“மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும்” என்ற தலைப்பில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே.எம் செரீப் அவர்கள் பல்வேறு செய்திகளைத் தொகுத்து நூலாகக் கொண்டுவந்துள்ளார். அழகிய அட்டை வடிவமைப்புடன் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி இன்றைய காலச் சூழலில் ஆதிக்கவாதிகள் உணவை வைத்து எப்படி வெறுப்பரசியலை வளர்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

பொதுவாக சமூக, அரசியல் விடுதலைக்குப் போராடுபவர்கள் தங்களின் இறுதி நம்பிக்கையாகக் கருதுவது நீதித்துறையைத் தான். ஆனால் தோழர் கே.எம். செரீப் அவர்கள் நீதித்துறையை நம்பாமல் மக்கள் மன்றத்தில் தனது வழக்கைத் தொடுக்கிறார். ஏனென்றால் நீதித்துறை ஆதிக்கவாதிகளின் கைம்பொம்மையாக மாறிவிட்டது என்பதால்தான்.

இந்தியத் துணைக் கண்டத்தில் உச்சபதவிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் உங்களுக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவிகள் வந்து குவியும். அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டால் மர்ம மரணங்கள் தொடரும்.  இந்த நாட்டு நீதிபதிகளுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவென்று சொல்வது? இதனால்தான் பெரியார் உச்ச நீதி மன்றத்தை உச்சிக்குடுமி மன்றம் என்றார். இன்று ஒரு நீதிபதிக்கு எதிராக நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து குற்றம் சாட்டும் அளவில்தான் நமது நீதித்துறை இருக்கிறது. நீதித்துறை மட்டுமல்ல இந்தியாவின் அனைத்துப் பதவிகளும் ஆரிய ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்களால் நிரப்பப் படுகிறது. ஜனாதிபதி முதல் தாசில்தார் வரை தங்களுக்குச் சாதகமானவர்களைக் கொண்டு அதிகாரத்தை வளைக்கிறார்கள். இதனால்தான் தோழர் செரீப் அவர்கள் மக்கள் மன்றத்தை நாடுகிறார்.

மாட்டுக்கறியும் பார்ப்பனர்களும்

கோமாதா எங்கள் குலமாதா என்று பாட்டு பாடும் பார்ப்பனர்களும் அவர்களின் அடிமைகளும் பசுவின் புனிதம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் பசு இந்துக்களின் புனித விலங்கு என்றும் (எருமை அல்ல) பரப்புரை செய்து பசுமடங்களை ஏற்படுத்தி காப்பதாக நடிக்கிறார்கள். உண்மையில் இவர்கள் மாட்டுக்கறி உண்ணாதவர்களா?

இந்த நூலின் 15 ஆம் பக்கத்தில் இறந்தவர் களுக்கு எப்படி திவசம் செய்ய வேண்டும் என்று மனு கூறியுள்ளதை நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். சொர்க்கத்தில் எந்த எந்தக் கறியால் திவசம் செய்தால் எவ்வளவு நாள் உயிர் வாழலாம் என மனு வரிசைப் படுத்துகிறார். அதில் முக்கியமாக “சிவந்த மாட்டின் கறியால் திவசம் செய்தால் அவன் சொர்க்கத்தில் இருக்கும் நாள்வரையிலும் திருப்தியடைவார்கள்” என்று ஆதாரம் காட்டுகிறார்.  அது மட்டுமல்ல ஆரியர்களின் புனித நூலான ரிக் வேதத்திலும், தைத்ரிய பிராமணம் என்றும் நூலிலும் மாட்டுக்கறி சாப்பிட்டதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதை எடுத்துக்காட்டுகிறார்.

புத்த சமண மதங்களின் எழுச்சியால் யாகத்தில் உயிர்கள் பலியிடுவதை ஆரியரல்லாத மக்கள் எதிர்க்க ஆரம்பித்தனர். மக்களிடம் உயிர்ப்பலிக்கு எதிரான சிந்தனை இருந்ததால் அந்தக் கருத்தைத் தங்களுடையதாக மாற்றி தங்களை உயர்குடியாக மாற்றிக் கொண்டனர். இன்றைக்கும் இவர்களால் ‘இந்து’ சொல்லப்படும் அப்பாவி பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் விவசாயத்திற்குப் பயன்படாத மாடுகளை விற்கின்றனர். அதை வாங்கும் வியாபாரி களிடம் சண்டை போடுகின்றனர் இந்து முன்னணி மற்றும் பஜ்ரங்தள் குண்டர்கள். ஆனால் இந்த நாட்டின் மிகப் பெரிய மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனமாகச் செயல்படுபவைகளில் முக்கியமான நிறுவனங்கள் அனைத்தும் பார்ப்பன பனியாக் களுக்குச் சொந்தமானது. ஆனால் அவர்களின் நிறுவனப் பெயர் இஸ்லாமியப் பெயராக இருக்கும். என்றைக்காவது இவர்கள் அந்த நிறுவனங்களுக்கு எதிராகப் போராடியிருக் கிறார்களா?

பசுப் பாதுகாவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தான் இந்தியா மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது என்பதை நூலாசிரியர் ஆதாரத்துடன் விளக்குகிறார். இந்த நூலின் 5 ஆம் பக்கத்தில் “கடந்த 2007 - 08 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 3,533 கோடி ருபாய்க்கு ஏற்றுமதி செய்தது. இந்த பசுப்புனிதர்கள் ஆட்சியில் 2015-16 ஆண்டுகளில் 26,682 கோடிக்கு வர்த்தகம் உயர்ந்துள்ளது.“ என ஆதாரத்துடன் விளக்குகிறார்.

