அந்த வித்தையாடியிடம் அடைக்கலப்பொருளாக வந்த பாலகன் என்ன ஆனான்?....எல்லாம் இந்தச் சாண்வயிற்றுக்காகத்தான் என்றாலும், நிகழ்ச்சி எவர் நெஞ்சையும் உலுக்குவது. இப்படி அசாதாரணமான படைப்புகளால் அழியா வரம் பெற்றவர் கதாசிரியர்- மஞ்சரி- ஆகஸ்ட்1983

"டும்...டும்...டும்...டும்...டும்..."

Poor Boy செண்டையின் கடூரமான சப்தம்..... எலும்புவரை குத்தித்துளைக்கும் வயநாட்டின் குளிரில் கரைந்து பரவியது. சுற்றுப்புற வீடுகளிலும், பாறைகளிலும் குளிர்காற்றைப் போலவே அலைமோதி நின்றது.

அத்துருமான் குரிக்கள் வித்தை காட்டப்போகிறான் என்பதற்கான அறிவிப்பு அது.

வயநாட்டில் பெயர்பெற்ற வித்தைக்காரன். குஸ்திபோடுவதிலும் குட்டிக்கரணம் அடிப்பதிலும் கெட்டிக்காரன். பெரிய பாரத்தை எளிதாகத் தூக்குவான். வளையம் தாண்டுவதிலும், கயிற்றின்மேல் நடப்பதிலும் நல்ல பயிற்சியுள்ளவன். கத்தி வீசுவதிலும், அம்பு விடுவதிலும் நிபுணன். இவற்றோடு அவனுக்கு கண்கட்டு வித்தையும் தெரியும் என்று ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்னால் அவனுடைய கூட்டத்தில் ஐந்தாறு வித்தைக்காரர்கள் இருந்தார்கள். அந்த வட்டாரத்தில் அவனும் அவனுடைய கூட்டாளிகளும் ஒரு நாட்டுப்புற சர்க்கஸ் கம்பெனியைப் போல சுற்றி அலைந்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் கம்பெனி சிதைந்து போனதற்கு என்ன காரணம் என்பது அத்துருமானுக்கேகூட இன்றுவரை தெரியாது. இரண்டு மூன்று வித்தைக்காரர்கள் வெளிநாட்டு சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்துவிட்டதாகக் கேள்வி. அத்துருமான் மட்டும் அவனுடைய புராதனக்கலையையும் வயநாட்டையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். வயதாகிப்போனதால் இப்போதெல்லாம் அவனுக்கு கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய முடிவதில்லை. போதாக்குறைக்கு கண்பார்வை வேறு மங்கத் தொடங்கியிருந்தது. அவ்வப்போது வந்துபோகும் வயிற்றுவலி வேறு. நல்ல இனாம் கிடைக்கும் என்று தெரிந்தால் போதும்.... புள்ளி பழைய சுறுசுறுப்போடு சில நல்ல வித்தையெல்லாம் காட்டத் தவறமாட்டான்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் குடியிருக்கும் பாளையங்கள், ஓய்வுபெற்ற பட்டாளக்காரர்களின் விவசாயக் காலனிகள், சந்தைகூடும் இடங்கள் இங்கெல்லாம் அத்துருமானின் தம்பி மொய்தீனையும் கூடவே ஒரு பையனையும் பார்க்கலாம். ஒரு பெரிய மூட்டையோடு கயிற்றுச் சுருளையும் தூக்கிகொண்டு அலைந்து திரிவார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெரிய கிராமத்திலோ, சிறிய நகரத்திலோ அவர்களைப் பார்க்கலாம். தேயிலை, காப்பித் தோட்டத் தொழிலாளிகள் கையில் காசோடும், பொழுதுபோக்கும் ஆசையோடும் அங்கே கூடிவிடுவார்கள்.

"டும்...டும்...டும்...டும்...டும்..".செண்டையின் சப்தத்தில் முறுக்கேறத் தொடங்கிவிட்டது. கறுப்பு நிறகால் சட்டை போட்ட வெளுத்து மெலிந்த பையன் செண்டை கொட்டிக் கொண்டிருக்கிறான். ஆட்கள் வந்து கூடத் தொடங்கி விட்டார்கள்.

கொட்டுசப்தம் நின்றுவிட்டது.

