கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)யின் தென் இந்தியாவிற்கான பொதுச் செயலாளராக இருக்கும் தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே கம்யூனிச இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு SUCI கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர் தலைவராக அனுபவம் பெற்றவர். SUCI கட்சி தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர். AIUTUC-யில் பொறுப்பாளராக இருந்த இவர் பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். குறிப்பாக திண்டுக்கல் விளாம்பட்டி காகித நூற்பாலை தொழிலாளர் சங்கம், விருதுநகர் சுவாமிஜி மில், சிவகாசி பட்டாசுத் தொழிலாளர் சங்கம் ஆகியவை உருவாவதில் பெரும்பங்களித்தவர். வங்கி ஊழியர் சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.

anandhan_423சோவியத் யூனியன் இருந்தபோது ரசியாவில் யூனியன் பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற்றவர். SUCI திருத்தல்வாதப் பாதையில் பயனித்தபோது அதில் இருந்து விலகிய பல தோழர்கள் செயல்பாடற்றவர்களாக ஆனபோது, அவர்களில் பலரை ஒருங்கு திரட்டி தோழர்.சங்கர் சிங் தலைமையில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) என்ற அமைப்பு உருவாகக் காரணமானவர். மூத்த தொழிற்சங்கவாதியும், கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட அனுபவங்களைப் பெற்றவருமான அவரிடம் சர்வதேச அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவான கம்யூனிச இயக்கங்கள் ஏன் பின்னடைவை சந்தித்தன, இந்தியாவில் தத்துவார்த்த ரீதியிலான குழப்பங்கள் காணப்படுவது ஏன்? கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியது என்ன என்பது போன்ற பொதுவான கேள்விகளை முன் வைத்தோம்.

- வழக்கறிஞர் கதிரேசன்

கேள்வி: 20 நூற்றாண்டின் முன் பகுதியில் கம்யூனிச இயக்கங்கள் வெகு வேகமாக பரவியதற்கான காரணங்கள் என்னவென்று கூற முடியுமா ?

பதில்: இயல்பாகவே அன்று வாழ்ந்த மக்களிடம் தொழிலாளர் வர்க்க கலாச்சாரம் இருந்தது. இன்றைக்கு ஊடகங்கள் உருவாக்கிய சொகுசு வாழ்க்கை கனவு அவர்களிடம் இல்லை. இன்று நிலவுவது போல தனிநபர் வாதம் அன்றுள்ள தொழிலாளர்களிடம் இல்லை. மார்க்சிய கண்ணோட்டம் உருவான காலத்தில் தொழிலாளர்களாக உருவான பெரும்பகுதியினர் பண்ணை அடிமைகளாக இருந்தவர்கள். அவர்கள் தங்கள் உழைப்பை சுதந்திரமாக விற்றுவாழும் கூலி அடிமைகளாக இருந்தனர். முதலாளித்துவ சமூகத்தில் 18 மணி நேரம் வேலை நேரமாக இருந்த காலத்தில் இன்றுள்ள பல உரிமைகள் அன்று இல்லை. அன்றைய தொழிலாளர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற வர்க்கமாக இருந்தனர். முதலாளித்துவத்தின் கொடுமையை எடுத்து சொல்லவேண்டிய தேவையே இல்லாதவாறு இயல்பாகவே அவர்கள் அதனை உணர்ந்திருந்தார்கள். அன்று உறுதியாக சோசலிசம் வந்துவிடும் என்று உழைக்கும் மக்கள் நம்பினார்கள். தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த அமெரிக்க, ஜெர்மனியில் விரைவாக சோஷலிசப் புரட்சி ஏற்பட்டு விடும் என்று மார்க்ஸ் எதிர்பார்த்தார்.

கேள்வி: தோழர் லெனினின் தலைமை பற்றி?

பதில்: மார்க்ஸின் கனவை ரஷியாவில் நனவாக்கிக் காட்டியவர் தோழர் லெனின். சித்தாந்த ரீதியாக ஆராய்ந்து புரட்சி என்பதை அறிவியல் பூர்வ துல்லியத்துடன் பார்த்தவர் லெனின். தன்னெழுச்சி அதாகவே சமுதாய மாற்றத்தைக் கொண்டு வராது என்று லெனின் உறுதியாக நம்பினார். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக போல்ஸ்விக் கட்சியை கட்டியமைத்தார். அரசு என்பது கட்டுப்பாடான வடிவமைப்பில் இயங்குவது. அந்த அரசைத் தூக்கி ஏறிய வேண்டுமெனில் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட கட்சி என்பது வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அமைப்புகளின் முழக்கங்களை முன்வைத்தார். அமைப்பு ரீதியிலான திட்டமிடுதலை சிறப்புறச் செய்தார். அதிருப்தியாளர்களை இனம் கண்டு அவர்களையும் ஒருங்கிணைத்து அமைப்புகளை வளர்த்தெடுத்தார். கட்சி செய்யவேண்டிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொடுத்தார். கட்சியினரின் சித்தாந்த வலுவினை வளர்த்தெடுத்தார். புறச்சூழ்நிலைகளை திறம்பட கையாண்டார். நடைமுறை ரீதியாக கிடைத்த படிப்பினைகளை கணக்கில் கொண்டார். தலைவர்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் வளர்ந்தது. ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முன்மாதிரி தலைவராக லெனின் உருவானார். இயக்கம் வெற்றி பெற்றால் அதன் பலவீனத்தையும் மற்றும் தோல்வியுற்றால் அதன் சாதக அம்சங்களையும் பார்க்கும் போக்கை லெனின் வளர்த்தெடுத்தார்.

தனிநபர் ரீதியான சாகச வாதங்களை வைத்து மட்டுமே தலைவர்களைப் பார்த்த உலகம் கூட்டுவாத கலாச்சாரத்தின் மூலம் அருமையான மக்கள் தலைவர்களாக போல்ஷ்விக் கட்சியின் தலைவர்கள் உருவானாதைப் பார்த்தது. முதல் உலக போர், அதனால் வந்த பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சரியாகக் கையாண்டதால் ரஷ்யப் புரட்சி மகத்தான வெற்றியினைப் பெற்றது. முதல் உலக போரின் பொது "அனைத்தும் போர் முனைக்கே" என்ற தேசிய வெறியை ஊட்டும் கோஷத்தை முதலாளிகளின் பிரதிநிதியான டூமா முன்வைத்தது. ஆனால் லெனின் தனது ஏகாதிபத்திய நலன்களுக்காக மக்களை பலிகடாய்களாக்குவதை எதிர்த்து நின்றார், "ரஷிய மக்களுக்கு தேவை ரொட்டியும், அமைதியும்" என்ற முழக்கத்தை வைத்து மக்களை அணிதிரட்டினார்.

பிரச்சாரப் பலத்தினால் மட்டுமல்ல நடைமுறை ரீதியாக எழுந்த பல இயக்கங்கள் அங்கு சோஷலிசப் புரட்சி ஏற்பட வழிவகுத்தன. அக்டோபர் புரட்சியின் மூலம் முதலாளிகளின் கைகளில் இருந்த ஆட்சியதிகாரம் தொழிலாளர்கள் கைகளுக்கு மாறியது. அடிமை மற்றும் நிலப்புரபுத்துவ சமூக அமைப்புகளின் மிச்ச சொச்சங்கள் இன்றும் நிலவவே செய்யும். எது பிரதான முரண்பாடாக இருக்கும், எது வளரும் சக்தியாக இருக்கும் என்பதைத் தீர்மானித்து அதை வென்றெடுக்க வேண்டும்; முதலாளித்துவம் முழுமையாக வளரவேண்டும் என்று கூறி காலம் தாழ்த்தி எதிரிக்கு வழி திறந்து விடக்கூடாது.

லெனினுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பிற்கு வந்த ஸ்டாலின் சோஷலிச அரசிற்கான அடித்தளத்தை வலுவாக இட்டார். ஸ்டாலின் தலைமையில் பீடு நடைபோட்ட சோவியத் யூனியன் அமெரிக்கா 200 ஆண்டுகள் அடைந்த வளர்ச்சியை 30 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியது. சோவியத் யூனியன் வேகமாக அடைந்த தன்னிறைவான வளர்ச்சியை வைத்து தான் ஒரு கட்டத்தில் ஸ்டாலின் 'சோவியத் யூனியன் மட்டுமே கம்யூனிசத்தை நோக்கி முன்னேற முடியும்' என்று கூறினார். 

கேள்வி: சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?

பதில் : ஸ்டாலின் காலம் வரைக்கும் திட்டமிட்ட உற்பத்தியும், உணர்வுமட்டத்தினைப் பராமரித்தலும் திறம்பட நடைபெற்றது. ஸ்டாலினுக்குப் பின்பு தலைமை பொறுப்புக்கு வந்த குருசேவ் போன்ற திருத்தல்வாதிகளால் உணர்வுமட்டத்தினைப் பராமரிப்பதும், திட்டமிடுதலும் சுத்தமாக கைவிடப்பட்டது. உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஒரு சமயம் அல்பேனியா சென்றிருந்த குருசேவ் அங்கு பொறுப்பிலிருந்த என்வர் ஹோச்ஹாவை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பாலைவனம் போல் இருந்த நிலத்தை கஷ்டப்பட்டு கோதுமை பயிரிடுவதற்காக சீர்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்த குருசேவ், "எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு காடாக இருந்த நிலத்தை சீர்படுத்துகிறீர்கள், நான் உடனேயே இரண்டு கப்பல் நிறைய கோதுமையை அனுப்பி வைக்கிறேன். இந்த முயற்சியைக் கைவிடுங்கள்" என்றார். அதற்கு என்வர் ஹோச்ஹா, "நீங்கள் அடுத்த வருடம் வரும் போது இந்த நிலத்தில் விளைந்த கோதுமையில் உங்களுக்கு ரொட்டி சுட்டு தருகிறேன்" என்று கூறினார்.

இவ்வாறு குருசேவ் ஒருவிதமான மேலாண்மைப்போக்கை உருவாக்கினார். போதுமான வளர்ச்சியை அடைந்துவிட்டோம் என்று முழுவதுமாக தத்துவார்த்த உணர்வுமட்டத்தினைக் கைவிட்டுவிட்டார். அப்போது ஆசிய நாடுகள் பல புதிதாக சுதந்திரம் அடைந்திருந்தன. ஆசிய நாடுகளில் முதலாளித்துவம் வளராத நிலையில் சோசலிசம் வந்துவிடக்கூடிய சூழல் இருந்தது. அவை அனைத்தும் ஸ்டாலினுக்குப் பிறகு வந்த திருத்தல்வாதத்தால் கனவாகவே ஆகிவிட்டது. இருந்தபோதும் சோவியத் யூனியன் உடைந்து சிதறியபோது கூட அதிகபட்ச மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் நாடாக ரசியா இருந்ததை உலகமே ஏற்றுக்கொண்டது.

கேள்வி: ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசத்தின் தாக்கம்? யூரோ கம்யூனிசம் குறித்து?

பதில் : அடுத்து கம்யூனிசம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட முதலாளித்துவ நாடுகளாக இருந்த ஐரோப்பாவில் ரசியாவில் ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து பாடம் படித்துக் கொண்ட முதலாளித்துவ அரசுகள் உலகம் முழுவதும் தாங்கள் அடித்த கொள்ளையில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கு வாழ்க்கை சம்பளமாகக் கொடுத்தன. இதனால் அங்குள்ள தொழிலாளர்கள் இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளர்களாக இல்லாத நிலையை ஏற்படுத்த முயற்சி செய்தன. பங்கு விற்பனை மையங்களில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து லாபம் சம்பாதித்து பெரிய அளவிற்கு வளர முடியும் என்ற நப்பாசையைத் தோற்றுவித்தன. தனிமனிதவாதம் அந்த நாடுகளில் ஊட்டி வளர்க்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் பற்றிய பொய்யான வதந்திகள் கடுமையாக பரப்பப்பட்டு, கம்யூனிசத்தின் மீது ஒருவிதமான வெறுப்பு அந்த நாட்டு தொழிலாளர்களிடையே ஊட்டப்பட்டது. தோழர்.லெனின் முன் வைத்த பாட்டாளி வர்க்க முன்னணிப்படை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற நிலையை எடுக்க அந்த நாட்டு கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டனர். இது எந்த அளவிற்குப் போனதென்றால் மாணவர்களின் எழுச்சியைக் கொண்டே புரட்சியை நடத்த முடியும் என்ற அளவிற்கு தவறான வழிமுறைகளைப் பின்பற்றினர். இவை பொதுவாக யூரோ கம்யூனிசம் என்று அழைக்கப்படுகிறது.

