1940-50களில் சென்னையில் பெரியார் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன?
14 வயதில் பெரியாரிடம் அறிமுகமாகி பெரியார் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு 23ஆவது வயதில் பெரியார் ஆணையை ஏற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர் மா.கோபாலன். திருத்தணி வட்டம் சிறுமணவூரைச் சேர்ந்தவர். அரசு துணைச் செயலாளராகவும், கடைசியில் புதிய பல்கலைக் கழகங்களுக்குத் தனி அலுவலராகவும் பணியாற்றி, ஓய்வுக்குப் பிறகு சைவப் பற்றாளராக மாறியவர். குடந்தை அருகே திருப்பனந்தாள் சைவ மடத்தில் மடத்தின் சைவ மடாதிபதியிடம் நெருக்கமாகி, சைவச் சொற்பொழிவுகளை நடத்தத் தொடங்கினார்.
பெரியாரியலிலிருந்து சைவப் பற்றாளராக மாறிய நிலையிலும், பணி ஓய்வுக்குப் பிறகு வாழ்வின் இறுதி காலத்தில் தனது மரணத்துக்கு முன் ‘ஆடும் பருவத்தில் என்னை ஆட்கொண்ட பெரியார்’ என்று பெரியார் இயக்கத்திடம் தனக்கிருந்த ஈடுபாட்டை நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார். வாய்மொழி வரலாறாக வெளி வந்துள்ள இந்த நூலில், அக்காலத்தில் சென்னையில் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும் களப்பணியாற்றிய பெரியார் தொண்டர்கள், அவர்கள் நடத்திய பரப்புரைகளையும், சந்தித்த எதிர்ப்புகளையும் பதிவு செய்கிறது இந்த ஆவணம்.
நூலுக்கு முன்னுரை வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் அரசு, “திராவிடர் கழகம் எனும் அமைப்பு சமூகத்தின் அடிமட்டத்தில் செயல்பட்ட அமைப்பு. காங்கிரஸ் போன்ற அமைப்புகள் சமூகத்தின் மேல் மட்டத்தில் பெரும் பகுதி ஆதிக்கச் சாதி அதிகாரங்களுடன் செயல்பட்ட அமைப்புகள். திராவிடர் கழகம் மேற்குறித்த தன்மைகள் எதனையும் உள்வாங்காத் தொண்டர்களின் இயக்கம்” என்று குறிப்பிடுவதோடு, “அடிமட்டச் சமூக இயக்கங்கள் குறித்த பதிவுகள் என்பவை வாய்மொழிப் பதிவுகளாக அமைவது தவிர்க்க முடியாதது. இவ்வகையில் தமிழகத்தின் பொது வெளியில் செயல்பட்ட பெரியாரோடு அணுக்கத் தொண்டனாகச் செயல்பட்ட இந்நூலாசிரியரின் நினைவுப் பதிவுகளாக இந்நூல் அமைகிறது” என்று குறிப்பிடுகிறார்.
மேலும், “சமகால வரலாற்றுப் பதிவுகளில் நிகழ்வுகளின் உள்மனச் செயல்பாடுகள் பதிவு செய்வது அரிது. தன் வரலாற்றுப் பதிவுகளில்தான் அத்தன்மை வெளிப்படும். அந்த வகையில், கோபாலன் எனும் சாதாரண தொண்டரிடம் பெரியார் எனும் ஆளுமையின் உள்மனச் செயல்பாடுகளின் அரிய பதிவாக இந்நூலைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று சரியாக சுட்டிக் காட்டியுள்ளார். அந்நூலி லிருந்து சில பகுதிகள்:
“இரண்டாம் உலகப்போர் நடந்த போது (1939-45) சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ தமிழ்நாட்டில் அதிகம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
அப்போது சென்னை மாநகரம் நாற்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட் டிருந்தது. ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு இணைக் கழகம் அமைக்கப் போதுமான ஆள் பலம் இல்லை. அதனால் சென்னையை மத்திய சென்னை, தென் சென்னை, கிழக்குச் சென்னை, வடசென்னை என நான்காகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஓர் இணைக் கழகம் அமைக்கப் பெற்றது.
