சென்ற 2018 டிசம்பர் இதழின் தொடர்ச்சி
நாம் தமிழர் - மே17 என்ன வேறுபாடு?
நாம் தமிழர் கட்சி, கடந்த 2012 ஆம் ஆண்டில் தனது கொள்கை மற்றும் திட்டங்களை ஒரு ஆவணமாக வெளியிட்டது. அந்த ஆவணம்தான் அந்தக் கட்சியை நாம் சரியாக அடையாளம் கண்டு புறக்கணிக்க உதவியது. அந்த நாம் தமிழர் ஆவணத்தில், அந்தக் கட்சி உறுப்பினர்களுக்கான நடத்தை விதி என்று ஒரு பாகம் உள்ளது. அதில் முதல் விதி,
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்மீது திணிக்கப்பட்டுள்ள சாதி, மத அடையாளங் களையும், அண்மைக்காலமாகத் திணிக்கப்பட்டு வருகிற இந்தியன், திராவிடன் என்ற முத்திரைகளையும் தவிர்த்துவிட்டுத் “தமிழன்” என்ற அடையாளத்தையே முதன்மை அடையாளமாகப் பெருமிதத்தோடு நாம் தமிழர் கட்சியினர் ஏற்க வேண்டும். - பக்கம்.105, விதி.1
நாம் தமிழரின் இந்த அடிப்படைவிதியைத் தான் பெரியாரிய உணர்வாளர்கள் மாநாட்டிலும் 4 வது தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள். அதாவது சென்ஸஸ் பதிவில் “தமிழர்கள்” என்றே பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானமாகும். நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டதை அப்படியே பெரியாரியலாளர் களிடம் ஒரு முடிவாக அறிவிக்கிறார்கள். இவர்களை எப்படி சீமானிடமிருந்து வேறுபட்டவர்களாகப் பார்க்க முடியும்?
அடுத்து 12 வது தீர்மானத்தைப் பார்ப்போம்.
- பொதுப்பட ஒத்திசைப் படியலில் (Concurrence List) இருக்கிற கல்வித்துறையை மாநிலங்களின் பட்டியலுக்கு உடனே கொண்டுவர வேண்டும் என்றும், அந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கிற கல்விக் கூடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், “இந்திய அரசின், பிற பன்னாட்டு நிறுவனங் களின் கல்விக் கூடங்கள் தமிழ்நாட்டில் இயங்க முழுமையாகத் தடைசெய்ய வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்துகிறது.”
சித்த மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்வியும் தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்பதோடு, கல்விக்கான எந்த வகை இந்தியத் தேர்வுகளையும், `நீட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிலும், பிற அனைத்து மொழித் தேசங்களிலும் தடைசெய்ய வேண்டும் என்றும்,
அவற்றோடு “தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்துக் கல்விகளும் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியாகவே இருக்க வேண்டும்” என்றும், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை மொழிப் பாடமாக மட்டுமே பயிலலாம் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
நாம் தமிழர் ஆவணத்திலும், நாம் தமிழர் வெளியிட்டுள்ள ஆட்சி செயற்பாட்டு வரைவிலும், இதே வரிகள் உள்ளன.
அனைத்துக் கல்வியையும் தமிழிலேயே கற்போம். கல்வி மொழியாகத் தமிழையே தேர்ந்திட வேண்டும். (பக்கம் 59, 111 நாம் தமிழர் ஆவணம்)
ஆரம்பப் பள்ளி முதல் உயர்படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ்மொழியிலேயே மொழி பெயர்க்கப் பட்டுக் கற்றுத்தரப்படும். தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப்படும். (பக்கம் .87 நாம்தமிழர் ஆட்சியின் செயற்பாட்டுவரைவு)
நாம் தமிழரின் பார்ப்பன ஆதிக்க ஆவணப் பதிவுகள் தான் பெரியாரிய உணர்வாளர்கள் மாநாட்டிலும் தீர்மானமாக வந்துள்ளன.
அனைத்துக் கல்வியும் தாய்மொழி வழிக்கல்வியாக இருக்கவேண்டும் என்பதை தமிழ்த்தேசிய அறிஞர்களும், இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் ஆதரிக்கின்றனர். ஆனால், பெரியாரியலாளர்கள் தொடக்கக்கல்வி அல்லது பத்தாம் வகுப்பு என்ற நிலை வரை மட்டுமே தாய்மொழிவழிக் கல்வியை ஆதரிக்கின்றனர்.
விடுதலை வேட்கையை விதைத்த ஆங்கிலவழிக் கல்வி!
காந்தியார் 1937 ஆம் ஆண்டு “வார்தா கல்வித் திட்டம்” என்ற பெயரில் குலக்கல்வித் திட்டத்தை அறிவித்தார். அதன்படி அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி நூற்றுக் கணக்கான பள்ளிகளை இழுத்துமுடினார். மீதம் இருந்த பள்ளிகளிலும் மாணவர்கள் தங்கள் குலத்தொழில்களைப் பழகத் தூண்டினார். அதன் தொடர்ச்சியாகவே, 1938 இல் முதல் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்கப்பட்டது. தனித்தமிழ்நாடு முழக்கமும் எழுந்தது. அந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாகத் தான் 1952 ஆம் ஆண்டு குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. 1937 இல் வார்தா கல்வித் திட்டத்தின் முக்கியக்கூறுகள் மூன்று.
- தாய்மொழி வழிக்கல்வி
- ஏழு முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி
- பகுதி நேரத்தொழிற்கல்வி அதாவது குலத் தொழில் கல்வி.
இந்த மூன்றையும் பற்றிப் பெரியார் தனது குடி அரசு ஏட்டில் தொடர்ச்சியாக எழுதியும், பேசியும் வந்தார். அவற்றுக்கு எதிரான போர்க்களத்தையும் உருவாக்கினார். அப்போது, தாய்மொழி வழிக் கல்வி பற்றியும், ஆங்கில வழிக்கல்வி பற்றியும் எழுதியுள்ளவைகளில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
...இதேபோல், தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் நம்மைப் பெற்றெடுத்ததும் நம்மைத் தெலுங்கன் வீட்டிலோ, துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் - நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியே பேசுவோமா? அல்லது, நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா? இன்னும் கவனிப்போம். நம் தாய் குழந்தையாக இருந்தபோது பேசியதென்ன? “பாய்ச்சி குடிக்கி”, “சோச்சி தின்னு”, “மூத்தா போய்”, “ஆய்க்கு போ” என்றுதானே பேசியிருப்பாள்! இப்போது நாம் பாச்சி, சோச்சி, மூத்தா, ஆயி - என்றா பேசுகிறோம்? இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால், தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமை என்று தோன்றவில்லையா?
ஆங்கில மொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துகள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. நமது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்கான பல அரிய மார்க்கங்களை ஆங்கில நூல்களிலிருந்தே நாம் பெரும்பாலும் அறிந்து வருகிறோம். சுருங்கக் கூறின், “அடிமை வாழ்வே ஆனந்தம்” என்று நினைத்திருந்த இவ் இந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவுதான் என்று கூறினால் மிகையாகாது.
ராஜா வேண்டாம், குடியரசுதான் வேண்டும் என்கின்ற அறிவு; சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழியவேண்டும் என்கின்ற அறிவு; ஆணும் பெண்ணும் சமம் என்கின்ற அறிவு ஆகிய சகல அரசியல் - பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துகளையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது.
தந்தியையும், மின்சாரத்தையும், படக் காட்சியையும், ஆகாய விமானத்தையும், ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான் அறிமுகப்படுத்தியதே யொழிய, நமது தமிழ்மொழியோ அல்லது அதை அழிக்க வந்த வடமொழியோ அல்ல.
வடமொழித் தொடர்பு சாத்திர, புராண, இதிகாச மூடநம்பிக்கைகள் நம் பகுத்தறிவை அடிமைப் படுத்தின. ஆங்கில மொழி நம்மை அவ்வடிமைத் தளையிலிருந்து விடுத்து, எதையும் நம் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்கும்படிச் செய்தது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத, பிரத்யட்ச அனுபவத்திற்கு ஒவ்வாத, சரித்திர காலத்திற்கு உட்படாத எதையும் ஒதுக்கித் தள்ளும்படிச் செய்தது. ஆங்கில மொழிதான் அதைப் பேசிய மக்களைத் தமிழைக் காட்டிலும் வெகு வேகமாக அறிவு உலகத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
- தோழர் பெரியார் - ‘மொழி எழுத்து’ நூல்
...நமது நாட்டில் ஆங்கிலப்படிப்பு பரவ ஆரம்பித்ததன் பலனாகவும், ஏழு ஆண்டுகளாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்புக்கும் பின் வாங்காமல் உண்மைகளை எடுத்துக்கூறிப் பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணாச்சிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. இதனால் உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்று சொல்லிக் கொண்டும், பூதேவர்கள் என்று கூறிக்கொண்டும் இருந்த பார்ப்பனர்களுடைய கெளரவமும் குறைய தொடங்கிவிட்டது என்பதும் உண்மையாகும். -தோழர் பெரியார், குடி அரசு - 29.11.1931
பிள்ளைகள் 7 வயது முதல் 14 வரை கட்டாயமாக படிப்பிக்க வேண்டுமென்றால் 7 வயது வரை பையன்களுக்கு வேலை என்ன? பார்ப்பனப் பிள்ளைகள் நாலரை வயது 5 வயதிலேயே பிரை வேட்டாகப் படிக்க வைத்து 7 - வது வயதில் முதல் அல்லது 2-வது பாரத்தில் சேர்க்கப்பட்டு விடுகிறார்கள். அதனாலேயே அவர்கள் 14 அல்லது 15 - வது வயதில் எஸ்.எஸ்.எல்.சி. அல்லது மெட்ரிக்குலேஷன் படிக்கவோ பாஸ் செய்யவோ முடிகின்றது.