கேள்வி: டிராட்ஸ்கியவாதம் பற்றி?

lenin_287பதில் : புரட்சி என்பது வெளிப்பார்வைக்கு தேசியத்தையும் உள்ளடக்கத்தில் சர்வதேசியமாகவும் இருக்கும் என்றும்,ஒரு நாட்டிலும் கூட புரட்சி சாத்தியம் என்றும் லெனின் நிரூபித்தார். ஆனால் இதிலிருந்து மாறுபட்டு, 'ஒரு நாட்டில் மட்டும் புரட்சி சாத்தியம் இல்லை; வெளிநாடுகளுக்கு புரட்சியை ஏற்றுமதி செய்ய வேண்டும்; பாட்டளிவர்க்கதின் முன்னணிப் படையாக வலுவான கட்சி தேவை இல்லை' என்ற அடிப்படையிலேயே கோளாறான கோட்பாடுகளைக் கொண்ட டிராட்ஸ்கிய குழுக்கள் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்தன. அவை கம்யூனிச இலக்கியங்களை பரப்பவும் செய்தன. முன்பை விட தற்போதுள்ள உலகமயமாக்குதலின் காரணமாக அவர்களுக்கான வாய்ப்புகள் பெருகிவிட்டன. ஆனால் உழைக்கும் மக்கள் அவர்களாகவே தாங்கள் அடிமைகள் என்று உணர்ந்து வெளியே வந்து புரட்சியை நடத்துவார்கள் என்பது சாத்தியமல்ல. இதனால் தான் பல்வேறு தன்னெழுச்சி இயக்கங்கள் வந்தபோதும் அவை அமைப்பாக்கப்படததால் புரட்சி என்பது நெடுங்கனவாகவே ஆகிவிட்டது. புரட்சியை நடத்த பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கட்சி கண்டிப்பாக வேண்டும். 

கேள்வி: முதலாளித்துவத்திற்கு தீர்வே கிடையாதா?

பதில் : முதலாளித்துவம் என்னென்ன வளர்சிகளைக் கொண்டு வர முடியுமோ அனைத்து வளர்ச்சிகளையும் கொண்டு வந்துவிட்டது. அது எதற்காக கொண்டு வந்ததென்றால் அதன் வளர்ச்சிக்காக கொண்டு வந்தது. ஆனால் இன்று சமூகத்தின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கிறது. அதன் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கக்கூடிய முதலாளித்துவம் நவீன மயத்தின் பலன்களை அனுபவிப்பதற்காக தொழிலாளர்களை ஆள் குறைப்பு செய்கிறது. நவீனமயத்தினால் உழைப்பிலிருந்து மனிதன் படிப்படியாக விடுவிக்கப்பட வேண்டும், ஆனால் அதற்கு நேர்மாறாக இன்று கூடுதல் வேலை வாங்கப்படுவதும், வேளையில்லாத் திண்டாட்டமும் ஏற்பட முதலாளித்துவம் காரணமாக உள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி என்பதாக இல்லாமல் சந்தையில் எந்தப் பொருளின் விற்பனை நன்றாக உள்ளதோ அந்தப் பொருளை உற்பத்தி செய்து குவிக்கிறது. இப்படி எல்லா வகையிலும் உழைக்கும் மக்களை போராட வேண்டிய கட்டாயத்திற்கு முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது. அதன் சவக்குழியை அதுவே வெட்டத்துவங்கிவிட்டது. உண்மையில் மக்களது பிரச்னைகளுக்கு முதலாளித்துவமே காரணம். அது தீர்வு கிடையாது. 

கேள்வி: சோஷலிச ஆட்சியில் இலக்கியத்திற்கான பங்களிப்பு குறைவாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து?

பதில் : ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பே நல்ல இலக்கியங்களுக்கான கருவை கொண்டிருக்கும். ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூகத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்த சோவியத் யூனியனில் அதற்கான சூழல் இல்லாமல் இருந்தது என்று தான் கூற வேண்டும். ஆனாலும் ஸ்டாலின் அதைக் குறிப்பிட்டு நமது கட்டமைப்புகளில் இருக்கும் குறைபாடுகள் இலக்கியங்கள் வாயிலாகச் சுட்டிக்காட்டப்பட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்தோடு சோவியத் ரஷ்யா உருவான புதிதில் அதை அழித்தொழிக்க உலக நாடுகள் களம் இறங்கின. அவற்றையும் சமாளித்துக் கொண்டு சோஷலிச கட்டுமானப் பணிகளையும் செய்யும் மிகப்பெரிய பொறுப்பு இளம் சோஷலிச ரஷியாவின் தோள்களில் விழுந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாசிசப் படையினை எதிர் கொண்டது ரஷிய ராணுவம் மட்டுமல்ல; மக்களும் தான். ஆம் ஒவ்வொரு மக்களும் போர்வீரர்களானார்கள். ஜெர்மன் ராணுவம் ரசியாவில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் சண்டை போட வேண்டி இருந்தது. இரண்டாம் உலகப்போரில் போல்ஸ்விக் கட்சியின் முக்கியமான பொறுப்பாளர்கள் பலரை சோவியத் யூனியன் இழந்தது. மிகச் சிறந்த போர் சார்ந்த இலக்கியங்கள் பல போருக்குப் பின் வந்தன. அமைப்பில் சிறந்த எழுத்துத் திறமை பெற்ற யாரும் எழுதலாம் என்ற நிலை எந்த முதலாளித்துவ நாட்டிலும் காண முடியாததாகும். இந்த நிலையிலும் உலகம் முழுவதற்கும் அனைத்து மொழியிலும் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் படைப்புகளும் ரஷிய செவ்விலக்கியங்களும் கொண்டு செல்லப்பட்டன. சோவியத் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டு மொழிகளும் தன்னிறைவை அடையும் வண்ணம் அனைத்து படைப்புகளும் உருவாக்கப்பட்டன.

அமெரிக்க இருநூறு ஆண்டுகள் வளர்ந்த வளர்ச்சியை முப்பதே ஆண்டுகளில் வளர்ந்து காட்டியது ரஷ்யா. அது மட்டுமல்ல இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட மோசமான சூழ்நிலைகளை தாங்கிக்கொண்டும் பத்தே ஆண்டுகளில் இழந்த அனைத்து வளர்ச்சியையும் பெற்றது. உலகம் முழுவதும் புகழ் பெற்ற ரஷிய எழுத்தாளர் மார்சிம் கார்க்கியை எந்த மேற்குலக நாடும் போற்றவில்லை. சோவியத் யூனியனை விமர்சனம் செய்தாலே புகழ் பெறலாம் என்ற எண்ணத்துடன் எழுதிய சில எழுத்தாளர்களை முதலாளித்துவ நாடுகள் போற்றின. அதற்குக் காரணம் அதன் மூலம் எங்கே கம்யூனிச பூதம் நம்மையும் தாக்கி விடுமோ என்ற அச்சத்தால், மக்களுக்கு சோசலிசத்தின் பாலான வெறுப்பை உருவாக்குவதற்கு அவர்கள் பயன்பட்டனர். அதுவே அவர்கள் ரஷியாவில் இருந்து கொண்டே எழுதியவரைக்கும் தான் புகழப்பட்டனர். அவர்கள் ரஷியாவை விட்டு வெளியே வந்த பிறகு இதே மேற்குலக நாடுகள் அவர்களை சீந்தக்கூடவில்லை. இதில் அலெக்சாண்டர் சொல்ழேநிட்சின் என்ற எழுத்தாளர் எழுதிய cancer ward என்ற நாவலை தூக்கி வைத்துக் கொண்டாடின மேற்குலக நாடுகள். ஆனால் அவர் ஒரு இடத்தில் 'தக்காளி வரத்து சந்தையில் அதிகமாக இருந்தால் தக்காளி விலை போகாது அதைப்போலவே பெண்கள் சமூகத்தில் அதிகமாக இருந்தார்கள் என்றால் அவர்கள் விலை போகமாட்டார்கள்' என்று எழுதினார். இப்படியான எழுத்தாளர்களைத் தான் அமெரிக்க கொண்டாடியது. இவ்வாறு ரஷியாவில் சோஷலிச கால கட்டத்தில் நல்ல இலக்கியங்கள் வெளிவரவில்லை என்பதை ஏற்க முடியாது. 

கேள்வி: இன்று புதுப் புது இசங்கள் தோன்றுகின்றனவே?

பதில் : இசம் என்பது அடிப்படையையே மாற்றக் கூடிய சிந்தனைப் போக்குக்கு வழிவகுக்கக் கூடியது. மார்க்சிசம், லெனினிசம் தவிர வேறு எதுவும் இசம் கிடையாது. மாவோவே தன்னை ஒரு சிறந்த மார்க்சிய ஆசிரியன் என்றே கூறினார். மாவோயிசம் என்று கூறாததால் அவரை குறைத்து மதிப்பிடுகிறோம் என்பதல்ல. தோழர்.மாவோ சிந்தனைகள், சேகுவேராவின் வழிமுறைகள் , சிப்தாஷ் கோஷின் சிந்தனைகள் என்று பிற தலைவர்களின் கருத்துகளை நாம் கூறலாம். 

கேள்வி: சேகுவேரா புரட்சியின் அடையாளமாக இருக்கிறார் என்பது உண்மை தானே ?

பதில் : மாபெரும் மனிதாபிமானியான சேகுவேரா இந்த உலகத்தையே ஏகாதிபத்தியத்தின் கோரப்பிடியில் இருந்து விடுவிப்பதாகக் கிளம்பியவர். அந்த அளவிற்கு இந்த உலகையும், அதன் மக்களையும் நேசித்தவர். அவரின் தத்துவமே 'ஒரு சிறு தீப்பொறி மிகப்பெரிய காட்டுத் தீயாக பரவும்' என்பது தான். கடும் அடக்குமுறையில் ஒரு சிறு எதிர்ப்புக்குரல் கூட எழாதவாறு அடக்குமுறை கொழுந்துவிட்டு எரியும் நாடுகளில் சில சாகசவாத நடவடிக்கைகள் கூட வெற்றிகரமாக புரட்சியைக் கொண்டு வரும். கியூபாவில் பாடிஸ்டா அரசுக்கு எதிராக இருந்த மனநிலையையும் பிடலின் இயக்கத்திற்கு அவ்வாறு தான் பயன்பட்டது. அந்த ஆதரவை ஒருங்கு திரட்டி கியூபாவில் போராடி வென்றனர். ஆனால் பொலிவியாவின் புறச் சூழ்நிலையோ புரட்சியைக் கொண்டுவரும் அளவிற்கு இல்லாததால் சேகுவேராவின் அனைத்து முயற்சியும் பொலிவியாவில் எதிர்மறையானது. பொலிவியாவின் விவசாயிகளே புரட்சியாளர்களை கட்டிக் கொடுத்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் புரட்சியின் ஆரம்பத்திற்கான கருதுகோள்களே தவிர புரட்சிக்கு புறச்சூழ்நிலை மிகவும் முக்கியம். பிரஞ்சு எழுத்தாளர் டிப்ரேயை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்கள் மேல் விழுந்ததால் புரட்சியாளர்கள் சோர்வடைந்தனர். எந்த மக்களின் நலனுக்காக இவர்கள் போராடினார்களோ அந்த மக்களே இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். இவ்வாறு கியூபாவில் வெற்றி பெற்ற புரட்சி, பொலிவியாவில் தோல்வியடைந்தது. ஆனாலும் மக்களை அவர் நேசித்ததைப் போலவே உலகம் உள்ளளவும் சேயையும் மக்கள் நேசிப்பார்கள் என்பது நிச்சயம்.

கேள்வி: திருத்தல்வாதம் உலகம் முழுவதற்கும் தலையெடுத்ததற்கு காரணம்?

பதில் : 20 கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசில் (CPSU) இதற்கான திறவு கோளாக அமைந்தது. அமைதியான முறையிலையே சோசலிசப் பாதையை நோக்கி முன்னேற முடியும் என்று அறிவித்தது - உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதோடு அது ஒரு தீராத குழப்பத்திற்கு வழி வகுத்தது

கேள்வி: இந்தியாவில் 1925லியே கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டும் வலுவான கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வராமல் போனதற்கான காரணங்கள் என்ன ?

பதில் : சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியின் கோரிக்கையான வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கம்யூனிஸ்டுகள் ஆதரித்தனர். அன்றே முதலாளித்துவ ஜனநாயக நாடுகளின் கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்திருந்தது. காந்தியின் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாற்றாக வலுவான சமரசமற்ற தலைமையுடன் விளங்கிய நேதாஜியின் தலைமையை ஏற்று அதற்கு ஆதரவாக வெகுஜனங்களைத் திரட்டியிருந்தால் இந்தியாவில் மக்கள் ஜனநாயக புரட்சி மலர்ந்திருக்கும். பகத்சிங்கின் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசன் ஆங்கில அரசின் அடக்குமுறையால் செயல்பட முடியாதவாறு முடக்கப்பட்டபோது வெகு ஜனங்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு தேர்ந்தெடுத்த வழிமுறை தான் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விரோத மசோதா தாக்கல் செய்தபோது சத்தம் மட்டுமே வரும் வெடிகுண்டை வீசியதாகும்.

அதற்குப் பிறகு நீதிமன்றமேடையையே பிரசார களமாக அவர்கள் ஆக்கினர். ஆனால் அவர்கள் போட்ட திட்டத்தின்படி வெளியில் இருந்து மக்களைத் திரட்ட நினைத்தபோது ஒரு குண்டுவெடிப்பில் சிக்கி அனைவருமே கைதாகும்படி ஆகிவிட்டது. இதனால் அந்த ஒப்பற்ற வீரர்களின் தியாகம் மக்களிடையே ஊட்டிய எழுச்சியை ஒன்றுபடுத்தி தேசிய முதலாளிகளை உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகக் குடியரசை உருவாக்கும் வாய்ப்பை தவறவிட்டது அப்போதிருந்த இந்திய கம்யூனிஸ்ட்கட்சி. அது மிகப்பெரும் வரலாற்றுப் பிழையாகும்.

