கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

caste cartoon 450பண்டைய நம் தமிழகத்தில் சாதி, குலம், வருணம் என்பன போன்ற சொற்கள் தமிழ் மொழியில் இல்லாமையால் அவை தமிழ்நாட்டிலும் இருந்ததில்லை என்பது வெள்ளிடை மலை. இடைக்காலத்தில்தான் பார்ப்பனர் தமிழர் களிடையே நால்வகைச் சாதியினை நாட்டினர். பின்பு நான்கினை நாற்பதாக்கி அதன்பின் நாலாயிரமாக வளர்த்துவிட்டனர்.

இப்பார்ப்பனர்கள் இத்துடன் மட்டும் நின்று விடவில்லை. தமிழர்களிடையே ஏற்றத் தாழ்வினைக் கற்பித்தும் ஒரு சாதியினரைப் பிரிதோர் சாதியாரோடு மோதவிட்டும் வேடிக்கை பார்த்ததோடு அல்லாமல் அதனால் பலனும் அனுபவித்து வந்துள்ளனர். இவற்றில் ஒன்றுதான் “வலங்கை இடங்கை” சாதி பாகுபாடுகளும் அதன் காரணமாக இவ்விரு சாதிக் குழுவினர்களுக்குள்ளும் ஏற்பட்ட சண்டைகளும் ஆகும்.

இந்தப் பிரிவினை எப்போது ஏற்பட்டது? எவ்வாறு தோன்றின? என்பவைகள் பற்றி திட்ட வட்டமாகக் கூறுவதற்கு இல்லை. ஆனால் இந்தப் பாகுபாடுகள் தமிழகத்தில் இருந்து இருக்கின்றன என்பது மட்டும் கல்வெட்டுக் களாலும், செப்பேடுகளாலும், சில இலக்கியச் செய்யுள்களாலும், ஏன்? ஆங்கிலேயர்களின் குறிப்புக்களாலும் அவர்கள் கால நீதிமன்றத் தீர்ப்புகளாலும் அறிகின்றோம்.

இவற்றின் பெயர்க் காரணம் பற்றி கூறப்படும் வரலாற்றினை சிறிது காண்போம். கரிகாலச் சோழனது ஆட்சியின்போது பல்வேறு சாதிகளைக் கொண்ட இரு கட்சிகள் தங்களுக்குள் சண்டை யிட்டுக் கொண்டு தங்கள் தங்கள் குறைகளை முறையிட்டுக் கொள்ள மன்னன் கரிகாலச் சோழன் அவைக்குச் சென்றார்களாம். அப்படிச் சென்றவர்களில் மன்னனுக்கு வலக்கைப் பக்கம் நின்று முறை யிட்டவர்கள் “வலங்கை” சாதியார் என்றும் இடக்கை பக்கம் நின்று முறையிட்டவர்கள் “இடங்கை”யினர் என்றும் கரிகாலனால் அழைக்கப்பட்டார்களாம். அதில் இருந்து இவ்விரு கட்சியினர்களைச் சார்ந்த சாதியினர் களுக்கும் இப் பெயர்களே நிலைக்கலாயின என்றும் கூறப்படுகின்றது.

ஆனால், இது சங்க காலத்து கரிகாலன் காலத்தில் நடந்திருக்க முடியாது. இதற்குத் தக்க ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் காணப் படவே இல்லை. ஆனால் இந்த வலங்கை - இடங்கை சாதிப் பகுப்பு முறைகள் பிற்காலச் சோழர்கள் ஆட்சியில்தான் தோன்றின என்பதற்கு வேண்டுமானால் தக்க ஆதாரங்கள் உள்ளன.

காஞ்சிபுரத்தில் முன்நாளில் சலபநாயகன் என்னும் பார்ப்பனத் தலைவன் தலைமையில் வலங்கை சாதியார் 98 பிரிவினர்களும், இடங்கை சாதியார் சில பிரிவினர்களும் தங்களுக்குள் கட்சி உண்டாகியதால், தங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்டனர் என்று ஒரு சாசனம் தெரிவிக்கின்றது. இந்த வலங்கை இடங்கை பிரிவின் காரணமாக பார்ப்பனர்களுக்குப் பகையாக கம்மாளர்களும், கோமுட்டிகளுக்குப் பகையாக பேரிச் செட்டிகளும், “பறையர்” களுக்குப் பகையாக “பள்ளர்”களும் இப்படிப் பல வகுப்பினர்களும் ஒருவருக்கொருவர் பகையாளர்கள் ஆயினர்.