இதோ, வேடிக்கை ஆரம்பிக்கப் போகிறது. சிகப்புநிற லுங்கியை இடையில் தார்ப்பாய்ச்சிக் செருகிக்கொண்டு, வளர்ந்து தொங்கிய அரை நரைத்த முடியை கோதிவிட்டுக் கொண்டான் அத்துருமான். ரத்தச் சிவப்பேறிய கண்களோடு அவனைப் பார்க்கும்போது ஒரு சிங்கம் தலைமுடியை கோதிவிட்டுக்கொள்வது போல இருந்தது. அரங்கத்தின் நடுவில் வந்துநின்று சுற்றுமுற்றும் ஒருமுறை பார்வையை ஓட்டினான். இருபது முப்பது பேர் இருக்கலாம். பெரும்பாலும் பணியர்களும் காட்டுவாசிகளும் நிறைந்த ஒரு கூட்டம். ஐந்தாறு கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். இந்தக் கூட்டத்திடமிருந்து தேய்ந்த ஒரு சல்லிக்காசுகூட எதிர்பார்க்க முடியாது என்று அத்துருமானுக்குத் தெரியும். வெறும் கூட்டத்திற்காக நிற்பவர்கள் இவர்கள். சில குட்டி முதலாளிகளும், மரவியாபாரிகளும் கூட்டத்தில் இருப்பதை அத்துருமான் கண்டுகொண்டான்.

கூட்டத்தில் சிலர் அத்துருமானை பரிதாபத்துடன் பார்த்தார்கள். லாரிடிரைவர் குஞ்ஞம்பு அத்துருமானின் வித்தைகளை பல இடத்திலும் பார்த்தவன். சையத்தலி மாஸ்டரைப் பார்த்து "குரிக்களுடைய மெடலெல்லாம் எங்கேடா போச்சு?" என்று கேட்டான்.

"மழைக்காலத்தில் எல்லாத்தையும் வித்துச் சாப்பிட்டிருப்பான்" மாஸ்டருடைய யூகம் ஒருவகையில் சரிதான்.

குரிக்களுக்கு சர்க்கார் பென்ஷனும் இன்ஷூரன்ஸ் எல்லாம் உண்டா என்ன?

பாவம் அதெல்லாமில்லை. சமீபத்தில் பெருகிய வெள்ளத்தில் வெள்ளைக்கார தோட்ட முதலாளிகள் கொடுத்த சர்ட்டிபிகேட்டுகள் கூட போய்விட்டன. அதிலெல்லாம் அத்துருமானுக்கு வருத்தமில்லை. அஞ்சாறு மாதங்களுக்கு முன்னால் தம்பி மொய்தீனும் அவனைவிட்டுப் போய்விட்டான். அதில்தான் அவனுக்கு வருத்தம். இப்போதெல்லாம் வித்தைகாட்டுவதற்கு அத்துருமானும் அந்தப்பையனும் மட்டும்தான் மிஞ்சியிருந்தார்கள்.

தெருக்களின் சந்திப்பில், அந்தத் தற்காலிக அரங்கில், கயிற்றுச்சுருளும், இரும்புவளையமும், பாறாங்கல்லும், வில்லும் அம்பும் எல்லோரும் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தன.

"டேய் பீரானே...." குரிக்கள் சிங்கத்தைப்போல கர்ஜித்தான்.

"என்ன வாப்பா?"

"நீ ஒரு வித்தை காட்டுடா..."

பீரான் நாக்கை நீட்டி மூக்கின் நுனியைத் தொட்டுக் காட்டினான்.

"ஓ... நீயும் உன் வித்தையும்....."

குரிக்கள் சுவாரசியம் இல்லாத பாவனையில் வாயை குத்துவாளைப் போலாக்கி பீரானைப் பார்த்தான்.

கூட்டத்தில் சிரிப்பு.

"டேய் பீரானே...."

"என்ன வாப்பா?"

"கையை வளைச்சு வயித்திலே குத்துடா பார்க்கலாம்..."

குரிக்கள் பீரானின் பக்கத்தில் சென்று சவால் விட்டான்.

பீரான் திரும்பி நின்று கொண்டு வலது கையை மறைவாக வைத்து சாவகாசமாக குரிக்களின் வயிற்றில் ஒரு குத்துவிட்டான்.

"ஐயோ..."

குரிக்கள் முகம் சுளித்து வயிற்றைத் தடவிக் கொண்டு நின்றான்.

கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது. பணியர்களின் சிரிப்பு அடங்குவதற்கு வெகுநேரமாயிற்று.

"டேய் கழுதே.. ஒன்னோட வயித்திலேதானே குத்தச் சொன்னேன்..."

குரிக்கள் பீரானை கோபத்தோடு பார்த்தான். பிறகு கூட்டத்துப் பக்கம் திரும்பினான்.

