தஞ்சை சென்றிருந்த போது, ஒரு துண்டறிக்கையைக் காண நேர்ந்தது. அதில் ஒரு வினா பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டு இருந்தது. அந்த வினா இதுதான் :

 “தெலுங்கர்கள் தம்மைத் தெலுங்கர்களாகவும், கன்னடர்கள் தம்மைக் கன்னடர்களாகவும், மலையாளிகள் தம்மை மலையாளிகளாகவும் உணர்கின்ற போது, தமிழர்கள் மட்டும் தங்களைத் தமிழர்கள் என்று உணராமல், திராவிடர்கள் என்று எண்ணிச் சீரழிவது ஏன்?”

caldwel_360மேலோட்டமாகப் பார்க்கும் வேளையில் இந்த வினா மிக நியாயமானதாகத் தோன்றும். ஆழ்ந்து நோக்கும் போது, தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்றும் கூறிக்கொள்வதில் உள்ள பெருமிதத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

திராவிடர் என்னும் சொல், அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், கால்டுவெல்லுக்குப் பிறகே அது பெருவழக்காயிற்று. 1856 இல் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பங்களின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை அவர் வெளியிட்ட பின்புதான், தமிழர்கள் யாரென்று தமிழர்களே உணர்ந்தனர். சமற்கிருதத்தில் இருந்துதான் உலக மொழிகள் எல்லாம் உண்டாயின என்னும் பொய்க்கூற்றை அடித்துத் தகர்த்த பெருமை அறிஞர் கால்டுவெல்லுக்கே உண்டு. திராவிட மொழிக் குடும்பம் என்பது சமற்கிருத்தோடு எத்தொடர்பும் உடையதன்று என்பதும், அக்குடும்பத்தில் தமிழே மூத்த முதன்மையான மொழி என்பதும் அந்நூல் அறிவித்த உண்மைகள்.

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு அல்லது கூர்க் ஆகிய ஆறு மொழிகள் திருந்திய மொழிகள் என்றும், துடா, கோட்டா, கோண்ட், கூ, ஒரான், ராஜ்மகால் ஆகிய ஆறு மொழிகள் திருந்தா மொழிகள் என்றும் அவர் கூறுகின்றார். அவற்றுள், “Tamil is the oldest and most highly cultivated member of the family” என்பன அவர் சொற்கள்.

தமிழைத் தங்கள் மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி என்றும், முதன்மையான மொழி என்றும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் ஏற்க மறுக்கின்றனர். கால்டுவெல் கூற்றையோ, திராவிடம் என்னும் சொல்லையோ ஏற்றுக் கொள்ளும் வேளையில், தமிழின் பெருமையையும் சேர்த்தே அவர்கள் ஏற்க நேர்கிறது. எனவே அம்மூவரும் தங்களைத் திராவிடர்கள் என்று உணர்வதும் இல்லை, சொல்லிக்கொள்வதும் இல்லை. தமிழின் தொன்மையை, செழுமையை, வளமையை ஏற்க மறுப்பவர்கள், திராவிடர் என்னும் சொல்லையும், திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தையும் ஏற்க மறுப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?

அவர்கள் நோக்கம் நமக்குப் புரிகிறது. தமிழின் பெருமையையும், தொன்மையையும் உணர்ந்த நாமும் ஏன் அவர்களைப் பார்த்து மயங்க வேண்டும். திராவிடர் என்னும் சொல் அவர்களைப் பாதிக்கிறது, நம்மைப் பெருமைப்படுத்துகிறது. எனவேதான் அவர்கள் அச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை. நமக்கோ அச்சொல் இல்லாமல் தமிழக அரசியலும், வரலாறும் இல்லை.

*********

பண்டிதரின் கடிதம்

1898 ஜுன் 8 ஆம் நாள் அயோத்திதாசப் பண்டிதர், கர்னல் யஹன்றி ஸ்டீல் ஆல்காட்டிற்கு எழுதியுள்ள மடல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பண்டிதரே அதனைத் தன்னேரில்லாத விண்ணப்பம் என்றுதான் கூறுகின்றார்.