விழாக் காலங்களில் வலங்கை சாதியார் களுக்கு மாதிலர் என்னும் தீண்டப்படாத இடங்கை சாதியார்களுக்கு மாதிகர் என்னும் அருந்ததியினரும் வாத்தியங்கள் வாசிக்க வேண்டும் என்றிருந்திருக் கின்றது. பிற்கால சோழராட்சிக் காலங்களில் ஒவ்வொரு நகரங்களிலும், சிற்றூர்களிலும் கூட வலங்கை, இடங்கையர்கள் வசிப்பதற்கு வீதிகள் எல்லாம் தனித்தனியே இருந்திருக்கின்றன. ஒரு பிரிவினர் வசிக்கும் வீதியில் வேறு பிரிவினர் வசிப்பதில்லை. சுபகாரியங்களில் ஆகட்டும் அல்லது துக்கக் காரியங்களில் ஆகட்டும் ஒரு பிரிவினர் வசிக்கும் வீதி வழியே மற்றொரு பிரிவினர் ஊர்வலம் வருவதோ, பிணம் தூக்கிச் செல்வதோ கிடையாது. இரு பிரிவினர்களுக்கும் பொதுவான வீதிகளில் வேண்டுமானால் போகலாம். மற்றும் கோயில் சாமிகளுக்கு நடத்தப்படும் விழாக்களும்கூட அந்த அந்த பிரிவினர்கள் தெருக்களில் மட்டுமே நடக்கும்.

இந்த வலங்கை இடங்கை கட்சிகளுக்கு தாசிகள், பணி செய்வோர் முதலானோர்களும் தனித்தனியே இருந்திருக்கின்றனர். வலங்கை தாசிகள் இடங்கை சாதியார்களுடைய கோயில் களுக்கோ, அல்லது இடங்கையர்கள் வீடுகளில் நடக்கும் திருமணம் முதலிய நிகழ்ச்சிகளில் நாட்டியம் ஆடுவதற்கோ செல்வதில்லை. அதுபோலவே இடங்கை தாசிகள் வலங்கையர் களின் கோயில் விழாக்களுக்குச் செல்ல மாட்டார்கள். அதுபோலவே வலங்கை பணி செய்வோர் இடங்கையர்களுக்கு நேரில் போய் சாவு சொல்வதில்லை. அப்படி வலங்கையர் இடங்கையர்களுக்கு சாவு முதலியன தெரிவிக்க வேண்டு மானால் இடங்கைப் பணி செய்வோரைக் கொண்டு தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், இடங்கையர்கள் தம் பணியாளர்களைக் கொண்டு வலங்கை யார்களுக்கு தெரிவிக்கலாம் என்று இருந்தது.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் இந்தப் பிரிவுகளினால் நாட்டு மக்களிடையே பல குழப்பங்களும், பூசல்களும் ஏற்பட்டு அரசர்களாலும், ஊர் சபையினர்களாலும் ஏராளமான வழக்குகள் தீர்த்து வைக்கப்பட் டுள்ளன. இந்த வலங்கை இடங்கை பிரிவின் காரணமாக நாட்டில் பல்வேறு சாதி மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து அவதியுற்று இருக்கின்றனர்.

பெரும்பாலும் பிற்காலச் சோழர்களும், நாயக்க மன்னர்களும், வைதீக மனப்பான்மை யுடையவர் களாகவும், பார்ப்பனர்கள் தனி உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர் களாகவும் இருந்திருக்கின்றனர். சாதிகள் வகுப்புகள் என்பவைகள் தர்ம நியாயமானது என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக வேரூன்றி இருந்தது. ஆகவே அந்த அந்த சாதியார்கள் அவர் அவர்களுக்கு உரிய விதிகளுக்கு மாறாக நடக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்தும் உடையவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர்.

இந்த மன்னர்கள் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை விதிக்காது குலம், பிரிவு, அந்தஸ்து இவற்றிற்கு ஏற்றவாறு தண்டனை விதித்து இருக்கின்றார்கள். குற்றவாளியானவன்

உயர்சாதிக்காரனாகவோ அல்லது செல்வந்தன் ஆகவோ இருந்து விட்டால் விசாரித்தோம் என்று பெயரளவில் மட்டும் விசாரித்துவிட்டு லேசான தண்டனையோ, அபராதமோ விதித்து விடுவார்கள். இப்படி இவர்கள் குலம், கோத்திரம், சாதி ஆச்சாரத்திற்கு ஏற்றவாறு தண்டனை வழங்குங்காலை வேதப் பார்ப்பனர்கள் சொற்படியும், அவர்களின் ஆலோசனைப்படியும், வருணாச்சிரம தர்மத்திற்கு மாறுபடாலும் தீர்ப்புகள் வழங்கி இருக்கின்றனர்.

மற்றும் கோயில்களில் விழாக் காலங்களில் எந்த எந்த சாதியார்களுக்கு முதல் மரியாதை, எந்த எந்த வகுப்பினர்களுக்கு இரண்டாவது மரியாதை என்பது பற்றியும், யார் யார் எந்த எந்த இடங்களில் இருந்து எந்த எந்த நேரங்களில் கடவுளை வணங்க வேண்டும் என்பது குறித்தும் எந்த எந்த சாதியார்கள் முறையே எந்த எந்த வாகனங்களிலும், பல்லக்குகளிலும் ஏறிச் செல்ல தகுதி உடையவர்கள் என்பது குறித்தும், எந்த எந்த வழக்க ஒழுக்கங்களைக் கையாள வேண்டும் என்பது குறித்தும், அடிக்கடி ஆட்சேபணைகள் பூசல்கள் ஏற்படும் போது அரசர்கள் பார்ப்பனப் பண்டிதர்களைக் கொண்டே வருணாச்சிரம முறைப்படி தீர்ப்புகள் வழங்கி இருக்கின்றார்கள்.

