொள்வது வரை கால்நடை உற்பத்தி முறை முற்றிலும் இயற்கைக்கு மாறான வகையில் உள்ளது. பண்ணைகளில் முட்டை, பால் மற்றும் இறைச்சியின் மேலதிக உற்பத்திக்காகப் பின்பற்றப்படும் முறைகளால் வீரியமிக்க புதியரக நோய்க் கிருமிகளும் மரபணு பிறழ்வுகளும் பண்ணை கால்நடைகளில் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. இன்று, பண்ணை தொழில் முறை உணவு உற்பத்தியால் நாம் உண்ணும் உணவும், அதன் உற்பத்தி முறையும் நமக்கு உயிர்க்கொல்லியாக மாறியுள்ளது. 

நாளொன்றுக்கு 18 கோடி கோழிகள், 40 லட்சம் பன்றிகள், 50 கோடி செம்மறி ஆடுகள், 8 லட்சம் மாடுகள் இறைச்சிக்காக உலகம் முழுவதும் கொல்லப்படுகின்றன. 

சர்வதேச மாட்டு இறைச்சி சந்தை மதிப்பு $300 பில்லியன் டாலர்கள். உலகில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் மாட்டு இறைச்சியை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.

உணவு உற்பத்தித் துறையால், உணவு தானியம் மற்றும் கால்நடை வளர்ப்புக்காக, உலகின் 12% பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதில், நான்கில் மூன்று பங்கு கால்நடைகள் வெளியேற்றுகின்றன. குறிப்பாக, பன்றி, கோழிகளை விட 50% குறைவாகவே மாட்டு இறைச்சி ஆண்டிற்கு உற்பத்தியாகினாலும் அவற்றைவிட மாடுகள் 4 மடங்கு கூடுதலான பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றுகின்றன.

இதுமட்டுமல்ல. மாடுகள் வளர்ப்பதற்கு மிகப்பெரிய மேய்ச்சல் நிலப்பரப்பு தேவைப்படுகின்றன. உலகின் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில். மாடுகளின் நன்னீர் தேவையும் பன்றிகளை விட மூன்று மடங்கு அதிகமாகும். மாட்டு இறைச்சி பண்ணைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை உருவாக்கிடவே பிரேசில் அமேசான் மழைக்காடுகளை வேகமாக அழித்து வருகின்றது. 

மனிதக்குலம் தனது தனிநபர் லாபவெறிகளுக்காக இயற்கையைச் சூறையாடி வந்ததை எதிர்த்து இயற்கையும் அவ்வப்போது எதிர்வினையாற்றி வந்துள்ளது. அண்மைக்காலமாக அந்த எதிர்வினைகள் தீவிரமடைந்துள்ளன!

எதிர்த்தாக்குதல்

வரலாற்றில் தொற்று நோய்கள் சில பத்தாண்டு இடைவெளியில் தொடர்ந்து இருந்துள்ளதை நாம் உணர முடிகிறது. ஆனால், அண்மைக் காலமாகத் தொற்று நோய்கள் மிகக் குறுகிய கால இடைவெளியில் மிக வீரியத்துடன் மனிதர்களைத் தாக்கி வருகின்றன. மேலும், வரலாற்றில் இல்லாதவாறு இன்றைய தொற்று நோய்கள் வேகமாகச் சர்வதேச அளவில் பரவுகின்றன. முதன்முறையாக, கோவிட்-19 உலகம் முழுவதும் ஒரு சிலநாள்களில் பரவியுள்ளதைக் காண்கிறோம். இதற்கு, மனிதர்களின் அதிக அளவிலான சர்வதேச விமானப் பயணங்கள் முக்கிய காரணமாகவும் உள்ளது. மனிதன் சர்வதேசங்களுக்குப் பயணிப்பதைப் போல நோய்த் தொற்றுக்களும் அவனுடன் சேர்ந்து பயணிக்கின்றன. இந்தச் சமூகச் சூழலில் தொற்றுநோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மருந்துகள் மட்டும் நிரந்தர தீர்வை வழங்கிடாது. நிரந்தர தீர்வு என்பது நோய் தோற்றுவித்த மூலகாரணங்களை ஆராய்வதில் உள்ளது.