மத்திய சென்னையில் சக்கரியா, அப்துல்காதர், ஆர்பர் சண்முகம் போன் றோரும் தென்சென்னையில் தங்கவேலு, தா. லோகநாதன், டி.எம்.சண்முகம், கபாலி போன்றோரும் கழகப் பணியாற்றினர்.
மேற்கு சென்னையில் என்.எஸ்.தங்க ரூபன், ஆர்.கே. முனுசாமி, ஏ.அமிர்த லிங்கம், சி. தங்கராஜ், ‘கன்பட்’ சுப்பிர மணியம், பி.இ. பக்வத்சலம், வேணு கோபால் முதலானோரும் வடசென்னை யில் எம்.கே.டி. சுப்பிரமணியம், சுந்தர மூர்த்தி, மு.போ. வீரன், டபிள்.யூ.பி. வேலாயுதம், என். சீவரத்தினம் முதலானோரும் கழகப் பணி செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை யில் ஒரு கூட்டம் தவறாமல் நடைபெறும். கழகக் கூட்டங்கள் பெரும்பாலும் பூங்காக்களில் நடைபெறும். இராபின்சன் பூங்கா, படேல் பூங்கா, எட்வர்டு பூங்கா, நேப்பியர் பூங்கா, வாடியா பூங்கா ஆகியவற்றில் நடைபெறும். மடிப்பு மேசை ஒன்றும் மடிப்பு நாற்காலி ஒன்றும் விளக்கு (பெட்ரோமாக்சு விளக்கு அல்லது அரிகேன் விளக்கு) ஒன்றும் கழகத் தோழர் ஒருவர் கொண்டு வருவார். குடிஅரசு வெளியீடுகளை ஒருவர் விற்பார்.
கழகம் சென்னையில் வளர ஆரம்பித்தது.
நாற்பது வட்டங்களாகப் பிரிக்கப் பெற்றிருந்த சென்னை மாநகரம், 120 வட்டங்களாகப் பின்னர்ப் பிரிக்கப் பெற்றது. கழகம் வளர்ச்சியுற்றிருந்ததால் ஒவ்வொரு வட்டத்திலும் இணைக் கழகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
பூங்காக்களில் மடிப்பு மேசை, மடிப்பு நாற்காலி, பெட்ரோமாக்சு அல்லது அரிக்கேன் விளக்கு வைத்துக் கழகக் கூட்டங்களை நடத்திய எங்களுக்குப் பெரிய மாற்றம் புலப்பட்டது.
வெளியூர்களிலிருந்து பேச்சாளர்களை அழைத்துப் பொதுக் கூட்டங்கள் போட ஆரம்பித்தோம். தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்து எம்.கே. குப்தா என்பவர் வருவார். நல்ல பேச்சாளர். சமற்கிருதத்தில் சிரோன்மணி பட்டம் பெற்றவர். அரிய கருத்துகளை நகைச்சுவை மிளிரப் பேசுவார். பட்டுக்கோட்டையில் டேவிஸ் என்பவர் இருந்தார். ஒவ்வோர் ஆண்டும் மாளய அமாவாசையின்போது குடந்தையில் குளக்கரையில் உட்கார்ந் திருப்போரின் பூணூல் எல்லாம் வெட்டிக் குளத்தில் போட்டு விடுவார். கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப் படுவார். நல்ல பேச்சாளர்.
குடந்தையில் எஸ்.கே.சாமி என்பவர் இருந்தார். நல்ல சாரீரம் - சரீரமும்கூட. அம்மன் பாடல்களை இனிமையாகப் பாடுவார். இசையோடு நகைச்சுவையும் அவர் பேச்சில் மிளிரும்.
மதுரையில் பொன்னம்மாள் சேதுராமன் தம்பதியினர் இருந்தனர். சேதுராமன் கையில் டேப் வைத்துக் கொண்டு பாடுவார். பொன்னம்மாளும் பாடுவார். இசைக்கு ஏற்றவாறு சேதுராமன் டேப்பை அடித்து ஒலி எழுப்புவார். இவர்கள் இருவரையும் மதுரையில் இருந்து வரவழைத்து என் வீட்டில் தங்க வைத்திருந்தேன். அவர் களுக்குக் கைக் குழந்தை ஒன்று இருந்தது.