கேள்வி: நேதாஜி அடிப்படையில் கம்யூனிஸ்ட் அல்லவே அவர் உருவாக்க நினைத்ததும் தேசிய முதலாளிகளின் அரசு தானே?

பதில் : காந்தி மக்கள் இயக்கங்களை கட்டியெழுப்பி அந்த இயக்கங்களின் வாயிலாக சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் பெரியளவில் மக்கள் பங்கேற்ற இயக்கங்களை நடத்தவில்லை. அவர் மட்டும் உண்ணாவிரதம் இருப்பார். அவரைச் சுற்றி கூட்டம் கூடும். அந்த இயக்கம் நடக்கும்போது மக்கள் கட்டுப்பாட்டை மீறினார்கள் என்றால் அந்த இயக்கத்தை அப்படியே கூண்டோடு கலைத்து விடுவார். இவ்வாறு தேசிய முதலாளிகளின் நலனுக்கு உகந்த விதத்திலேயே சமரசமான போராட்டங்களை அவர் வழிநடத்தினார். அப்போது தான் தேசிய முதலாளிகள் ஆட்சிஅதிகாரத்தைக் கைப்பற்ற முடியும், சாதாரண மக்களிடையே எழுச்சி ஏற்படும் எனில் அவரின் நோக்கம் நிறைவேறாது என்பதால் தனி நபர் சத்தியாகிரகம் போன்ற புதுப் புது வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார். ஆனால் நேதாஜி அப்படி அல்ல.

அவர் ராணுவ நடவடிக்கை மூலம் வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என்று நினைத்தார். மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆறுமாதம் கல்வியும், ஆறுமாத காலம் போர்ப் பயிற்சியும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினார். மாபெரும் மக்கள் தலைவராக விளங்கிய அவர் பரந்துபட்ட மக்கள் பகுதியினரை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்த விரும்பினார். தேசிய முதலாளிகளின் நலனை மட்டும் கருதிய மகாத்மா காந்தியோடு கைகோர்த்திராது கம்யூனிஸ்டுகள் நேதாஜியோடு கைகோர்த்திருந்தால் அன்றே மக்கள் ஜனநாயகம் மலர்ந்திருக்கும்.

nethaji_361கேள்வி: ஜப்பான், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன் அவர் பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுத்தார். அது இன்னொரு ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக இந்தியா மாற வழிவகுத்து விடுமல்லவா?

பதில் : அவர் ஜப்பானால் பிடிக்கப்பட்ட பிணையக் கைதிகளைத் தனது ஐ.என்.ஏ., படைக்குப் பெற்றது மற்றும் சில பண உதவிகளைத் தவிர வேறு எதையும் அவர் ஜப்பானிடம் பெறவில்லை. அத்தோடு இந்திய தேசிய ராணுவத்திற்கும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும், உள்நாட்டிலும் பணம் திரட்டப்பட்டது. அந்தப் போரின் போது ஜெர்மனி பர்மாவைக் கைப்பற்ற இந்திய தேசிய ராணுவத்தை அனுப்ப நேதாஜியிடம் உதவி கேட்டது. அதற்கு அவர் இது கூலிப் படையல்ல; இந்தியாவை அந்நியர்களிடம் விடுவிக்க உருவாக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்திற்கான ராணுவம் என்று கூறி ஜெர்மனிக்கு உதவ மறுத்துவிட்டார். நேதாஜி அந்தப் போராட்டத்தின் போது தனித்து விடப்பட்டார். கம்யூனிஸ்ட்கள் அந்த நேரத்தில் மக்களைத் திரட்டி நேதாஜிக்கு ஆதரவாக அணிதிரண்டிருந்தால் மக்களிடையே கொழுந்து விட்டு எரியும் சுதந்திர உணர்ச்சியின் முன்னால் ஜப்பானின் ஆட்டம் எல்லாம் செல்லாக் காசாகியிருக்கும்.

கேள்வி: வரலாற்று நிகழ்வை இவ்வளவு காலத்திற்குப் பிறகு இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று சொல்வது எளிதாக இருக்கும். ஆனால் அவர்கள் அன்றைக்கு எதிர் கொண்டிருந்த பிரச்சனைகள் இன்று நீங்கள் நினைக்கும் விதத்தில் தான் இருக்கும் என்று சொல்ல முடியுமா?

பதில் : உண்மை தான். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைவர்களின் தியாகங்களை மதிக்கும் அதே சமயத்தில் விமர்சனப் பூர்வமான அணுகுமுறை என்பது தேவை. அதற்காகத்தான் இந்த விமர்சனங்களை முன் வைக்கிறோம். லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்கள் சிந்தித்த அளவிற்கு சிந்திக்கும் திறனுள்ளவர்களாக அன்றைக்கு இந்தியாவில் யாரும் இல்லை. 1917 தோழர் லெனினால் வெற்றிகரமாக அக்டோபர் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடத்திக் காட்டப்பட்டது. அந்த எழுச்சியால் உந்தப்பட்டு தான் மாவோ, சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை கொண்டுவர நினைத்தார். ஆனால் பின்தங்கிய நாடான சீனாவில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். விவசாய முறையில் இருந்த சுரண்டலை கணக்கில் எடுத்துக் கொண்டு விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட புரட்சித் திட்டத்தை மாவோ வடிவமைத்தார்.

அந்த அளவிற்கு உள் முரண்பாடுகள், வெளிமுரண்பாடுகளை கவனிப்பவர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலும் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அவர்கள் 1917 அக்டோபர் புரட்சியின் தாக்கத்தினால் உந்தப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர்கள். இதனால் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களை ஒன்று திரட்டி, கட்சியை வலிமையாகக் கொண்டு செல்பவர்களாக அவர்கள் இல்லை. அவர்களால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயக்கவியல் ரீதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. இப்படி வரலாற்றை நாம் பார்ப்பது என்பது எதிர்காலத்தில் இப்படி வரக்கூடிய பிரசனைகளை எப்படி அணுக வேண்டும் என்ற வரலாற்றுப் படிப்பினையை நமக்குத் தரும்.

சுதந்திரத்திற்கு முன்பு என்ன செய்திருக்கவேண்டுமோ அதை செய்யாமல் விட்ட இவர்கள், சுதந்திரம் பெற்ற பிறகு - அதுவும் சுதந்திரம் இந்தியாவின் தேசிய முதலாளிகளின் கைகளில் போன பிறகு - யார் எதிரியோ அவனை எதிரியாகக் கருதாமல், தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியம், நிலபிரப்புகள் போன்றவர்களே தங்கள் எதிரிகள் என்று கருதிக் கொண்டு அவர்களை எதிர்த்து தேசிய முதலாளிகளை நட்பு சக்தியாகக் கொண்டு மக்கள் ஜனநாயத்தை நோக்கி நகர வேண்டும் என்று கூறுவது கேலிக்குரியதாகிவிட்டது. இங்கு முதலாளித்துவம் வலுவாக வளர்ச்சியடைந்து புரட்சிக்கான கட்டமே சோசலிசக் கட்டமாக இருக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை. உண்மையில் அன்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தவறுகள் அன்றோடு போகவில்லை. அவர்களது சிந்தனைப் போக்கின் அடிப்படையில் இன்றும் மாற்றம் இல்லை. எனவே தான் விமர்சிப்பது அத்தியாவசியமாக ஆகிவிட்டது.
 
கேள்வி: உலக அளவில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவில் முதலாளித்துவம் அந்த அளவிற்கு வளர்ந்துள்ளதாகக் கூற முடியுமா?சோசலிசப் புரட்சிக்கான கட்டம் இங்கு வந்துவிட்டது என்று கூறுவது பொருத்தமாகுமா ?

பதில் : இதே கேள்வி ரசியாவில் 1917ல் பிப்ரவரி புரட்சியின் மூலம் முதலாளிகளின் கைகளில் ஆட்சியதிகாரம் வந்தபொழுது தோழர் லெனினிடம் எழுப்பப்பட்டது. 'பிற வளர்ந்த ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும்போது ரசியாவில் நிலப்பிரபுகள் இருக்கிறார்கள், அந்நிய முதலீடுகள் குவிந்து கிடக்கின்றன. முதலாளித்துவம் செய்து முடிக்க வேண்டிய பணிகளே நிறைய இருக்கின்றன. அந்நிலையில் எவ்வாறு சோசலிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுப்பது?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது லெனின் 'முதலாளித்துவப் புரட்சிக்கான கட்டம் என்பது முடிவுக்கு வந்து விட்டது. அதை நீட்டித்துக் கொண்டிருந்தால் முதலாளித்துவம் வலுபெற்று விடும், புரட்சி என்பது ஒரு வர்க்கத்திடம் இருந்து ஆட்சி அதிகாரம் இன்னொரு வர்க்கத்திடம் கைமாறுவதாகும். ரஷ்யாவில் முதலாளித்துவம் செய்து முடிக்க வேண்டிய கடமைகளை தொழிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு செய்து முடிக்கும், ஆகவே இங்கு சோஷலிசப் புரட்சி செய்வது வரலாற்றுக் கடமை' என்று குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவில் ஆட்சி அதிகாரம் முழுவதும் அந்நியர்களிடம் இருந்து தேசிய முதலாளிகளின் கைகளுக்கு வந்த பிறகும், தேசிய முதலாளிகளின் நட்போடு மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற கோசத்தை முன் வைத்தது, இந்திய கம்யூனிஸ்டுகள் செய்த வரலாற்றுப் பிழையாகும்.

கேள்வி: ரஷ்யாவில் சோவியத்துக்கள் என்ற அதிகார மையம் இருந்தது. ஆனால் இந்தியாவில் அது போல எதுவும் இல்லையே ?

பதில் : அவ்வாறு இங்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் அந்நியர்களிடம் இருந்து ஆட்சியதிகாரம் இந்திய தேசிய முதலாளிகளிடம் வந்த பிறகு அதை எதிர்த்து உழைக்கும் மக்களை அணிதிரட்ட கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டனர் என்பதும் உண்மையே. அதை முனைப்புடன் செய்திருந்தால் இங்கும் போராட்ட அமைப்புகள் புரட்சியை சாதிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கும்.

கேள்வி: எப்படி இந்தியாவில் தேசிய முதலாளிகளின் கைகளில் ஆட்சியதிகாரம் வந்தது என்று சொல்கிறீர்கள்?

பதில் :ஆளும் அரசு எந்த அளவிற்கு முதலாளித்துவ நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதே அதற்கான உரைகல். முதலாளித்துவ வளர்ச்சிக்காக போடப்பட்டவைகள் தான் ஐந்தாண்டுத் திட்டங்கள். ஆதாரத் தொழில்களை அரசே ஏற்று நடத்தி முதலாளிகள் வளர ஊக்கமளித்தது. முதலாளிகள் வளர்ந்த பிறகு அந்த ஆதாரத் தொழில்கள் அனைத்தையும் இன்று தனியார்களின் கைகளில் தாரை வார்த்துக் கொண்டுள்ளது. மிகப்பெரிய திட்டங்களான தங்க நாற்கர சாலைகள், மின்சார வளர்ச்சிக்கு பெரிய பெரிய மின் திட்டங்கள் என அனைத்துமே முதலாளித்துவ நலனுக்காக தான். அணுகுண்டுகளை வைத்துள்ள நாடாக இருப்பதும் புது புது ஏவுகணைகளை ஏவி பரிசோதிப்பதும் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கவும் சிறிய நாடுகளை அச்சுறுத்தவும் தான். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அனைத்துமே இந்திய முதலாளிகளின் நலனுக்காகவே செய்யப்படுகிறது. இவை அனைத்துமே இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு என்பதற்குச் சான்று பகரும்.

கேள்வி: மேலைநாடுகளில் விவசாயிகளின் எண்ணிக்கை அந்த நாடு மக்கள் தொகையில் மிகக் குறைந்த பகுதியே ஆகும். ஆனால் இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். அப்படி இருக்கும்போது தொழிலாளர்களை மட்டும் வைத்து எப்படி இந்தியாவில் புரட்சியை சாத்தியமாக்க முடியும்?

பதில் : விவசாயிகள் சுய தேவைக்கு உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் சந்தையில் எது நல்ல விலை போகுமோ அந்தப் பொருளை விளைவித்துத் தருபவர்களாகவே இருக்கிறார்கள். விவசாயத் தொழிலில் அதிகளவில் விவசாயத் தொழிலாளர்களே ஈடுபடுகிறார்கள். அவர்களையும் ஆலைத் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து சோசலிசப் புரட்சி நடத்த வேண்டும்.

கேள்வி: சிறு, நடுத்தர விவசாயிகள் அரசின் பாராமுகத்தால் பாதிக்கப்படுகின்றனரே ?