மாட்டுக்கறி அரசியல்

மாட்டுக்கறிக்கு எதிராக இவர்கள் ஏதோ இன்று ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டம் போடுகிறார்கள் என்று அல்ல. இவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மட்டுமல்ல அதற்கு முன்பும் தங்கள் சமூக ஆதிக்கத்தை தக்க வைக்க மனித உணவில் மதத்தைத் திணித்து சமூகத்தைக் கூறுபோடுகிறார்கள் என்பதை நூலாசிரியர் வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கு கிறார்.

1954 ஆம் ஆண்டுகளிலேயே இவர்கள் தங்கள் சதியைத் துவக்கி விட்டனர். காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களைப் பயன்படுத்தி பசுவதைக்கு எதிராக சட்டம் செய்ய முயற்சித்தனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்தனர். ஆனால் நேரு அதற்கு சம்மதிக்க வில்லை என்பதை இந்தப் புத்தகத்தின் 9 ஆம் பக்கத்தில் “இந்து சனாதன வாதிகள் என்னை சிந்திக்க அனுமதிக்க மறுக்கின் றனர். இதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது” என்று ஜனாதிபதிக்கு தனது ராஜினாமாக் கடிதத்தை அளித்துவிட்டு கூறிய வார்த்தையைப் பதிவு செய்கிறார்.

மேலும் 1966 ஆம் ஆண்டு அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜர் பசுவதைத் தடை சட்டத்திற்கு எதிராகக் கருத்துச் சொன்னதற்காக அவர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் அவரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு சாதுக்கள் என்ற பெயரில் இந்துமதக் குண்டர்கள் அவர் இல்லத்தில் புகுந்து தாக்க முயற்சித்தனர். அவர் வீட்டுக்குத் தீயிட்டனர். அன்று முதல் இன்றுவரை தங்களுக்கு எதிரானவர்களைக் கொல்வதில் இவர்கள் பலே கில்லாடிகள். மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி உத்திரப் பிரதேசத்தில் ஒரு முதியவரை அடித்துக் கொன்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக 5 தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அடித்துக் கொன்றனர்.

இவர்களின் நோக்கம் என்ன?

மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனத்திற்கு எதிராக எதுவுமே பேசாத இவர்கள் உழைக்கும் மக்களின் உணவில் மதத்தைக் கலந்து அரசியல் செய்வது ஏன்? இந்தக் கேள்விக்கு விடை தேடினால் இவர்களின் நோக்கம் உழைக்கும் மக்கள் ஆரோக்கியமாக வாழக்கூடாது என்பதுதான். அசைவ உணவுகளிலே அதிக புரோட்டின் உள்ள கறியாக மாட்டுக்கறி உள்ளது. மேலை நாடுகளில் அனைவரும் அதைத்தான் உண்ணுகிறார்கள். அவர்கள்தான் அறிவியல் கண்டுபிடிப்பு முதல் விளையாட்டு வரை அனைத்திலும் முதன்மையாக இருக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பிவி சிந்து அவர்களின் பயிற்சியாளர் கோபி சந்த் (முன்னாள் பேட்மிட்டன் வீரர்) அவர்கள் ஒரு பேட்டியில் “இறைச்சியைத் தவிர்க்கச் சொல்லும் இந்திய உணவுப் பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கு உகந்ததல்ல” என்று கூறியுள்ளார். எனவே இந்தியா உலக அரங்கில் முன்னேற வேண்டுமென்றால் அதிக கலோரி உள்ள மாட்டிறைச்சியை மக்கள் உணவாக மாற்ற வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

பார்ப்பனர்கள் எப்பொழுதும் தங்கள் பிரச்சனையைச் சமூகப் பிரச்சனையாக மாற்றி ஒட்டுமொத்த மக்களையும் பேச வைப்பார்கள். தங்களுடைய சைவ உணவை இந்தியாவின் உணவாக மாற்ற நினைக்கிறார்கள். குஜராத்தில் பொது உணவு விடுதிகளில் ஆட்டுக்கறி உள்பட எந்த அசைவ உணவும் கிடைக்காது. அதை இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்த முனைகிறார்கள். அதற்கு மோடி ஆட்சி அவர்களுக்குத் தைரியத்தை வழங்கியுள்ளது. இதற்கு எதிராக முற்போக்காளர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம். மேடைகளில் மாட்டிறைச்சிக்கு ஆதரவாகப் பேசும் எத்தனை தோழர்களின் வீடுகளில் மாட்டிறைச்சி சமைக்கின்றோம்?

தமிழகத்தில் பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடுகளில் மாட்டுக் கறி உணவு பறிமாறப்பட்டது. இன்றைக்கும் பெரியாரியக்க மாநாடுகளில் மாட்டிறைச்சி உணவு உண்பதை ஒரு கலக நிகழ்வாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மற்ற முற்போக்கு பேசுபவர்களிடையே இந்தப் பழக்கம் மிகக் குறைவாக உள்ளது. எனவே ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கும் அனைவரும் தங்கள் இல்லங்களில் மாட்டிறைச்சி சமைத்து உண்ண ஆரம்பித்தால், இது மக்கள் உணவாக மாறும். அப்போது ஆரிய ஆதிக்கம் நடுநடுங்கும்.

வெளியீடு: தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, 100, ஆதித்தனார் சாலை, புதுப்பேட்டை, சென்னை-2 

Pin It