"நம்ம கடைசிப்பய ... ஒரு கொறப்பிறப்பு..."

முறையான வேடிக்கைகளுக்கு முன்னால் தெறித்துவிழும் வேடிக்கைப் பேச்சுகள் குரிக்களின் டிரேட்மார்க். கூட்டம் அதைத்தான் வெகுவாக ரசிக்கும்.

குரிக்கள் மூன்று நான்கு குட்டிக்கரணங்கள் போட்டான். கைகால்களை உதறி நெட்டி முறித்தான். சாமான்களின் குவியலில் இருந்து வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டான். அது மூங்கில் குச்சியால் ஆன அம்பு. நுனியில் சிறு உளி கட்டப்பட்டிருந்தது. அம்பின் கூர்மையை சரிபார்த்துவிட்டு அத்துருமான் அதை கீழே வைத்துவிட்டான். மூட்டையினுள் கையைவிட்டுப் பச்சை வாழைக்காய் ஒன்றை எடுத்தான். பீரான் என்ற அந்தப் பையனைப் பிடித்துப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டான்.

"டேய் பீரானே..."

"என்னா வாப்பா?"

"ஒங் கழுத்துக்கு பலம் உண்டாடா?"

கழுத்தை பீரான் விறைத்துக்காட்டி நின்றான். பீரானின் கழுத்தைப்பிடித்துக் குலுக்கினான் அத்துருமான். வாழைக்காயை பீரானின் கழுத்தில் நிறுத்தி வைத்து நாரினால் கட்டுப்போட்டான்.

"குரிக்கள் அம்பு விடப்போறான். பையனோட கழுத்தில் இருக்கிற வாழைக்காயை அம்பாலே துண்டாக்கப் போறான் பார்" குஞ்சிராமன் மேஸ்திரி மகன் வாசுவுக்கு வித்தையைப்பற்றி விளக்கிக் கொண்டிருந்தான். பழைய இரும்புத்தட்டு ஒன்றை பீரானின் கையில் கொடுத்துவிட்டு அத்துருமான் சொன்னான்.

"ஐயாமாரே... நாங்க எவ்வளவோ வித்தை படிச்சிருக்கோம். பசிக்காம இருக்கற வித்தைய மட்டும் இன்னும் படிக்கலே. பசிக்கு பைசா வேணும். கையிலே கெடச்சதக் குடுங்க. படைச்சவன் தொணையிருப்பான்."

கழுத்தில் வாழைக்காயும் கையில் இரும்புத்தட்டுமாய் கூட்டத்தை நெருங்கினான் பீரான். இது நாற்பது வருஷத்துக்கு முந்தின சங்கதி. காலணாத்துட்டுகளும் ஓரணாத்துட்டுகளும் விட்டுவிட்டு தட்டில் விழுந்தன.

"என்னடா ஒங்க வேலே...வித்தை காட்டினதுக்கப்புறமா இல்லேடா காசு"

பீரானுடைய தட்டைப் பார்த்துவிட்டு வரீது கேட்டான். கொஞ்ச நாளைக்கு முன்னால்தான் வரீதுக்கு சொந்த நிலம் கிடைத்திருந்தது. வரீது சொன்னதைக் கேட்டுவிட்டு கூட்டாளி சாக்கோ ‘கொல்’லென்று சிரித்தான். அத்துருமானின் காதிலும் விழுந்தது சிரிப்பொலி.

"நாங்க எல்லாரும் அடகுவெச்ச பாத்திரங்களெப்போல நிக்கறோம். எங்களெ எப்போ மீட்டுக்கிட்டு போவான்னு யாருக்குத் தெரியும்?"

அத்துருமானின் வார்த்தைகள் பொதுப்படையாகவும் வேடிக்கையாகவும் வந்து விழுந்தன.

கூட்டம் அதைக் கேட்டும் சிரித்தது. வரீதுக்கு மாத்திரம் உவமை புரியவில்லையோ என்னவோ, மவுனமாக இருந்தான்.

கூட்டத்தினரின் கைகள் நீள்வது நின்றுபோனதற்கு அப்புறம் பீரான் தட்டோடு தன் இருப்பிடத்தில் வந்து நின்று கொண்டான். ஜனங்கள் தட்டில் போட்ட நாணயங்களை அத்துருமான் ஒருதடவை பார்த்துக்கொண்டான். எல்லாமாகச் சேர்ந்து பத்து அல்லது பன்னிரண்டு அணா தேறும். ஒரு நோட்டுக்கூட இல்லை. ஏன்! எட்டணா நாணயம் கூட இல்லை. காப்பி எஸ்டேட் முதலாளியின் மகன் புதுப்பணக்காரன் காக்கா கூட்டத்தில் தான் நின்று கொண்டிருந்தான். அத்துருமான் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டான்.