பதில் : இடுபொருள் ஆலையில் சரக்காக உபயோகப்படுத்தபடும் பொருளின் விலை குறைக்கப்படவேண்டும் என்பதால் விவசாயிகளின் விளை பொருளுக்கு குறைவான விலையே நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளின் பொருளுக்கு குறைவான விலை கிடைப்பதன் மற்றுமொரு காரணம் இடைத்தரகர்கள். இவர்களே உற்பத்தியில் எந்த உழைப்பையும் செலுத்தாமல் விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு விளை பொருள்களை வாங்கி அதிக விலைக்குப் பொருள்களை விற்று லாபம் சம்பாதிக்கிறார்கள். விவசாயிகளின் விளை பொருளுக்கு விலையைத் தீர்மானிப்பது இடைத்தரகர்களே. அவர்களின் சுரண்டலை எதிர்த்தும், அரசின் பாராமுகத்தைக் கண்டித்தும் விவசாயிகள் அணிதிரள வேண்டும். அரசின் மானியங்கள் அனைத்தும் அதிக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குத் தான் செல்கிறது. அரசானது தொழில்துறை முதலாளிகளின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகிறது. குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கடும் நெருக்கடிச் சூழலிலேயே உள்ளனர். இந்த விவசாயிகள், புரட்சிக்கு நட்புச் சக்தியாக கண்டிப்பாக இருப்பார்கள். விவசாயத் தொழிலாளர் போராட்டங்களும், நகர்ப்புறங்களில் தொழிலாளர்களின் போராட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

கேள்வி: ஏகாதிபத்திய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து வருவதால் அவர்களது தலையீடும் நமது தொழிற்துறையில் இருக்கத்தானே செய்யும்? அந்நிலையில் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் தானே?

பதில் : ஏகாதிபத்திய முதலீடுகள் அவற்றின் நலன்பேணும் விசயங்களை வற்புறுத்தவே செய்யும். அவற்றைப் பாதுகாப்பதற்காக அவை நேரடியாக இங்கு தலையிட முடியாது. எவ்வாறு அந்நிய முதலீடுகளுக்கு பாதுகாப்பு தரும் வகையிலும் அந்நிய நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் அந்நாடுகளில் அவர்கள் பெற்ற ஊதியத்தை தக்கவைத்துக் கொள்ளும் விதத்தில் ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும் சரத்துகள் நமது கம்பனி சட்டத்தில் கொண்டு வரப்பட்டதோ அதைப் போலவே நமது அரசாங்கத்தை வலியுறுத்தி அதனைக் கொண்டே நமது தொழிற்சாலை சட்டங்களில் உள்ள வேலைப் பாதுகாப்பு விதிகள் போன்றவற்றை தளர்த்தச் செய்யவும் அவை முயலும். நமது அரசும் அதனை எவ்வித தயக்கமும் இன்றிச் செய்யும். இதில் அந்நிய முதலாளிகளின் நலன் மட்டுமன்றி நமது உள்நாட்டு முதலாளிகளின் நலனும் சம்பந்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நமது அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி நமது சட்டங்களை மாற்றச் செய்து நம்மைக் கொண்டு தங்களது நலனை மேம்படுத்திக் கொள்ள அந்நிய மூலதனம் முயலுமேயன்றி ஏகாதிபத்தியத்தின் நேரடி தலையீட்டிற்கு ஒருபோதும் அது வழிவகுக்காது. ஏனெனில் அந்நிய மூலதனம் இங்கு வருவதோடு பிரச்சனை நின்றுவிடவில்லை. இந்திய மூலதனம் பல அந்நிய நாடுகளுக்கு செல்வதும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவெற்றால் நமது நாட்டு முதலாளிகள் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ தொழிற் நிறுவனங்களை வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டங்களை அறவே நடத்தக் கூடாது என்று நாம் கூறவில்லை. மாறாக அப்போராட்டங்களின் வரையறைகளை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். அவை அடையாளப்பூர்வ போராட்டங்களாகவே இருக்குமே தவிர சம்பந்தப்பட்ட ஏகாதிபத்திய நாடுகளை பாதிக்க வைக்கும் நேரடித் தன்மை வாய்ந்த போராட்டங்களாக ஒரு போதும் ஆகாது.

கேள்வி: புரட்சியில் பிரதான பாத்திரம் வகிப்போர் யார் என்று உங்களால் கூறமுடியுமா ?

பதில் : அமைப்பு ரீதியாக ஒன்று திரண்ட, ஒருங்கு திரளாத தொழிலாளர்கள், விவசாயகூலித் தொழிலாளர்கள், அரைப்பாட்டளிகள் புரட்சியின் பிரதான கூறுகளாவர்கள். சிறு விவசாயிகள் புரட்சியின்போது மிகப்பெரிய அளவிற்கு இவர்களோடு சேந்து கொள்வார்கள்.

கேள்வி: RSP, SUCI, அதிலிருந்து பிரிந்த CWP ஆகிய கட்சிகளே சோசலிசப் புரட்சி என்ற கோசத்தை முன்னெடுக்கின்றன. இதை முன்மொழிந்த அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா?

பதில் : 'இந்திய தேசியத்தின் சமூகப் பின்புலம் ' என்ற நூலின் ஆசிரியர் எ.ஆர். தேசாயும் , சமூக ஆர்வலரும், விஞ்ஞானியுமான டி.டி. கோசாம்பி 'எக்ஸ்பரேடிவ் எஸ்சேஸ்' என்ற நூலிலும் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி தான் இந்தியாவில் ஏற்பட வேண்டிய புரட்சி என்று தங்கள் நூல்களில் கூறியுள்ளனர்.

கேள்வி: உங்களது அடிப்படை அரசியல் வழி சரியாக இருந்தும் பெருமளவு மக்களை திரட்ட முடியாதது ஏன் என்று கூற முடியுமா?

பதில் : பொதுவாக மக்கள் புரட்சிகர இயக்கங்களின் பால் நகராமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நமது மக்களின் மனநிலையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மதவாத, விதிவாதப் போக்குகள் ஆகும். அனைத்து நாடுகளிலும் இந்த போக்குகள் இருந்தாலும், அத்தனை ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இப்போக்குகள் அந்நாடுகளில் இல்லை. இந்தியாவில் தோன்றிய முதன்மையான கம்யூனிஸ்ட் இயக்கம் விடுதலைக்கு முன்பு காந்தியின் பின்னால் அணிதிரண்டு இருந்ததால் இப்போக்குகளுக்கு எதிராகப் போராடவேண்டிய அளவிற்குப் போராடவில்லை. நாடு அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்ற பின்பு அவர்களை அப்பிக் கொண்ட நாடாளுமன்றவாதம் இப்போக்குகளை எதிர்ப்பதற்குப் பதிலாக அதனோடு முடிந்த அளவு சமரசம் செய்து செய்துகொள்பவர்களாக அவர்களை ஆக்கிவிட்டது.

முதலாளித்துவ ஜனநாயக கலாச்சாரம் ஆழமாக வேறூன்றும் அளவிற்கு முதலாளித்துவ தொழில் வளர்ச்சி இங்கு இருக்கவில்லை. ஆனால் மக்களிடையே முன்பு நிலவிய குறுகிய தன்மைகள் கொண்ட நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் கூறுகளும் முதலாளித்துவ கலாச்சாரத்தின் முக்கிய கூறான எப்படியாவது அதிகப் பணம் சேர்க்கவேண்டும் என்ற மனநிலையும் ஒருங்கிணைந்து ஒரு மோசமான கலாச்சாரக் கலவை இங்கு நிலவுகிறது. அதனால் சொத்துடமை மனநிலைமை பாட்டாளி வர்க்கத்திடம் பரவலாகக் காணப்படுகிறது. இவை அனைத்துமே மக்களை இடதுசாரிகளின் பக்கம் அவர்களாகவே வருவதைத் தடுக்கும் போக்குகள் ஆகும். இந்தப் போக்குகள் பெருமளவு இருந்தாலும், முதலாளித்துவ நெருக்கடி முற்றி வாழ்க்கை தாங்கவொண்ணதா சுமையாக ஆகும்போது அது நிச்சயம் அவர்களின் கண்களைத் திறக்கும். இந்த நிலை தவிர்க்க முடியாமல் ஏற்பட்டே தீரும். ஏனெனில் முதலாளித்துவம் அதைச் சூழ்ந்துள்ள நெருக்கடியில் இருந்து மீளவே முடியாது. அது மோசமான நிலையில் இருந்து படுமோசமான நிலையை நோக்கி செல்லக்கூடியதாகவே இருக்கும்.

முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியின் பாதை பெருமளவு மக்களைத் தன் பக்கம் ஈர்க்காதிருப்பதேன் என்ற குறிப்பிட்ட கேள்வியைப் பொறுத்தவரை, அந்த சரியான பாதையைப் பின்பற்றாத பிற இடதுசாரி இயக்கங்கள் தங்கள் பெற்றுள்ள ஸ்தாபன வலுவினைக் கொண்டு மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் மூலமாகப் பரப்பும் தவறான கருத்துகள் ஏற்படுத்தும் குழப்பம் ஒரு முக்கிய காரணம் ஆகும். எடுத்துக்காட்டாக வர்க்கப் போராட்டப் பாதையை நாடாளுமன்ற அரசியல் லாபத்திற்காக கைவிட்டுவிட்ட அந்த கட்சிகள் தற்போது ஜாதியத்தை ஒரு முக்கிய முரண்பாடாக சித்தரிக்கத் தொடக்கி உள்ளன. தங்களது வளர்சிக்குச் சிறுபான்மை மக்களை அப்படியே ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றன. சிறுபான்மை வகுப்புவாதத்தை எதிர்க்கும் நடைமுறையை அவர்கள் பின்பற்றுவதில்லை.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரிலும் கூட இந்த முதலாளித்துவ அமைப்பு உடமை வர்க்கங்களை உருவாக்கியுள்ளன. இந்த அம்சம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வர்க்கப் போராட்டங்கள் மூலம் அந்த உடமை வர்க்கங்களை எதிர்த்த போராட்டம் நடைபெறாததால் இவர்களின் நடைமுறை குறித்த அவநம்பிக்கையும், குழப்பமும் சாதாரண மக்களிடையே பெருமளவு நிலவுகிறது. ஆளும் வர்க்க நலன் கருதி நமது நாட்டின் முதலாளித்துவ ஊடகங்களும் விமர்சனமின்றி இப்போக்குகளை மக்களிடையே பரவலாக பரப்புகின்றன. வர்க்கப் போராட்டம் நடைபெறாத சூழலை சாதகமாக்கி கொண்டு முதலாளித்துவ நிறுவனங்கள் அரசு நிர்வாகத்துடன் கைகோர்த்து, உழைக்கும் வர்க்க அமைப்பு சார்பான தொழிற்சங்கங்கள் போன்றவை உருவாவதைத் தடுக்கின்றன. இவையெல்லாம் நிரந்தரமான தடை கற்கள் அல்ல. இவை மிகவும் தற்காலிகமானவேயே. முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிப் பாதையை முன்வைப்பவர்கள் அமைப்பு ரீதியாக அனைத்து அம்சங்களையும் கலைநயத்துடனும், அறிவியல்பூர்வ துல்லியத்துடனும் கையாளத் தொடங்கும்போது இப்போக்குகள் படிப்படியாக குறைந்து மறைந்துவிடும்.