முதலில் எங்கள் இணைக்கழகம் சார்பில் குயப்பேட்டையில் ஒரு கூட்டம் போட்டோம். பின்னர் சென்னையின் பல பகுதிகளில் அவர்களை வைத்துப் பொதுக் கூட்டங்கள் நடத்தப் பெற்றன.
இப்பெரும் வளர்ச்சிக்குக் காரண மானவர்கள் புளியந்தோப்பு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அச்சுதன், கசேந்திரன், மதுரமணி ஆகியோரும் என்னைப் பெரியாரிடம் கொண்டு போய்ச் சேர்த்த ஏகாம்பரத்தின் மூத்த மகன் அமிர்த லிங்கமும், கேசவன், நடராசன், வேணுகோபால் ஆகியோரும் ஆவர்.
சென்னையில் மட்டும் அன்று தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் இப்பெரும் வளர்ச்சியைக் காண முடிந்தது. சேலத்தில் குகை என்ற பகுதியில் வசித்த செகதீசன், ரோசு அருணாசலம், சித்தையன் ஆகியோர் கழக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர்.
சேலம் அரசினர் கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் அ.இராமசாமி (கவுண்டர்) திராவிடர் கழகத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர். அடிக்கடி பெரியாரைத் தம் கல்லூரிக்கு வந்து சொற்பொழிவாற்றுமாறு அழைப்பார். ஒருமுறை அக்கல்லூரியில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு ‘தத்துவ விளக்கம்’ என்னும் பெயரில் நூலாக வெளி வந்துள்ளது. அதனைப் பல அறிஞர் பெருமக்கள் பாராட்டியுள்ளனர்.
கோவையில் பழம்பெரும் சுயமரி யாதை வீரர் அ.அய்யாமுத்து, தென்னார்க் காடு மாவட்டத்தில் கிருட்டிணசாமி, வடஆர்க்கடு மாவட்டத்தில் திருநாவுக்கரசு, தஞ்சாவூர் மாவட்டத்தில் இராசகோபால், நல்லதம்பி, நீடாமங்கலம் ஆறுமுகம், மதுரை மாவட்டத்தில் எஸ். முத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் முஸ்தபா போன்றோர் பெருந் தியாகங்கள் செய்து திராவிடர் கழகத்தை வளர்த்தனர்.
திருச்சியில் ‘வக்கீல் ஐயா’, டி.பி. வேதாசலம் திராவிடர் கழகத்தில் செயல் தலைவராக இருந்து இறுதி நாள் வரை பாடுபட்டார். அங்கே டி.டி.வீரப்பா என்பவர் மூவண்ணத்தில் பெரியார் படத்தை அச்சிட்டுக் குறைந்த விலையில் கழகத் தோழர்களுக்குக் கொடுத்தார்.
திராவிடர் கழகம் வளர்வதற்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரும் காரணமாக இருந்தது. 1937-39ஆம் ஆண்டுகளில் சென்னை மாநிலத்தில் முதல்வராக இருந்த இராசகோபலாச்சாரி இந்தி மொழியைத் தமிழ் மக்கள் மீது திணித்தார்.
திராவிடர் கழகம் இந்தித் திணிப்பினை மிக வன்மையாகக் கண்டித்தது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அப்போராட்டத்தில் பங்கு கொண்டு பல தோழர்கள் சிறைக்குச் சென்றனர். தாளமுத்து, நடராசன் என்னும் இருவர் சிறைக் கொடுமை தாளாமல் உயிர் விட்டனர்.
மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், புலவர் அருணகிரியார் முதலான தமிழறிஞர்கள் பலர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாருக்குப் பெருந்துணையாக இருந்தனர்.
‘இந்தியாவில் பலரால் பேசப்படும் மொழி இந்தி. எனவே அதுவே இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும்’ என்று இந்தி வெறியர்கள் கூறி வந்தனர். இந்த வாதத்தைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. “இந்தி பொது மொழியா?” என்ற அரியதோர் ஆய்வு நூலை மறைமலையடிகள் எழுதி அவ்வாதத்தைத் தூளாக்கினார்.
