சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் திருப்பாச்சேத்தி அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம். 40 க்கும் மேற்பட்ட பள்ளர் சமூகக் குடும்பங்கள் உள்ளன. அவர்கள் ஊரைச் சுற்றி 800 க்கும் மேற்பட்ட அகமுடையார் குடும்பங்கள் வசிக்கின்றனர். குறிப்பாக ஆவரங்காடு பகுதியில் முழுக்க முழுக்க அகமுடையார் சமூக மக்கள் வசிக்கின்றனர். கச்சநத்தத்தில்  நான்கு அகமுடையார் குடும்பங்கள் வசிக்கின்றன. கச்ச நத்தம் பகுதியில் உள்ள பள்ளர் சமூக மக்களிடையே கல்வி அறிவும், பொருளாதார விழிப்புணர்வும் உள்ளது.

கடந்த மே 28 ஆம் தேதி ஆவரங்காடு பகுதி யைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அகமுடையார் சமூகத்தினர் கச்சநத்தத்திற்குள் புகுந்து பயங்கரமான ஆயுதங்களுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தி யுள்ளனர். அதில் ஆறுமுகம் (60) என்பவர் சம்பவ இடத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மருது (எ) சண்முகநாதன் (31) என்பவர் மருத்துவ மனை செல்லும் வழியில் இறந்தார். மேலும் ஆறு பேர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சந்திரசேகர் (32) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாம் கச்சநத்தத்திற்கு நேரில் சென்ற போது, திருப்பாச்சேத்தியிலிருந்தே காவல்துறை குவிக்கப் பட்டிருந்தது. கச்சநத்தத்திற்குள்ளும் காவல் துறையினர் நிறைந்து இருந்தனர். 40 வீடுகள் கொண்ட கச்சநத்தத்தில் சம்பவம் நடந்த வீதிக்குச் சென்ற போது தெருவில் மட்டுமல்ல; அந்த ஊரிலேயே மக்கள் யாருடைய நடமாட்டமும் இல்லை. பலர் மதுரை மருத்துவமனையிலும் கொஞ்சம் பேர் வீடுகளுக்குள்ளும் இருந்தனர். வீதியெங்கும் ரத்தம் திட்டுத்திட்டாய் படிந்திருந்தது. நாம் இந்த நவீன அறிவியல் உலகத்தில் வசிக்கிறோமா அல்லது காட்டுமிராண்டிகள் தேசத்தில் வசிக்கிறோமா என்ற கேள்வி எழுந்தது. அவ்வளவு கொடூரமான தாக்குதல்.

தெருவில் மட்டுமல்ல. திண்ணையிலும், வீட்டிற்குள்ளும் ரத்தம் உறைந்துகிடந்தது. வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. தொலைக் காட்சிப் பெட்டிகள், பீரோக்கள் உடைக்கப் பட்டிருந்தன. நம்மை இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் சிரமமாக இருந்தது. சம்பவத்தில் உயிரிழந்த மருது (எ) சண்முகநாதனின் தந்தை அறிவழகன் அவர்களைச் சந்தித்து உரையாடினோம். அவர் கூறிய தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

அகமுடையார்களின் பார்ப்பனீயம்

கச்சநத்தம் கோவில் திருவிழாவின்போது ஊருக்குள் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற அகமுடையார் சமூக இளைஞர் சுமனைப் பார்த்து ஊருக்குள் மெதுவாகப் போங்கள் என்று சொல்லியுள்ளனர் தெய்வேந்திரன் (வெட்டப் பட்டவர்களில் ஒருவர்) மற்றும் பிரபாகரன்.

அதற்கு ‘எங்களையே எதிர்த்துப் பேசுறியா பள்ளப் .......மகனே’ எனத் திட்டி உள்ளனர். மேலும் வீட்டிற்குச் சென்ற அந்த நபரின் பெற்றோர்கள் “ஏண்டா அவனை வெட்டாமலா விட்டாய்” என வெறி ஏற்றியுள்ளனர். உடனே அவன் பெரிய வாளை எடுத்துக் கொண்டு வந்து, இவர்களைத் தாக்க முயற்சித்து உள்ளான். அவர்கள் இருவரும் உயிருக்குப் பயந்து ஓடி அருகில் உள்ள திருப்பாச் சேத்தி காவல் நிலையத்தில் வழக்குக் கொடுக் கின்றனர். பிரபாகரன் சி.ஆர்.பி.எப் ல் வேலை செய்வதால் உடனடியாக வழக்கைப் பெற்றுக் கொண்ட திருப்பாச்சேத்தி காவல்துறை, கச்சநத்தத்திற்கு உட்பட்ட பழையனூர் காவல் நிலையத்திற்குப் பரிந்துரை செய்கின்றனர்.