நம்முடைய பிள்ளைகளுக்கு 6, 7 - வது வயதில் “எழுத்தாணிப்பால்” கொடுத்து “சரஸ்வதி பூஜை” செய்து “அக்ஷராப்பியாசம்” ஆரம்பித்தால் முதல் பாரத்துக்கு வர 5 வருஷமும் முதல் பாரத்தில் இருந்து மெட்ரிக்குலேஷன் பரீட்சைக்குப் போக ஆறு வருஷமும் ஆக 11 வருஷமும் ஆகிறது. பரீட்சைகளில் ஏதாவது ஒன்று இரண்டுவருஷம் தவறிவிட நேர்ந்தால் மெட்றிக்குலேஷனுக்கு போவதற்குள் கையில் ஒன்று இரண்டு குழந்தைகளோ அல்லது உடம்பில் வியாதியோ ஏற்பட்டு மைனர் விளையாட்டில் திரும்பி விடுகிறான்.
ஏற்கனவே நமது பிள்ளைகள் படிப்பு இதனாலேயே கெட்டு மொத்த எண்ணிக்கையில் விகிதாச்சாரம் குறைந்து இருக்கிறது. இந்த நிலைமையில் இனி “7 முதல் 14 - வயது வரை தொழிலின் மூலம் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கும், வாத்தியார் சம்பளத்துக்கும் போதிய வரும்படி கிடைக்கும் படியான கல்வி தாய்பாஷையில் கற்பது” என்றால் பையனுக்கு உலகஞானமோ வாழ்க்கை அறிவோ அடைய வேண்டியகாலம் எது? அதற்கு ஏற்ற கல்வி எங்கே? என்று கேட்கிறோம்.- தோழர் பெரியார், குடி அரசு - 21.11.1937
1937 இல் மூடப்பட்ட பள்ளிக்கூடங்களில் சில, தமிழ்வழிக் கல்வியைப் பின்பற்றிய பள்ளிக் கூடங்களாக இருந்திருக் கலாம். அப்போதைய கல்வி முறை நமக்கு முழுமையாகத் தெரிய வில்லை. பெரியாரைப் பொறுத்த வரை, ஆங்கிலவழிப் பள்ளிகளை மூடும்போதுதான் கடுமையாக எதிர்வினை யாற்றி இருக்கிறார் என்பதற்குச்சில சான்றுகள் உள்ளன. அவற்றில் சில வரிகள்,
இவ்வாரம் சில சர்வகலா சாலைகளை மூடும்படியும் சில மத்தியதரப் பாடசாலைகளை எடுத்துவிடும் படியும் போடப் பட்டிருக்கும் உத்திரவுகளைப் பற்றியும் சில உயர்தரப் பாட சாலைகளை ஒழிக்க செய்யப்பட்டு வரும் சூழ்ச்சி களைப் பற்றியும் பொது மக்களுக்கு விளக்கிக்காட்ட ஆசைப் படுகிறோம். அதாவது கோயமுத்தூர் பாரெஸ்டு காலேஜ் (வன பரிபாலன கல்வி சர்வகாலசாலையை) மூடிவிடுவது என்று உத்திரவு போட்டாய்விட்டது.
மற்றும் கிராமாந்திரங்களில் இருந்து வரும் மத்தியதர ஆங்கிலப் பாடசாலைகளையும், உயர்தர ஆங்கிலப் பாடசாலைகளையும் அதாவது செகண்டரி ஸ்கூல் என்பவைகளையும் எடுத்துவிடத்தக்க தன்மையில் “60 பிள்ளைகளுக்கு குறைந்த மத்திய தர ஆங்கிலப் பள்ளிக்கூடங்களும் - 60 பிள்ளைகளுக்கு குறைந்த உயர்தர ஆங்கிலப் பள்ளிக்கூடங்களும் எடுக்கப் பட்டு விடவேண்டும்” என்று உத்திரவுகள் போடப் பட்டாய்விட்டது.
அதோடு கூடவே சர்க்கார் அனுமதி பெற்று பொதுஜனங்கள் நிர்வாகத்தில் நடக்கும் பள்ளிக் கூடங்களையும் ஒழிப்பதற்கும் கால் நட்டாய் விட்டது. அதாவது “சரியானபடி நிர்வாகம் நடைபெறாத ஹைஸ்கூல்கள் எடுக்கப்பட்டு விடும்” என்று உத்திரவு போட்டாய் விட்டது. இனி ஸ்தல ஸ்தாபன பள்ளிக் கூடங்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் கிராண்டுகளை ஒழிப்பதற்கும் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் மகாநாட்டில் இக்கல்வி சூழ்ச்சிகள் சம்மந்தமாய் நடந்த காரியங்கள் பார்ப்பன பத்திரிகைகளிலேயே வெளிவந்திருக்கின்றன. மொத்தத்தில் இன்றைய ஆங்கிலப் பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் 100க்கு 90 பேர் பார்ப்பனர்கள். அவர்களிலும் தலைமை உபாத்தியாயர்கள் 100க்கு 99 பேர் பார்ப்பனர்கள். அவர்களிலும் 100க்கு 99 தொண்ணூற்று ஒன்பதே முக்காலே மூன்று வீசம் பேர்கள் வைதீகப் பார்ப்பனர்கள். (மனுதர்ம வர்ணாச்சிரமிகள்)
ஆகவே, இப்படிப்பட்ட இவர்கள் இம்மாதிரியான மனுதர்ம கல்வித் திட்டத்துக்கு வரவேற்பளிப்பார் என்பதில் ஆக்ஷேபணை என்ன இருக்க முடியும்? இவர்களது மகாநாட்டில் வரவேற்புத்தலைவரான தோழர் பி.ஏ. சுப்பிரமணியம் அய்யர் என்பவர் காந்தியார் கல்வித்திட்டத்தின் “பெருமை” யைப் பற்றிப் பேசும்போது காந்தியார் திட்டப்படி “ஏழு வருஷ காலம் பிள்ளைகள் பள்ளிக் கூடத்தில் இருந்து விட்டுப் போனால் கிராம வாழ்க்கையில் பிரியமும் எளியவாழ்க்கை ஆவலும் கைகால் களைக் கொண்டு உழைப்பதில் ஆசையும் பாரம்பரிய பெருமைக்கு (பழமைக்கு) வணக்கமும் நமது (சாஸ்திர புராணங்களாகிய) பழைய கலை களை வளர்ப்பதற்கு ஆர்வமும் ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கியமான கருத்து” என்று நன்றாக பச்சையாக காந்தியார் கல்வித்திட்டம் வருணாச்சிரம புனருத்தாரணம்தான் என்று சொல்லி விட்டார். இதை “மித்திரன்” முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் ஆதரித்தும் தலையங்கங்கள் எழுதி விட்டன. -தோழர் பெரியார், குடி அரசு - 26.12.1937
ஆக, தமிழ்நாட்டின் முதல் மொழிப் போராட்டமும், தனித்தமிழ்நாடு போராட்டமும் தொடங்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களில் ஆங்கிலவழிக்கல்வி ஆதரவும் ஒன்றாகும் என்பதைக் குடிஅரசு வழியாக அறியமுடிகிறது.
இதுகுறித்து பெரியார் எழுதிய கட்டுரைகளில் பல இடங்களில் ஆங்கிலக் கல்வி, ஆங்கிலக் கல்வி என்று குறிப்பிடுகிறார். அந்தச் சொற்கள் வெறும் “மொழிக்கல்வி”யைக் குறிப்பவை அல்ல. ஆங்கில “மொழிவழிக் கல்வி”யைக் குறிக்கின்றன என்பதைக் குடிஅரசுக் கட்டுரைகளை முழுமையாகப் படித்தால் அறியமுடியும்..
“சமீபத்தில் 1957 நுங்கம்பாக்கத்தில் இந்திய எதிர்ப்புக்கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில், எல்லாக்கட்சிக்காரர்களும் வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்றும் பேசினார்; பிறகு நான் பேசும்போதும் அதுபோலவே பேசிவிட்டு, ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்றும் சொன்னேன். அதே சமயம் இப்படி நான் சொல்வதால், மொழிவெறியர்கள் சிலர் என்னை “நீயாருக்குப் பிறந்தாய்?” என்று கூடக் கேட்டார்கள். அந்த மொழியைப் பேசவேண்டும் என்று சொல்வதனால், நாம் ஆங்கிலேயனுக்குப் பிறப்பதானால், மற்றபடி, காப்பி குடிப்பது முதற் கொண்டு இரயில், ரேடியோ, ஆகாயவிமானம், டெலிபோன், மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையவை என்று தெரிந்து அனுபவிக்கிற நாம் எத்தனை தடவை ஆங்கிலேயர் களுக்குப் பிறந்தவர்களாவோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், மொழி பேசுவதனால், ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாக மாட்டோம் என்று சொன்னேன். கடைசியாக, தமிழில் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ தமிழ்ச்சமயம், தமிழ்ப் பண்பாடு மூலமோ நாம் உலகமக்கள் முன்னிலையில் ஒருநாளும் இருக்க முடியாது”. - மொழியும், அறிவும் நூல் - 1957, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்” நூல்
“தமிழ்மக்கள் என்னும் குழந்தைகளுக்குத் ‘தாய்ப்பால்’ என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல்தேர்வதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கிறதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே, சத்தற்றவள் என்பதோடு நோயாளியாகவும் இருக்கும்போது, அந்தப் பாலைக்குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால் தானே அவளுக்கு பாலும் ஊரும், அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?
பார்ப்பனர்களும், அரசாங்கமும் இந்தத் துறையில் செய்கின்ற அக்கிரமங்கள் சொல்லி முடியாது. ஒரு பண்டத்துக்குத் தமிழ்ப்பெயர் உண்டாக்கி தமிழில் சொல்லிவிட்டால் போதுமா? அதன் செயல் முறைக்கும், அதன் பாகங்களுக்கும், அதை ஊடுருவி அறிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படைக்கு சொற்கள் வேண்டாமா? மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தனையோ துறைகளில் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு, நமக்குத் தக்க அறிவும், அனுபவமும், செய்முறையும் வேண்டுமானால் நமது தாய்ப்பாலில் (தமிழ்மொழியில்) என்ன இருக்கிறது?” - தாய்ப்பால் பைத்தியம் 1960, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்” நூல்.
பெரியார் பெயரால் தமிழ்வழிக் கல்வி ஆதரவு - பெரியாரின் கண்டனம்
இப்போது 2018 இல் பெரியார் பெயராலேயே மாநாடு கூட்டி, அதில் பெரியாரியலுக்கு எதிராகவே தமிழ்வழிக் கல்வி என்ற தீர்மானத்தைப் போடுவது போலவே, ஏற்கனவே வரலாற்றில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அப்போது தமிழ்வழிக்கல்விக்கு ஆதரவாக அப்போதைய தி.மு.க அரசின் அமைச்சர்கள் பேசியுள்ளனர்.
