நாம் மிக மிக வலியோடு கவனிக்க வேண்டிய விசயம் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்ற பொழுது எந்த வகையில் அவை நிறைவேற்றப்படு கின்றன என்பதாகும். மரண தண்டனை அறிவிக்கப்பட்ட அந்த கணத்தில் இருந்து எப்படி சாவை நாம் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்கின்ற அந்த வேதனையிலும், அந்த முள் வலியிலுமே மனிதனுடைய இறப்பு நிகழத் தொடங்கிவிடுகிறது. எத்தனை வழிகளில் எல்லாம் அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படுகின்றது என்று பார்த்தோமேயானால் சாகும் வரை தூக்கிலிடுதல், மின்சார நாற்காலி, மரண வாயு, டெட்டால் ஊசி என மிக மிக கடுமையான, கொடுமையான வலி மிகுந்த வழிகளிலேயே அவர்கள் மரணத்தை சந்திக்க நேர்கின்றன. மிக வருத்தத்திற்குரிய கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விசயம் நைட்ரசன் ஆக்டிபேகேஷன் என்ற முறையும் இப்போது சமீபகாலமாக புழக்கத்திலே வரலாமா? வேண்டாமா என்ற ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றதாம். அவற்றையும் நாம் கவனத்தில் கொண்டு மிக, மிக உரத்தக் குரலெடுத்து நாம் இவற்றிற்கு முடிவுக் கட்ட வேண்டும்.

 1974-லே பெக்காரியா என்பவர் எழுதிய ‘ஆன் கிரைம் அன்ட் பனீஷ்மென்ட்’ என்ற புத்தகத்தை படித்து விட்டுத் தான் ஒரு அரசு மனம் திருந்தி ஆஸ்திரியாவிலே மரண தண்டனையை குறைத்திருக்கின்றது. இந்த புத்தகத்திலே இந்த தண்டனை எந்த வகையிலும் குற்றங்களை குறைக்கப் போவதில்லை என்று மிக அழகாக கோர்வையாக அன்றே அந்த எழுத்தாளர் எடுத்து வைத்த வாதத்திலே மயங்கி, அதிலே மனம் திருந்திய ஆஸ்த்ரிய அரசர், தனது ஆளுமைப் பிரதேசத்திலே 1806-லிருந்து அந்த மரண தண்டனையை ஒழித்தார். இன்றளவும் அந்த தண்டனை ஒழிக்கப்பட்ட நவம்பர் 30 தான் உலகமெங்கும் ‘சிட்டிஸ் பார் லைப்டே’ என்று ஒரு தினமாக அனுசரிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. அந்த ஒரு பொன்னான நாள் இந்தியாவிலே மரண தண்டனை ஒழிக்கப்பட்டு நாமும் கொண்டாடப்படுகின்ற ஒரு நிலை நமக்கும் வரும் என நாம் நம்புவோம்.

 ஆகவே படைப்பாளிகளாகிய, போராளிகளாகிய நாம் மிக வலுவாக எழுத்திலே, பேச்சிலே தெருமுனைக் கூட்டங்களிலே, மாநாடுகளிலே குறிப்பாக பொது மக்களுக்கு அதிலே இருக்கின்ற பாதகங்களை அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லி, அவர் களுடைய எண்ணங்களை காரணம் காட்டி, இன்றைக்கு இருக்கின்ற இந்த இந்துத்துவா சக்திகளும், இனத்திற்கு எதிரான சக்திகளும் எப்படி ஒரு மாயையை உருவாக்கி யிருக்கின்றனவோ அந்த மாயையிலிருந்து மக்களை வெளிக் கொண்டு வரவேண்டும்.

 காந்தி சொல்கின்றார், “கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமையில்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்குக் கிடையாது”. கடவுள் மீது நம்பிக்கையற்றவர்கள் நாங்கள். ஆனால் மனிதர்கள் மீதும், மனித உயிர்கள் மீதும் அன்பும், நம்பிக்கையும் உடையவர்கள் என்பதால் உரத்துச் சொல்கின்றோம். உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்குக் கிடையாது.

 கிருஷ்ணய்யர் சொல்லுகின்றார், “நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறை பொழுதிலும் மனித உரிமைக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கின்றன. நீதிபதிகள் விதிக்கும் மரணதண்டனைகளை எதிர்த்து நாம் வாதாடுகின்றோம். ஆனால், பல நேரங்களில் அரசின் கையில் உயிர் இழப்பவர்கள் ஏராளமானோர். பொய் மோதல்கள், காவல்துறை, இராணுவ படுகொலையில் சாகிறார்களே தவிர, நீதிபதிகள் விதித்த மரண தண்டனையால் அல்ல; நாம் இந்த படுகொலைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். ஒவ்வொரு மனிதனுமே திருத்தப்படக் கூடியவன் தான். உலகிலேயே படுமோசமான கயவனைக்கூடத் திருத்திவிட முடியும். பொருத்தமான பயிற்சியின் வாயிலாக, பொருத்தமான சீர்படுதலின் வாயிலாக, மனப்பாங்கை மாற்றும் படியான பொருத்தமான வழிமுறைகள் வாயிலாகவும், பொருத்தமான சகவாசத்தின் வாயிலாக பொருத்தமான விழுமங்களை புகட்டுவது மூலமாக மனிதர்களை நாம் மாற்ற முடியும். மனித உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுப்போம்; கொடுத்துக் கொண்டிருப்போம், உரிமைகளைப் பெறுவோம்.

 ஐ.நா.வில் மரண தண்டனைக்கு இந்தியா ஆதரவாம்! 

 மரண தண்டனை விதிப்பதை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அவையில் கொண்டு வரப்பட்டத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா, ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் வாக்களித்துள்ளது. ஆயினும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரும் அந்த தீர்மானத்திற்கு பெரும்பான்மை நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. ஐ.நா. அவையில் உறுப்பினர்களாக உள்ள 192 நாடுகளில் 107 நாடுகள் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

 இந்தியா, சீனா, சவுதி அரேபியா, அமெரிக்கா, ஈரான் ஆகியன உள்ளிட்ட 38 நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன. ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்காமல் 36 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. இதே போன்று 2007 ஆம் ஆண்டில் மரண தண்டனை ஒழிக்கக் கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 104 நாடுகள் வாக்களித்தன. இப்போது அது 107 ஆக உயர்ந்துள்ளது. அப்போது 54 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அது இப்போது 38 ஆக குறைந்துள்ளது. இதேபோல் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகள் அப்போது 29 ஆக இருந்தன. அது இப்போது 36 ஆக அதிகரித்துள்ளது. இதிலிருந்து மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கருத்தொற்றுமை உலக நாடுகளுக்கு இடையே அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

Pin It