ரியோட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் காயங்களை விரைவில் குணப்படுத்தும் புதிய வகைத் துணி ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். புதிய வகைத் துணிகளை உற்பத்தி செய்யும் நிபுணர்களும் மருத்துவ விஞ்ஞானிகளும் கூட்டாக இணைந்து இந்தப் புதிய வகைத் துணியை உருவாக்கி உள்ளனர்.

இந்த புதிய வகைத் துணி காயத்திலிருந்து வரும் ரத்தத்தை உறைய வைப்பதில் பெரும்பங்காற்றுகின்றது. ரத்தத்தின் மிகவும் சிறப்புக்குரிய பண்பு யாதெனின் ரத்தம் ரத்தக் குழாய்களுக்குள் பாயும் போது தன்னுடைய திரவ நிலையை பாதுகாத்துக் கொள்வதாகும். ரத்தம் குழாய்களை விட்டு வெளியேறும் போதுதான் உறைதல் நிலை உண்டாகிறது. உறைதல் என்பது நமது உடலின் உள்ள மிகவும் சிக்கலான உயர் வேதியியல் செயல் முறை ஆகும். காயம் பட்ட இடத்தில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி ரத்த இழப்பு ஏற்படுவது ஹெமரேஜ் என அழைக்கப்படுகின்றது.

காயம்பட்ட இடத்தில் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக ரத்தம் உறைதல், பொதுவான ரத்த அழுத்தம் குறைதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்குகின்றன. திசுக்களில் அல்லது ரத்தக்குழாய்களில் காயம் ஏற்படும் போது த்ராம்போ பிளாஸ்டின் உருவாகின்றது. புரோதிராம்பின் என்பது செயலற்றது ஆகும். திராம்பின் என்பது செயல்படுவது ஆகும். கால்சியம் அயனியின் முன்னிலையில் திராம்போபிளாஸ்டின் செயலற்ற புரோதிராம்பினை செயலாற்றும் திராம்பினாக மாற்றுகின்றது. இந்த திராம்பின் கரையும் பைபிரினோஜனை கரையாத பைபிரினாக மாற்றுகின்றது. இது இழைகளை ஒரு வலையை உருவாக்கி ரத்த அணுக்களைத் தடுத்து நிறுத்தி திரவ ரத்தத்தை கூழ் பொருளாக மாற்றுகின்றது. ரியோட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கிய மருத்துவக் குணம் வாய்ந்த துணியில் திராம்பின் உள்ளது. இது தவிர நோய்கிருமிகள் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கிய சிப்ரோ, பாலி யூரேத்தேன் ஆகியவை உள்ளது. இந்த புதிய வகை திரவம் தோய்ந்த துணி காயங்களை விரைவில் சிகிச்சையின்றி குணமாக்க உதவுவதாக ரியோட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Pin It