“தை பிறந்தால் வழி” பிறக்கும் என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்த வாக்கியம். எத்தனை “தை” பிறந்தாலும், சேரியிலிருந்து ஊருக்குச் செல்லும் வழி மட்டும் இன்னும் பிறக்கவே இல்லை. பல நூற்றாண்டுகளாகியும், சேர, சோழ, பாண்டிய, முகலாய, தெலுங்கு, ஆங்கிலப் பேரரசுகள் ஆண்டு முடிந்த பிறகும் எவரது ஆட்சியிலும் வழி பிறக்கவில்லை.
பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் தெருவுக்குள்ளே தாழ்த்தப்பட்டவர்கள் நுழையவே வழிபிறக்காத நிலையில், அவர்களின் வீடுகளுக்குள் நுழையும் வழி எப்படிப் பிறக்கும்? எந்தத் “தை” யில் அது பிறக்கும்?
இதற்கு விடைகாண வேண்டியது ஜாதி ஒழிப்பாளர்களும், தீண்டாமை ஒழிப்பாளர்களும் தான். அவர்களும் “பொங்கல்விழா” என்ற பெயரில் பல ஆண்டுகளாக நடந்தது வரும் ஜாதி ஆதிக்கத்தையும் - தீண்டாமைக் கொடுமையையும் கண்டும் காணாமல் சென்றால் எப்படி வழிபிறக்கும்?
தோழர் பெரியார் மகர சங்கராந்தியாக இருந்த பார்ப்பனப் பண்பாட்டு விழாவை, பொங்கல் விழாவாக - பார்ப்பன எதிர்ப்புப் பண்பாட்டு விழாவாக மாற்றி முன்னெடுத்தார். பொங்கல் விழா என்பது தமிழர்களின் விழா என்று அவர் தனது இறுதிக்காலம் வரைகூடச் சொல்லவே இல்லை.
1972 இல் பொங்கலைக் கொண்டாடுங்கள் என்று விடுத்த அறிக்கையில் கூட, பொங்கல் தமிழர்களின் விழா அல்ல. தமிழர்களுக்கு வேறு விழாக்கள் இல்லாததால், பொங்கலைக் கொண்டாட வேண்டியுள்ளது என்றுதான் கூறியுள்ளார்.
“அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ் வருடப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரசுவதி பூசை, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி. விடுமுறை இல்லாத பண்டிகைகள் கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் இந்தப் படியாக இன்னும் பல உள.
இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு - ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்”.
- தோழர் பெரியார், விடுதலை 30.01.1959
இந்த அறிக்கையில் சில சொற்களை மட்டும் மாற்றி, மீண்டும் 1972 இல் இதே கருத்தைக் கூறுகிறார்.
“தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா என்ற கருத்தில் தானே யொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்”.
- தோழர் பெரியார், விடுதலை14.01.1972
இன்று வரை தமிழர்களுக்கு வேறு விழாக்களை நாம் உருவாக்கவில்லை. 80 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வழியில்லாமல், பெரியார் அறிவித்த பொங்கலை இன்றும் தொடரவேண்டுமா? என நாம் சிந்திக்க வேண்டும். “பெரியார் சொன்னதை நாம் மாற்றக்கூடாது, பொங்கலைத் தான் கொண்டாட வேண்டும்” என்று முடிவெடுப்பதும், இந்த ஜாதிப் பொங்கலை மறுப்பதும், அவரவர் உரிமை. குறைந்தபட்சம், அந்த விழாவை “ஜனநாயகப்படுத்துவது” என்ற அளவிலாவது சிறு சிறு முயற்சிகளையாவது நாம் தொடங்கியாக வேண்டுமல்லவா?
தமிழ்நாடு முழுவதும், கிராமங்கள், நகரங்கள் என்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி எல்லா இடங்களிலும் “ஊர்ப்பொங்கல்” - “சேரிப்பொங்கல்” என்று தனித்தனியாகத் தான் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பல கிராமங்களில் பிற்படுத்தப்பட்டவர் களுக்குள்ளேயே தனித்தனி ஜாதிப் பொங்கல் நடக்கிறது. பல சேரிகளில் பள்ளர், பறையர், சக்கிலியர் என தனித்தனிப் பொங்கல் நடக்கிறது.