“உயர்கல்விவரை தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு வருவோம். தமிழ் மொழிக்குக் கேடு வந்தால் பதவியையே தூக்கி எறிவோம்” என்றனர். “நாங்கள் பெரியாரிடம் படித்தவர்கள்” என்றும் பேசினர். உடனடியாகப் பெரியார் அந்தத் தமிழ்வழிக் கல்வி ஆதரவுப் பேச்சைக் கண்டித்தார்.
“ஒரு அரசாங்கத்தையே நமக்குக் காணிக்கை ஆக்குகிறேன்” என்று அறிவித்தவர்கள் ஆயிற்றே! நாம் சொல்வதைச் செய்பவர்களின் ஆட்சி ஆயிற்றே! நமது நட்பு சக்திகள், நமது இயக்கத்தின் தோழமைச் சக்திகள் ஆயிற்றே! என்பவை போன்ற எவ்விதத் தயக்கமும் இன்றிக் கடுமையாகத் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
“புதிய உலகில் வாழ்கின்ற, வாழ வேண்டிய மக்களுக்கு மொழிப் பைத்தியம் எதற்கு? அதுவும் ஜாதி போன்ற, மதம் போன்ற மொழிப்பைத்தியம், மொழி வெறி என்பது எதற்காக இருக்க வேண்டும்? போதாக்குறைக்கு, “பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்” என்றும், நாங்கள் “பகுத்தறிவு வாதிகள்” என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், “தமிழுக்கு - தமிழ்மொழிக்குக் கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்” என்று சொல்லுகிறார்கள் என்றால், இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன “பெரியார் வாசனை” இருக்கிறது?
உயர்தரப் படிப்புகளை எல்லாம், கல்லூரியிலும் கூடத் தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாள்களாக்குகிறோம் என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும். தமிழ்மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால், மூன்று கொலை செய்வதாகத்தானே முடியும்? இதுதானா சிப்பாய்கள் வேலை?” - தோழர் பெரியார், விடுதலை, 05.04.1967
“தி.மு.க. கட்சி, “இந்தி கூடாது, அரசியல் தமிழில் நடத்தப்பட வேண்டும்” என்று கிளர்ச்சி செய்கிறது. ம.பொ.சியின் தமிழரசுக்கட்சி, “அரசியலில் இங்கிலீஷ் கூடாது; இங்கிலீஷ் மூலம் பாடங்கள் கூடாது; பள்ளிகளில் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் பயிற்சி கூடாது; காலேஜ்களில் இங்கிலீஷில் பாட போதனை நடத்தப்படுவதும் கூடாது; தமிழிலேயே தான் நடத்தப்பட வேண்டும்” என்றும், அதற்காகவே தாம் சிறை செல்லப் போவதாகவும், மற்றும் மந்திரிக்குக் கருப்புக் கொடி பிடிக்கப் போவதாகவும் சொல்லுகிறது. இவைகளைப் பார்த்தபின், சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இன்றைய அரசியல் கட்சிக்காரர்கள் பெரிதும் தங்கள் கிளர்ச்சிக்கும், தாங்கள் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கும் இந்த மொழிப் பிரச்சனையையே கருவியாக வைத்துக் கொள்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
..தொழில்துறையில் விஞ்ஞான முறையை எடுத்துக்கொண்டால் தமிழில் இதற்கு ஏதாவது பயன்படக்கூடிய சாதனங்கள் இருக்கிறதா? வைத்திய நூல்களை எடுத்துக்கொண்டால், வைத்தியன் பிழைக்கத்தான் வழி இருக்கிறதே தவிர இன்றைய நிலையில் நோயாளி பிழைக்க நோயைக் கண்டுபிடிக்க அதில் என்ன அதிசியமிருக்கிறது
...ஜாதி, மதம், மொழி ஆகியவைகள் ஒரு மனிதனுக்கு இயற்கை யானவை அல்ல; இவை செயற்கை யானவை. காலதேச வர்த்தமானத் தினால் ஒரு மனிதனை வந்து அடைபவை அல்லது மனிதன் வசதிக்குத் தக்கபடி ஏற்படத் தக்கவை.
உணவுப்பழக்கம் போலும், கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் ஏன்? காதலிக்குக் காதலனும், காதலனுக்குக் காதலியும் அமைவது நற்சம்பவமாய் அமைபவை. மற்றும் எஜமானனுக்கு அடிமையும், அடிமைக்கு எஜமானனும் அமைவது போல் அமைபவையே அல்லாமல் எது நிரந்தரம்? எது மாற்றக் கூடாதது? எது மாற்ற முடியாதது?
மொழி பக்தர்களுக்கு (வெறியர்களுக்கு) ஒரு விண்ணப்பம். பக்தியின் பெயரால் அறிவு வளர்ச்சியை, நாட்டு வளர்ச்சியை, புதுமை வளர்ச்சியைப் பாழடித்து விடாதீர்கள். உடை விஷயத்தில் நாம் காட்டுமிராண்டிகளானதே போது மானது.
- தோழர் பெரியார், 1967, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்” நூல்.
தற்போது அண்ணா பல்கலைக்கழகமாக இருக்கும் பொறியியல் கல்வி நிறுவனம், 1970 இல் கிண்டி தொழில்நுட்பக்கல்லூரியாக இருந்தது. அங்கு 16.07.1970 அன்று கல்லூரியின் தமிழ்மன்றத்தைத் தொடங்கி வைக்கப் பெரியாரை அழைக்கிறார்கள். அன்று தான் பெரியாருக்கு “கம்ப்யூட்டரை” முதன்முதலில் அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். அந்த விழாவில் பேசும்போது,
“எஞ்சினீயரிங் கல்லூரி என்கின்ற பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் ஏன் துவக்குகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பொறியியற் கல்லூரியில் உள்ளவர்களுக்கு எதற்காகத் தமிழ்மன்றம் என்று தெரியவில்லை. அடுத்த படியாக, தமிழைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
இப்போது நாம் பெரிய வளர்ச்சிநிலையில் இருக்கிறோம். பெரிய வளர்ச்சிகள் ஏற்பட்டு வருகிற 70 ஆம் ஆண்டில் இருக்கிறோம். கல்லூரி முதல்வர் அவர்கள், “கம்ப்யூட்டர்” என்கின்ற ஒரு இயந்திரத்தைக் காட்டினார்கள். அது எப்படி வேலை செய்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்பதோடு, புரியும்படி தமிழில் அவர்களால் எனக்குச் சொல்லவும் முடியவில்லை. காரணம், தமிழில் அதை விளங்கும்படிச் சொல்வதற்கான சொற்கள் இல்லை என்பதே”.
...தமிழுக்காக வேண்டுமானால் தமிழ் படிக்கலாம். இலக்கியநயம், கவிநயம் என்பவற்றிற்காக வேண்டு மானால் தமிழ் கற்கலாம். மற்றபடி புதுமையான கருத்துக்களை அறிந்து கொள்வதற்குத் தமிழில் எதுவுமே கிடையாது. இப்போது தோன்றியுள்ள பல விஞ்ஞான அதிசய, அற்புத இயந்திரங்களுக்குச் சரியான தமிழ்ச்சொற்கள் கிடையாது. ஏதாவது ஒரு சொல்லைச் சொல்லி, அதற்கு இதுதான் பொருள் என்று கொல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய நேரிடையாகச் சொல்லக்கூடிய சொற்கள் தமிழில் இல்லை.
நாம் தமிழர், நம்நாடு, தமிழ்நாடு என்பதற்காகத் தமிழைப் போற்றலாமே ஒழிய, தமிழில் பொது அறிவிற்கான எதுவும் கிடையாது. ஆனதால் தமிழில் பெரும் விற்பனர்களாக இருப்பவர்களுக்குக்கூட பொது அறிவு சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.
...இந்தக் கம்ப்யூட்டருக்குத் தமிழில் “கணிப்பான்” என்கின்றனர். ஆங்கிலத்தைவிட அதைப்புரிந்து கொள்வது மிகக்கஷ்டமாக இருக்கிறது. காரணம் இப்போதுதானே நாம் கொஞ்சம் நாகரீகம் பெறுகின்றோம்”. - தோழர் பெரியார், 16.07.1970, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்” நூல்.
பெரியார் 1970 ஜூலையில் கூறியவை இன்றும் மாறாமலேயே இருக்கின்றன. கலைச் சொல்லாக்கம் என்பதில் உள்ள சிக்கலையும் இந்த விழாவில் பேசியுள்ளார். இவை மட்டு மல்ல; தமிழ்வழிக்கல்வி பற்றிய பெரியாரின் கருத்துக்கள் இன்னும் ஏராளமாக, விரிவாக உள்ளன. குடி அரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி ஆகிய ஏடுகளைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலே போதும். அவை நம் கண்ணில்படும்.
தி.மு.க. ஆட்சியைக் காக்கவே தமிழ்வழிக்கல்வி ஆதரவு
1970 நவம்பரில் கலைஞரின் தி.மு.க. ஆட்சி, கல்லூரிகளில் தமிழையும் ஒரு பயிற்று மொழியாக அறிவித்தது. அதை வைத்து தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற திட்டத்தில், இராசாசி, காமராஜர் ஆகியோர் மாணவர் போராட்டங் களைத் தூண்டி விட்டனர். அப்போது தி.மு.க ஆட்சிக்குச் சிக்கல் வரக்கூடாது என்பதற்காகப் பெரியார், தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாக இருப்பதுபோலச் சில வரிகளை எழுதியுள்ளார்.
“நமது கடமை” என்ற பெயரில் எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தின் சில பகுதிகளை மட்டும் தோழர் சுபவீ அவர்கள் தமது, “பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்’ நூலில் பதிவு செய்துள்ளார். அந்தத் தலையங்கம் தோழர் பசு.கவுதமன் அவர்களின், “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?” என்ற தொகுப்பின் முதல் தொகுதியில் முழுமையாக உள்ளது.
