கீற்றில் தேட...

உலகில் எந்த ஒரு மதமும் தங்கள் மதத்தினர் வழிபாட்டுக்கு வரும்போது ‘உள்ளே வராதே’ என்று தடுப்பது இல்லை. ஆனால் இந்த நாடே இந்துக்களுக்கானது; நாம் அனைவருமே இந்துக்கள்; பிற மதத்தவர் - அன்னியர்” என்று  பேசுகிறவர்கள்தான். ‘இந்து’ வழிபாட்டுக்கு உரிய கோயில்களில் சமூகத்தின் சரி பகுதியாக இருக்கும் பெண்களைப் பார்த்து, “கோயிலுக்கு வராதே” என்று தடுக்கிறார்கள். “தீண்டாமை அனைத்து வடிவங்களிலும் தடை செய்யப்படுகிறது” என்று சட்டம் அமுலில் உள்ள ஒரு நாட்டில் அந்த சட்டத்தின் உணர்வுகளை மதித்து உச்சநீதிமன்றம், பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்த பிறகும், பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் கேரள மாநில காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டு, பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் வழிபட வருவதைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.

‘தீண்டப்படாத மக்கள்’ கோயில் நுழைவுக்குக்கூட சம்பிரதாயங்களைக் காட்டியே பார்ப்பனர்கள் தடுத்தனர். 1947ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினருக்கும் ‘ஆலயப் பிரவேசம்’ வழங்கும் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டபோது சம்பிரதாயங்களான ‘ஆகமவிதிகளும்’ மாற்றப்பட்டன என்பது வரலாறு. இந்த மாற்றங்களை உச்சநீதிமன்றமும் அப்போது ஏற்றுக் கொண்டது. ‘தீண்டாமை’ என்பது ஆண்களுக்கு மட்டுமானது அல்ல; பெண்களையும் உள்ளடக்கியதும்தான்.

சபரிமலை கோயிலுக்குள் 1991ஆம் ஆண்டுதான் கேரள உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு வழியாக அனைத்து வயதுப் பெண்களையும் ‘தரிசனம்’ செய்யும் உரிமையை மறுத்தது.  அதற்கு முன்பு அத்தகைய தடைகள் ஏதுமில்லை; ‘நிஷ்காமிய பிரம்மச்சாரி’ அய்யப்பனும் அனைத்து வயதுப் பெண்களும் தரிசிக்க வந்தபோது வெகுண்டு எழுந்து தடுக்கவும் இல்லை. இப்போதும் சபரிமலை தவிர ஏனைய ஊர்களில் உள்ள அய்யப்பன்களும் பெண்கள் நுழைவதைத் தடுக்கவில்லை.  1991இல் வந்த வழக்கில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி, தேவசம் போர்டு, வாதியாக சேர்க்கப்பட்டு ஆணையர் தாக்கல் செய்த மனுவில் - “மண்டல பூஜை. மகர விளக்கு தவிர்த்து ஏனைய காலங்களில் அனைத்து வயதுப் பெண்களும் அய்யப்பனை தரிசித்தே வருகிறார்கள். அந்த உரிமையைத் தடை செய்யத் தேவையில்லை” என்றே அப்போது நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நீதிபதிகள் பரிபூரணன், மாரார் ஆகியோரடங்கிய அமர்வு அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து பெண்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில்  கேரளாவில்  ஆட்சி மாற்றங்கள் நடந்தபோதெல்லாம் வெவ்வேறு நிலைப்பாடுகளை ஆட்சிகள் எடுத்தன.

1991இல் பெண்களுக்கு ஆதரவாக நிலை எடுத்த காங்கிரஸ் ஆட்சி, 2016இல் தேர்தலுக்கு முன்பு தனது குரலை மாற்றிக் கொண்டது. 2007இல் ஆட்சிக்கு வந்த இடதுசாரி முன்னணி பெண்கள் நுழைவுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தது. மீண்டும் 2017இல் ஆட்சிக்கு வந்தபோதும் பெண்கள் நுழைவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தது. காங்கிரஸ் ஆட்சி இரட்டை நிலைப்பாடுகளை எடுத்ததுபோலவே 2006இல் கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற நிலைப்பாட்டையே நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்துள்ளனர். இப்போதும்கூட கேரளாவிலிருந்து வெளிவரும் பா.ஜ.க. நாளேடான ‘ஜன்ம பூமி’ இப்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது.

பெண்களின் வழிபாட்டு உரிமைகளில் இந்த ‘மதவெறி ஆண்கள்’ நடத்தும் விளையாட்டு பெண்களின் சுயமரியாதையை சவாலுக்கு இழுப்பதேயாகும். ஆனால் பெண்கள் இயக்கங்களிடமிருந்து இதற்கு உறுதியான எதிர்வினைகள் ஏன் உருவாகவில்லை? இதுதான் கவலை தரும் கேள்வி.

எந்த ஒரு சமுதாய மாற்றமும் சட்டத்தினால் மட்டும் வந்துவிடாது. அதற்கான மக்கள் இயக்கங்களின் தேவையும் அவசியமும் இருக்கிறது என்பதே இப்பிரச்சினை உணர்த்தும் பாடம். கேரள இடதுசாரிகள் இதில் தவறிவிட்டனர். இனியாவது இடதுசாரி கட்சிகள் இதைத் தீவிரமாக சிந்தித்து தங்கள் அணுகுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பது நமது வேண்டுகோள். சமுதாய மாற்றங்களுக்கான தொடர்ச்சியான இயக்கங்களே - அரசியல்  செயல்பாடுகளை நிலைநிறுத்தச் செய்யும் என்பதே வரலாறு தரும் படிப்பினை.