700 வருடங்களுக்கு முன்பு ஒரு மன்னனுக்குத் துரோகம் செய்து, அவரைக் கொன்று, அவரது மகள் ஆற்றலரசி நயன்தாராவை அவரது விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் படைத்தளபதி (ராஜ்நாயக்) கார்த்தி. அந்த முயற்சியில் இருவருமே கொல்லப்படுகிறார்கள்.

kashmora700 ஆண்டுகளாக ஆத்மா சாந்தி அடையாமல் அலையும் கார்த்தி பேய்க்கும், அடுத்தடுத்த பிறவிகள் எடுத்து கார்த்தியைப் பழிவாங்கும் நயன்தாரா பேய்க்கும் நடக்கும் சண்டைதான் காஷ்மோரா.

தமிழ்த்திரையுலகில் பேய் – பிசாசு – பில்லிசூனியம் – செய்வினை - ஏவல் ஆகியவற்றின் மோசடித் தனத்தையும், அவற்றின் பின்னால் உள்ள மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தும் விதமாக வந்துள்ளது. மூடநம்பிக்கைகள் + சாமியார்கள் + வணிகம் + மத அரசியல் என்ற வெளி உலகுக்குத் தெரியாத கூட்டணியை மிகத் தெளிவாக விளக்குகிறது காஷ்மோரா.

“பேய்-பிசாசு- பில்லிசூனியங்களை விரட்டுவேன்” என்று சொல்பவர்கள் அனைவருமே பித்தலாட்டக்காரர்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் அதே வேளையில், பேய், பிசாசுகளை - அந்தப் பேய், பிசாசுகள் மட்டுமே விரட்ட முடியும் என்பதையும் கூறி, பேய் - பிசாசு - ஆத்மா நம்பிக்கைகளை உறுதிப்படுத்துகிறது காஷ்மோரா.

நடிகர் சிவக்குமார் அவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்குவது என முடிவுகட்டி வேலை செய்கிறார்கள் போலத் தெரிகிறது. நடிகர் சிவக்குமார் இராம்ராஜ் காட்டன் கம்பெனியோடு சேர்ந்து மிகப்பெரும் அளவில் இராமாயணம், மகாபாரதச் சொற்பொழிவுகளைத் தொடங்கியுள்ளார்.

மூத்தவர் சூர்யா மாஸ் என்ற படம் எடுத்து, அதில், ஈழத்தமிழ்ப் பேயாக வந்து மிரட்டினார். பெயரில் மட்டுமே அந்த மாஸ் இருந்தது. அடுத்ததாக பேய்க் கதையையும், ஆங்கிலப் படத்தையும் இணைத்து 24 என்று ஒன்றைக் கொடுத்தார். அதுவும் எடுபடவில்லை. இப்போ தம்பி கார்த்தி, 14 ஆம் நூற்றாண்டுப் பேய்களை அறிமுகப்படுத்துகிறார்.

ஆணவப்படுகொலையை எதிர்த்துப் படமெடுக்கும்போதுகூட, அதையும் அரண்மனை 2 என்ற பேய்ப்படமாகத்தான் எடுக்கவேண்டும் என்ற பேய் ட்ரெண்டில், இனமான நடிகர் புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்களே, ‘ஜாக்சன்துரை’ என்ற படத்தில் குடும்பத்தோடு பேயாக நடித்துவிட்டார். அந்த சத்யராஜை உருவாக்கிய சிவக்குமாரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

‘சிகரம்’அறக்கட்டளை மூலமாக அடித்தட்டிலிருந்து வரும் மாணவர்களுக்குக் கல்விச்சேவையை வழங்குவோர், அந்த இளந்தலைமுறையினரை மூடநம்பிக்கையாளர்களாக - அறிவைப் பயன்படுத்த இயலாதவர்களாக உருவாக்குவது முரண்பட்ட போக்காகும். ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பதைக் காட்டிலும், மானமும், அறிவும் உள்ள மனிதனாக்குவதே மிகச்சிறந்த சமுதாயத் தொண்டு. மானமும், அறிவும் இருந்தால் இன்றைய கல்வியும், வேலைவாய்ப்பும் எவரையும் எளிதாகச் சென்று சேரும்.

அடுத்த தலைமுறை மானமும், அறிவுமற்ற தலைமுறையாக உருவாவதற்கு அடிப்படைக் காரணமாய் இருக்காமல், பேய்ப்படங்களை எடுக்காமல் இருக்க வேண்டுமென - திரைத்துறையினருக்கு ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுக்க நினைக்கவில்லை. மேடைகளில் பகுத்தறிவையும், சமூகநீதியையும் உரக்கப்பேசும் சமுதாய அக்கறையுள்ள இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும், கலைக்குடும்பங் களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Pin It