‘நீட்’ தேர்வு முறையினால் தமிழ்நாட்டில் கிராமப்புறத்திலிருந்து மருத்துவம் படிக்க வரும் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒற்றைச் சாளர முறை வழியாக (Single window system) 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக மாணவர்கள் 4,225. நீட் தேர்வு அமுலுக்கு வந்த 2017இல் இது 3546ஆக குறைந்து விட்டது. அதே நேரத்தில் பிற மாநிலத்து மாணவர்கள் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 2016இல் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிற மாநிலத்தவர் 518; ‘நீட்’ தேர்வு முறையில் 2017இல் சேர்ந்த பிற மாநிலத்தவர் எண்ணிக்கை 715 ஆக அதிகரித்து விட்டது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்கள். பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை ‘நீட்’ தேர்வினால் குறைந்துவிட்டது.

அரியலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வுக்கு முன் 9 மாணவர்களும், நீட்டுக்குப் பிறகு 4 மாணவர்களும்; இராமநாதபுரம் மாவட்டத்தில் நீட்டுக்கு முன் 38 மாணவர்களும், நீட்டுக்குப் பிறகு 7 மாணவர்களும்; தர்மபுரி மாவட்டத்தில் ‘நீட்’டுக்கு முன் 236 மாணவர்களும், ‘நீட்’டுக்குப் பிறகு 73 மாணவர்களும்; பெரம்பலூரில் ‘நீட்’டுக்கு முன்பு 82 மாணவர்களும், நீட்டுக்குப் பிறகு 15 மாணவர்களும்; திருவண்ணாமலையில் நீட்டுக்கு முன்பு 35 மாணவர்களும், நீட்டுக்குப் பிறகு 18 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் இவை.

பின்தங்கிய மாவட்டத்திலிருந்து வரும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்து விட்டது ‘நீட்’. அரியலூர் தலித் மாணவி அனிதா 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றும், ‘நீட்’ எனும் கோடரி, அவரை மரணத்துக்குத் துரத்தியது.

Pin It