காடுகளின் எதிர்த்தாக்குதல்

இன்றைய COVID-19 கொரொனா வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், COVID-19 “இயற்கையான மரபணு பிறழ்வால்” உருவாகியுள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் நிச்சயமாகக் கூறுகின்றனர். மனிதக்குல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் நோய்த் தொற்றுகள் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு ’தாவி’ உள்ளது. வன விலங்குகளிடம் இருந்து HIV (மனிதக் குரங்கு), Ebola (குரங்கு, வவ்வால்), SARS (வவ்வால்), MERS (ஒட்டகம்), ZIKA (குரங்கு), NIPAH (வவ்வால்) போன்றவையில் இருந்து மனிதர்களுக்குப் பரவியது.

உலகெங்கும் நிறுவனமயமான கால்நடை பண்ணை முறையால் பாரம்பரியமாக இறைச்சி தொழில் செய்தவர்கள் சந்தையை இழந்து வருமானத்தையும் இழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக, அவர்கள் வனவிலங்கு இறைச்சி விற்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்டதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு கவர்ச்சி கதைகளின் வாயிலாக வளர்ந்து வரும் இந்த வனவிலங்கு இறைச்சி வணிகம் (Exotic animal meat) நோய்த் தொற்றுகளை அதிகரிக்கிறது. மறுபுறம், நிறுவனமயமான கால்நடை பண்ணைகள் மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காடுகள் வேகமாக அழிக்கப்படுவதால் அங்குள்ள பறவைகள் (வவ்வால்) மனித சமூகத்துடன் தொடர்பு கொள்கின்றன என்ற மற்றொரு காரணம் சொல்லப்படுகிறது.

பண்ணைகளின் எதிர்த்தாக்குதல்

இறைச்சி பண்ணைகளில் இருந்து பரவும் நோய்த் தொற்றுக்களும் சமீபமாக அதிகரித்து வருகிறது. 1918-ல் ’ஸ்பானிய காய்ச்சல்’ பன்றி பண்ணைகளில் இருந்து பரவியது. அண்மையில், 2008-ல் பறவை காய்ச்சல் (H5N1), 2009-ல் பன்றிக் காய்ச்சல் (H1N1) பண்ணைகளில் இருந்து வந்தவையே.

விலங்குகளின் வைரசுகள் (Zoonosis) பெரும்பாலும் கோழிப் பண்ணைகளில் மரபணு பிறழ்வு ஏற்பட்டு மனிதர்களை அடைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீரியமிக்க புது வைரசுகளை (novel virus) அறிந்திராத மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பல சமயங்களில் தோல்வியடைகிறது. 2018-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவு “சுமார், 39 சமயங்களில் பண்ணைகளில் இருந்து மனிதர்களுக்கு வைரசுகள் ’தாவி’ உள்ளன. அதில் 37 சமயங்களில் பண்ணை கோழிகளில் இருந்தே வந்துள்ளது” என்று கூறுகிறது.

கோழிப் பண்ணை

நிற்கவோ நகரவோ துளி இடமில்லாத கூண்டுகளில் அடைத்து வைக்கப்படும் கோழிகள் பல்வேறு நோய்களால் பாதிப்படைகின்றன. இந்த கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்கவும் விரைவாக இறைச்சி எடை கூட்டவும் கட்டற்ற முறையில் தடுப்பு ஊசிகளும் மருந்துகளும் செலுத்தப்படுகின்றன. $45 பில்லியன் டாலர் நோய்த்தடுப்பு மருந்து (antibiotics) சந்தையில் விற்கப்படும் 75% மருந்துகள் கால்நடை பண்ணைகளுக்குச் செல்கின்றன. இதில் 90% இரசாயன மருந்து கால்நடை கழிவின் மூலமாக வெளியேறி நிலத்தை மாசுபடுத்துகிறது.

