இரத்தக் குழாய்களில் இரத்தம் செல்லும்போது, குழாய்களின் சுவர்களில் இரத்தம் ஏற்படுத்தும் விசையே இரத்த அழுத்தம் எனப்படும். மேலும், இதயம் தொடர்ச்சியாக இரத்தத்தை குழாய்களின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுழற்றிக் கொண்டே இருப்பதால் இரத்த அழுத்தம் சீராக இருக்கின்றது. இரத்தக் குழாய்களில் ஓடும் இரத்தத்தின் அழுத்த விசையினை அளக்கும் கருவிக்கு ஸ்பிக்மோமேனோ மீட்டர் (Sphigmomanometer) என்று பெயர். இக்கருவியில் உள்ள பாதரசத் தம்பம் (Mercury Pellet) அழுத்தத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது.

இரத்த அழுத்தம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் இது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்குக் கணிசமான அளவில் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக 30-லிருந்து 40 வயதுள்ள சராசரி ஆணுக்கு இரத்த அழுத்தம் 120/90 இருக்கலாம். இதையே சாதாரண இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள். இந்த அளவிற்குக் குறைந்தால் Hypo Tension எனப்படும். குறைந்த இரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்றும், அதிகமானால் Hyber Tension எனப்படும் அதிக இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்றும் சொல்லலாம்.

குறைந்த இரத்த அழுத்தத்திற்கு இரத்தச் சேதமோ, இரத்தத்தின் திரவ அளவு குறைவதோ அல்லது Electrolytes எனப்படும் துகள்கள் குறைவதோ காரணமாக இருக்கலாம். அதிக இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள், அதிகக் கொழுப்பு (Cholestrol) சேருதல், நீரிழிவு நோய் (Diabetes), சிறுநீரகப் பாதிப்புகள், சில நேரங்களில் பெண்களின் கர்ப்பநிலை ஆகியவையாகும்.

இரத்த அழுத்தம் அதிகமானால் இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுவது தவறானது. இரத்தம், எந்த நேரத்திலும் கொதி நிலையை அடைவதில்லை. இரத்த அழுத்தம் அதிகமானால் இதயம் அதிகமான வேலை செய்ய வேண்டியதாகி விடுகிறது. எனவேதான் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியானது)

Pin It