நேர்காணல் - கதிரேசன்

Comments

41 comments

41
தமிழ்குமரன்
தெளிவான பதில்களை தந்திருக்கிறார் தோழர் அ.ஆனந்தன்
மணிக்குமார்
இது போன்ற தத்துவார்த்த தெளிவு மிக்க தலைவர்கள் கம்யூனிச இயக்கங்களுக்கு தலைமை எடுக்க முன் வரவேண்டும்.
kathiresan.k
தொடர்பிற்கு கு.கதிரேசன் : 9843464246
சு.கலைச்செல்வன்
நேர்காணலில் தாங்கள் தந்திருக்கும் கருத்துகள் சிறப்பானவை நேர்த்தியானவை. தோழரைச் சந்திக்க விரும்புகிறேன். தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண்ணோ முகவரியோ கிடைப்பின் நலம்.
-
சு.கலைச்செல்வன்
Mukil
//குருசேவ் ஒருவிதமான மேலாண்மைப்போக்கை உருவாக்கினார். போதுமான வளர்ச்சியை அடைந்துவிட்டோம் என்று முழுவதுமாக தத்துவார்த்த உணர்வுமட்டத்தினைக் கைவிட்டுவிட்டார்//சோவியத் ரஷிய விழுந்ததன் காரணம் சரியாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
ஆறுமுகம்
அணைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து என்ற சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உள்ளது ”கம்யூனிசமே நம் முன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வு”. அணைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக மரணத்தை கூட யாரும் சொல்வதில்லை ... பின் கம்யூனிசம் மட்டும் எவ்வாறு தீர்வாகும். கம்யூனிசம் உருவாக்க முனைந்த இடம் ஜெர்மனி வெற்றி பெற்றது ரசியாவில் பின் அங்கேயே அது தோவ்வியடைந்தது. உலகில் எதுவும் நிரந்தர தீர்வாகது. சூழல் மாறும் போது பொருளாதார கொள்கையும் மாறும் ஆனாலும் கம்யூனீஸம் மரணமடைய கூடாது.
த.சிவக்குமார்
ஆறுமுகம், ”கம்யூனிசமே நம் முன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வு” என்று சொல்வது கம்யூனிசக் கொள்கையை அல்ல; கம்யூனிச சமுதாயத்தை. இன்று நாம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்குமான மூலகாரணத்தை தேடினால் அது இந்த முதலாளித்துவ சமூக அமைப்புமுறையாகத்தான் இருக்கும். அதற்கு மாற்றாக கம்யூனிச சமுதாயத்தை நாம் படைக்கும் போது இவை அனைத்திற்குமான தீர்வை நாம் காணலாம். அந்த சமுதாயத்தை படைப்பதற்கான நம் வழிகாட்டியே கம்யூனிசக் கொள்கை.
puthiyavan
அறிவியல் சாதன செயல்பாடுகளால் ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனைமுறைகள் ஒன்றே. அதுவே மார்க்சியம். மார்க்சியம் கண்டறிந்த சமூக முடிவுகளுள் ஒன்றே கம்யூனிசம். இயங்கியல் வளர்ச்சி விதிப்படி கம்யூனிசம் உதிப்பது உறுதி. இதை வேகப்படுத்தும் ஆற்றலும், சாதிக்கும் சக்தியும் மார்க்சிய சிந்தனைக்கே உண்டு. மார்க்சியம் மக்களுக்கு தலைமையேற்க வேண்டும். அதாவது இந்த மக்கள் தத்துவம் மக்களிடம் மலர்வது அவசியம். இது நிகழ்ந்தால் மக்களின் விடுதலையை மக்களே சாதிப்பார்கள். மக்கள் சாதிக்க கம்யூனிஷ்ட் கட்சிகளே வழிகாட்டும் தொண்டை நிகழ்த்த வேண்டும். இது கம்யூனிஷ்ட் கட்சிகளுக்கே உரிய வரலாற்று கடமை. மக்கள் விடுத்லைக்கு அல்லது சமூக புரட்சிக்கு தலைமை ஏற்கும் சரியான கம்யூனிஷ்டுகளே இதை சாதிப்பார்கள். இதற்கு கம்யூனிஷ்ட் கட்சி எந்த ஒரு உறுப்பினரும் மார்க்சியராக மலர்வது அவசியம். வரலாறு வெல்லட்டும்.
ராஜா வெங்கட்
நமக்கு அருகிலுள்ள குட்டி நாடான நேபாளில் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. நாம் என் இதை சாதிக்கமுடியவில்லை என்பதை யோசிக்க வேண்டும் . என்னைப் பொறுத்தவரை புறசூழ்நிலை புரட்சி நடக்க எதுவாக உள்ளது.ஆனால் கம்யூனிசத்தின் பெயரால் பல்வேறு குழப்பங்களை நம்மவர்கள் செய்து வருவதால் உண்மையான எதிரி இனம் காணப்படமால் இங்கு சோசலிசப் புரட்சி என்பது கனவாகவே ஆகிவிட்டது.
rajkumar.R
இன்றைய சமூகத்தின் புற்று நோயாக இருக்கக் கூடிய முதலாளித்துவத்திற்கு முடிவுரை தமிழகத்தில் இருந்து துவங்க வேண்டும். இந்த கேடுகெட்ட சமூக அமைப்பு முறை மாற்றப்பட வேண்டும்.
P.Durai
இது வரை இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன தவறுகளை செய்தன என்பதை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். அதற்கான சரியான தருணம் இது தான். இதை விட்டால் மீண்டும் ஒரு வரலாற்று தவறுகளை செய்தவர்கள் ஆகிவிடுவோம்.
Natarajan
இந்தியாவில் பெரும்பான்மை மதம் இந்து மதம். இதன் இழிவு ஜாதி. ஜாதிக் கொடுமை இன்றும் தீர்ந்த பாடில்லை. ஜாதி இருக்கும் வரை சமத்துவம் இருக்காது. திராவிடக் கழகம் மற்றும் தி மு க ஜாதி ஒழிப்புக்கு முன் வந்ததால் ஜாதி என்னும் பாம்பின் பல் தமிழ் நாட்டில் பிடுங்கப் பட்டுள்ளது. ஆனால் முற்றிலும் ஒழியவில்லை. பெரியார் ஜாதி ஒழிப்புக்கு பணி ஆற்றியது போல் யாருமே பணியாற்றவில்லை. தென் இந்தியாவில் ஜாதியின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் இன்னும் ஒழிந்த பாடில்லை. கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு, கல்வி அறிவு பெற்ற இளைஞர்களிடையே நடைபெறும் ஜாதி ஒழிந்த திருமணம் இவைகளினால் ஜாதியின் தாக்கம் குறைந்து வருகிறது, குறிப்பாக கேரளம், தமிழ் நாட்டில்.
வட இந்தியாவில் இன்னும் ஜாதியைக் காப்பாற்றி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி ஜாதியை ஒழிக்க அல்லது ஜாதிக் கொடுமைகளைத் தடுக்க முன்வரவில்லை. இந்தியாவைத் தவிர எந்த நாட்டிலும் ஜாதி என்ற இழிவு இல்லை.வர்ணம் என்ற இழிவும் இல்லை. வர்ணத்தை உருவாக்கியவனை ஏன் கம்யூனிஸ்ட் தாக்குவதில்லை.? ஜாதிக் கொடுமைகள் நடந்த பின் கம்யூனிஸ்ட் அந்த இடத்தில வந்து நாங்களும் இருக்கிறோம் என்று காண்பித்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் -- கழுதை தேய்ந்து கட்டெறும்பு போன்று மாறுகிறது. இந்தியாவில் எதிர் காலம் அதற்கு இல்லை.சீன நாட்டில் கம்முநிசம் ஒழிந்து கல்வி இசம் வளர்ந்து வருகிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால் உலகின் முதல் நாடாக வளர்ந்து வருகிறது. நம் நாட்டில் கீழ் ஜாதியினர் படிக்கக் கூடாது, அவர்களுக்குரிய மதிப்பெண்களை சரியாக அளிப்பதில்லை ( ஆஈஈம்ஸ்- டெல்லி மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிப்பதில் உயர்சாதியினர் கொடுமை இழைத்து வருகின்றனர்). கம்யூனிஸ்ட் என்ன செய்தது? எதற்கு இந்தக் கட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதனை செய்வதில்லை.தமிழ் நாட்டில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றால் தி மு க தான்.
முடிவாக கம்யூனிஸ்ட் கட்சி தன் பணியை செய்ய வேண்டுமென்றால் - இந்திய சமூகம் கல்வியில் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும். காங்கிரஸ், பா ஜ கவுக்கு இதில் அக்கறை இல்லை. ஜாதி ஒழிய முயற்சி செய்ய வேண்டும். கல்வி கூட அளித்து விடலாம். இந்து மத இழிவான ஜாதிக் கொடுமையை ஒழிக்க பெருமுயற்சி தேவை. கம்யூனிஸ்ட் இந்த இரண்டையும் எடுக்க வேண்டும், இல்லையேல் கட்டெறும்பு தான்.
Raman.P
தொழிலாளர்களை பெருமளவு திரட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்வர வேண்டும்.
தா.இளங்கோ
டிராட்ஸ்கிய வாதிகள் செய்த பொய் பிரசாரங்கள் தான் பல நாடுகளில் சோசலிசம் வரமால் போக காரணம் ஆகும். முதலில் அவர்களை டார்கெட் செய்து கடுமையாக அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். லெனின் எவ்வாறு டிராட்ஸ்கியை அடையாளம் கண்டாரோ அவ்வாறே நாமும் இந்த விஷ ஜந்துகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் தோழர்களே .
சாயிலன்
தோழர் இளங்கோ, ட்ரொட்ஸ்கியவாதிகளின் பொய் பிரசாரங்களை பற்றி விளக்கவும்...
சாயிலன்
தொழிலாளர்களை இழப்பதற்கு ஒன்றும் அற்றவர்களாக மாற்றுவதற்காக தாங்கள் அடித்த கொள்ளையின் ஒரு பகுதியை மேற்க்கத்திய அரசுகள் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை சம்பளமாக கொடுத்தன என்று கூறுவது மேலைய நாடுகளில் தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளை முதலாளித்துவம் பெற்ற பிச்சையாக குறுக்கும் செயல்....ஒவ்வொரு உரிமைகளையும் பெற தொழிலாளர் செய்த தியாகங்களை மிகவும் எளிது படுத்தும் செயல்.... கூலியில் பத்து ரூபாயை உயர்த்திக்கேட்டாலே துப்பாக்கி தூக்கும் முதலாளித்துவம், வாழ்நாள் சம்பளமாக பெரும் தொகையை மக்களை மயக்க எளிதாக தந்து விட்டது போன்ற தோரணையில் பேசுவது போராட்ட சக்திகள் செய்யக்கூடாதது...
சாயிலன்
"இழப்பதற்கு நம்மிடம் ஒன்றும் இல்லை.... அடிமை சங்கிலிகளை தவிர:" என்று மார்க்ஸ் கூறியது பல இடங்களில் தவறாகவே பொருள் கொள்ளப்படுகிறது... இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதனை மார்க்ஸ் சுட்டி கட்டினாரே அன்றி அதை ஒரு நிபந்தனையாக முன் மொழியவில்லை... இல்லாதவன் மட்டுமே போராட வருவானா என்ன? உரிமைக்கான போராட்டங்கள் எல்லா மட்டங்களிலும் கிளர்ந்து எழக்கூடியதே... மக்களின் சுய மரியாதைக்காக போராடிய திராவிட இயக்க தலைவர்கள் ஒன்றும் அற்றவர்களா? பெரியார், தியாகராயர் போன்றோர் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதாலா போராட வந்தார்கள்? பெறுவதற்கு உள்ள போதும் போராட மக்கள் துணிவார்கள் என்பதே எதார்த்தம்... சந்தர்ப்பவாத நிலைபாடை தலைமை மேற்கொள்ளது,,,, இறுதிவரை நமது உரிமைக்காக தலைமை துணை இருக்கும் என்ற திடமான சித்தம் தொழிலாளர்களிடம் இருக்குமேயானால் அவர்கள் போராட துணிவார்கள்... இங்கு தொழிலாளர்கள் சரியான தலைமையின் கீழ் உறுதியான போராட்டத்தை கட்டி சில உறுதியான வெற்றிகளை பெற்றுவிட்டால் அவர்கள் நம்பிக்கை பெற்று துணிந்து போராடுவார்கள் என்பதே என் எண்ணம்...
பாண்டியராஜன்
இந்திய கம்யூனிஸ்டுகளாகிய நாம் முதலில் ஒன்றுபடவேண்டும். நமது விமர்சனங்களை ஒப்பன் பிளாட்பார்மில் வைத்து விவாதிக்க வேண்டும்.
த.சிவக்குமார்
தோழர் சாயிலன், இங்கே பேசப்படும் பொருள் புரட்சி பற்றியது. நீங்கள் கூறும் சுயமரியாதை இயக்கத்தினரின் போராட்டம் இதிலிருந்து அடிப்படையிலேயே வேறுபட்ட சீர்திருத்த இயக்கம். //மக்களின் சுய மரியாதைக்காக போராடிய திராவிட இயக்க தலைவர்கள் ஒன்றும் அற்றவர்களா?// என்றால் இல்லைதான். ஆனால் அவர்கள் எதற்காக‌ போராடினார்கள். சமூகத்தில் தனிச் சொத்துடைமையையே ஒழிப்பதற்காகவா? இல்லையே. சொத்து-பணம் படைத்த தங்களை கீழானவர்களாகவும் கஞ்சிக்கே வழியில்லாவிட்டாலும் பிராமணர்களை உயர்ந்தவர்களாகவும் கருதும் நிலப்பிரபுத்துவ கலாசார - சமூகத் தகுநிலையை மாற்றவே சுயமரியாதை இயக்கத்தினர் போராடினர். இதுபோன்ற போராட்டங்களுக்கு இவர்கள் வருவார்கள். ஆனாலும் இவர்கள் எதுவரை போராடுவார்கள்? தங்கள் சொத்துக்கள் பறிமுதலாகும் என்ற நிலை வரும்வரை. அப்படி ஒரு நிலை வந்துவிட்டால் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் அல்லது அதன் தீவிரத்தைக் குறைத்து திசைவழியை மாற்றி விடுவார்கள். இதற்கு திராவிட இயக்க தலைவர்கள் வாழ்வில் நிறைய உதாரணங்கள் உள்ளன. இவர்கள் மட்டுமல்ல எல்லா உடைமை வர்க்கங்களின் போராட்டங்களின் கதியும் இதுதான். அதனால்தான் மார்க்ஸ் இழப்பதற்கு ஒன்றுமில்லாத பாட்டாளி வர்க்கமே சுரண்டலற்ற-தனிஉடைமையற்ற சமூகத்தைப் படைக்கும் புரட்சிகர உள்ளடக்கம் கொண்ட வர்க்கம் என்று கண்டு சொன்னார். ஆனால் அத்தகைய வர்க்கத்திற்கு இழப்பதற்கும் ஏதேனும் உள்ள வர்க்கமாக மாற்றிவிட்டால் அதன் செயல்வேகமும் வீச்சும் மட்டுப்படும். ஆனால் அதன் புரட்சிகர உள்ளடக்கத்தை மாற்ற முடியாது. இருந்தாலும் இதன் மூலம் புரட்சியை ஒரு நாள் அல்லது ஒரு கணம் தள்ளிப் போட முடிந்தாலும் மரணப் படுக்கையில் இருக்கும் முதலாளித்துவத்திற்கு அது ஆதாயமே. அதற்காக அது செய்த தந்திரத்தைத்தான் தோழர் ஆனந்தன் //உலகம் முழுவதும் தாங்கள் அடித்த கொள்ளையில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கு வாழ்க்கை சம்பளமாகக் கொடுத்தன. இதனால் அங்குள்ள தொழிலாளர்கள் இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளர்களாக இல்லாத நிலையை ஏற்படுத்த முயற்சி செய்தன.// என்று கூறியுள்ளார்.