அதனடிப்படையில் காவல்துறை வாளை எடுத்து மிரட்டிய அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த சுமனைக் கைது செய்ய வருகிறது. அவன் தலை மறைவாகிவிடுகிறான். அவனுடைய பெற்றோரைக் கைது செய்கிறார்கள். நமக்கு அடங்கிக் கிடந்தவர்கள் வழக்கு கொடுக்கும் அளவுக்குத் துணிந்து விட்டார்களா? என்ற ஜாதிவெறி தலைக்கேறத் தனது பெற்றோர்களைக் கைது செய்யக் காரணமானவர்களை வெட்ட வேண்டும் என்ற வெறியில் ஆவரங்காடு பகுதியில் உள்ள தனது ஜாதியினர் 50 கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு வந்து இரவு கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சுமன் மீது வழக்கு பதியக் காரணமான பிரபாகரன் மற்றும் தெய்வேந்திரன் மட்டுமல்ல அவர்களின் இலக்கு. கச்சநத்தத்தில் சுயமரியாதை யோடு அவர்களைச் சார்ந்து இருக்காத அனை வரையும் தாக்கியுள்ளனர். காலம்காலமாகத் தங்களுக்கு அடிபணிந்தவர்கள் இன்று படித்து விட்டதால் அடிபணிய மறுக்கின்றனர் என்ற வெறியோடு தாக்குதலைத் தொடுத்துள்ளனர். அவர்களை எதிர்க்காத, அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படுகிற சிலரை விரட்டிவிட்டுள்ளனர்.

ஆனால் இந்தத் தாக்குதலுக்கு மேற்கண்ட ஒரு சம்பவம் மட்டும் காரணமா என்றால் இல்லை. இந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட பள்ளர் சமூக மக்களுக்குப் பல்வேறு வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகளும், பொருளாதாரச் சுரண்டல்களும் நடக்கின்றன.

தாக்குதலுக்கான முதன்மைக்காரணம்

கச்சநத்தம் பகுதி மக்கள் ஓரளவுக்குக் கல்வி அறிவு பெற்றிருந்தனர். 40 வீடுகள் உள்ள கிராமத்தில் 30 க்கும் மேற்பட்டோர் அரசுப் பணிகளில் உள்ளனர். கிணறுகளோடு விவசாய நிலங்கள் வைத்துள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள் வைத்து வாடகைக்கு ஓட்டுகின்றனர். மேலும் அங்குள்ள பெரியவர்கள் ஒரு தலைமுறைக்கு முன்பே டியுஷன் சென்டர் ஏற்படுத்தி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்துள்ளனர். மேலும் கூட்டுறவுப் பால்பண்ணை, விவசாயக் கூட்டுறவு சங்கம் அமைத்து ஓரளவிற்குப் பொருளாதாரத் தன்னிலை அடைந்துள்ளனர்.

ஊர் மக்களை கல்வியிலும் பொருளா தாரத்திலும் யார் முன்னேற்ற ஒருங்கிணைக் கிறார்களோ அவர்களும் அகமுடையார் சொல்லும் வேலைகளைச் செய்யாமல் சுயமாக வாழ்பவர் களையும் தேடித் தேடித் தாக்கியுள்ளனர். இப்படிப் பொருளாதாரத்திலும் கல்வியிலும் உயர்ந்து தன்னிறைவோடு இருப்பதால்தான் நமக்கு அடங்கிப் போக மறுக்கின்றனர் என்ற வெறியே தாக்குதலுக் கான காரணம்.

ஒடுக்குமுறைகள்

மானாமதுரை ஒன்றியத்தில் கச்சநத்தத்தைச் சுற்றி மாரநாடு, ஆவடிநத்தம், ஆவரங்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 800 க்கும் மேற்பட்ட அகமுடையார் சமூக மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் நடத்தும் தீண்டாமை என்பது மிகவும் கொடூரமாக இருக்கும். மற்ற பகுதிகளில் தொடாதே, நடக்காதே, எனத்தான் இருக்கும். இங்கே அப்படி இல்லை.