அந்த முழுமையான தலையங்கத்தில், பெரியார் தனது வழக்கமான பாணியில், அதாவது வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்ற விதத்தில் தமிழ் வழிக்கல்வியை ஆதரித்து எழுத வில்லை. தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் தீவிரமாகிவிடக் கூடாது என்ற அக்கறைதான் அந்த அறிக்கையில் மேலோங்கியுள்ளது. அதிலும்கூடத் தமிழை, வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்றும், ஆங்கிலம்தான் அறிவியல் மொழி என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
“பாடமொழிப் பயிற்சியைத் தங்களது யுத்ததளவாடமாக எடுத்துக்கொண்டு ஆச்சாரியாருடைய சுதந்திராக் கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக் கவிழ்க்கக் காரணம் காட்டி மாணவர்களைத் தூண்டி விடுகின்றன. இதற்குப் பார்ப்பனரல்லாத இனத்து விபீஷணர் களும் ஆளாகி விட்டிருக்கிறார்கள்.
தமிழ்மொழி, ஆங்கிலமொழி இரண்டைப் பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி யிருக்கிறேன். ஆங்கிலம், வளர்ந்த மொழி - விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் - வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம், தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழி யாகவும் ஆகவில்லை என்பது தானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனிப்பட்ட வெறுப்பில்லை.”
-தோழர் பெரியார், விடுதலை, 01.12.1970
“தமிழ்வழிக்கல்வி நீக்கப்படும்” என பெரியார் உறுதி அளித்தார்
இறுதிக்காலத்தில் பெரியார் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்தார் என்பதற்காகக் கொடுப்படும் ஒரே ஒரு சான்றிலும், ஆங்கிலமே சிறந்தமொழி, ஆங்கிலேமே அறிவியல்மொழி என்பதைத்தான் பதிவுசெய்துள்ளார். அந்த அறிக்கையின் இறுதிப் பகுதி இரண்டு தலைப்புகளாக உள்ளது. இரண்டு தலைப்புகளிலும் ‘பயிற்றுமொழி’ என்பது தலைப்பாக வரவில்லை. ஆட்சியைக் காப்பாற்றுவது பற்றியே தலைப்புகள் உள்ளன.
“8500 பள்ளிகளை மூடியது யார் ஆட்சி?
எந்தக் காரணத்தாலோ இன்றைய ஆட்சிக்கு மாற்றம் ஏற்பட்டால் நாடு வருணாசிரம ஆட்சிக்குத்தான் ஆளாகிவிடும். உதாரணமாகச் சொல்லுகிறேன். என்னவென்றால், இதை மாணவர்களும், பெற்றோர் களும் உணர்ந்து பொறுத்துக்கொண்டால் அடுத்த ஆட்சிக் காலத்தில் சரிபடுத்திக் கொள்ள முடியும் என்பது எனது உறுதியான கருத்தாகும்.
ஜஸ்டிஸ்கட்சி ஆட்சிக்குப் பிறகு 1938 இல் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட உடன் என்னநிலை ஏற்பட்டது என்று பார்த்தால் காங்கிரஸ் ஆட்சி, உத்தியோகத்தையே மனதில் வைத்து 2500 பள்ளிகளை மூடியதோடு மீதியுள்ள பள்ளி மாணவர்களைக் கட்டாயமாக இந்தி படிக்கவேண்டு மென்று உத்திரவு போட வில்லையா? 1952 இல் காங்கிரஸ் ஆட்சிபீடமேறிவுடன் 6000 பள்ளி களை மூடிவிட்டு பிள்ளைகள் அவரவர் ஜாதித்தொழில் படிக்க வேண்டும் என்று உத்திரவு போட வில்லையா?...
காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழர் கதி என்ன?
...தமிழர்களே! ஒன்று மனதில் வையுங்கள். இந்த ஆட்சி கடுகளவு பார்ப்பன ஆதிக்கமுள்ள எந்தக் கட்சிக்குப் போனாலும் நமது கதி பழைய கதிதான். போராட ஆள் இல்லை. சுத்தமாக ஆளே இல்லை. எனக்கும் எழுந்து நிற்க முடியாத வயதாகி விட்டது. முன்னெச்சரிக்கையோடு நம்மவர்கள் நடந்து கொள்ள வேண்டும்”.
- தோழர் பெரியார், விடுதலை, 01.12.1970, “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?” நூல்.
இப்படித்தான் அந்தத் தலையங்கம் முடிகிறது. தமிழ்வழிக்கல்விக்கு ஆதரவான அறிக்கை என்றால், அந்த அறிக்கையின் முடிவுப் பகுதியில் கட்டாயம் தமிழ்வழிக்கல்வி பற்றித்தான் இருந்திருக்கும். இந்த அறிக்கை மட்டுமல்ல, பொதுவாழ்வில் “அறிக்கை” என்ற பண்பு தொடங்கிய காலம் முதல் இன்றுவரை, எந்த நோக்கத்திற்காக அறிக்கை வெளிடப்படுகிறதோ, அந்த நோக்கம் தான் இறுதிப் பகுதியில் உறுதியான கருத்தாக முன்வைக்கப்படும்.
பெரியாரின் “நமது கடமை” என்ற அறிக்கை தொடக்கம் முதல் முடிவு வரை, முற்று முழுதாக தி.மு.க.ஆட்சியைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இடையில் சில பத்திகள் பயிற்றுமொழி பற்றி வருகிறது.
அதேசமயம் அதன் இறுதிப் பகுதியில், “அடுத்த ஆட்சிக் காலத்தில் இதைச் சரிபடுத்திக் கொள்ள முடியும் என்பது எனது உறுதியான கருத்தாகும்” என்று உறுதி கொடுக்கிறார். அதன்பிறகு நடந்த 1971 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 184 தொகுதிகளைக் கைப்பற்றி மிகப்பெரும் பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. கலைஞர் மீண்டும் முதல்வரானார். “நமது கடமை” அறிக்கையில் பெரியார் உறுதி கொடுத்தபடி, தமிழ்வழிக்கல்வி அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை.
இந்த வரலாற்றில் நாம் வெளிப்படுத்த வேண்டிய மற்றொரு தகவல் என்னவென் றால், தமிழ்வழிக் கல்வியை தி.மு.க. அறிவித்தபோது, தமிழ்த்தேசிய இயக்கங் களின் தலைவர்களில் மூத்தவர், தோழர் பழ.நெடுமாறன் அவர்கள் தமிழ்வழிக் கல்வியை எதிர்த்து மாணவர் போராட்டங்களைத் தூண்டிவிட்டார். இதை நாம் பரப்ப வேண்டும். தோழர் சுபவீ அவர்கள் தமது வலைப்பூவில் இந்தத் தகவலைப் பதிவுசெய்துள்ளார்.
1967 இல் ஒரே நேரத்தில் தி.மு.க வும், ம.பொ.சியின் தமிழரசுக் கட்சியும் தமிழ்வழிக் கல்வி, தமிழ் வழி அரசியல், தமிழ்வழிஆட்சி என்றெல்லாம் கிளர்ச்சிகளை நடத்தியபோது, தி.மு.க வையும், தமிழரசுக் கட்சியையும் பெரியார் கடுமையாகக் கண்டித்தார். “தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவோம்” என்று அறிவித்த தி.மு.க. அமைச்சர்களை, அறிவித்த உடனேயே கடுமையாகக் கண்டித்தார். அந்த அறிக்கை 05.04.1967 விடுதலையில் வந்துள்ளது. சில பத்திகளுக்கு மேலே அதைப்பதிவு செய்துள்ளேன். மீண்டும் படித்துக்கொள்ளுங்கள்.
1970 க்குப் பிறகு, 1972 ஆம் ஆண்டில் பெரியார், மொழி உணர்ச்சிக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்.
“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டுநினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதளவாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதளவாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சிஇருந்தால்தான் முடியும்”
.- தோழர் பெரியார், விடுதலை, 25.07.1972
பெரியார் தமிழ் வளர வேண்டும். தமிழ்மொழி தமிழர்களின் வாழ்வுக்குப் பயன்பட வேண்டும் என எண்ணியவர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது எதிர்ப்பு என்பது ஒரு அக்கறையுள்ள விமர்சனம் தான். அந்த விமர்சனத்தில் இருந்த கசப்பான உண்மை அவரது இறுதிக்காலத்திற்குப் பிறகு இன்றுவரையும் மாறவில்லை.
பயிற்றுமொழி பற்றிய பெரியாரின் இறுதிக்கருத்து: ஆங்கிலவழிக் கல்வியே!
1970 , 1972 க்குப் பிறகு 1973 இல் மீண்டும் “தமிழ் காட்டுமிராண்டி பாஷை” என்கிறார். “குழந்தைகள் அனைவரும் வீட்டில் உரையாடும்போதுகூட ஆங்கிலத்தில் பேசவேண்டும்” என்றும், ஆங்கிலத்தால்தான் நாகரீகம் வளரும் என்றும் பேசியுள்ளார்.
“கேள்வி: தமிழ்மொழியைக் “காட்டுமிராண்டி பாஷை” என்று நீங்கள் குறிப்பீட்டீர்களே?
பெரியார்: ஆமாம். சொன்னேன். என்ன தப்பு?...இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ் மேலே அன்பா மாறியது. அதுதான் உண்மை. குழந்தைகளெல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேண்டும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வருகிறது. - கலைமகள் ஏடு, பிப்ரவரி 1973, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்” நூல்.
கேள்வி: முன்பு ஒருமுறை திருச்சியில் நடந்த சிலை திறப்புவிழாவில், தமிழ் காட்டு மிராண்டி மொழி என்று சொன்னீர்களே அப்படியானால், தமிழர்கள் காட்டுமிராண்டிகளா?
பெரியார்: தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக்காரணம், இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை இன்னம் நாம் மாற்றிக் கொள்ளாமல், 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணங்கள் காட்டிக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால், அதற்கு என்ன பொருள்?
கேள்வி: தமிழ் இலக்கியங்களை நீங்கள் குறை கூறுவது ஏன்?
