உலக மக்கள்தொகையின் 96% மக்களையும் புவி வெப்ப உயர்வு ஏதேனும் ஒருவிதத்தில் பாதிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. காலநிலை மையம் (Climate Central) என்ற ஆய்வு மையம் நடத்திய ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது. உலக மக்கள்தொகையில் 96% அதாவது 760 கோடி மக்களையும் வெப்ப உயர்வு பாதித்துள்ளது. வெப்ப மண்டலப் பகுதிகள் மற்றும் சிறிய தீவுகளில் வசிப்பவர்களை இது ஒரே மாதிரி பாதிக்கிறது.
1021 நகரங்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடந்தன. சமோவா, பலாவ் நகரங்களில் வெப்ப உயர்வு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மற்ற இடங்களை விட இப்பகுதிகளில் 4 முதல் 5 மடங்கு வெப்ப உயர்வு அதிகமாகக் காணப்பட்டது. லாகோஸ், மெக்சிகோ நகரம், சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.
70 ஆண்டு கால காலநிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, 'மாறிவரும் காலநிலை குறியீடு' (The Climate Shift Index) என்ற ஒன்றையும் இந்த அமைப்பு தயாரித்துள்ளது. இதன்படி 26 நகரங்களில் 2021 அக்டோபர் முதல் 250-265 நாட்களுக்கு இடையில் உலகளாவிய சராசரி புவி வெப்ப உயர்வு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
கடல்கள் சூடாகின்றன
கிழக்காப்பிரிக்கா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய இடங்களை மையமாக வைத்து 26 நகரங்களில் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டன. பல இடங்களிலும் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்குச் சுற்றிலும் இருக்கும் கடல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடல்நீர் மட்ட உயர்வு தீவு நாடுகளுக்கு, குறிப்பாகப் பசிபிக் மற்றும் கரீபியன் பகுதியில் இருக்கும் நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 'டுவாலு' என்ற பசிபிக் தீவு நாடு வரும் ஆண்டுகளில் முழுவதுமாகக் கடலில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உமிழும் கார்பனால் உயரும் புவியின் வெப்பநிலையால், சூழல் சீரழிவிற்கு எந்தவிதத்திலும் காரணமில்லாத இதுபோன்ற சிறிய தீவுநாட்டு மக்கள் பாதிக்கப்படுவது, பூமியில் இன்று நம் கண் முன்னே நிகழ்ந்து வரும் பெரும் காலநிலை அநீதியாகும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்