மீண்டும் 1948-49ஆம் ஆண்டு, அப்போது சென்னை மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி இந்தி மொழியைத் தமிழ் மக்கள் மீது திணித்தது. அப்போதும் திராவிடர் கழகம் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது. சென்னை சௌகார்பேட்டையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியின் முன் நாள்தோறும் மறியல் நடைபெற்றது.
மறியல் செய்த கழகத் தோழர்களைக் கைது செய்யவில்லை அன்றைய அரசு. அவர்களை வண்டிகளில் ஏற்றி சென்னைக்கு வெளியே 100-150 மைல்களுக்கு அப்பால் தண்ணீர் இல்லாத காட்டில் வெட்டவெளியில் கொண்டு போய்விட்டுவிட்டனர்.
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை யாரின் துணைவியாரான அலமேலு அம்மையாரை அவ்வாறே வண்டியில் ஏற்றிக் கொண்டு போய்த் திண்டி வனத்துக்கு அப்பால் விட்டுவிட்டனர். அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி.
சென்னை மவுண்டு சாலையில் (இப்போது அண்ணா சாலை) இருக்கும் காயிதே மில்லத் கல்லூரியில் (அப்போது அது முசுலீம் கல்லூரி - ஆண்களும் பெண்களும் படித்தனர்) நான் படித்துக் கொண்டிருந்தேன். நானும் கழகத்தைச் சேர்ந்த வேறு சில மாணாக்கர்களும் இரண்டு வண்டிகளில் ஏறிக் கொண்டு போலீசு வண்டியின் பின்னால் சென்றோம். அலமேலு அம்மையாரைச் சென்னைக்குக் கொண்டு வந்தோம். அவருடைய வீடு சேப்பாக்கம் பாரகன் தியேட்டர் பக்கத்தில் இருக்கும் தெருவில் இருந்தது. அங்குக் கொண்டு வந்து அவருடைய வீட்டில் விட்டோம்.
புரட்சிக் கவிஞர் பாதிதாசன் இந்தியை எதிர்த்து மறியல் செய்யும் கழகத் தோழர்களை ஊக்குவிக்கும் முத்தான பல பாடல்களை இயற்றித் தந்தார்.
“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை
மாட்ட நினைக்கும் சிறைச்சாலை
தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம்-உயிர்த்
தித்திப்பை எண்ணிடப் போவதில்லை.
என்பன போன்ற பாடல்கள்
எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி
எத்தனை பட்டாளம் கூட்டி வரும்”
என்று திராவிடர் கழகத் தோழர்களும் தமிழ்நாட்டு மக்களும் கேட்டனர்.
போராட்டம் தீவிரம் அடைந்தது. மாநில அரசினால் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.”
..............................................
பெரியார் நீதிமன்றத்துக்குப் போவார். தம் பெட்டி, படுக்கையுடன் போவார்.
நீதிபதியைப் பார்த்துச் சொல்வார், “எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை. உங்கள் சட்டங்களின் மீது நம்பிக்கை இல்லை; நீங்கள் என்ன தண்டனை கொடுக்க முடியுமோ அந்தத் தண்டனையைக் கொடுங்கள். அந்தத் தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று.
அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்யும் பெரியாருக்கு வசதியான வேன் ஒன்று தேவைப்பட்டது. தூங்குவதற்கும் இளைப்பாறுவதற்கும் படிப்பதற்கும் வசதி வேண்டும். சென்னை அண்ணாசாலையில் உள்ள சிம்சன் நிறுவன உரிமையாளர் அனந்தராம கிருட்டிணனிடம் வேனைத் தயார் செய்யச் சொன்னார். வேன் தயாரானதும் மீரான் சாகிப் தெருவில் உள்ள பெரியாரிடம் காட்டி ஒப்புதல் பெற அதனைக் கொண்டு வந்தார். வேனைப் பார்த்ததும் பெரியாருக்கு மிகுந்த திருப்தி. அனந்தராமகிருட்டிணனிடம் தங்களுக்குப் பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.