பெரியார்: தமிழ் இலக்கியங்களை எழுதிய புலவர்கள் அவற்றைக் கடவுளோடும், மதத்தோடும், இனத் தோடும் இணைத்து எழுதி வைத்திருக் கிறார்களே தவிர, தமிழ் வளரவேண்டும் என்பதற்காக என்ன செய்து வைத்திருக்கிறார்கள்? தமிழ் என்றாலே, சைவம், மதம், கடவுள் என்று நினைக்கிறானே தவிர, மக்கள் வாழ்க்கைக்கு, வளருவதற்கு எவனும், எதுவுமே சொல்ல வில்லை. அதை எப்படி நம்முடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும்? ஏற்றுக் கொள்ள முடியும்?” -மாலைமுரசு பேட்டி, 16.09.1973, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்”
ஆங்கிலத்தால்தான் நாகரீகம் வளரும் என்றும், தமிழை நம் இனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்றும் தனது இறுதிக் கருத்தாகப் பதிவுசெய்துவிட்டார் பெரியார்.
தமிழ்த்தேசியக் குழுமங்கள் வழக்கம் போல, “இந்தநிலை 1930 - 40 களில் இருந்தது உண்மைதான். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக, அன்றைய சூழ்நிலையில் பெரியார் எடுத்த அந்த முடிவுகளை ஆதரிக்கிறோம். ஆனால், இந்த 2019 ஆம் ஆண்டிலும் அதை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. பெரியாரைக் காலத்திற்கு ஏற்றபடி புதுப்பிக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்றபடி தகவமைக்க வேண்டும்” என்று திரிபுவாதத்தைத் தொடங்கலாம். அவர்களுக்கு மட்டும் சில வரிகள்.
பார்ப்பனர்கள் இன்றைய சூழலிலும், ஆங்கிலவழிக் கல்வியைப் பயன்படுத்தி, அதன் மூலம் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளைத் தம்வசப்படுத்தி, அரசு, நீதி, நிதி, சட்டம், மருத்துவம், வணிகம், ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கத்தைத் தொடர்ந்து கொண்டுதான் வருகிறார்கள். இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை இயக்குநர்களில்கூட 90 விழுக் காட்டினர் பார்ப்பனர்களாகவே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த ஆதிக்கத்திற்கு அவர் களது பிறப்பும், சமுதாய அந்தஸ்தும் முக்கியக் காரணம். அதை அடுத்து அவர்கள் ஆயுதமாகக் கொண்டுள்ள ஆங்கிலவழிக் கல்வியும் மறுக்க இயலாத காரணமாகும். அந்த ஆங்கிலவழிக் கல்வியின் மூலம் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு சமஸ்கிருதப் பண்பாட்டைப் பரப்புகிறார்கள். தீபாவளி யையும், யோகாவை உலகமயமாக்குகிறார்கள். அந்த அணுகுமுறைதான் தமிழ்நாட்டுக்கும் வேண்டி யுள்ளது. “தமிழ் வாழ்ந்தால்தான் தமிழன் வாழ்வான்” என்பது தமிழ்த் தேசியம். “தமிழன் வாழ்ந்தால் தான் தமிழ் வாழும்” என்பது திராவிடம்.
தோழர் பொழிலன் சிறையிலிருந்து விடுதலைஆன பிறகு, “தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அதில் இதே “தமிழ்நாட்டில் தமிழே கல்விமொழி” என்ற பரப்புரையை நடத்தி வந்தார். அவர் தனிப்பட்ட முறையில் அவரது கொள்கையாகவும், நாம் தமிழர், மணியரசன் அமைப்புகளின் கொள்கையாகவும் இருக்கும் கருத்துக்களை அவரது “தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்” என்ற பெயரில் பரப்புரை செய்வதில் நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஆனால், “பெரியாரிய உணர்வாளர்கள்” என்ற பெயரில் பெரியாருக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பினால், அது பெரியாரியலுக்குத் திட்டமிட்டுச் செய்யும் துரோகம் ஆகும். தோழர் சீமானும், தோழர் மணியரசனும்கூடச் செய்யத் துணியாத தவறாகும்.
மத்தியக் கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டின் உரிமைகளே
“கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்குள் கொண்டு வரவேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தமிழ்நாடு அரசின் கட்டுப் பாட்டுக்குள் வர வேண்டும்” என்ற இலக்குகளை அனைத்துப் பெரியாரியலாளர்களும் ஏற்பார்கள். அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதோடு கூட கொஞ்சம் விஷத்தையும் சேர்த்துக் கொடுத்துள்ளார்கள். அதாவது, “இந்திய அரசின், பிற பன்னாட்டு நிறுவனங்களின் கல்விக் கூடங்கள் தமிழ்நாட்டில் இயங்க முழுமையாகத் தடைசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
கல்வித்துறை, மத்திய (Concurrence List) பட்டியலில் இருந்து தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால், அதன்பிறகு அகில இந்திய அளவிலான மத்தியப் பல்கலைக் கழகங்களும், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்.களும் தமிழ்நாட்டில் இயங்குவதில் என்ன சிக்கல்?
ஒருவேளை, மத்தியப் பட்டியலிலேயே கல்வி சிறைப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் தொடங்கப்படும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் “தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 80 விழுக்காடு இடஒதுக்கீடு” என்பதைக் கட்டாயமாக்கவேண்டும் என்று போராட வேண்டுமே ஒழிய, அத்தகைய நிறுவனங்களே வேண்டாம் என்பது பெரியாரியலுக்கு எதிரானது.
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி, சென்ற ஆண்டிலிருந்து அகில இந்தியக் கல்வி நிறுவனங்களின் உரிமையாகிவிட்டது. சட்டம், பொறியியல், பட்டயக் கணக்காளர் (ஊாயசவநசநன யஉஉடிரவேயவே), கட்டிட வடிவமைப்பாளர் (ஹசஉாவைநஉவ), இந்தியக் குடியுரிமைப் பணிகள் போன்ற அனைத்து முக்கியப் படிப்புகளும் மத்திய அரசின் உரிமையாகிவிட்டன. கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளிலும் நல்ல வேலை வாய்ப்புகளுக்கு வாய்ப்பான பிரிவுகள் இந்திய மயமாகிவிட்டன.
நம்மைப் போன்ற அமைப்புகளால், NEET, GATE, NATA போன்ற நுழைவுத்தேர்வுகளை ஒழிக்கமுடியவில்லை. அவை ஒழியும் வரை – அவற்றை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்ற நிலை நீடிக்கும் வரை அப்படிப்பட்ட தேர்வுகளை எழுதி உயர்கல்விக்குச் செல்பவர்கள் வட மாநிலங்களுக்கு மட்டுமே தான் செல்ல வேண்டுமா? தமிழ்நாட்டிலேயே உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை வழங்கும் மத்தியப் பல்கலைக்கழகங்களை ஏன் மறுக்க வேண்டும்?
தமிழ்நாட்டுப் பார்ப்பன மாணவர்கள் கொல்லப்பட்டார்களா?
வடமாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலச்செல்லும் தமிழ்நாட்டு மாணவர்கள் கொலை செய்யப்படுவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்ந்து நடக்கின்றன. அந்த மரணங்களைக் கண்டித்து தோழர் பொழிலனின் இயக்கம் கடந்த 2017 இல் (28.03.2017) ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதன்பிறகு, 2018 பிப்ரவரி 21 தாய்மொழி நாளில் ஒரு நிகழ்வை நடத்தினார். அவற்றில் அவர் வைக்கும் முழக்கங்கள்,
“இந்தியக் கல்வி நிறுவனங்களையும், இந்தியக் கல்வி முறைகளையும் மறுப்போம்! பிறநாட்டுக் கல்விநிலையங்களைத் தமிழ்நாட்டில் ஏற்காதே!
இந்த இரண்டு முழக்கங்களை முதன்மையாக வைத்துள்ளார். அனைவரும் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்றும் கோருகிறார்.
வடமாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், அதற்கு தீர்வாக, அங்கு அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்யப் போராட வேண்டும். அல்லது அதே தரமுள்ள மத்தியஅரசுக் கல்வி நிறுவனங்களைத் தமிழ்நாட்டிலேயே தொடங்கப் போராட வேண்டும். இந்த இரண்டையும் விட்டு விட்டு, “இந்தியக் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்குள் இயங்கக் கூடாது” என்பது எந்த வகையில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படும்?
இந்திய அரசுக்குத் தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணமாகக் கொடுக்கும் தொகை, வட மாநிலங்கள் கொடுக்கும் தொகையைவிட மிக அதிகமானது. மத்திய அரசு எவ்வளவு வேண்டுமானாலும் நம்மிடம் சுரண்டிச் செல்லலாம், நமக்குத் திருப்பித்தர வேண்டியதில்லை என்பதைத் தான் இந்தத் தீர்மானம் கூறுகிறது.
வடமாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள், அவர்கள் “தமிழர்கள்” என்பதால் கொல்லப்படவில்லை. “தலித்” மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள், “பிற்படுத்தப்பட்ட” மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து மத்தியக் கல்வி நிறுவனங்களுக்குச் கல்வி கற்கச் செல்லும் எந்தப் “பார்ப்பானும்” இன்றுவரை கொல்லப்பட்டதில்லை.
இந்தப் பிரச்சனையில் தமிழர்களின் கோபத்தை முதன்மை எதிரியான பார்ப்பனர் களை நோக்கித் திருப்புபவர்கள்தான் பெரியாரிய லாளர்கள். அதைவிட்டுவிட்டு, “இந்தியக் கல்வி நிறுவனப் புறக்கணிப்பு” என்பது பார்ப்பன ஆதிக்கத்தைக் காக்கவே பயன்படும். இந்தப் பார்ப்பனப் பாதுகாப்புப் பணியை ஒரு தமிழ்த் தேசிய அமைப்பு வெளிப்படையாகச் செய்வதில் நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. “பெரியாரிய உணர்வாளர்” என்ற பெயரில் அதைத் தொடங்க வேண்டாம் என்றே கூறகிறோம்.
தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு
பிற பன்னாட்டுக் கல்விநிறுவனங்களும் தமிழ் நாட்டில் இயங்கக் கூடாதாம். தமிழ்நாட்டு நிறுவனமோ, இந்திய நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும் கல்வியை வணிகமாக்கும் நிறுவனங்கள் வேண்டாம் என்று கூறுவது தான் சரியானது. எந்த நிறுவனங்களும் வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு எதிரானது.
உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங் களையும் ஒன்றாக - ஒரேமாதிரியான நிர்வாகமுறையில் இணைக்கும் முயற்சி இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் 1994 லேயே தொடங்கப்பட்டு விட்டது. கலை, அறிவியல் படிப்புகளை ஒன்றிணைக்க National Assessment and Accreditation Council (NAAC), பொறியியல், மருந்தியல், வணிகவியல், தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை களை ஒருங்கிணைக்க The National Board of Accreditation (NBA) என இரண்டு அமைப்புகள் இயங்குகின்றன.
உலகின் மிகப்புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களோடு, தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், இணைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றும் புதிது புதிதாக பல தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் உலகமயமாக்கலுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஒருவேளை இந்தத் தமிழ்த்தேசிய அமைப்புகள், தனித்தமிழ்நாடு வேண்டும் என்று துணிவுடன் “வாய்திறந்து பேசி”, அதன்பிறகு போராடி தனி நாடே அடைந்தாலும், இப்போது சர்வதேச அளவில் கல்வித்துறையில் நிலவும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். NAAC, NBA, ISO போன்ற அங்கீகாரங்களுக் காகவும், தரவரிசைக் குறியீடுகளுக்காக நாடு நாடாக அலைந்து தான் ஆகவேண்டும். ஒருவேளை தனிநாடு பெறும்போது சர்வதேசச் சூழல் மாறினால் ஒழிய இப்போதிருக்கும் உலகமயமாக்கலில் இருந்து நமக்கு விடிவு இல்லை.
ஆக, தனிநாடே அடைந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் முயற்சி செய்து கல்வித் துறையில் எதையும் மாற்ற முடியாது எனும்போது, அந்தத் தனிநாடு என்று வாய்திறந்து பேசவே முடியாத இன்றைய நிலையில், இந்திய நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது என்று தீர்மானம் போடுவதும், அதைப் பரப்புவதும் தமிழ்நாட்டுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும்.
இந்து இயக்கங்களோ, தமிழ்த்தேசிய இயக்கங்களோ, கம்யூனிச இயக்கங்களோ - இந்தப் பன்னாட்டுக் கல்வி நிறுவனப் புறக்கணிப்பைப் பார்ப்பன மாணவர்களிடம் பேச மாட்டார்கள். இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தேசிய இனங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, சிறுபான்மையின மக்களிடம் மட்டும் ஓடோடி வந்து பன்னாட்டுக் கல்வி நிறுவன எதிர்ப்புகளை முழங்குவார்கள். பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு, இந்த இந்துச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலும் கல்வி மறுக்கப்படுகிறது. வலதுசாரி, இடதுசாரி, தமிழ்த்தேசிய இயக்கங்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் கல்வி மறுக்கப்படுகிறது.
தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்ற முழக்கத்தை முன்னெடுப்பது போல, இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டுப் பட்டியலின மாணவர்களுக்கும், பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மையின மாணவர்களுக்கும் உரிய இடஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுப்பதே நம் கண்முன்னே உள்ள அவசியமான செயலாகும்.
பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் தங்களது நாடுகளிலேயே- தங்களது நிறுவனங்களிலேயே இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. அதனால், அந்த முறையை அப்படியே இந்தியாவிலும் செயல்படுத்துங்கள் என்று போராடுவதே உலக நடைமுறைகளை அறிந்த செயலாக இருக்கும்.
தனியார் துறை இடஒதுக்கீடு என்ற கருத்தை திராவிடர் இயக்கங்கள் பல ஆண்டுகளாகப் பரப்பி வருகின்றன. அதற்காகப் போராடியும் வருகின்றன. தனியார் கல்வி என்ற துறையிலும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் சிந்திப்பதன் விளைவுதான் “தமிழ்நாட்டில் தனியார் பன்னாட்டுக் கல்விநிறுவனங்களே வேண்டாம்” என்ற முழக்கம். இதைத் தமிழ்த்தேசிய அமைப்புகள் முழங்குவது இயல்புதான். உண்மையான “பெரியாரிய உணர்வாளர்களும்”, திராவிடர் இயக்கத் தோழர்களும் எந்த நாளும் இப்படி ஒரு தமிழ் இனத் துரோகத்தைச் செய்ய மாட்டார்கள்.
“பார்ப்பனர்” என அறிவிக்க என்ன தடை?
தீர்மானங்களில் எந்த இடத்திலும் “திராவிடர்”, “திராவிடம்” என்ற சொற்கள் வராமல் மிக மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள். அதுபோலவே, “பார்ப்பனர்” என்ற சொல்லும் தப்பித் தவறியும் வந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்துள்ளார்கள்.
நூல் முழுவதும் “பார்ப்பனியம்”, “பார்ப்பனிய அதிகாரவர்க்கம்” என்றெல்லாம் சுற்றிச்சுற்றி வருகிறார்கள். “பார்ப்பனர்” என்றும் “பார்ப்பன அதிகாரவர்க்கம்” என்று நேரடியாகச் சொல்வதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்?
“பார்ப்பனியம்” என்ற ஆதிக்கச் சிந்தனையானது பார்ப்பனர் உள்ளிட்ட அனைத்து ஜாதிகளிலும் இருக்கும் “மனநிலை” ஆகும். பார்ப்பனியம் அவசியம் ஒழிக்கப்பட வேண்டிய இலக்குதான். ஆனால், அந்தப் பார்ப்பனியத்தை உருவாக்கி, பரப்பி, நிலைபெற வைத்துக்கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான்.
தீர்மானங்களில் “பார்ப்பனிய” என்ற சொல்லுக்கு முன் “பார்ப்பன” என்ற சொல்லையும் சேர்த்து, “பார்ப்பன - பார்ப்பனிய” என்று வந்திருந்தால் அதுதான் திராவிடர் இயக்கங்களின் அடையாளமாகும்.
“பார்ப்பனியம்” என்றாலே பார்ப்பனர்களைத் தானே குறிக்கும்? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். நானும் அப்படித்தான் சமாதானமாக நினைத்தேன். ஆனால், இதே நூலில் பல இடங்களில் பன்னாட்டு நிறுவனங்களைக் குறிக்கும்போதும், இந்தியப் பெருமுதலாளிகளைக் குறிக்கும் போதும், வெளிப்படையாக, துணிவாக ரிலையன்சு, டாடா என்று நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாளிகளைக் குறிப்பிடும் போது, “முதலாளித்துவம்”, “முதலாளியியம்” என்றெல்லாம் பூசி மெழுகவில்லை. “முதலாளிகள்” என்ற சொல், நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளது. பார்ப்பனர்களைக் குறிப்பிட வேண்டிய இடத்தில் மட்டும் மறக்காமல் “ஈயம்” பூசப்பட்டுள்ளது. பார்ப்பனர்களைப் பார்ப்பனர்கள் என்று சொல்லக்கூட நடுங்குபவர்கள், தமிழ்த்தேசியர்களாக மட்டுமே இருக்க முடியும். திராவிடர் இயக்கத்தவராக இருக்க முடியாது.
இந்த மாநாட்டின் வெற்றிக்கு முழுமையாகப் பாடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகம், தமது “நிமிர்வோம்” (ஜனவரி 2019) மாத இதழில், “திசைவழி காட்டிய திருச்சிப் பேரணி” என்ற பெயரில் தீட்டியுள்ள தலையங்கத்தில், மிகத் தெளிவாக ஒரு வாக்கியத்தை வரையறுத்துள்ளது.
“ஜாதி ஒழிப்பு; ஜாதியின் உற்பத்தி சக்திகளான இந்து மதம்; பார்ப்பனியம்; அதை மூளையில் சுமந்து நிற்கும் ஜாதி ஆதிக்க வெறி; தமிழகத்தின் வளங்களையும் உரிமைகளையும் பறிக்கும் “இந்திய பார்ப்பன - பனியா அதிகார மய்யங்களின்” சுரண்டல்களை எடுத்துச் சொல்லி மக்களை சமூக - அரசியல் விடுதலைக்கு தயார் செய்யும் கடமை பேரணியில் பங்கேற்ற இயக்கங்களுக்கு உண்டு.”
இந்திய சமுதாய ஆதிக்க வர்க்கமான “பார்ப்பனர்”களையும், இந்தியப்பொருளாதார ஆதிக்க வர்க்கமான “பனியாக்”களையும் நேரடியாகப் பட்டவர்த்தனமாகக் குறிப்பிடுகிறது. இந்தப் பண்புதான் திராவிடர் இயக்கங்களின் பண்பு.
தமிழியம் வேண்டாம்; பெரியாரியம் போதும்!
அதுபோல, கூட்டமைப்பின் நோக்கங்களை விளக்கும், 3 ஆம் பக்கத்தில்,
“திருவள்ளுவரின் அறக்கருத்துக்களோடு ஊன்றியவர்கள் நாம்”....
...”மறைமலையடிகளாரின் தமிழ், பாவாணரின், பாவேந்தரின், பெருஞ்சித்திர னாரின் தமிழோடு, தமிழிய உணர்வோடு, தமிழ்நாட்டுரிமை மீட்பு உணர்வுகளோடு உறவாடி உரம் பெற்றவர்கள் நாம்”...
என்ற வரிகள் வருகின்றன. திருக்குறளைச் சில இடங்களில் பெரியார் ஆதரிக்கிறார். அவ்வளவு தான். திருக்குறளில் கூறப்பட்டுள்ளவை எல்லாமே அறக்கருத்துக்கள் தான் என்றும், அந்த அறக்கருத்துக்களில் ‘ஊன்றியிருக்கிறோம்’ என்றும் தமிழ்த் தேசியர்கள் கூறிக் கொள்ளலாம். பெரியாரியலாளர்களைப் பொறுத்தவரை திருவள்ளுவரையும் பெரியாரியக் கண்ணோட்டத்தில் விமர்சனங்களோடுதான் அணுகமுடியும்.
பெரியாரியலில் வள்ளுவர் பேசியதும் வரலாம். அதற்காக, பெரியாரியலாளர் களையும் இணைத்து, “திருவள்ளுவரின் அறக்கருத்துகளோடு ஊன்றியவர்கள்” என்று பார்ப்பனத்தனமாக எழுதுவது சரியல்ல. பெரியார், குடிஅரசுக் காலம் முதல் தனது இறுதிக் காலம் வரை வள்ளுவரையும், குறளையும் விமர்சிப்பதைப் பாருங்கள்.
கபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் "தெய்வத் தன்மையில்" இருந்து பாடுபட்டிருப் பதாய் சரித்திரம் கூறுகின்றன. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன. ராம் மோகன்ராய் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித் திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன.
இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது.மேற்கண்ட பெரியார்களுக்கு சிஷ்யர்களாக 100 பேர்களோ பதினாயிரம் பேர்களோ ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்.அவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லக்ஷம் அங்கத்தினர்கள் இருக்கலாம். மற்றப்படி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழய நிலைமையேதான். சட்டதிட்டங்கள் மூலம், வருணாச்சிரம கூட்டங்கள் மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
ஆகவே இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல்கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத் தக்கவர்கள் என்றும் சொல்லி சொல்லிக் கொள்ளு பவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது. -தோழர் பெரியர் - குடி அரசு - 20.10.1935
அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.
திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும் பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்மந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலக மெப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதிபேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும் படியாகவோ செய்த காரியங்கள் அல்ல. - தோழர் பெரியார், குடி அரசு - 05.04.1936
பட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ் படித்து சாமியானவர்கள். தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய, எவனும் பகுத்தறிவுவாதி யாகவில்லை. நமக்குத் தெரிந்து மறைமலை அடிகள் தமிழ்ப் படித்து சாமி ஆனவர்தானே. இப்போது நடந்தது சாமிசங்கரதாஸ் நூற்றாண்டு விழா. இந்த சங்கரதாஸ் என் வீட்டில் வந்து நாடகத்துக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். சங்கரம் பிள்ளை என்று பெயர். பிறகு சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆகி இன்று சாமி ஆகிவிட்டார். - தோழர் பெரியார் - விடுதலை - 3.10.1967
குறளை ஒரு அளவுக்கு நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதை பரப்பியதில் எனக்கு பெருமை பங்கு உண்டு. குறளைப் பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது இருந்தபோது குறள் மாநாடு கூட்டி, தமிழ்ப் புலவர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி குறளைப் பற்றி மக்களுக்கு விளக்கம் செய்து குறளைப் பரப்பினேன். இந்த மாநாட்டிற்கு மறைமலை அடிகளைத் தவிர மற்ற தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் வந்திருந்தனர். - தோழர் பெரியார் - விடுதலை - 3.10.1967
நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். - விடுதலை - 06.08.1968
வள்ளுவன் அப்படிச் சொன்னான்; தொல்காப்பியன் இப்படிச் சொன்னான் என்றால், அதெல்லாம் அவன் வாழ்ந்த காலத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர, இப்போதைக்கு அவை பயன்படக் கூடியதல்ல. இந்த வாழ்க்கைக்கு எவனும் வேலி போட முடியாது. நாளைக்கு எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மனிதன் மாறிக் கொள்ளத்தான் வேண்டும். -விடுதலை - 06.08.1968
தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் தமிழர்களால், தமிழ்ப்புலவர்களால் போற்றப்படுகிறவர்களில் அய்ந்து பேர்கள் எதிரிகளாவார்கள். அவர்கள் யார் என்றால், 1.வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார்.
இந்த அய்ந்து பேர்களுக்கும் பகுத்தறிவில்லை என்பதோடு இவர்கள் இனஉணர்ச்சி அற்ற இனவிரோதிகளாக ஆகிவிட்டார்கள். வள்ளுவன் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினான் என்பதல்லாமல் அதில் பகுத்தறிவைப் பயன்படுத்தினான் என்று சொல்வதற்கில்லை. அதில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆரியம் ஆகியவை நல்லவண்ணம் புகுத்தப் பட்டிருக்கின்றன. குறளுக்கு மதிப்புரை கொடுத்தவர்களில் சிலர் “குறள் வேத, சாஸ்திரங்களின் சாரம்” என்று கூறியிருக்கிறார்கள். குறளை ஊன்றிப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும்.
...தமிழனுக்கு வேண்டியது மானம், அறிவு, இனஉணர்ச்சி ஆகியவைகளேயாகும். இவற்றிற்கு மேற்சொன்ன திருவள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் ஆகிய அய்வரும் - இவர்களது நூல்களான குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய அய்ம்பெரம் இலக்கியங்களும் எந்த அளவுக்குப் பயன்படும் என்று சவால் விட்டுக் கேட்கிறேன் அல்லது எந்த இவற்றிற்கு உயிர், செலாவணி, இருக்கும்வரை தமிழனுக்கு மானம், அறிவு, இன உணர்ச்சி ஏற்படமுடியுமா? ஏற்படுத்த முடியுமா? என்று கேட்கிறேன்.- தோழர் பெரியார், விடுதலை 90 வது பிறந்தநாள் மலர், 17.09.1968
இந்தச் சான்றுகள் போதாது. பெரியார் இறுதியில் பேசியது தான் வேண்டும் என்றால், அதையும் தருகிறேன். படித்துக் கொள்ளுங்கள்.
“பெரியார்: ஏன் குறளை எடுத்துக்குங்க! நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன்.
கேள்வி: ஏன் கண்டிக்கிறீர்கள்?
பெரியார்: குறளோடு நின்னுட்டா வளர்ச்சி குன்றி விடுமேன்னுதான். குறள் 2000 வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது. பெண் ஒழுக்கம் பற்றி எவ்வளவு சொல்லியிருக்கு குறளில்? ஆண் ஒழுக்கம் பற்றி....? “தாம் வீழ்வார்...” என்ற குறளைப் பாருங்க. அதுதான் மோட்சம் என்கிறார் வள்ளுவர். அந்தக் காலத்து நாகரீகம் அப்படி. இந்தக் காலத்துக்குக் குறள் கருத்துக்கள் எல்லாமே ஒத்துவர முடியுமா?
நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர்கூட அதை (குறள்) ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்ன கேட்டார். குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக் கிட்டாரு. இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தையது குறள். அதை அப்படியே இப்பவும் ஏத்துக்கணும்னா?” -கலைமகள் ஏடு, பிப்ரவரி 1973
பெரியார் இறுதிவரைக் கடுமையாக எதிர்த்த வள்ளுவரை, தமிழ்த்தேசிய அமைப்புகள் தங்களது நாயகராக ஆக்கிக் கொள்வதில் நமக்கு முரண்பாடு இல்லை. பெரியார் தூக்கி எறியச் சொன்ன குறளையும், வள்ளுவரையும் அதே பெரியாரின் பெயரால் மீண்டும் முதல் இடத்திற்குக் கொண்டுவர முயற்சிப்பதைக் கண்டிக்க வேண்டியுள்ளது. எந்தத் தத்துவமாக இருந்தாலும் எங்களுக்கு உரைகல், எங்களுக்கு வழிகாட்டி பெரியாரியம் மட்டுமே.! பெரியாரிய ஆயுதம் கையில் இருக்கும் வரை, எங்களுக்குக் குறளும் வேண்டாம். உங்கள் குறளிவித்தைகளும் வேண்டாம்.
வள்ளலார், வள்ளுவர் எவரும் எமக்குக் கடவுள் அல்ல; வழிகாட்டிகளும் அல்ல!
மேலும் “தமிழியம்” குறித்து நாம்தமிழர் கட்சி தனது ஆவணத்தின் 37 பக்கத்தில்,
“ஆசீவகம், உலகாய்தம், வள்ளுவம், வள்ளலாரியம் முதலிய தமிழ்நெறிகளின் தொகுப்பு” என்று விளக்கம் கூறியுள்ளது.
இந்தத் தமிழ்த்தேசிய அமைப்புகள் அனைத்தும் தங்களது தலைவராக - தமிழ்த் தேசியச் சிற்பியாக ஒருவரைக் காட்டுவார்கள். அவர்தான் மா.பொ.சி. தமிழ்நாட்டு சமுதாய, அரசியல் தளங்களில் பெரியாரின் பெயரைக் கேட்டாலே அலர்ஜி வருபவர்களுக்கெல்லாம் மாமருந்தாக இருந்தவர்தான் அந்த மா.பொ.சி.
அவர் வள்ளலாரைப் புகழ்ந்து எட்டு நூல்களை எழுதியுள்ளார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, வள்ளலாரும் பாரதியும், வள்ளலார் வளர்த்த தமிழ், வள்ளலார் வகுத்த வழி, வள்ளலார் கண்ட சாகாக் கலை, வானொலியில் வள்ளலார், வள்ளலாரும் காந்தியடிகளும், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ஆகிய அந்த எட்டு நூல்களும் வள்ளலாரியம் என்பதைக் கட்டமைக்கின்றன.
மா.பொ.சிக்குப் பிறகு தோழர் பழநெடுமாறன் அவர்களும் “வள்ளலார் மூட்டிய புரட்சி” என்ற நூலை எழுதி, தம் பங்குக்கு வள்ளலார் புகழ் பாடியுள்ளார்.
தோழர் மணியரசன் அவர்களது தமிழ்த் தேசியப் பேரியக்கம், வரும் 2019 பிப்ரவரி 24 இல் கும்பகோணத்தில், “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் வள்ளலார் பெருவிழா” என்ற நிகழ்வை நடத்துகிறது. அந்த விழாவைத் தோழர் மணியரசன் அவர்களோடு நாம்தமிழர் கட்சியும் இணைந்து பங்கேற்கிறது.
பாரதியையும், இந்து மதத்தையும், சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த மா.பொ.சியின் சீடர்கள் இன்று ஆசீவக, உலகாய்த, வள்ளுவ, வள்ளலாரியங்களைப் பேசுவது நமக்கு மகிழ்ச்சிதான். இந்து வேத மதத்திற்கும், அதன் பண்பாடு, பழக்க வழக்கங் களுக்கும் எதிராகப் போராடிய தலைவர்களையும், தத்துவங்களையும் தமிழ்த்தேசிய இறையியலாக முன்னெடுப்பதில் உண்மை யிலேயே ஆரியப் பார்ப்பன எதிர்ப்புதான் அடிப்படையாக இருக்கிறதா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
ஜல்லிக்கட்டுக்குச் சான்று எங்கே என்று கேட்டால், சிந்துச் சமவெளியிலிருந்து சான்று வருகிறது. “தமிழ்மொழி இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி” என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் வருகின்றன. அப்படியானால் பார்ப்பன எதிர்ப்புக்கு மட்டும் ஏன் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருந்து மட்டும் தலைவர்களைக் காட்ட வேண்டும்?
