periyar and anna 480அண்ணாவின் 50ஆவது நினைவு நாளில் அவரது எழுத்தும் பேச்சும் தமிழின விடுதலைக்கான அறிவாயுதங்களாகத் திகழ்ந்து கொண்டிருக் கின்றன. குறுகிய காலம் தான் அவர் முதல்வர். அவரது முப்பெரும் சாதனைகள் - இப்போது தமிழகத்தின் தனித்துவத்துக்கான வரலாற்று அடையாளங்களாக நிலை பெற்றுவிட்டன. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திய தேசிய வரைபடத்தில் தமிழ்நாடு மட்டுமே சமூக நீதி மண்ணாக அடையாளம் காட்டுகிறது. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து இந்தியை விரட்டினார். அதுவே இந்திய தேசியத்துக்குள் தமிழகம் தன்னை முழுமையாக ‘கரைத்துக் கொள்ளாது’ என்பதை உணர்த்தி நிற்கிறது. புரோகித மந்திரங்கள் வழியாக நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே திருமணத்தை உறுதிப்படுத்தும் என்ற வேத மரபைத் தகர்த்து சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்தார். தமிழரின் பண்பாடு வேத மரபுக்கு முரணானது என்பதை இந்தச் சட்டம் உரத்து முழக்கமிடுகிறது. மாறி வரும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்தார். அந்த உரிமை முழக்கம் தென்னாடு முழுதும் இப்போது கேட்கிறது.

‘ஒன்றே குலம் - ஒருவனே தேவன்’ என்ற திருமூலர் கருத்தை தான் தீட்டிய ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் நிறைவு செய்தியாக அவர் கூறினாலும் அவர் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதை எழுத்துகளில் பதிவு செய்தார்.

“கடவுளைக் கண்டவர்களாகச் சொல்லப்படும் சமய ஆசிரியர்கள் எல்லோரும் மக்களினத்தைச் சார்ந்தவர்கள்தானே? அவர்கள் கண்களுக்கு புலப்பட்ட கடவுள் - அவர்கள் போலும் மக்களாகிய ஏனையோருக்குப் புலப்படாமல் இருப்பானேன்? கடவுளை நேரில் காண முடியாத அல்லது காணத் தகுதியற்ற மக்களை அந்தக் கடவுள் ஏன் படைத்தார்? பின்னர் கடவுளைக் காணவோ அறியவோ முடியாத கொடியவர்கள் என்று சிலரைத் தண்டிப்பானேன்? கடவுளைக் கண்டு அவரை வழிபட்டுப் பேரின்பப் பெருவாழ்வு அடைவதற்கே அருளப்பட்டது என்று சொல்லிய பின், கடவுளைக் காண முடியாத நிலைமையை உண்டாக்கும் ஒரு கடவுளைப் போன்ற அறிவுக்குப் புறம்பான ஒன்று உலகில் வேறு யாதாயினும் இருக்க முடியுமா?” என்று கேட்டவர் அண்ணா. (‘திராவிட நாடு’ 1.10.1944)

அதுமட்டுமல்ல; திராவிடக் கடவுளர்களை ஆரியர்கள் தங்கள் வேத மந்திர சூழ்ச்சிகளால் அழித்துவிட்டனர் என்று கூறி திராவிடக் கடவுள்களை முன்மொழிந்தவர்களையும் அண்ணா சாடினார். “ஆரியச் சூழ்ச்சியாலும், ஆடிப் பெருக்காலும் அழியக் கூடியனவாய் இருந்தால், அக்கடவுளை எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் என்றும், அவர் இலக்கணத்தைக் கூறும் சுவடிகளை முடிந்த முடிவைக் கூறும் வேதங்கள் என்றும் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்று கேட்டார். (‘திராவிட நாடு’ 15.10.1944)

புராணங்கள், இதிகாசங்கள், வேதங்களைக் கட்டுடைத்த அவரது எழுத்துகளையும் கலை இலக்கியப் படைப்புகளையும் இளைய தலைமுறை யினரிடம் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகியிருக்கிறது. ‘நிமிர்வோம்’ அந்த இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் இந்த இதழில் அதைத் தொடங்கியிருக்கிறோம்.

Pin It