பெரியாரிடம் பணம் வாங்க அவர் மறுத்துவிட்டார். “ஐயா, நீங்கள் வகுப்புவாரித் திட்டத்தை வலியுறுத்தி வருகிறீர்கள். பிராமணர்களாகிய எங்களுக்கு கல்வித் துறையிலும் உத்தியோகத்திலும் 3 விழுக்காடுதான் தரவேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதனால் என் சமூகப் பிள்ளைகளுக்குப் படிக்கவோ வேலைக்குப் போகவோ தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை. எனவே, அவர்கள் எல்லாம் பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று மிகவும் வசதியாக உள்ளனர். இதற்கு நானும் என் சமூகமும் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்வதென்றே தெரியவில்லை. இந்த வேனுக்காக நான் செலவு செய்தது மிகவும் சொற்பம்” என்றார். கடைசி வரை பெரியார் எவ்வளவு வற்புறுத்தியும் அவர் பணம் ஒன்றும் வாங்கவே இல்லை. பெரியாருடைய பிரச்சாரம் எவ்வாறெல் லாம் வேலை செய்கிறது என்பதனை இந்நிகழ்ச்சி எங்களுக்கு உணர்த்திற்று.
பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வெளி மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். நியூசிலாந்து நாட்டுக்குப் பல பார்ப்பனர்கள் குடியேறி அங்குத் தங்கள் பிள்ளைகளை மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வைப்பதை அங்குச் சென்றபோது நான் நேரில் பார்த்தேன்.
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மூன்றே விழுக்காடு உள்ள பிராமணர்கள் 90-95 விழுக்காடு கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களிலும் சேர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவ்வாதிக்கம் 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணம். அவர்கள் 1937ஆம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். பார்ப் பனரல்லாதாருக்கு அவர்கள் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. அதனைப் பெரியார் தொடர்ந்து மேற்கொண்டார். அதனால்தான் சிம்சன் கம்பெனி உரிமையாளர் அனந்தராமகிருட்டிணன் தம் கம்பெனியில் உருவாக்கிய வேனுக்கான பணத்தைப் பெரியாரிடம் வாங்க மறுத்து விட்டார். பல பார்ப்பனப் பெரியவர்கள் இதனை மனப்பூர்வமாக உணர்கின்றனர்.
...........................
“1946, 1947, 1948ஆம் ஆண்டுகளில் திராவிடர் கழகத்துக்கு அசுர வளர்ச்சி. பூங்காக்களில் சிறிய அளவில் நடத்தப் பெற்று வந்த கூட்டங்கள் பொது இடங்களிலும், சாலைச் சந்திப்புகளிலும், விளையாட்டு இடங்களிலும் நடத்தப் பெற்றன. ஒலிபெருக்கிகள் அமைத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பெற்ற மேடைகளில் மாலை 5-6 மணிக்குத் தொடங்கி இரவு 10-11 மணி வரை கூட்டங்கள் நடந்தன. பெரியார் சென்னை யில் இருக்கும் போது அவரை வைத்தே பொதுக் கூட்டங்கள் நடத்தப் பெற்றன.
பள்ளி மாணாக்கர்கள், கல்லூரி மாணாக்கர்கள் ஆகியோர் திராவிடர் கழகத்தில் பங்கு கொண்டனர். அறிஞர் அண்ணா, எம்.ஏ., இரா. நெடுஞ்செழியன், எம்.ஏ., க. அன்பழகன், எம்.ஏ., டார்பிடோ ஏ.பி. சனார்த்தனம், எம்.ஏ., மா. இளஞ்செழியன், எம்.ஏ., (இவர் காஞ்சி மணிமொழியாருக்கு மகன்; பின்னர், சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து விட்டார்) மதியழகன், பி.ஏ., எனப் பல பட்டதாரிகள். இவர்கள் அனைவரும் சிறந்த மேடைப் பேச்சாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள்.