இந்த கடுமையான இரசாயனங்களை எதிர்கொண்டு பண்ணை கால்நடைகளினுள் பிழைத்து வாழும் நுண்ணுயிரிகள் மனிதர்களிடம் ’தாவும்’ போது மிக வீரியத்துடன் தாக்குகின்றன. இப்படி உருவான ஒரு ’சூப்பர் பக்’ (drug resistant) தான் திசுக்களை உண்ணும் ’MRSA: Methicillin-resistant Staphylococcus aureus’ எனப்படும் பாக்டீரியா. இது, இன்று உலகின் அனைத்து மருத்துவமனைகளிலும் காணப்படுகிறதாம். இந்த வரிசைகளில் உருவாகும் தொற்று நோய்களுக்கு பெரும்பாலும் இன்றைய மருத்துவச் சிகிச்சைகள் எதுவும் பலனளிப்பதில்லை. அதனால், இன்றும் 19-ம் நூற்றாண்டின் நோய்க் கட்டுப்பாடு முறையான நோயாளிகளை ’தடம் தேடி, தனித்து வைப்பது’ மூலமே தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. COVID-19-க்கும் இந்த 19-ம் நூற்றாண்டு நோய்க் கட்டுப்பாட்டு முறை தான் பின்பற்றப்படுகிறது.

’கார்ப்பரேட்’ லாபவெறி

பயிர் விதைகளையும், கால்நடை விந்துகளையும் வடிவமைப்பதில் துவங்கி, நோய்த் தடுப்பு மருந்து, ஊட்டச்சத்து மருந்து, கால்நடை தீவனம் உற்பத்தி, விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு என்று அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் துடிப்பதில் பணக்கார நாடுகளின் லாபவெறியைத் தாண்டி சர்வதேச பொருளாதார அரசியலும் அடங்கியுள்ளது. மான்சாண்டோ பேயர், BASF, சின்ஜெண்டா, கார்கில், டைசன், BRF போன்ற பல பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்கள் இந்த வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன. ஏழை நாடுகள் உணவு மற்றும் அவற்றின் உற்பத்தி தேவைகளுக்காகத் தங்களைச் சார்ந்து இருக்க வேண்டுமென்பது பணக்கார நாடுகளின் ஏகாதிபத்திய அரசியல். 

வூகானில் உள்ள இறைச்சி கசாப்புக் கடைகளில் இருந்தே கோவிட்-19 வைரஸ் பரவியது என்று செய்திகள் வெளியாகியதில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பல ஐரோப்பியத் தலைவர்களும் சீனா தனது இறைச்சி கசாப்பு சந்தைகளை (wet markets) மூடவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

“சீனாவின் இறைச்சிக் கடைகளில் ஏற்படும் மனித-விலங்கு பரிவர்த்தனைகளால் தொடர்ந்து பரவும் நோய்களைக் கருத்தில் கொண்டு அந்த இறைச்சி சந்தைகளை மூடாமல் இருப்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை” என்று அமெரிக்காவின் தலைமை தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் அந்தோணி ஃபவு(ச்)சி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். உலக ஊடகங்கள் சீனாவின் இறைச்சி சந்தையைக் குறிவைத்து செய்தி பரப்பிக் கொண்டிருக்கின்றன. அதேநேரம், உலக சுகாதார அமைப்பின் தலைவர், “இந்த சந்தைகள் அனைத்து மக்களுக்கும் எளியமுறையில் ஆரோக்கியமான இறைச்சியை உடனுக்குடன் வழங்கி வருகின்றன. இந்த சந்தைகளின் சுகாதாரத்தை அரசு கவனிக்க வேண்டும்.” என்று கூறியதாகச் செய்தி வெளியானது.

இறைச்சி ஆலையும் அமெரிக்காவும்

சீனா, இந்தியா மற்றும் பல்வேறு வளரும் நாடுகளில் உள்ள பாரம்பரிய முறை கால்நடை மற்றும் கடல் உணவு சந்தைகள் மேலை நாடுகளின் பகாசுர நிறுவனங்கள் நுழைவதற்கு பெரும் தடையாக உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் ட்ரம்ப் இந்தியாவிற்கு வந்திருந்த போது அமெரிக்காவில் இருந்து கோழிகளையும், பாலையும் இறக்குமதி செய்ய இந்திய ஒன்றியம் அனுமதியளித்தது.

இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொழில் நலிவடையும். ஒரு நாளுக்குள் அழுகக்கூடிய இறைச்சியும், பாலும் இரசாயனம் மற்றும் குளிர் பதனப்பெட்டியில் அடைத்து 14,000 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்கப்படும். உலகின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குக் கொண்டுவரப்படுவதால் வீண் போக்குவரத்துச் செலவு, சூழலியல் மாசுபாடு ஏற்படும். இந்த பேரழிவு பொருளாதார வர்த்தக கொள்கையைத் தான் உலகமயமாக்கல் என்கின்றனர்.