ஒரு புரட்சிக்கான போராட்டத்தையும் சமூக சீர்திருத்தத்திற்கான போராட்டத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் ஒன்றுபோல் கருதும் மேலோட்டமான பார்வை தங்களிடம் இருப்பதாலேயே இதனை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன்.

தோழர் சாயிலன், இந்த மேலோட்டமான பார்வையில் இருந்துதான் //தொழிலாளர்களை இழப்பதற்கு ஒன்றும் அற்றவர்களாக மாற்றுவதற்காக தாங்கள் அடித்த கொள்ளையின் ஒரு பகுதியை மேற்கத்திய அரசுகள் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை சம்பளமாக கொடுத்தன என்று கூறுவது மேலைய நாடுகளில் தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளை முதலாளித்துவம் பெற்ற பிச்சையாக குறுக்கும் செயல்....ஒவ்வொரு உரிமைகளையும் பெற தொழிலாளர் செய்த தியாகங்களை மிகவும் எளிது படுத்தும் செயல்.... // என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

தோழரே சமூக நிகழ்வுகளை கம்யூனிஸ்டுகள் ஆழமாக ஊடுறுவிப்பார்க்க வேண்டும். //கூலியில் பத்து ரூபாயை உயர்த்திக்கேட்டாலே துப்பாக்கி தூக்கும் //முதலாளித்துவத்திடமிருந்து வாழ்க்கைச் சம்பளத்தையே போராடிப் பெறமுடிந்த மேலைநாட்டுத் தொழிலாளிவர்க்கம் ஏன் இத்தனை ஆண்டுகளாக புரட்சியை சாதிக்க முடியவில்லை. வாழ்க்கைச் சம்பளம் பெறாத மற்ற நாட்டுத் தொழிலாளர்கள் எல்லாம் போராடவேயில்லையா? அன்று ஏன் ஐரோப்பிய நாட்டு முதலாளிகள் தன் நாட்டு தொழிலாளர்களுக்கு வாழ்க்கை சம்பளம் கொடுத்தார்கள்? இன்று ஏன் அவர்களது வேலைகளையே பறித்து வேற்றிடவேலை மூலம் வேறு நாடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள்? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து விடைதேடவேண்டும்.

அன்று எல்லா நாடுகளிலும் தொழிலாளர்கள் போராடினார்கள். ரஷ்யத் தொழிலாளர்களும் போராடினர்கள்; பிற ஐரோப்பிய நாட்டுத் தொழிலாளர்களும் போராடினார்கள். முதலில் எந்த நாட்டு முதலாளிகளும் தன் தொழிலாளர்களுக்கு எதுவும் தரத் தயாராக இல்லை. தனது லாபத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. விளைவு, ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் முதலாளிகளின் கையிலிருந்து ஆட்சியையே பறித்துக் கொண்டது. லாபம் மட்டுமல்ல; முதலுக்கே மோசமாகிப் போனது. பார்த்தார்கள் மற்ற ஐரோப்பிய நாட்டு முதலாளிகள், தாங்கள் உலகம் முழுவதும் அடித்த கொள்ளையின் லாபத்தில் சிறிது குறைத்துக் கொண்டு, அதனை போராடும் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் சம்பளமாகக் கொடுத்தார்கள். மீதி லாபத்தையும் முதலாளித்துவத்தையும் காப்பாற்றிக் கொண்டார்கள். அதோடு நிற்கவில்லை அவர்கள். ஸ்டாலின் மீது அவதூறுகளைப் பரப்பி அதன்மூலம் லெனினிசத்தின் மீதும் கம்யூனிசத்தின் மீதும் வெறுப்பை விதைத்தனர். முதலாளித்துவ - ஏகாதிபத்தியவாதிகளின் இச் சதித்திட்டத்தில் அவர்கள் ஸ்டாலின் மீது பரப்பிய அவதூறுகளுக்கு பொய்சாட்சியம் அளித்து ஏகாதிபத்திய சேவை செய்தவர்கள் ட்ராட்ஸ்கியவாதிகள். விளைவு என்னவாயிற்று? இன்று சோசலிசமுகாமோ கம்யூனிச அபாயமோ இல்லாத உலக சூழ்நிலையில் அதே ஐரோப்பிய முதலாளிகள் தன் நாட்டு தொழிலாளர்களுக்கு தான் முன்பு வழங்கிவந்த வாழ்க்கை சம்பளத்தை மட்டுமல்ல; அவர்களது வேலைகளையே பறித்துக் கொண்டுவருகிறார்கள். அதைவிட குறைவான - தரைமட்டமான கூலிக்கு இந்தியா போன்ற நாடுகளுக்கு வேற்றிடவேலை மூலம் அவர்களது வேலைகளை இடம்மாற்றிவருகிறார்கள்.

சாயிலன் நிகழ்வுகளை ஒன்றுக் கொன்று தொடர்புபடுத்திப் பார்த்தால்தான் அன்று ஏன் ஐரோப்பிய நாட்டு முதலாளிகள் தன் நாட்டு தொழிலாளர்களுக்கு வாழ்க்கை சம்பளம் கொடுத்தார்கள்? இன்று ஏன் அவர்களது வேலைகளையே பறித்து வேறு நாடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள்? என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன், த.சிவக்குமார்
த.சிவக்குமார்
தோழர் சாயிலன், //"இழப்பதற்கு நம்மிடம் ஒன்றும் இல்லை.... அடிமை சங்கிலிகளை தவிர:" என்று மார்க்ஸ் கூறியது பல இடங்களில் தவறாகவே பொருள் கொள்ளப்படுகிறது... இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதனை மார்க்ஸ் சுட்டி கட்டினாரே அன்றி அதை ஒரு நிபந்தனையாக முன் மொழியவில்லை...// என்று சொல்கிறீர்கள். நேர்காணலில் எந்தெந்த இடங்களில் "இப்படி" "தவறாக" பொருள் கொள்ளப் பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுங்கள். நீங்களாகக் கருதிக்கொள்வதையெல்லாம் அடுத்தவர் கருத்தாக ஏற்றிவைத்துக் கூறுவது நல்ல வாதமுறை அல்ல என்பது என்கருத்து.
புரட்சிகர வாழ்த்துக்களுடன், த.சிவக்குமார்
சாயிலன்
என்னை பொறுத்த அளவில் பெரியாரின் போராட்டங்கள் குறித்த தங்களது பார்வை மாற வேண்டும் என்பதே என் கருத்து...
ஜனநாயகம் என்பது துளியும் இல்லாத ஜாதிய சமுகத்தில் சாதிய உரிமைகள் குறித்த சரியான பார்வை இல்லாததே பெரியார் போன்ற சமுக புரட்சியாளர்கள் தோன்ற வேண்டிய அவசியத்தை தோற்று வித்தது... செருப்பு அணிய கூட உரிமை இல்லாத நாட்டில் அந்த உரிமையை பெற்று தர போராடியவர்கள் தான் இங்கு புரட்சியாளர்கள்... எவ்வித ஒடுக்கு முறைக்கு எதிராகவும் குரல் கொடுக்காமல் தொழிலாளர் ஒற்றுமை பற்றி மட்டுமே பேசுவோம் என்பது சமூக ஜனநாயகம் அல்ல... ஒடுக்கபடுபவர்களுக்கும் ஒடுக்குபவர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியை விடுத்து, ஒடுக்கு முறைக்கு எதிராக தீர்க்கமான குரல் கொடுப்பது தான் சமுக போராளிகளிகளின் கடமை இத்தகைய உரிமைக்கான குரலை இந்திய கம்யூனிஸ்ட்கள் கொடுக்காதது தான் பெரியார் மற்றும் அம்பேத்கரை உருவாக்கியது...
சாயிலன்
தோழர் இளங்கோ கூறியபடி "லெனின் எவ்வாறு டிராட்ஸ்கியை அடையாளம் கண்டாரோ அவ்வாறே நாமும்" இனம் காணவேண்டிய அவசியம் உள்ளதாகவே நானும் கருதுகிறேன்

இதை ட்ரொட்ஸ்கியே தன்னுடைய "என் வாழ்க்கை" நூலில் அழகுற குறிப்பிட்டுள்ளார்...

"1917-நவம்பர் 1 இல் பெத்ரோகிராட் குழு கூட்டத்தில் லெனின் சொன்னார்:

'மென்ச்வீக்களுடன் இணைந்து இருப்பது நடவாத செயல் என்பது மெய்ப்பிக்கப்பட்ட பிறகு ட்ரொட்ஸ்கியை விட 'மிக சிறந்த போல்ஷ்வீக் இங்கில்லை'...". ("என் வாழ்க்கை" நூல் பக்கம் 531)

"இன்று பொது உடமை அகிலம் எங்கும் ட்ரொட்ஸ்கி, போல்ஷ்வீக்களையும் மென்ஷ்வீக்களையும் ஒன்றிணைக்க 1912இல் பெரும் முயற்சி எடுத்ததாக சாற்றிக்கொண்டு உள்ளன. ஆனால், அவை 1917மார்ச்சில் ஸ்டாலின், செரெட்டெலியின் கட்சியுடன், போல்ஷ்வீக் கட்சியை ஒன்றிணைய பரிந்துரைத்த உண்மையை ஒருபோதும் குறிப்பிடுவதில்லை". ("என் வாழ்க்கை" நூல் பக்கம்528)
சாயிலன்
"பாட்டளிவர்க்கதின் முன்னணிப் படையாக வலுவான கட்சி தேவை இல்லை' என்ற அடிப்படையிலேயே கோளாறான கோட்பாடுகளைக் கொண்ட டிராட்ஸ்கிய குழுக்கள்" என்று தோழர் ஆனந்தன் கூறுகிறார்...

ஆனால் ட்ரொட்ஸ்கி தன்னுடைய "என் வாழ்க்கை" நூலில் லெனின் உடனான தனது முதல் சந்திப்பின் போது அவர், லெனினிடம் பேசியதை 268 பக்கத்தில் பதிய வைத்துள்ளார்...

"நான் சைபீரியாவில் நடைப்பெற்ற அனைத்து விவாதங்களை பற்றியும் அவருடன் (லெனினிடம்) கூறினேன். மையப்படுத்தப்பட்ட அமைப்பு வேண்டும் என்பதைப்பற்றி சிறப்பாக குறிப்பிட்டேன்..."
சாயிலன்
சொத்து பறிபோகும் வரை தான் இவர்கள் போராடுவார்கள் என்று கூறுகிறீர்கள்... ஆனால், கொள்கைகாக பெரியாரின் தியாகத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது... தோழர் காந்தியின் மது ஒழிப்பு போராட்டத்திற்காக தன்னுடைய தோட்டத்தில் ஐநூறிற்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை வெட்டியவர்... சமுக போராளிகளையும் அவர்களது தியகதினையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்... கம்யூனிஸ்ட்கள் செய்தால் தான் தியாகம் மற்றவர்கள் செய்வதெல்லாம் சுயநலனா என்ன?
புதியவன்
த.சிவக்குமார் அவர்கள் தோழர் சாயிலன் வழியாக ஆரோக்கியமான அணுகுமுறையில் முன்மாதிரியாகவும் விவாதத்தை துவங்கியுள்ளார். பாராட்டிற்குரிய வலிமையுடன் கலந்துரையாடலை அமைக்குமென நம்புகிறேன். அன்புடன் புதியவன்
வெண்மணி
ஜான் ரீடு எழுதிய உலகை குலுக்கிய பத்து நாள்கள் என்ற பிரபலமான புத்தகத்தில் மென்ஸ்விக் சர்வதேசியவாதிகள் பற்றிய குறிப்பில் - மென்ஸ்விக் கட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த குட்டி முதலாளித்துவ சித்தாந்ததில் இருந்து விடுபடாத இவர்களை லெனின் கடுமையாக அம்பலப்படுத்தினார் . இவர்கள்புரட்சியை மடை மாற்றம் செய்யும் தொழிலாளர் விரோதிகள் என்று வர்ணித்தார். இவர்கள் லெனின் வலியுறுத்திய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை கடுமையாக எதிர்த்தவர்கள், மார்த்தல் தலைமையிலான இந்த குழுவில் வெகு காலம் இருந்தவர் தான் ட்ரொட்ஸ்கி என்று ஜான் ரீடு குறிப்பிட்டுள்ளார்.
சாயிலன்
‎"என் வாழ்க்கை" (ட்ராட்ஸ்கி)

பக்கம் : 324

"1905ஆண்டின் (புரட்சிகுறித்த) வழி முறைகளையும், மரபுகளையும் குறித்த என்னுடைய நூல், 'புரட்சியில் ருஷியா' என்ற பெயருடன் முதல் பதிப்பாக வெளிவந்து, பின்னர் மறுபதிப்பாக பலமுறை, பல்வேறு நாடுகளில் '1905' என்ற தலைப்புடன் பதிப்பிக்க பட்டு வெளிவந்தது. அக்டோபர் புரட்சிக்கு பிறகு, இந்த புத்தகம், கட்சியின் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதிகார பூர்வமான பாடநூலாக ருஷ்யாவில் மட்டுமின்றி, மேற்குலகிலும் கூட பொதுவுடைமை கட்சிகளிடையே புழங்கியது. லெனினுடைய மறைவுக்கு பிறகே, மிக கவனமாக தயாரிக்கப்பட்ட பரப்புரையை எனக்கு எதிராக பரப்பி, 1905ஆம் ஆண்டை பற்றிய என்னுடைய நூலை தீக்கிரை ஆக்கினார்..."