மாத இதழ்களும் வார இதழ்களும் பல்கிப் பெருகின. அறிஞர் அணணாவின் ‘திராவிட நாடு’, இரா. நெடுஞ்செழியனின் ‘மன்றம், மா.இளஞ்செழியனின் “போர் வாள்”, சுப்பிரமணியனின் “முருகு”,
சி.பி. சிற்றரசுவின் “தீப்பொறி”, என்.வி. நடராசனின், “திராவிடன்” எனப் பல இதழ்கள் வெளி வந்தன.
ஒரேபெயரில் இரண்டு இதழ்களும் வெளி வந்தன. ‘தீப்பொறி’ என்ற பெயரில் வேலூரில் இருந்து ஓர் இதழும் சென்னை யில் இருந்து ஓர் இதழும் வெளி வந்தன.
சென்னை சூளையில் பாலசுப்பிர மணியம் ‘குஞ்சு’ என்ற பெயரில் வார இதழ் ஒன்றினை நடத்தி வந்தார். இவர் வங்கி ஒன்றில் காசாளராகப் பணியாற்றி வந்தார். தூத்துக்குடியில் இருந்து ஆர்.எஸ்.தங்கப்பழம் என்பவர் ‘கிளர்ச்சி’ என்ற பெயரில் வார இதழ் ஒன்றினை நடத்தி வந்தார். அந்த இதழ் ஓரளவுக்கு மஞ்சள் பத்திரிகைபோல் நடத்தப் பெற்று வந்தது. தூத்துக்குடியில் சாமி என்னும் கழகத் தோழர் கொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து ஆர்.எஸ். தங்கப்பழம் வழக்கில் சிக்கிக் கொண்டார். அதனால் அவர் நடத்தி வந்த ‘கிளர்ச்சி’ இதழும் நிறுத்தப்பட்டது.
திருச்சி, தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களில் திராவிடர் கழக மாநாடுகள் நடத்தப் பெற்றன. மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டுப் பந்தலைக் காலிகள் கொளுத்திவிட்டனர். மதுரை எஸ்.முத்து தம் தோழர்களுடன் தீ கொழுந்துவிட்டெரியும் மாநாட்டுப் பந்தலைப் பிரித்துப் போட்டு உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் பெரும் அளவில் தவிர்த்தார்.
தூத்துக்குடியில் மாநாடு நடக்கும் போது கம்யூனிஸ்டு கட்சியினர் இரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். மாநாட் டுக்குத் தமிழகத்திலிருந்து சென்ற பல்லா யிரம் கழகத் தோழர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பெரிதும் தவித்தனர்.
...........................
‘முரளி கேப்’ மறியல்
சென்னை திருவல்லிக்கேணியில் ‘முரளி கபே’ என்ற ஓட்டல் ‘பிராமணாள் கபே’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. ‘பிராமணர்’ என்ற பெயரில் ‘சூத்திரர்’ இழிவுபடுத்தப்படும் இந்தச் சொல்லை நீக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் சார்பில் 210 நாள் தொடர் மறியல் போராட்டம் நடந்தது. 837 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தத் தொடர் மறியல் குறித்து பெரியார் தொண்டர் கோபால் பதிவு செய்துள்ள கருத்துகள்:
“மறியல் செய்யும் தொண்டர்களுக்கு ஐந்து வாரம் சாதாரண சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மறியல் எந்தவித மாற்றமும் இன்றித் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ஒரு நாள் தொண்டர்கள் முரளி கேப் உணவுக் கடை முன் சென்றதும் மாடியில் இருந்து வெந்நீரையும் கொதிக்கும் எண்ணெய்யையும் கடை ஊழியர்கள் ஊற்றினர். பதிலுக்குக் கீழே நடைபாதையில் போடப்பட் டிருந்த சிமெண்டுப் பாறைகளைத் துண்டு துண்டாக உடைத்துக் கடைக்கு உள்ளேயும் மேலே மாடியிலேயும் அடிக்க ஆரம்பித்தார்கள் கழகத் தோழர்கள்.