கம்மாளர்கள் தங்கள் வீட்டிற்கு சாந்து இட்டுக் கட்டிக் கொள்ளுதல், இரட்டை நிலை வைத்துக் கட்டிக் கொள்ளுதல், நன்மை தீமை களுக்கு இரட்டைச் சங்கு ஊதுதல், வெளியில் செல்லும் போது காலில் செருப்பணிந்து செல்லுதல் ஆகிய உரிமைகள்கூட அற்றவர் களாக முன்பு இருந்திருக்கின்றனர். ஆனால் பிற்காலத்தில் கொன்னேறி மெய் கொண்டான் என்ற சோழன் தென் கொங்கு நாடு, காஞ்சிக் கோயில் நாடு, வெங்கால நாடு,தலையூர் நாடு முதலிய ஏழு நாடுகளில் வாழும் கம்மாளர் களுக்கு மட்டும் மேற்கண்ட உரிமைகள் பெற அனுமதி அளித்தான்.

இது பற்றி கொங்கு நாட்டில் பேரூர், கரூர், பாரியூர், மொடக்கூர், குடிமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் இவ்வுரிமைகள் கல்வெட்டுகளாக வெட்டப்பட்டு உள்ளன.

கி.பி.1623இல் பிறப்பிக்கப்பட்ட அம்பா சமுத்திரம் பிரமதேய சாசனத்தில் கம்மாள சாதியார்கள் தங்கள் கிளை வகுப்புக் களுக்குள் கலப்பு மணம் செய்து கொள்ளுதல் கூடாது என விதிக்கப்பட்டுள்ளது.

பட்டு நூல் வகுப்பினர்கள் உபகர்மங்கள் செய்து கொள்ளும் உரிமை இல்லாதவர் களாகவும் இருந்து இருக்கின்றனர். பிறகு இவர்கள் இராணி மங்கம்மாள் காலத்தில் அவரிடம் முறையிட்டு மேற்படி உரிமைகளுக்குச் சாசனம் பெற்றனர்.

கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் முற் பகுதியில் நாடார் இனப் பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களான பள்ளர், பரதவர் குலப் பெண்களைப்போல் மார்பினை மூடாது இருப்பது போலவே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

திருவாங்கூர் மகாராஜாவானவர் இவர்கள் (நாடார் குலப்பெண்கள்) செம்படவர்கள் பெண்கள் மார்பினை மூடுவது போல உடை தரிக்கலாமேயன்றி உயர்சாதிப் பெண்கள் தரிப்பது போல் தரிக்கலாகாது என்று கட்டளை இட்டு இருக்கின்றார். ஆனால், கி.பி. 1859 இல் ஆங்கிலேயரான சார்லஸ் டிரிவிலியன் என்பார் இவர்களும் மார்பு மீது துணி அணிந்து கொள்ளலாம் என்று உத்தரவு இட்டிருக் கின்றார். மற்றும் வெள்ளக் கோயில், தென்காசி நீதிமன்ற தீர்ப்புக்கள் மூலம் நாடார் சமூகம் எத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் ஆளாக்கப் பட்டு இருந்தன என்பதுதெற்றென விளங்குகின்றது.

கி.பி.1809 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் தேதி செங்கற்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜார்ஜ் கோல்மென் துரை அவர்கள் அதற்கு முன் இவ்விரு வகுப்பினர்களும் விழாக் காலங்களிலும் மற்ற முக்கிய தினங்களிலும் ஊர்வலம் வரும்போது தரித்துக் கொள்ளும் விருதுகள் மற்றைய அடையாளங்கள் பற்றி ஏற்பட்ட சச்சரவுகளைத் தீர்த்து இறுதியாக இன்ன இன்னாருக்கு இன்ன இன்னபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தம் தீர்ப்பில் கூறியுள்ளார். இது பற்றி விரிப்பின் பெருகும் என்பதனால் இத்துடன் முடிக்கின்றேன்.

இந்த வலங்கை, இடங்கைச் சண்டை காரணமாக பல்வேறு சாதியினர்க்குள்ளும் பூசல்களும், மனக்கசப்பும் பிற்காலத்தில் மிகுதியாக வளரலாயின. ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பாரது சாதிப் பெயரினைச் சொல்லி ஏளனமாகத் திட்டிக் கொள்ளலாயினர். இன்றும் நம் தமிழகத்தில் ஒவ்வொரு சாதியினைப் பற்றியும் கூறப்படும் வசவு மொழிகள் எல்லாம் கூட மேற்கூறிய மனக்கசப்புகள் காரணமாகத் தோன்றியவைகளேயாகும்.

(கட்டுரையாளர்: சுயமரியாதைச் சுடரொளி; பெரியாரின் தனிச் செயலாளராகத் தொண்டாற்றியவர்)