இரும்புத்தட்டையும் காசையும் எல்லோரும் பார்க்கக்கூடிய இடத்தில் வைத்தான் அத்துருமான். அம்புவிடும் வித்தைக்கு அவன் தயாராகிவிட்டான். தட்டுக்குப் பக்கத்தில் கழுத்தில் வாழைக்காய் கட்டிய நிலையில் பீரான் விறைப்பாக நின்றான். பீரானின் கழுத்தையும் வாழைக்காய் கட்டியிருந்த நாரையும் கடைசிமுறையாக அத்துருமான் சரிபார்த்துக் கொண்டான். எல்லாம் திருப்தியாக இருந்தது. காலால் பூமியை அளந்து நடந்தான். ஓரிடத்தில் காலால் கோடிட்டு அடையாளமும் இட்டாயிற்று. அம்பையும் வில்லையும் கையில் எடுத்துக்கொண்டு பீரானை நோக்கினான். சற்று யோசித்தபடி இருந்தான் அத்துருமான். கொஞ்சநேரம் கண்களைமூடி ஏதோ மந்திரங்கள் ஜெபிப்பதுபோல பாவனை செய்தான். பின்பு பீரானின் கழுத்தில் கட்டியிருந்த வாழைக்காயைக் குறிபார்த்து மெதுவாக அம்பை இழுத்தான்

எங்கும் அமைதி.

கூட்டம் திகிலோடு மூச்சடக்கி நின்றது. டிரைவர் குஞ்ஞம்பு ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டான். சையத்தலிக்குட்டி மாஸ்டரின் முகபாவம் ஏனோ அழுவதைப்போல மாறியிருந்தது. வாசு கைநகத்தைக் கடித்துக்கொண்டு அப்பனோடு ஒட்டிச்சேர்ந்து நின்று கொண்டான். வரீது கூட்டத்தைப் பின்னால் தள்ளிவிட்டு முன்னால் வந்துவிட்டான். பணியன் கோரன் எப்போதோ கண்களைப் பொத்திக்கொண்டுவிட்டான்.

வாழைக்காய் நடுவில் துண்டாகி தரையில் விழுந்தது. அதோடு பீரானும் கழுத்து சரிய தரையில் விழுந்தான். அவனுடைய கழுத்தில் இருந்து தாரைதாரையாய் சுடுரத்தம் அம்பின் வேகத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

கூட்டம் அப்போதும் அசையாமல் நின்றிருந்தது. அத்துருமானும் பீரானும் சிலசமயம் இப்படிப்பட்ட வித்தைகளைச் செய்வது உண்டு.

"ஐயோ கடவுளே மோசம் போனேனே!" என்று கூவிக்கொண்டு அத்துருமான் வில்லைக் கீழே எறிந்துவிட்டு பீரானிடம் பாய்ந்துவந்து விழுந்தபோதுதான் கூட்டத்துக்கு விஷயம் புரிந்தது, ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று.

பீரானை வாரியெடுத்து மடியில் விட்டுக்கொண்டு அத்துருமான் ரத்தத்தில் முழுகியிருந்த அந்த சிறுவனுடைய கழுத்தைத் தடவிப் பார்த்தான். உளியம்பு வாழைக்காயைத் துளைத்து, சுவாசக் குழாய்வரை சென்று குத்தியிருந்தது.

"அம்மா.... அம்மா...."

பீரானின் தீனக்குரல் அத்துருமானின் இதயத்தில் அந்த உளிஅம்பு போல் குத்தி நின்றது. ஆட்கள் சுற்றிலும் நிறைந்து விட்டார்கள்.

"சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு போகணும்" சையத்தலிக்குட்டி மாஸ்டர் உரக்கக் கத்தினான்.

சோர்ந்துபோய் அத்துருமான் ஒருமுறை சுற்றும்முற்றும் விழித்து நோக்கினான். திடீரென்று பீரானை வாரியெடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டான்.

"டேய் இங்கே நின்னா கொலைக்கு சாட்சி சொல்லணும்....வா...வா..." வரீது சாக்கோவைக் கூட்டிக் கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நடந்தான்.