பக்கம்: 322

"1905ஆம் ஆண்டின் புரட்சியின் போது எனக்கும் லெனினுக்கும் இடையே என்ன வகையான உறவுகள் இருந்தன? லெனினின் மறைவுக்கு பிறகு அதிகார பூர்வமான வரலாறு திருத்தப்பட்டது. 1905ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளும் கூட திருத்தப்பட்டன."

-ட்ராட்ஸ்கி..........
த.சிவக்குமார்
புதியவன் அவர்களே, உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. என் நோக்கம் குழப்பங்கள் இன்றி ஒரு தெளிவான புரிதலை நோக்கி விவாதத்தை நகர்த்துவதே. ஆனால் தனியொரு மனிதனால் ஆகக் கூடிய காரியமல்ல இது. நாம் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து முயற்சிப்போம்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன், த.சிவக்குமார்
த.சிவக்குமார்
தோழர் சாயிலன், ஐரோப்பிய தொழிலாளி வர்க்கத்திற்கு வாழ்க்கைச் சம்பளம் வழங்கிய அந்நாடுகளின் முதலாளிகளது உள்நோக்கம் பற்றிய விவாதத்தில் அது பற்றிய எனது பதில் மீது நீங்கள் விவாதத்தை தொடரவில்லை என்பதால் எனது பதிலை ஏற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன், த.சிவக்குமார்
த.சிவக்குமார்
தோழர் சாயிலன், ட்ராட்ஸ்கி தன்னைப் பற்றியும் தனக்கும் லெனினுக்கும் இருந்த நெருக்கம் பற்றியும் தானே பறைசாற்றிக் கொள்ளும் ட்ராட்ஸ்கியின் மேற்கோள்களை சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதிவிட்டு ஏன் ட்ராட்ஸ்கியின் மதிப்பைக் குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்று தெரியவில்லை.
// 1917-நவம்பர் 1 இல் பெத்ரோகிராட் குழு கூட்டத்தில் லெனின் சொன்னார்: …….. ட்ரொட்ஸ்கியை விட 'மிக சிறந்த போல்ஷ்வீக் இங்கில்லை'...". ("என் வாழ்க்கை" நூல் பக்கம் 531)// // 1905ஆம் ஆண்டின் புரட்சியின் போது எனக்கும் லெனினுக்கும் இடையே என்ன வகையான உறவுகள் இருந்தன? லெனினின் மறைவுக்கு பிறகு அதிகார பூர்வமான வரலாறு திருத்தப்பட்டது. 1905ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளும் கூட திருத்தப்பட்டன." -ட்ராட்ஸ்கி..........// என்று மேற்கோள் காட்டியுள்ளீர்கள். ட்ராட்ஸ்கி-க்கும் லெனினுக்கும் எவ்வளவு நெருக்கம் இருந்தது என்பது நம் விவாதத்திற்குத் தேவையற்றது. அது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைப்பதற்கோ இந்தியப் புரட்சிக்கு வழிகாட்டவோ எள்ளவும் பயன்படாது. நமக்கு இன்றைய சூழ்நிலையில் வழிகாட்டவல்லது ட்ராட்ஸ்கியமா? லெனினியமா? என்பதுதான் விவாதிக்க வேண்டியது.
ஆனால் ஒன்று லெனின் தன்னைப் பற்றி என்ன கருத்து வைத்திருந்தார் என்று ட்ராட்ஸ்கி சொன்னதற்கும் ட்ராட்ஸ்கியைப் பற்றி தன் கருத்து என்ன என்று லெனினே சொன்னதற்கும் ஒருசம்பந்தமும் இல்லை என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. லெனின் சொல்கிறார்: “கலைப்புவாதிகளாவது தாம் ஒரு மார்க்சியவாதிகளல்ல தாராளவாதிகள் என்று ஒரு சொந்த முகத்தைக் கொண்டுள்ளனர். ….. ஆனால் ட்ராட்ஸ்கி-க்கோ தனக்கென்று ஒரு முகம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அவரிடம் இருக்கும் ஒரேயொரு பழக்கம் என்னவென்றால், அணி மாறிக் கொண்டேயிருப்பது, தாராளவாதிகள் பக்கமிருந்து மார்க்சியவாதிகள் பக்கமும் மார்க்சியவாதிகள் பக்கமிருந்து தாராளவாதிகள் பக்கமும் தாவிக் கொண்டேயிருப்பது, துண்டு துண்டான முழக்கங்களையும் வெற்று ஆரவாரமான கிளிப்பிள்ளைச் சொற்றொடர்களையும் திருவாய் மலர்வது, அவ்வளவுதான்”. 1914 மார்ச் 15ல் (1905க்குப் பிறகு) புட் ப்ரவ்ட்ய் இதழில் லெனின் எழுதியது....[Lenin Collected Works, Progress Publishers, 1972, Moscow, Volume 20, pages 158-161.]
ட்ராட்ஸ்கியைப் பற்றிய லெனினது கணிப்பு எத்தனை யதார்த்தமான உண்மை என்பதை ட்ராட்ஸ்கி தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்துக் கொண்டே இருந்தார் என்பது வரலாறு. போகட்டும் நாம் அவரது கருத்துகளை விவாதிப்போம்…………….
த.சிவக்குமார்
தோழர் சாயிலன், // பாட்டளிவர்க்கதின் முன்னணிப் படையாக வலுவான கட்சி தேவை இல்லை' என்ற அடிப்படையிலேயே கோளாறான கோட்பாடுகளைக் கொண்ட டிராட்ஸ்கிய குழுக்கள்// என்று தோழர் ஆனந்தன் கூறுவதை மறுக்க ட்ராட்ஸ்கி // நான் சைபீரியாவில் நடைப்பெற்ற அனைத்து விவாதங்களை பற்றியும் அவருடன் (லெனினிடம்) கூறினேன். மையப்படுத்தப்பட்ட அமைப்பு வேண்டும் என்பதைப்பற்றி சிறப்பாக குறிப்பிட்டேன்...// என்று "என் வாழ்க்கை" நூலில் ட்ராட்ஸ்கி பதிவு செய்துள்ளதை பதிலாகக் கூறுகிறீர்கள். ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக வலுவான கட்சியின் தேவை என்பதற்கும் மையப்படுத்தப்பட்ட அமைப்பு வேண்டும் என்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் கட்சிக்குள் பல உட்குழுக்கள் இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்; அதே சமயத்தில் அவற்றை ஒருங்கிணைக்க ” மையப்படுத்தப்பட்ட அமைப்பு வேண்டும்” என்று ட்ராட்ஸ்கி சிறப்பாக லெனினிடம் வலியுறுத்திச் சொல்வது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக வலுவான கட்சியின் தேவையை வலியுறுத்திச் சொன்னதாக எப்படி ஆகும்.
ட்ராட்ஸ்கி புரட்சிக்கு முன்பும் புரட்சிக்குப் பின்பும் கட்சிக்குள் பல உட்குழுக்கள் இயங்குவதற்கான உரிமையையே வலியுறுத்தி வந்துள்ளார். அதனால்தான் தங்களுக்குள்ளேயே முரண்பட்ட லெட்டுகள், புந்திஸ்டுகள் மற்றும் காகஸியன்களுடன் இணைந்து ட்ராட்ஸ்கியால் லெனினது போல்ஷிவிசத்திற்கு எதிராக கலைப்புவாதிகளின் ஆகஸ்ட் பிளாக்கில் செயல்பட முடிந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் ட்ராட்ஸ்கியவாதியான நீங்களும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை அங்கீகரிக்காத பெரியார் அம்பேத்கார் போன்றோரையும் புரட்சியாளர்கள் என்று அங்கீகரித்துக் கொள்ள முடிகிறது. தோழர் சாயிலன், உங்களால் ட்ராட்ஸ்கியவாதியாகத்தான் இருக்க முடியும். லெனினியவாதியாகவோ மார்க்சியவாதியாகவோ இருக்க முடியாது. ஏனெனில் லெனினிசமே இக்காலகட்டத்தின் மார்க்சியம். புரட்சிகர வாழ்த்துக்களுடன், த.சிவக்குமார்
சாயிலன்
ட்ராட்ஸ்கியைப் பற்றிய லெனினது கணிப்பு எத்தனை யதார்த்தமான உண்மை என்பதை ட்ராட்ஸ்கி தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்துக் கொண்டே இருந்தார் என்பது வரலாறு.// ட்ராட்ஸ்கியின் மை லைப் படிச்சிட்டிங்களா? தோழர்...
சாயிலன்
//தோழர் சாயிலன், உங்களால் ட்ராட்ஸ்கியவாதியாகத்தான் இருக்க முடியும். லெனினியவாதியாகவோ மார்க்சியவாதியாகவோ இருக்க முடியாது.//
தோழர்.சிவகுமார் உங்களுக்கு நீங்கள் மட்டும் தான் மார்க்சிஸ்ட் என்று நினைப்போ??? மாதவர்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நாட்டை கெடுப்பதற்கா மார்ர்க்சியம் தேடி திரிகிறோம்??? ஆரம்பம் முதலே உங்கள் அரசியல் இப்படியாக தான் உள்ளது... கூடம் குளம் மக்கள் போராட்டத்தில் மக்களுக்கு எதிரான உங்கள் நிலைப்பாட்டை விமர்சித்ததற்கு, "முதலாளித்துவ வளர்ச்சிக்கு அணு உலை அவசியம்... உற்பத்தி சக்திக்கு எதிர்ப்பு தெரிவித்தால் நீ மார்க்சியன் இல்லை" என்று விமர்சித்தீர்... தற்போதும் அதையே செய்து உளவியல் தாக்குதல் தொடுக்கிறீர்... நீங்கள் ஒன்றும் மார்க்சியர் யார் எனும் அங்கிகாரம் தரும் மார்க்சிய பல்கலைகழகம் அல்ல... இதை நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் அதனால் தான் கூடம்குளம் பற்றிய விவாதத்திற்கு பிறகு நான் உங்களுடன் விவாதிப்பதற்கு மீண்டும் முயற்சிக்கவில்லை... உங்களுடன் விவாதித்து என் நேரத்தை வீனடித்துக்கொள்ள விரும்பாவில்லை... என்னுடைய கருத்துகள் குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுத உள்ளேன்... அதன் பின் நாம் விவாதிக்கலாம்... ஓடி ஒளிவதாக கருத வேண்டாம்... உங்களுடைய கருத்தும் வாதமும் எவ்வளவு பிழையானது என்பதை தெளிவாக விளக்க தரவுகள் திரட்ட காலம் தேவை அதனால் தான்... சோவியத்தின் வீழ்ச்சியாள் இன்றைய தொழிலாளர் நலன்கள் பறிக்கப்படவில்லை அது இன்றைய மோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவு... சோவியத் இருந்தாலும் தற்போது அது நடக்கவே செய்திருக்கும். தொழிலாளர்கள் வேலை இழப்பது சோவியத் இருந்த காலத்திலும் ஆகியவற்றின் போது நிகழ்வே செய்தது...சில உரிமைகளை வென்ற பாட்டாளி வர்க்கம் புரட்ச்சியை ஏன் நடத்த முடியவில்லை என்று கேள்வி கேட்கிறீர்... புரட்சியை நடத்தாவிட்டால் உரிமைகளை கூட பெற போராடமாட்டார்கள் என்று அர்த்தமா என்ன??? //லெனின் ஏகாதியபத்திய நலன்களுக்கு மக்கள் பலிகடாக்கள் ஆக்கப்படுவதை எதிர்த்து நின்றார்// என்று கூறும் நீங்கள் இந்திய முதலாளித்துவ நலன்களுக்காக (உங்கள் மொழியில் கூறினால் "பிராந்திய ஏகாதியபத்திய") உற்ப்பத்திசக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது என்று கூறி கூடம்குளம் மக்களை பலிகடா ஆக்குவதை ஆதரித்தவர்கள்.... அலுவலக பணிகளால் தான் கால தாமதம் ... கட்டுரையுடன் சந்திக்கிறேன்... புரட்சிகர வாழ்த்துகள்...
த.சிவக்குமார்
தோழர் சாயிலன், நீங்கள் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் போன்ற மார்க்ஸிய ஆசான்களைப் படிக்காமல் ட்ராட்ஸ்கியின் மை லைப்-ஐ மட்டும் படித்து இன்ஸ்டன்டாக ட்ராட்ஸ்கியவாதியாக ஆகியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் நான் //உங்களால் ட்ராட்ஸ்கியவாதியாகத்தான் இருக்க முடியும். லெனினியவாதியாகவோ மார்க்சியவாதியாகவோ இருக்க முடியாது.// என்றதற்காக உளவியல்ரீதியில் இவ்வளவு பாதிப்பிற்கு ஆளாகியிருக்கமாட்டீர்கள். முதலாவது, ஒரு ட்ரட்ஸ்கியவாதியை ட்ராட்ஸ்கியவாதி என்று சொல்வதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. அல்லது நீங்கள் ட்ராட்ஸ்கியவாதியும் இல்லையா?-தெளிவுபடுத்தவும். இரண்டாவது ஒருவர் ஒரே சமயத்தில் ட்ராட்ஸ்கியவாதியாகவும் லெனினியவாதியாகவும் இருக்கமுடியாது. ஏனெனில் ட்ராட்ஸ்கியவாதத்திற்கு எதிராக லெனின் மிக கடுமையாகப் போராடியுள்ளார் என்பது லெனினைப் படித்தவர்களுக்குத் தெரியும். லெனினியம் என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் மார்க்சியம். லெனினியத்தை மறுப்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் மார்க்சியவாதியாக இருக்க முடியாது. எனவே ட்ராட்ஸ்கியம் லெனினியத்திற்கு எதிரானது எனும்போது அது மார்க்சியத்திற்கும் எதிரானதே. அதனால்தான் ட்ராட்ஸ்கியவாதியான உங்களால் லெனினியவாதியாகவோ மார்க்சியவாதியாகவோ இருக்க முடியாது என்று கூறினேன். ஒருவர் வைத்திருக்கும் கொள்கையின் அடிப்படையில் ஒருவரை அடையாளப்படுத்துவதை ஒரு பெருங்குற்றமாக எப்படிக் கருத முடியும். அதற்காக விவாதிக்கமாட்டேன் என்று கோவித்துக் கொண்டுபோவது உங்களது பக்குவமின்மையைத்தான் காட்டுகிறது. தயவுசெய்து, லெனின் எதிராளிகளை விமர்சிப்பதை படியுங்கள்; கம்யூனிஸ்டுகள் மத்தியில் கண்ணின் கருமணி போல் எப்போதும் பாதுகாக்கப் படவேண்டிய விமர்சனம் – சுய விமர்சனம் பற்றிய கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு இணைய தளங்களில் கம்யூனிச விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மற்ற இணைய தளங்களில் நடக்கும் கம்யூனிச விவாதங்கள் கிக் பாக்ஸிங், ரெஸ்ட்லிங் ரேஞ்சுக்கு நடக்கின்றன. நான் பயன்படுத்திய ட்ராட்ஸ்கியவாதி, லெனினியவாதி, மார்க்சியவாதி என்ற வார்த்தைகளே உங்களை உளவியல் ரீதியில் இத்தனை தூரம் பாதித்திருக்கும் போது அங்கு பயன்படுத்தப் படும் வார்த்தைகளால் நீங்கள் என்ன ஆவீர்கள் என்றே சொல்ல முடியாது. இன்னொன்று //உங்களுடைய கருத்தும் வாதமும் எவ்வளவு பிழையானது என்பதை தெளிவாக விளக்க தரவுகள் திரட்ட காலம் தேவை // என்று சொல்வது மார்க்சிய அணுகு முறை அல்ல - மன்னிக்கவும் - சரியான அணுகுமுறை அல்ல. ஏனெனில் முடிவை எடுத்துக் கொண்டு அதற்கான தரவுகளைத் தேடுவது இயக்கவியல் அணுகுமுறை அல்ல. தரவுகளின் அடிப்படையில் முடிவுகளுக்கு வருவதே உண்மைக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும். மேலும் // என்னுடைய கருத்துகள் குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுத உள்ளேன்... அதன் பின் நாம் விவாதிக்கலாம்.// என்று கூறிவிட்டு சில தவறான-அவதூறான கருத்துக்களை பதிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள் ( என்ன நேர்மையோ????). இருக்கட்டும் பரவாயில்லை. உங்களது விரிவான கட்டுரை வந்தபின் அதில் விவாதிக்கும்போது அதுபற்றியும் விவாதிப்போம். மறக்காமல் அக்கட்டுரை வெளிவந்த விபரத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.எனது இ-மெயில் முகவரி: [email protected]
மற்றபடி, நீங்கள் என்னைத் தனிநபர் ரீதியாக தாக்கியிருப்பதை - நீங்களே சொல்லியிருப்பதுபோல் உளவியல் பாதிப்பினால் நீங்கள் எழுதியிருப்பதை – நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் விமர்சித்தது உங்களது மார்க்சிய விரோத கருத்துக்களைத்தானே ஒழிய உங்களை அல்ல.
புரட்சிகர வாழ்த்துக்களுடன், த.சிவக்குமார்
SOMASUNDARAM.
Please understand.In trade union sector, Number One trade union is B.J.P. backed B.M.S. Congress backed I.N.T.U.C Is in second position.Afterwards, AITUC and CITU. In India the working class lost its charector.How it is happened. We expect answer from Comrede Aananthan.
thiyaagu
//"இழப்பதற்கு நம்மிடம் ஒன்றும் இல்லை.... அடிமை சங்கிலிகளை தவிர:" என்று மார்க்ஸ் கூறியது பல இடங்களில் தவறாகவே பொருள் கொள்ளப்படுகிறது... இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதனை மார்க்ஸ் சுட்டி கட்டினாரே அன்றி அதை ஒரு நிபந்தனையாக முன் மொழியவில்லை...//