சமரச உடன்படிக்கை

உணவு தானியங்கள் காய் கனிகள் மீது அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் மனிதன் தொடுத்த ’மரபணு மாற்று’, ’விதைகள் அற்ற’, ’இரசாயன நச்சு நிரம்பிய’ வளர்ச்சிகள் காரணமாக மலட்டுத் தன்மையும், புற்று நோயும் புதிய ’சாதாரண’ நோய்களாகிப் போயின.

அடுத்ததாக, ஆடு, மாடு, கோழி, பன்றி என இறைச்சிக்காக வளர்க்கப்படும் முறையில் ’நோய்களைத் தடுக்க’, ’எடை கூட்ட’ எனக் கட்டுப்பாடின்றி பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளும், ஊட்டச்சத்து மருந்துகளும் செலுத்தப்படுவது. இந்த இறைச்சிகளை உண்பதால் ஆர்மோன் சமமின்மை (குறிப்பாகப் பெண்களுக்கு), ’சூப்பர் பக்’ நுண்ணுயிர் தொற்றுகள் புதிய ’சாதாரண’ நோய்களாகிப் போயின.

உணவு உற்பத்தியை ’பெருக்கி, பட்டினிச் சாவுகளைத் தடுக்கிறோம்’ என்ற போர்வையில் உணவு துறையின் உள்நுழைந்த ஆராய்ச்சி நிறுவனங்களும், பண்ணை நிறுவனங்களும் இன்று ’நோய் உற்பத்தி’ கூடாரங்களாகியுள்ளன. இப்படி உற்பத்தியாகும் நோய்களைப் போக்குகிறோம் என்று இவர்களே அல்லது இவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மருந்து ஆராய்ச்சி, மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருந்து விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன.

இதன் அடிப்படை காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். எனது காலில் வரும் உலர் தோல் அரிப்பிற்கு மருத்துவர் கூறிய மருந்தைத் தடவினால் சரியாகிறது. சில வாரங்கள் கழித்து மீண்டும் வருகிறது. மீண்டும் மருந்து தடவி அந்த தோல் அரிப்பை போக்கிவிடுகிறேன். இது தீர்வு ஆகுமா? நிரந்தர தீர்வு என்பது என் உடலினுள், இரத்தத்தில், உள்ள பிரச்சனையைப் பரிசோதித்துக் குணமாக்குவதில் உள்ளது. இரத்தத்தில் உள்ள குறைகளைக் குணப்படுத்தாமல் எனது உலர்த்தோல் அரிப்பு வாழ்நாள் முழுவதும் மீண்டும் வந்து கொண்டுதான் இருக்கும். இதுபோலத் தான் நாம் ஒவ்வொரு முறையும் நோய்த் தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சி பின் ஓடுவதும்.

இன்று மனிதன் உண்ணும் உணவே அவனுக்கு எதிரியாகி உள்ளது. அந்த உணவு உற்பத்தியாகும் முறைகள் மனிதனுக்கு மட்டுமல்லாது பிற உயிரினங்களுக்கும் இயற்கை சூழலுக்கும் பெரும் கேடாக வளர்ந்துள்ளது. 2019-ல் COVID-19 கொரொனா நோயைப் போல 2020-ல் COVID-20 என்ற புதியரக கொரொனா வைரஸ் உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அதற்கும் சேர்த்து லாப வெறி முதலாளித்துவ நிறுவனங்கள் சோதனை கருவிகளையும், தடுப்பூசிகளையும், மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்வதில் மும்முரமாகிவிடும். இதுவா நிரந்தர தீர்வு? மீண்டும் ஒரு ஊரடங்கை நம்மால் தாங்க முடியுமா?

ஏற்கனவே அறியப்பட்டுக் கட்டுப்படுத்தப்படாத நோய்கள் ஒருபுறம் இருக்க, புதிய தொற்று நோய்கள் மிகத் தீவிரத்துடன் வரக்கூடும் என்ற செய்திகள் மேலதிக அச்சத்தையும் கவலையையும் அளிக்கின்றன.

