ஆணினுடைய மிக முக்கியமான அடிப்படையான பால் உறுப்புகளின் ஒரு பகுதி இரண்டு விந்தகங்களாகும். இந்த விந்தகங்களைத்தான் தமிழ் மண்ணின் சாதாரண பொதுமக்கள் விதைகள் என்றும், விரைகள் என்றும் கூறுகிறார்கள். இந்த விதை என்ற சொல்லை ஒரு விதத்தில் நோக்கினால் தமிழ் இலக்கணப்படி இதுவும் ஒரு ஆகுபெயர் ஆகும். விதை இல்லையேல் முளை இல்லை. முளை இல்லையேல் செடி இல்லை. செடி இல்லையேல் மரம் இல்லை. மண்ணிலே விதைக்கப்படும் ஒரு பொருள் அது எவ்வளவு நுண்ணியதாக இருந்தாலும் அதனுடைய வெளிப்பாடு எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ அதே போன்று மனித உறவிலே உடலிலே விதைக்கப்படு விதை இந்த மண்ணகத்தில் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ உருவாக்கித் தருகின்ற காரணத்தினால் இந்த விதை அது கோடிக்கணக்கில் உருவாகின்ற உறுப்பான விந்தகம் அதே பெயரோடு விதை என்று சொல்லைத்தான் தமிழ் இலக்கணம் ஆகுபெயர் என்று சொல்லப்படுகிறது. இந்த விதை என்ற சொல் மருவி தமிழகத்தின் பல இடங்களில் விரை என்ற சொல்லாகக் கூறப்படுகின்றது.
சாதாரணமாக ஒரு ஆண் மகனுக்கு இரண்டு விதைகள் அல்லது விந்தகங்கள் இருக்க வேண்டும். வாலிப வயதிற்கு வந்த ஒரு ஆண் மகனை ஆண் என்றும் ஆண்மை உடையவன் என்றும் சொல்லாமல் சொல்லுகின்ற ஒரு நிலையை உண்டாக்குவதே இந்த இரண்டு விந்தகங்களின் செயல்முறையால் என்பதை நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த இரண்டு விந்தகங்களும் இரு பகுதியின் இணைந்துள்ள ஒரு விந்துப்பையில் தங்கியுள்ளதையும் அந்த விந்துப்பையில் தங்கியுள்ளதையும் அந்த விந்துப்பை எந்த அளவிற்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பக்கத்திற்கு ஒன்றாக பாதுகாக்கப்படும் இந்த விந்தகங்கள் அதனுள்ளே உள்ள முக்கியமான பகுதிகள் அந்த பகுதிகளிலிருந்து தொடர்ந்து வெளியேறும் உயிர் அணுக்கள் மற்றும் ஆர்மோன்கள் அல்லது இயக்கநீர்கள் இலைகளைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கண்ணுக்குத் தெரியாத உயிர் அணுக்கள் கோடிக்கணக்கில் தொடர்ந்து வெளியேறி பலதரப்பட்ட மாற்றங்களை அடைந்து பின்னர் உறவு கொள்ளும் பெண்ணோடு அவளின் கருவறையிலிருந்து வரும் நாதம் என்னும் கருமுட்டையோடு இணைந்து இப்படிபட்ட ஆண், பெண் என்னும் மனித ஓவியங்களை உருவாக்கி இந்த மண்ணகத்திற்கு வெளிக்கொண்டு வருகின்றது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு தாயின் வயிற்றில் உருவாகின்ற கரு, உள்ளிருக்கின்ற பத்து மாதத்தில் கிட்டத்தட்ட 280 நாட்களில் எப்படிப்பட்ட மாற்றங்களை அடைகிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆண் மகனின் விந்தணுவும் ஒரு பெண் மகளின் நாத அணுவும் இணைந்து கருவாகி 9 முதல் 10 மாதங்கள் உள்ளேயே உருவாகி பின்னர் இந்த மண்ணுலகத்தில் வெளியேறி பெற்றவர்களுக்குத் திருவாக காட்சியளிகின்ற அந்த உயிர் ஓவியத்திற்குக் காரணமான இரண்டு அணுக்களில் ஒன்றான ஆணினுடைய விந்தணுவை உற்பத்தி செய்வதுதான் விதை என்றும் விரைப்பை என்றும் சொல்லப்படுகிற விந்தகங்களாகும்.
(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)