இந்த “இரட்டைப்பொங்கல்” எனும் நிலை யாருக்கும் தெரியாமல் நடப்பது அல்ல. இதற்குப் பெரிய ஆய்வுக்குழுவோ, புலனாய்வோ தேவையில்லை. எல்லா முற்போக்கு அமைப்புகளின் தோழர்களும் ஆண்டுதோறும் பார்த்துப் பழகிய நிலைதான். இந்து மதத்தைச் சேர்ந்த சராசரி மனிதன் இவற்றைக் கண்டு பழக்கப்பட்டு விட்டதில் வியப்பில்லை. ஜாதி ஒழிப்பாளர்களே இதை ஒரு இயல்பாக எடுத்துக்கொள்வது தான் அதிர்ச்சியாக உள்ளது.
தோழர் பெரியார் 1926 இல் காரைக்குடி சிராவயல் சேரியில், காங்கிரஸ் கட்சி சார்பில் வெட்டப்பட்ட தனிக்கிணறு தொடக்க விழாவில் பேசியதை நாம் படித்திருப்போம்.
“ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக் குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும்”.
- தோழர் பெரியார், குடி அரசு - 25.04.1926
நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். “கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்” என்றேன். “அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல” என்றேன்.
- தோழர் பெரியார் விடுதலை' 9.10.1957
இந்தத் தனிக்கிணறு மட்டுமல்ல; காங்கிரஸ் சார்பில், பறையர்களுக்குத் தனிப்பள்ளிக் கூடங்களும், தனிக்கோவில்களும் தொடங்கப்பட்டன. அனைத்தையும் பெரியார் எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியின் மாகாகணத் தலைவராக இருக்கும்போதே எதிர்த்தார்.
ஒரு மனிதனுக்கு குடிநீரைவிட, கல்வியைவிட விழாக்கள் முக்கியமானவை அல்ல. தண்ணீர் இல்லாமல் சாகட்டும், கல்வி கற்காமல் போகட்டும். அதைவிட முக்கியத் தேவை “சுயமரியாதையே!” என்கிறார் பெரியார்.
குடிநீரைவிட, பள்ளிக்கூடத்தைவிட “பொங்கல் விழா” எந்த வகையில் உயர்ந்தது? பெரியார் அறிவித்த விழாவிலேயே ஜாதியும், தீண்டாமையும், பெண்ணடிமைத் தனமும் இயங்கும் அவலத்தைப் பெரியார் தொண்டர்கள் தான் அழிக்க வேண்டும்.
ஜாதி ஒழிப்பு அமைப்புகள் நடத்தும் பொங்கல் விழாக்கள், திராவிடர் இயக்கத் தோழர்களின் வீடுகளில் வைக்கப்படும் பொங்கல் என எல்லா இடங்களிலும் பொங்கல் வைப்பது என்ற அடுப்பங்கறை வேலையைப் “பெண்கள் மட்டுமே” செய்வது, எங்களுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
எந்தக் குற்றஉணர்வும் இல்லாமல், இந்த அவலத்தை மாற்றவும் நினைக்காமல் இரட்டைப் பொங்கல், ஜாதிப்பொங்கல், ஆணாதிக்கப் பொங்கலை நமது பெருமை மிக்க விழாவாக அறிவித்துக் கொள்ள நாங்கள் வெட்கப்படுகிறோம்.
நாங்கள் வெட்கப்படுவதன் விளைவாக, எங்கள் பகுதியில் “இரட்டைப் பொங்கல்” நடக்கும் ஊர்களையும், சேரிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரித்தோம். மிக மிகச் சிறிய எல்லைக்குள் தான் தகவல் சேகரிப்பு நடந்தது. விரைவில் முழுமையான தகவல்களைத் திரட்டி, இந்த ஜாதி, ஆணாதிக்கப் பொங்கலின் சுயமரியாதைக்கேட்டை விளக்கி தனி நூலை வெளியிட இருக்கிறோம்.
தீண்டாமை ஒழிப்பில் அக்கறை உள்ள தோழர்களும் இயக்கங்களும் இந்தப் பொங்கல் தீண்டாமையை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரலாம். தங்களது ஊர்களில், சேரிகளையும் இணைத்துப் பொங்கலைக் கொண்டாட முயற்சிக்கலாம். ஆனால், ஜாதி ஒழிப்பில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விழாக்களை முற்றாக ஒழிக்க போராட வேண்டும்.
இந்துப் பண்டிகைகளில் ஜாதியும், தீண்டாமையும், ஆணாதிக்கமும் இருந்தால் அவற்றை எதிர்ப்போம். ஆனால் தமிழர் விழாக்களிலோ, திராவிடர் விழாக்களிலோ அதே ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் கண்டும் காணாமல் இருந்து விடுவோம் என்பது ஜாதி, மத ஒழிப்புக்கு எந்த வகையில் பயன்படும் என்பதைச் சிந்தியுங்கள்.