மனிதன் இயற்கையின் மீது நிகழ்த்திய காட்டுமிராண்டி தாக்குதல்களில் இருந்து மரபணு பிறழ்வுகளால் தங்களைத் தற்காத்துக் கொண்ட நுண்ணுயிர் கிருமிகள் இன்று சுழற்சி முறையில் மனிதன் மீது பதில் தாக்குதலைத் தொடுக்கின்றன. இதுவரை, மனிதக்குலம் நினைத்திருந்த அணு ஆயுதங்களை விட மிக மோசமான இழப்புகளை இந்த நுண்ணுயிரிகள் ஏற்படுத்தி வருகின்றன. வளர்ச்சி என்ற பெயரில் லாபவெறி பிடித்த மனிதன் தொடங்கி வைத்த இந்த சுழற்சி தாக்குதலில் இருந்து விடுபட இயற்கையுடன் சமாதானம் செய்திட வேண்டுமே ஒழிய, தொடர்ந்து தீவிரமாக இயற்கை மீதான தாக்குதலை மேற்கொண்டால் நமக்கான அழிவு நிச்சயம்.

சமரச நடவடிக்கைகள் 

வனப்பாதுகாப்பு

பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மட்டுமே இயற்கையிடம் இருந்து எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள், “என் பிள்ளைகளுக்குத் தேவையானதை இந்த காடுகள் அவர்களுக்கு வழங்கிடும். நான் எடுத்துச் சேர்த்து வைக்க வேண்டிய தேவையில்லை!” என்கின்றனர்.

தொல்குடி மீனவர்களும், “எங்களுக்குப் பசியெடுக்கும் போது கடலுக்குச் சென்றால், இந்த கடல் எங்கள் பசியை ஆற்றிடும்” என்று கூறுகின்றனர். இப்படி இயற்கையோடு ஒன்றி இயற்கையின் ஒரு அங்கமாக வாழும் மனித சமூகம் தனது வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. தங்கள் அடுத்த தலைமுறையினருக்கு இயற்கை தேவையானவற்றை வழங்கிடும் என்ற நம்பிக்கையுடன் விட்டுச்செல்கின்றனர்.

தனது தேவைக்கு அதிகமாகவும், தன் அடுத்த ஏழு தலைமுறைகள் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கும் சுயநலவாதிகள் தான் ’வளர்ச்சி’ போட்டாபோட்டியில் இயற்கையைச் சீரழித்து தங்கள் பிள்ளைகளுக்கு ’பணம்’ சேர்க்கின்றனர். இந்த சுயநல முதலாளித்துவ எண்ணத்தை அழிப்பதே இயற்கை வனப் பாதுகாப்பதில் முதல் அடி.

உணவு மற்றும் உற்பத்தி முறை

மரபணு மாற்றுப் பயிர்களைக் கைவிட்டு, இரசாயன மருந்துகள் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்தி இயற்கை விவசாய முறைக்கு மாறிட வேண்டும். இது, இயற்கை சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் உணவை உண்பவருக்கு நோய்களை உண்டாக்காது; மேலும், விவசாயிகளைக் கடனாளிகளாக்காது.

’நோய் உற்பத்தி கூடாரங்களாகிய’ மேற்குலகு கால்நடை பண்ணை வளர்ப்பு முறைகளை விட்டொழித்திட வேண்டும். பாரம்பரிய முறையில் கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலப்பரப்பை ஏற்படுத்தி, காடுகளை அழித்திடாமல், இயற்கையான முறையில் வளர்த்திட வேண்டும். செயற்கை இரசாயன மருந்துகள், எடை கூட்டும் தீவனங்கள் அனைத்தையும் நிறுத்தி நமது பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கால்நடை சிகிச்சைக்குப் பின்பற்றலாம்.

இப்படி பாரம்பரிய முறையில் இயற்கை சூழலில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்குச் சென்னை போன்ற பெருநகரங்களில் ஏகப்பட்ட தேவை உள்ளது.