அமெரிக்க ராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றிய ஆல்காட், பிரம்மஞான சபையை நிறுவுவதற்காக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னைக்கு வந்தார். அவர் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். பெளத்த சமயப் பற்றாளர். தங்கு தடையின்றி உலகெங்கும் கல்வியைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 1894 இல் சென்னையில் தீண்டப்படாத மக்களின் பிள்ளைகளுக்காகத் தனிப்பள்ளிக்கூடங்களையே அவர் தொடங்கி இருந்தார்.

இந்தச் செயல்பாடுகள்தான், அவர் மீது ஒரு நம்பிக்கையை அயோத்திதாசப் பண்டிதருக்கு ஏற்படுத்தின. அதன் விளைவாகவே ஒரு விண்ணப்பத்தை அவர் அனுப்பினார். தமிழகம் எங்கும் உள்ள தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்குக் கல்விக் கூடங்களை உருவாக்க வேண்டும் என்பதே அவ்விண்ணப்பத்தின் சாரம். அதில் பண்டிதர் குறிப்பிட்டுள்ள சில செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

தற்போது பஞ்சமர் என்று அழைக்கப்படும் மக்களே ஆரம்பகாலத்தில் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார். அப்போது திராவிடருடைய நாட்டுக்குள் புதிதாகக் குடியேறியவர்களே பார்ப்பன‌ர்கள் என்பதாகவும், நெருப்பை வணங்கிய பார்ப்பன‌ர்களின் தந்திரங்களையும், ஆள்மாறாட்டத்தையும் உய்த்து உணர்ந்த திராவிட ஞானிகள், அவர்களைப் பிடித்து, அடித்து, அவ்வட்டாரத்தை விட்டே துரத்தும் வழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர் என்பதாகவும் கூறுகின்றார். இவ்விரு இனத்தாருக்கும் இடையே வெறுப்பு வளர்ந்து கொண்டே போனதாகவும், தந்திரமான பார்ப்பன‌ர்கள், கல்வி அறிவற்ற மக்கள் மற்றும் குறுநில மன்னர்களின் ஆசைகளைத் தூண்டி விட்டு மடங்களை அழித்தும், கெளதம புத்தரின் நூல்களை எரித்தும் மகிழ்ந்தனர் என்பதும் பண்டிதரின் கூற்று. இவற்றை எல்லாம், பழைய தமிழ் ஓலைச்சுவடிகளில் உள்ள, 570 பாடல்கள் அடங்கிய நாரதிய புராண சங்கைத் தெளிவு மூலம் தெரிந்து கொண்டதாகப் பண்டிதர் விளக்குகின்றார்.

பார்ப்பனர்கள் வருகைக்குப் பின்பே திராவிடப் பிள்ளைகளின் கல்வி மறுக்கப்பட்டதாகவும், இந்து மதத்தின் சமூக அமைப்பாகிய சாதி முறையால் எங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கல்வியைத் தாங்கள் தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைக்கின்றார்.

‘திராவிட புத்த சங்கம்’ என்னும் ஒரு சங்கத்தை நிறுவத்திட்டமிட்டுள்ளதாகவும் அவ்விண்ணப்பம் கூறுகின்றது.

திராவிடர் என்னும் சொல்லே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானது என்று இங்கே சிலர் உண்மையைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தச் சொல்லைச் சமூகத்தில் அழுத்தமாய்ப் பதிய வைத்ததே அயோத்திதாசப் பண்டிதர் போன்ற பெருமக்கள்தாம் என்பதை இந்தச் செய்திகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

( சான்று : வே.அலெக்சினால் தொகுக்கப்பட்டு, ஆ.சுந்தரம் தமிழில் மொழி பெயர்த்துள்ள தலித் மக்களும் கல்வியும் என்னும் நூல் )

Pin It