சில ஆட்கள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் அத்துருமானைப் பின்தொடர்ந்து சென்றார்கள். டிரைவர் குஞ்ஞம்புவும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். கொஞ்சநேரத்தில் அந்தத் தெருமூலை ஓய்ந்து கிடந்த போர்க்களத்தைப் போல காட்சியளித்தது. அத்துருமானின் கயிற்றுச்சுருளும் கம்பிவளையமும், மூட்டையும் இரண்டாகிப்போன வாழைக்காயும், ரத்தம்புரண்ட கத்தியும் சற்றுத் தொலைவில் வில்லும் அநாதைகளாகக் கிடந்தன. இரும்புத்தட்டில் நாணயங்கள் இல்லை. நாலைந்து ரத்தத்துளிகள் மாத்திரம் இருந்தன. கூட்டநெரிசலில் சிலர் பைசாக்களை ‘அபேஸ்’ செய்துவிட்டிருந்தார்கள்.

சர்க்கார் ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லை.

"இதோ வந்துவிடுவார்" என்று கம்பவுண்டர் சொன்னார்.

"நேத்து ராத்திரியே காட்டுக்குள்ளே ரொம்பதூரம் வேட்டைக்குப் போனாரு, இருட்டறக்குள்ள வந்துடுவாரு" கடுமையான வயிற்று வலியினால் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த நம்பியார் பல் இளித்துக்கொண்டு சொன்னான்.

பீரானை மடியில் போட்டுக்கொண்டு அத்துருமான் காத்திருந்தான். பீரானின் கழுத்தில் இருந்து அப்போதும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அரைமணிநேரம்கூட ஆகியிருக்காது. பையனின் சுவாச சப்தம் ஒடுங்கிவருவது போலத் தோன்றியது. அவன் வாய் திறந்தான்.

"தண்ணீ" என்றான்.

சையத்தலி மாஸ்டர் ஓடிப்போய் ஒருகிளாஸ் தண்ணீரோடு வந்தான். பையனுடைய வாயில் அவனே கொஞ்சமாக ஊற்றினான். சற்று நேரத்தில் பீரானின் உயிர் பிரிந்துவிட்டது.

பாவம்! ஆஸ்பத்திரியில் உட்கார்ந்திருந்தபொழுது அத்துருமான், சையத்தலிக் குட்டிமாஸ்டரிடம் ஒரு ரகசியத்தை வெளியிட்டான்.

பீரான் அவனுடைய மகனல்ல.

அவனுக்கு குழந்தைகளோ மனைவியோ இல்லை. தலைச்சேரியில் ஓர் ஏழை விதவையான கதீஜா அம்மாவின் மகன்தான் பீரான் என்று அதிலிருந்து தெரிந்தது. பட்டினி பொறுக்க முடியாமல் தன்னுடைய மகனை அத்துருமானிடம் வாடகைக்குக் கொடுத்திருந்தாள்.

அத்துருமான் மாதம் ஆறுரூபாய் கொடுக்கவேண்டும் என்று பேச்சு. பீரான் அவனுடைய சொந்த மகனாயிருந்தால் இவ்வளவு சங்கடம் உண்டாகியிருக்காது.

"எனக்கும் கையிலெ தெம்பு இல்லை" அத்துருமான் அந்த துயர நிகழ்ச்சியை எண்ணியபடி வெறுமையை நோக்கிச் சொன்னான்.

"வில்லை இழுத்துப் பிடித்தபோது தோளில் ஒரு நடுக்கம் உண்டாச்சு. அம்பு கையைவிட்டு கட்டுமீறிப் போயிட்டுது. எனக்கம் வயசாயிடுச்சில்லே. வேற ஒரு தொழிலும் தெரியாதே. அநியாயமாய் ஒரு பையனைக் கொன்னுபோட்டேனே."

அத்துருமான் கதறி அழுதான். அவனுடைய கண்ணீர் வழிந்தோடியது.

"கதீஜாவுக்கு பீரான் ஒரே மகன். இனிமே அவள் பீரானைப் பார்க்கவரும்போது...."

ஒரு மனித உயிரைக் கொன்ற குற்றத்துக்காக அன்றைய தினமே போலீசார் அத்துருமானை கைது செய்தார்கள். அவனைத் தண்டிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் -அவனைக் கைதுசெய்த போலீசுக்கும் கூட - ஆர்வமில்லை! ஆனால் சட்டம் இந்த கொலைப் பாதகத்தை கண்டும் சும்மா இருந்துவிடுமா?

நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

"ஒன்பது மாதம் சிறை."

- மு.குருமூர்த்தி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It