பெரியாருக்கு 19.12.1973 அன்றிரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 20.12.1973 அன்று பொது மருததுவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
21.12.1973 அன்று திருவண்ணாமலையில் பெரியார் பேசுவதாக இருந்தது. 30ந் தேதி மாலை சுற்றுப்பயணத்தை எல்லாம் இரத்து செய்து விடலாமே என பெரியார் அவர்களிடம் கேட்டேன். ‘ஏன்?’ எனக் கேட்டார்.
“அய்யா அவர்களுக்கு உடல்நலம் சரியாக இல்லையே. டாக்டர்கள் பயணம் செய்யக் கூடாது எனச் சொல்லுகிறார்களே. அதனால்தான் கேட்கிறேன்” எனச் சொன்னேன்.
எவ்வளவு நெருக்கடியிலும் நிகழ்ச்சிகளை இரத்து செய்ய விரும்பாத பெரியார், “கூட்டத்தில் பேசப் போவது நான் தானே! நீயோ, டாக்டர்களோ அல்லவே? போய் வேலையைப் பார்” எனக் கடுமையாகச் சொல்லிவிட்டார்கள்.
பெரியாருடைய முடிவுக்கே காரணமான நோயில் சிக்கி இருந்தபோதுகூட மரணத்தைச் சந்திக்கும் மூன்று நாட்களுக்கு முன்புகூட தன் சுற்றுப் பயணத்தைத் தொடர்வதில் எவ்வளவு கருத்தாக இருந்தார்கள் என்பதைப் பொது வாழ்வில் இருப்பவர்கள் அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டும்.
விடுதலை மேலாளர் என்.எஸ். சம்பந்தம், ‘உண்மை’ அக். 1974இல் வெளியிட்ட பதிவு