இப்படி ஆரம்பித்த சாயிலன் மைய கருத்தை விடுத்து எங்கோ போய்விட்டாரே
வெண்மணி
தொழிற்சங்க இயக்கங்கள் தொய்வை சந்தித்து உள்ளன என்பது உண்மைதான். உண்மையான இடதுசாரி கட்சிகளின் தொழிற் சங்கங்கள் பெருகி வரும் பொது இது போன்ற போலிகள் இருந்த இடம் தெரியாமல் காணமல் பொய் விடும்
kulothungan
//பாட்டாளி வர்க்கப் புரட்சியை அங்கீகரிக்காத பெரியார் அம்பேத்கார் போன்றோரையும் புரட்சியாளர்கள் என்று அங்கீகரித்துக் கொள்ள முடிகிறது. தோழர் சாயிலன், உங்களால் ட்ராட்ஸ்கியவாதியாகத்தான் இருக்க முடியும். லெனினியவாதியாகவோ மார்க்சியவாதியாகவோ இருக்க முடியாது. ஏனெனில் லெனினிசமே இக்காலகட்டத்தின் மார்க்சியம்//
அய்யா சிவக்குமார் அவர்களுக்கு.. எனக்கு ட்ராட்ஸ்கியம், லெனினியம் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் "செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சீயமே பெரியாரியம்" என்று களப் போராட்டங்கள் மூலமாக தன் கருத்தை வலியுறுத்தி வாழ்ந்து 1956 முதல் 1980 வரையிலான காலகட்டங்களில் கீழத்தஞ்சை ஜில்லா நாகை தாலுக்காவில் பண்ணை ராஜ்ஜியங்களை ஒழித்த மிகப் பெரிய போராளி தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கனின் மறைக்கப்பட்ட வரலாற்றையும் அதன் பின் விளைந்த பயன்களுக்காக மார்க்ஸீயத் தோழர்களால் கைவிடப்பட்ட உண்மைகளையும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டால் நம் ஊரில் உள்ள கொள்கைவாதிகளையும் தாங்கள் அடையாளம் தெரிந்துகொள்ளலாம்.
த.சிவக்குமார்
அய்யா குலோத்துங்கன் அவர்களே, தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கனின் மறைக்கப்பட்ட வரலாற்றையும் அதன் பின் விளைந்த பயன்களுக்காக மார்க்ஸீயத் தோழர்களால் கைவிடப்பட்ட உண்மைகளையும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட அதுபற்றித் தெரிந்த தங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள விழைகிறேன். "செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சீயமே பெரியாரியம்" என்ற தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கனின் கருத்துக்களைப் பற்றியும் அவரது போராட்ட வரலாறைப் பற்றியும் சொல்லுங்கள் அய்யா. வரலாற்றில் இருந்து படிப்பினை எடுத்துக் கொள்வோம். மறைக்கப்பட்ட வரலாறுகளை இப்படிப் பகிர்ந்து கொண்டால்தான் உண்டு.
vetrichelvan 98948 99510
indhiyaavil maarksiyam 80 thaniththani thesiya arasugal amaiyum nigazhchip pokkil ulladhu !

thamizh naadu vidudhalaiyai naam venredukkum arasiyal purachikku anithiralumbodhu indhiyap puratchi yenum sandharppavaadha arasiyal yedupadaamal pogum !

mozhi, inam, nilap pagudhiyodu maarksiyam inaiyaadha varai indhiyaavil maarksiyam vetriperaadhu ! AAM INDHIYAA 80 PALA DHESANGALIN SIRAIKKOODAM MAATHTHIRAM ALLA ! SITHTHIRAVADHAIK KOODAM !

MAAVOYISTUGALAANAALUM ... EEZHATH THAMIZHARGALAANAALUM INDHIYAA YEN SUTTUTHTHALLUGINRATHU ? THARCHAARBIRKKAAGAVUM SUDHANDHIRATHTHIRKKAAGAVUM PORAADUVATHU THANITH THANI THESIYA ARASUGALUKKU VAZHI KOLUM YENA INDHIYA THARAGU MUDHALAALIGALUM PAARPPANIYA SAKTHIGALUM THELIVAAGA ARIVAARGAL !

INDHIYAA MUZHUDHUM JAADHEEYA MELAADHIKKATHTHAI NIRUVIKKOLLA PAARPPANIYATHTHIRKKU INDHIYAA THEVAI ! THANADHU 120 KODI MAKKAL KONDA VIRIVAANA SANDHAIKKU THARAGU MUDHALAALIGALUKKU AGANDA INDHIYAA THEVAI !

NAM SAADHAARANA KUPPANUKKUM SUPPANUKKUM THAM KAALAM MUZHUDHUM NILATHTHIL PAADUPATTU UZHALUM NAM APPANUKKUM INDHA INDHIYAA YEDHARKKUTH THEVAI ?

AAM MAARKSIYARGAL SINDHIKKA VENDIYA IDAM IDHUTHAAN !

YELLAAVATRIRKKUM MELAAGA LENIN VAGUTHTHALITHTHA PODHUVUDAMAI AGILATHTHIN VAZHIGAATTALGALAI MUTRAAGAK KAIVITTU PURATCHIKKU THUVAKKATHTHILEYE DHROGAM IZHAITHTHAVARGAL DHAAN INDHIYAK KAMYOONISTUGAL !

AAM DHAYAVUSEITHU 3 AAM KAMYOONISTU AGILATHTHIL LENIN ALITHTHA MADHIPPUMIGU VAZHIGAATTALGALAI INIYAAVADHU MAARKSIYATHTHAI NESIKKUM NEENGAL PADIYUNGAL ...

ADHIL...1). SEER THIRUTHTHAVAADHA (SEEMAAN, MANIYARASAN, PAZHA NEDUMAARAN, THIYAAGU KOLATHTHUR MANI, AANAIMUTHTHU PONRA ) MUDHALAALITHTHUVA VIDUDHALAI IYAKKANGALUDAN SAMARASAMATRUP PORAADI AMBALAP PADUTHTAVENDUM

2). VIVASAAYA IYAKKANGALUDAN URUDHIYAANA NATPU PENA VENDUM

3). MAKKAL ADHIGAARA SOVIYATH AATCHI PATRI PARAPPURAI SEIYYAVENDUM ... VAAIPPIRUPPIN SOVIYATHTHUGALAI AMAITHTHIDA VENDUM

4). SUYECHCHAIYAANA PADAIPPIRIVUGALAIYUM RAGASIYAK KATCHI AMAIPPUGALAIYUM KATTA VENDUM

MERKKANDA LENININ MADHIPPU MIGU VAZHIGATTALGALAI INDHIYAP PURATCHIYIN THUVAKKA KAALATH THALAIVARGAL MUTRAAGA MARUDHALITHTU PURATCHIKKUM MAARKSIYATHTHIRKKUM SAAVU MANI ADITHTHADHODU DHROGAMUM IZHAITHTHAARGAL ! NEENGAL YENNA SEIYYAP POGINREEGAL ? !
Guest
விவாதஙகள் அனைத்தும் இந்திய பண்நாட்டுச் செய்தியாகவே உள்ளன.தோழர் குலோத்துங்கன் கூற்றை ஆமோதிக்கும் தோழர்களுக்கு ந்ன்றி. இந்தியத் துணைகண்டத்தில் தமிழ்நாடு என்று ஒரு நாடும் அது பொதுமைக் குடியரசு என்றும் பொதூடைமையாள்ர்கள் எண்ணவேண்டும். கம்யூனிஸ்டுக் கட்சியில் பெரியாரைத் தீண்டாமையாகக் கருதி,மொழியைப் பிந்தல்லிப் பார்க்கும் நிலையும் மாரவேண்டும். அதோடு மட்டுமல்ல சமூக ஆதிக்கம் செலுத்தும் சம்ஸ்கிருத வாழ்வியலை மறுத்தால் மட்டுமே தமிழ் மக்களை ஒன்றிணைக்க முடியும். மதச் சிந்தனை மழுங்கடிக்கப்படாமல் எதுவும் செய்ய முடியாது. மாக்ச்சிய பண்டிதத்தண்மையை வேண்டுமானால் ஜபித்துக்கொண்டிருக்கலாம். கருப்புச்சட்டை ஏஜிகே,சிகப்புச்சட்டையாகி பின் கருப்புச்சட்டையாகி உள்ள நிலைமையையும் புலவர் கலியபெருமாள் சிந்தனையும் ஆராயப்படவேண்டும். அந்த நிலை பெரியார் கூறிய தனித்தமிழ் நாடு பற்றி உரத்த சிந்திக்க வேண்டும்.1986 ௨000 வரை இதனை பரப்புரை செய்த ராமதாசு-ராசமாணிக்கம் என்பவர்களை யாரும் பின் தொடராதது இழப்பேயாகும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.