அமைதியாக நடந்து வந்த மறியலில் வன்முறை தலைதூக்க ஆரம்பித்தது. சென்னைக் கடற்கரைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்புவோர் மாநிலக் கல்லூரி அருகில் வந்ததும் சிலர் கால்களில் இருந்து இரத்தம் கொட்டும். ஏன் வருகிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அதனால் கடற்கரையில் இருந்து அந்த வழியாக வருவோர் எண்ணிக்கை பெருமளவில் குறையத் தொடங்கியது.
..................................
இவ்வளவு களேபரங்களுக்குப் பின்னர் ஒரு நாள் முரளி கேப் உரிமையாளர் பெரியார் வீட்டுக்கு வந்தார்.
உங்களைப் போன்ற பெரியவர்கள் மறியல் செய்தால் என் கடைக்கு நல்ல விளம்பரம் ஆகும். வியாபாரமும் பெருகும் என்று சொன்ன அதே முரளி கேப் உரிமையாளர் தான் பெரியார் வீட்டுக்கு வந்தார். காரிலிருந்து பல தட்டுகளை எடுத்தார்கள் பணியாளர்கள். ஒரு தட்டில் பெரிய பூமாலை, ஒரு தட்டில் இனிப்பு வகைகள், ஒரு தட்டில் வெற்றிலை - பாக்கு எனப் பல தட்டுகள். மாடியில் கொண்டு போய்ப் பெரியார் முன் வைத்தார் அவர். “ஐயா, நான் உங்களிடம் மாரியாதைக் குறைவாக நடந்து கொண்டேன்; உங்களுக்கும் உங்கள் கட்சிக்காரர்களுக்கும் நான் நிறையக் கஷ்டம் கொடுத்து விட்டேன். என்னைத் தாங்கள் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
முரளி கேப் உரிமையாளருக்கு இந்தத் திடீர் மனமாற்றம் ஏற்பட்டதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று முரளிகேப் முன் திராவிடர் கழகத் தொண்டர்கள் மறியல் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து அவ்வுணவுக் கடையில் பணியாற்றி யோர் செய்த கலவரங்கள், காவல் துறை யினர் பாதுகாப்புக் கெடுபிடி ஆகிய வற்றால் அப்பகுதி வாழ் மக்கள் அச்ச மின்றி நடமாட முடியாத சூழ்நிலை, பல கடிதங்கள், தந்திகள் அனுப்பியும் மைய அரசு நடவடிக்கை ஒன்றும் உருப் படியாக எடுக்காதது ஆகியவற்றால் முரளிகேப் உரிமையாளர் நிர்ப்பந்தப் படுத்தப்பட்டார் என்பது.
மற்றொன்று காஞ்சி மடம் பீடாதிபதி சந்திரசேகர் பரமாச்சாரியர் சுவாமிகள் முரளிகேப் உரிமையாளரைப் பெரியாரிடம் சென்று மன்னிப்புக் கேட்குமாறு கட்டளையிட்டார் என்பது.
காரணம் எதுவாக இருந்தாலும் முதல் நாள் பெரியார் கேட்டுக் கொண் டவாறே ‘பிராமணர்கள் சாப்பிடு மிடம்’ என்னும் வார்த்தைகள் பெயர்ப் பலகையிலிருந்து நீக்கப் பட்டுச் ‘சைவ உணவகம்’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டன. இதனை முதலிலேயே செய்திருந்தால் நாளொன்றுக்கு ஆறு பேர் வீதம் பல மாதங்கள் அங்கு மறியல் செய்து சிறைக்குச் சென்றிருக்கும் அவசியமே இருந்திருக்காது.
சர். சி.பி. இராமசாமி அய்யர் திவானாக இருந்தபோது திருவாங்கூர் கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வைக்கத்தில் பெரியாரும் அவரின் துணைவியாரான நாகம்மையும் செய்த மறியல் போராட்டம் போன்றே இப்போராட் டமும் பெரியாருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.”
ஆடும் பருவத்திலேயே எனை ஆட்கொண்ட பெரியார் நூலிலிருந்து.
பதிப்பகம் : ஞானசம்பந்தம் பதிப்பகம்
110, 5ஆம் தெரு, தலைமைச் செயலகக் குடியிருப்பு, கிள்ளியூர், சென்னை-600 010.
அலைபேசி : 94425 54807
பேசி : 044 - 26423669