பள்ளர் சமூக மக்கள் அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்தால் கூட “டேய் பள்ள...... மவனே... நான் வருகிறேன் எழுந்திருக்க மாட்டாயா?” என்பது, இவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளைத் திருடிச் செல்லுவது, விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பது, பால் பண்ணையில் பாலை எடுத்துச் செல்வது, பஞ்சாயத்து தேர்தல்களில் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களை வேட்பாளர்களாக்கிவிட்டு மக்கள் வாக்களிக்க வில்லை எனவே பணம் நிறைய செலவு செய்ததாகக் கூறி வீடு, நிலம் ஆகியவற்றைக் கொடு எனப் பிடுங்கிக் கொள்வது, மிகக் குறைந்த நிலத்தை வைத்துக் கொண்டு குறிப்பாக மூன்று மணி நேரத்தில் நீர் பாய்ச்சப்படும் வயலுக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் வாய்க்காலை அடைத்துக் கொள்வார்கள், அவர்களாகப் பார்த்து திறந்தால் மட்டுமே நீர் பாய்ச்ச முடியும் என்ற நிலை உள்ளது.

மேலும் வாய்க்காலில் பத்தல் போட்டு மீன் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். வேலைக்குக் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டு வாரக் கணக்கில் சம்பளம் தராமலும் மேலும் குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதைவிடக் கொடுமை பள்ளர் சமூக மக்களுக்கு 25 க்கும் மேற்பட்ட கிணறுகள் இருக்கிறது. அவற்றில் பெண்கள் குளிக்கும் போது அகமுடையார் சமூக ஆண்கள் நிர்வாணமாகக் குளிப்பார்கள். பள்ளர் சமூகப் பெண்களால் குளிக்கக் கூட முடியாது. இப்படிப் பல்வேறு அடக்கு முறைகளைச் செய்கின்றார்கள். காவல் துறையோ, வருவாய்த்துறையோ, எதுவும் கண்டு கொள்வ தில்லை. வழக்கு கொடுத்தாலும் எடுப்பதில்லை. அதை மீறி எடுத்தாலும் எந்த விதமான மேல் நடவடிக்கையும் இருக்காது.

இந்தக் கொடுமைகளுக்கு என்ன தீர்வு?

  • இந்தப் பகுதியில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவைகளில் ஜாதி ஒழிப்பில் நம்பிக்கையுள்ள சுயஜாதிப் பற்றில்லாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
  • ப்ளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றில் தலைவர்களின் படங்களோடும் வன்முறையைத் தூண்டும் வாசகங்களோடும் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களில் ரத்தம் சொட்டுவது போன்ற படங்களைப் போட்டு வைக்கப்படும் விளம்பரங் களைத்  தடை செய்ய வேண்டும்.
  • பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் கைகளில் ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் பட்டைகள் அணி வதைத் தடுக்க வேண்டும்.
  • ஜாதித் தலைவர்களின் குருபூஜை விழாக்களைத் தடை செய்ய வேண்டும். மேலும் கிராமங்களில் ஜாதிய மோதலுக்குக் காரணமாக இருக்கக்கூடிய கிராமத் திருவிழாக்கள், ஜல்லிக்கட்டு விழாக்களை அரசு தடை செய்யவேண்டும்.
  • விளையாட்டுப் போட்டிகளில் ஜாதித் தலைவர்களின் பெயர்களில் அணி அமைப்பதைத் தடைசெய்ய வேண்டும்.
  • அரசே தீண்டாமை மற்றும் ஜாதி ஒழிப்புப் பரப்புரைகளைச் செய்ய வேண்டும். ஜாதி ஒழிப்புத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர் வரலாறுகளைப் பாடமாக வைக்க வேண்டும்.
  • ஜாதி மறுப்புத் திருமணங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதை எதிர்ப்பவர்களைக் கடுமையான சட்டங்கள் மூலம் ஒடுக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களின் வாரிசுகளுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தரவேண்டும்.
  • ஜாதியைக் காப்பாற்றுவதற்காக இயங்குவதாகச் சொல்லப்படும் அரசியல் கட்சிகள் சமுதாய இயக் கங்கள் தமது தொண்டர்களிடம் - சமுதாய அமைப்பில் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், தங்களுக்கும் ஒட்டுமொத்த எதிரிகளான பார்ப்பனர்களை எதிர்க்கப் பயிற்றுவிக்கவேண்டும். தம்மை அடிமைப்படுத்தும் பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்றுவிக்க வேண்டும்.
  • ஜாதி ஒழிப்பில் நம்பிக்கையுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் - பிற்படுத்தப்பட்ட மக்களிடையே தொடர் பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டும். அவர்களின் அறியாமையைச் சுட்டிக்காட்டி  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஆரியப் பண்பாட்டிற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தை ஒரு வாழ்வியலாக மாற்ற பரப்புரைகள் செய்ய வேண்டும்.

செய்திக்கு உதவி:

அறிவழகன் (சண்முகநாதனின் தந்தை), கச்சநத்தம்.

Pin It