ஆசீவகத்துக்கும் முன்பே, இந்து - வேத மதத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர்கள் இந்தியத் துணைக்கண்ட அளவில் பரந்து விரிந்த எல்லையில் வாழ்ந்திருக்கிறார்கள். புத்தருக்கும் முன்பே பார்ப்பனர்களோடும், அவர்களது தத்துவங்களோடும் போராடியவர்களை வரலாறு பதிவு செய்திருக்கிறது. கணாதர், கபிலர் போன்றோருக்கும் முன்பாகவும் நமக்கான தலைவர்கள் வாழ்ந்திருக் கிறார்கள்.
புத்தருக்கும் முந்தைய தலைவர்கள் பற்றித் தமிழ்த்தேசியர்களுக்குத் தெரிந்திருக்காது என்று கூட நாம் குறைத்து மதிப்பிடலாம். ஆனால், புத்தரையும், புத்தத்தையும் அனைவரும் அறிந்திருப்பார்கள். அந்த புத்தரை - பெளத்தத்தை, இவர்களது தமிழியத்துக்குள் இணைக்கத் தடையாக வருவது எது?
பெளத்தம் வடமாநிலத்தைச் சேர்ந்தது என்பார்களா? தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் எல்லாவற்றிலும் பெளத்தமும், சமணமும் பாடப்பட்டுள்ளது. இந்த வள்ளலாரைப் பற்றித்தான் எந்தச் சங்கஇலக்கியமும் பாடவில்லை. பாடியிருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டிலும் பார்ப்பனர்களால், கடுமையாக எதிர்க்கப்பட்ட - அழிக்கப்பட்ட இறையியல் பெளத்தம் அல்லவா?
தோழர் அம்பேத்கரைத் தமிழ்நாட்டுக்காரர் அல்ல என்ற பெயரில் புறக்கணிப்பவர் களுக்கும், பெளத்தம், சமணம், சாங்கியம், நியாயம் போன்ற ஆதிகாலப் பார்ப்பன எதிர்ப்புக் கருத்தியல்களைப் புறக்கணிப்பவர்களுக்கும் என்ன வேறுபாடு?
2016 ஆம் ஆண்டு தி.வி.க நடத்திய வேத மறுப்பு மாநாட்டில்கூட வள்ளலார் பேசப்பட்டார். அதேசமயம் அந்த மாநாட்டின் அறிவிப்புகளில் இந்திய அளவில் இயங்கிய அனைத்துப் பார்ப்பன எதிர்ப்புத் தத்துவங்களும், தலைவர்களும் பேசப் பட்டனர். அதுதான் திராவிடர் இயக்கங்களின் அடையாளம்.
சீமானின் தமிழியம் வேறு; எங்களின் தமிழியம் வேறு; எங்களது தமிழியத்தில் புத்தரும் வருவார் என்பார்களா? புத்தரைக்கூட பெரியார் ஒரு தோழமைச் சக்தியாக மட்டுமே கருதினார். கடவுளாக அல்ல. நமக்கு ஒரு மதம் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பெரியாரியலாளர்களாகவே இருக்க முடியாது. பெளத்தம் ஒரு வழிகாட்டும்நெறி என்ற அளவில் வைத்துக் கொண்டால்கூட, தோழர் அம்பேத்கரால் சீர்திருத்தப்பட்ட பெளத்தத்தைத்தான் நாம் வரவேற்க முடியும்.
ஒருவேளை, “நாங்கள் மதத்தைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ பேசவில்லை. வள்ளுவரையும், வள்ளலாரையும் ஒரு பார்ப்பன எதிர்ப்புப் போராளிகளாகவே முன்னெடுக்கப் போகிறோம்” என்று தோழர்கள் திருமுருகனும், பொழிலனும் கூறலாம்.
அதைக்கூட, பேச வேண்டிய இடம் பெரியாரிய மேடை அல்ல. தமிழ்த்தேசியம் என்ற கருத்தை மட்டும் ஏற்பவர்களிடம் போய்ப் பேச வேண்டும். பார்ப்பனக் கடவுளர்களையும், பார்ப்பன இறையியல் தத்துவங்களையும் நம்புபவர்களிடம் போய்ப் பேச வேண்டும். எங்களிடம் பேசுவது தவறு என்கிறோம். வள்ளலாரையும், வள்ளுவரையும் தோழமையாகப் “பேசிவிட்டுச்” செல்வது திராவிடம். அவர்களை முன்னிறுத்தி தொடர்ச்சியாக “விழா எடுப்போம், மாநாடு நடத்துவோம்” என்பதும் தமிழ்த்தேசியம்.
திராவிடர் இயக்கங்களின் தலைவர்களாக - ஆரியப் பார்ப்பன எதிர்ப்புத் தளபதிகளாக நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள். பெரியார் காலத்திலும், நீதிக்கட்சியின் காலத்திலும் நடந்த மிகப்பெரும் சமுதாயப் புரட்சியின் வேர்களாக - முகம் தெரியாத தலைவர்கள் ஏராளமாக வாழ்ந்து மறைந்துள்ளனர். திராவிடர் இயக்கங்கள் அவர்களின் பிறந்தநாட்களைத்தான் கொண்டாட முடியும்.
கடவுளே இல்லை, கடவுளே வேண்டாம், மதங்களே வேண்டாம் என்பவர்களின் மேடையில் ஏறி தமிழ்த்தேசியக் கடவுளர்கள் போல எவரையாவது உயர்த்திப் பிடிப்பது - தமிழ்த்தேசிய இறையியல் என்று எதையாவது அறிமுகப்படுத்துவது என்ற இரண்டும் பெரியாரியலுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
பெரியாரைப் பிறவிப்பகைவராகக் கருதிய மா.பொ.சி அவர்களும், அவரது சீடர் களான நாம் தமிழர் கட்சியும், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் வெளிப்படையாகக் கூறி வருவதை, தோழர்கள் பொழிலன், திருமுருகன்காந்தி ஆகியோர் வார்த்தை விளையாட்டுக்களில் கூறியுள்ளார்கள் என்பதை 24 வது தீர்மானம் உறுதிப் படுத்துகிறது.
நட்பு சக்திகளுடன் அணுகுமுறை
இப்படி நுணுக்கி, நுணுக்கி, பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தால், பார்ப்பனர்களை எப்படி வெல்வது? தோழமைச்சக்திகளை நட்போடு பார்க்க வேண்டாமா? அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டாமா? ஒரு ஒருங்கிணைப்பு வேண்டாமா? என்ற கேள்விகள் எழலாம்.
நட்பு முரண்பாடு, பகைமுரண்பாடு, தோழமைச் சக்தி, கூட்டுழைப்பு, ஒருங்கிணைப்பு போன்ற சொல்லாடல்கள் காலந்தோறும் திராவிடர் இயக்கத்தினரை நோக்கி மட்டுமே வருகின்றன. அனைத்துக் கருத்தியல் அமைப்புகளுக்கும் அவற்றை எடுத்துச்சொல்ல யாரும் இல்லை.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்திய அளவில் மட்டுமல்ல; மனித குல விடுதலைக்கும், அனைத்து உயிரினங்களின் நல்வாழ்வுக்காகவும் உலக அளவில் பாடுபடும் அனைத்து அமைப்புகளோடும் நட்போடு - ஒருங்கிணைந்து இயங்க நாம் என்றும் தயாராகவே இருக்கிறோம்.
அந்த ஒருங்கிணைப்பு என்ற பெயரில், ஒட்டுமொத்த அடித்தட்டு மக்களுக்கு எதிரான கருத்துக்களையும், பெரியாரியலுக்கு எதிரான கருத்துக்களையும் துணிச்சலுடன் முன்வைப்பதும் - அந்த மக்கள்விரோதக் கருத்துக்கள் தான், ஒருங்கிணையும் அனைத்து அமைப்புகளின் நோக்கங்கள் என்றும் அறிவிக்கும் பொறுப்பற்ற போக்கைத்தான் விமர்சிக்க விரும்புகிறோம்.
“பெரியார் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான தலைவர், அவர் 0.5 விழுக்காடு மட்டுமே தலித் மக்களுக்குப் பாடுபட்டார்” என்ற குற்றச்சாட்டைக் கூறுபவர்கள் தங்களது பெரியாரிய எதிர்ப்புக் கருத்துக்களை எந்தவிதத் தயக்கமும் இன்றி முன்வைக்கின்றனர். கூட்டமைப்பிலும் பொறுப்பாளர்களாகவே இயங்குகின்றனர்.
இன்றுவரை அந்தக் கருத்துக்களைத் தெரிவித்த தோழர் அரங்க.குணசேகரன் அதற்காக வெளிப்படையாக விளக்கம் அளிக்கவில்லை. எந்தப் பெரியாரியலாளரும் அதற்காக அவருக்கு வெளிப்படையான கண்டனத்தையோ அல்லது அவரது குற்றச்சாட்டுக்கு உரிய பதிலையோ பதிவு செய்யவில்லை. பெரியாரியலை எதிர்ப்பவர்களுக்கு உள்ள இந்த உரிமை, பெரியாரியலைப் பின்பற்ற நினைப்பவர்களுக்கும் இருக்கிறது.
இந்தக் கட்டுரைகளில் நான் எழுதிய எந்தக் கருத்தும் எனது சொந்தக் கருத்துக்கள் அல்ல. மாநாட்டுத் திடலிலேயே எண்ணற்ற தோழர்கள், பல்வேறு அமைப்புகளின் தோழர்கள் எம்மிடம் பேசியவற்றின் தொகுப்பு தான் இது. தோழர்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்ட செய்திகள் இன்னும் இரண்டு பாகங்கள் எழுத வேண்டிய அளவுக்கு உள்ளன. களப்பணியாற்றும் திராவிடர் இயக்கத் தோழர்களைப் பொறுத்தவரை பெரியாரியலுக்கும் - தமிழ்த்தேசிய மாயைக்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு அறிந்தே உள்ளனர்.
இன்றைய பார்ப்பன - இந்துமத ஆட்சியின் விளைவாகப் பெரியாரியலை நோக்கி ஏராளமான இளைஞர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள். அவர்களுக்குப் பெரியாரியலை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. “பெரியாரின் இறுதி இலக்கு” பற்றிய அடுத்த பாகத்துடன் இக்கட்டுரை நிறைவடையும்.
- அதிஅசுரன்