இந்தியாவில் சர்க்கரை நோய் (Diabetes) பாதிப்பு அதிகரித்து வருவது (நகர்ப்புறத்தில் நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்தும், கிராமப் புறங்களில் சில மடங்கு அதிகரித்தும்) புள்ளி விபர ஆய்வுகள் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நோய் தடுப்பு முறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல், நோயை ஆரம்ப கட்டத்திலேயே எப்படி கண்டுபிடிப்பது; பின் அதற்காக என்ன செய்வது என சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தடுப்பு வழி முறைகளை கையாளுவதின் மூலம் கூடுதல், நிலைத்த பயன் கிட்டும் என்பது தெளிவு.

சர்க்கரை நோய் ஏற்பட பல விசயங்கள் (பரம்பரை, உடற்பயிற்சி / உழைப்பு குறைவு, அதிகரிக்கும் மன அழுத்தம், கிருமிகள், நச்சு வேதிப் பொருட்களின் பாதிப்பு, உணவு முறை மாற்றம்....) காரணமாக இருக்கும் பட்சத்தில் எதற்கு கூடுதல் / உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதை முற்றிலுமாக தடுக்க / கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

உணவு முறை மாற்றம் - அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல உணவுப் பொருட்களை சாப்பிடும்போது கார்ப்போ ஹைட்ரேட் (மாவுச்சத்து) மட்டும்தான் அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் நிலை தவிர்க்கப்பட்டு, குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகம் இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அரிசி அல்லது மாவுச்சத்துப் பொருட்கள்தான் உணவில் பெரும்பாலான பங்கு வகிக்கிறது என்று ஆகிய பின்பு, அதை செரிக்க ‘இன்சுலின்” (Insulin) எனும் ஹார்மோன் அதிகம் சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் செல்கள் பளு அதிகரித்து அவை விரைவில் இறந்து விடுவதால் சர்க்கரை நோய் பாதிப்பு விரைவில் ஏற்படுகிறது.

மேலும் பாரம்பரிய அரிசி வகைகளைக் காட்டிலும் (இவற்றில் மாவுச்சத்து தவிர புரதச் சத்தும் இருக்கத் தான் செய்கிறது) ‘பசுமைப் புரட்சி’யின் காரணமாக கொண்டு வரப்பட்ட புதுவகை அரிசி வகைகளை மட்டுமே அதிகம் உண்ணும் நிலை (இவற்றில் மாவுச் சத்து மிகமிக அதிகமாகவும், புரதத்தின் அளவு மிக, மிகக் குறைவாகவும் இருப்பதால்) ஏற்பட்டுள்ளதால் சர்க்கரை நோயின் பாதிப்பு மேலும் தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுவாக உடலுழைப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை நோயின் தாக்கத்திற்கு முன்பைக் காட்டிலும் அதிகமான பாதிப்பிற்கு மக்கள் உள்ளாவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வாழ்க்கை என்பது ஒருவர் அவருக்கான அடிப்படைத் தேவைகளை அவரே முன்வைத்து செயல்படுத்தும் வாய்ப்புகளை / சூழலை முடிந்த வரை ஏற்படுத்திக் கொடுத்தும் தவிர்க்க (முற்றிலு மாக) முடியாத தேவைகளை தொழிற்கூடங்களை / பிறவற்றை சார்ந்து இருக்குமாறு இருப்பது போய் இலாபம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு செயல்படும் தொழிற்கூடங்கள், அதன் பிற அங்கங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த (குறிப்பாக ஏழை, எளிய மக்கள்) மக்கள் நலன்களை காப்பதற்கு பதில் தொழிற்கூடங்களின் நலன்களை மட்டுமே அதிகம் கவனத்தில் கொண்டு, அதிகாரம் படைத்தவர்களுக்கே நன்மை பயந்து வந்துள்ளது வரலாற்று உண்மையாக உள்ளது.

சர்க்கரை நோயை பொறுத்தமட்டில் 1. நோய்தடுப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்காமல், நோய் வந்த பிறகு என்ன செய்வது என்பதை செயல்படுத்தும் திட்டங்களை மட்டும் ஊக்குவிப்பது 2. தனி மனிதன் நோயின் பாதிப்பிலிருந்து விடுபட / கட்டுப்படுத்த வேண்டிய வாய்ப்புகள் / சூழலுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல், தொழிற்கூடங்கள் / வல்லுநர்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும் போக்கே தென்படுகிறது.

ஆக உணவு முறை மாற்றம் (அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்துதல்) பாரம்பரிய அரிசி வகைகளை பயன்பாட்டில் கொண்டுவருவது, உடலுழைப்பு / உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பது, அதிகரித்து வரும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த அனைத்து மக்களுக்கான (குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கான) சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் (அனைவருக்கும், நிலம் / வீடு, கல்வி, சுகாதாரம், வேலைக்கு உத்தரவாதம்... போன்றவை) ஆகியவற்றிற்கு உரிய முக்கியத்துவம் வழங்குதல் நடைமுறை படுத்தவேண்டும். அதற்காக பாரம்பரியம், கிருமிகள், நச்சுப்பொருட்களின் பங்கினை குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. எந்த செயல்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தால் நீடித்த / நிலைத்த நோய் தடுப்பு / பாதுகாப்பு கண்கூடாகத் தெரியும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். 

(நன்றி : மாற்று மருத்துவம் ஏப்ரல் 2009)

Pin It