வர்த்தகம்

பொதுவாகவே, மேற்குலக சமூகங்கள் பெரிய இறைச்சி ஆலைகளில் கால்நடைகள் வெட்டப்பட்டு பாக்கெட்டுகளாக அடைத்து சூப்பர் மார்க்கெட் குளிர் பதன பெட்டிகளில் வைத்து விற்பதையே ’சுகாதாரமிக்க ஆரோக்கியமான’ முறையாக நம்புகின்றன. ஆகவே, இந்த முறையையே மற்ற நாடுகளையும் பின்பற்ற வலியுறுத்துகின்றன.

மேற்குலக நாடுகள் வலியுறுத்தும் இறைச்சி ஆலைகள் முறை மற்ற நாடுகளில் பாரம்பரியமாக உள்ள கசாப்புக் கடைகளை விட ஆரோக்கியமான உணவு முறையல்ல என்று இத்துறை வல்லுநர்கள் பலர் வாதாடுகிறார்கள். ஏழை மற்றும் வெப்பமண்டல நாடுகளில் உள்ள கசாப்புக் கடைகளில் இறைச்சி தேவைக்கேற்ப வெட்டப்படுகின்றன. மேலும், உடனுக்குடன் வெட்டப்பட்டுச் சமைத்து உண்ணப்படுவதால் ஆரோக்கியமான முறையும் கூட. ஏழை நாடுகளில் பெரும்பான்மை மக்களால் சூப்பர் மார்க்கெட் சென்று அதிகவிலை கொடுத்து வாரக்கணக்கில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வாங்க இயலாது. ஆக, மேற்குலக நாடுகள் தங்கள் இறைச்சி வணிக நோக்கத்தை மனதில் கொண்டே இறைச்சி கசாப்புக் கடைகளை மூட வேண்டும் என்று சொல்லி வருகின்றன. இதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.

தற்சார்பு

மரபணு மாற்று உணவுகள் மற்றும் அந்த உணவு உற்பத்தி முறைகளை நாம் கைவிட்டு வெளியேறி இயற்கையான உணவுகளை, தற்சார்பு முறையில் உற்பத்தி செய்வதில் தீவிரமாக ஆராய்வதிலும் மட்டுமே நிரந்தர தீர்வு அமைந்துள்ளது. மேலும், காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். பன்னாட்டு ’கார்ப்பரேட்’ உணவு உற்பத்தி முறையைத் தடை செய்வதே இந்த பாதையில் நாம் எடுத்து வைக்கும் முதல் அடி.

இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியின மக்களைப் போல ஒட்டுமொத்த பெரும்பான்மை சமூகமும் அதன் பயன்பாட்டின் தேவைக்கான (ஏற்றுமதி செய்யாமல்) இயற்கை வளங்களை மட்டும் சூழலுக்கும் காடு மற்றும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பேற்படுத்தாமல் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். தனி நபர் செல்வ குவியலை முற்றிலும் தடுத்திட வேண்டும். தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் விளையும் உணவுகள், உள்ள நீர் நிலைகள், கால்நடைகள் மற்றும் சமூகத்தின் தேவையினைக் கருத்தில் கொண்டு உணவையும், உணவு உற்பத்தி முறைகளையும் இயற்கைக்கு ஒத்து மாற்றி அமைத்திட வேண்டும். சென்னை வாசிகளுக்கு வாஷிங்க்டன் ஆப்பிள் தேவை இல்லாத ஒன்று!

விவசாயிகளையும் கிராமப்புற கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பணியாளர்களையும் கூட்டுறவு ஏற்படுத்தி ஒன்றிணைத்திட வேண்டும். தமிழ் நாட்டிற்குத் தேவையான உணவுகளைத் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்து கொண்டாலே போதுமானது. அதேநேரம், தமிழ்நாட்டின் நிலப்பரப்பையும் நீர் நிலைகளையும் சீர்குலைத்து தேவைக்கதிகமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பொருளாதார கொள்கையையும் கைவிட வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் உணவு உற்பத்திக்கான மூலதனத்தைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் தற்சார்பு முறையில் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இந்த, தொற்றுநோய் நுண்ணுயிரிகளின் வாயிலாக இயற்கை நமக்குப் புகட்டும் பாடத்தை உணராமல் கடந்து செல்வோமானால் “ஒரு காலத்தில் மனித இனம் வாழ்ந்தது!” என்ற வரலாற்றை வெகு விரைவில் பூமி எழுதிவிடும்!

- மே 17 இயக்கக் குரல்

Pin It