ஆண்டாள் –நாள்தோறும் நாளிதழ்களைக் கையில் எடுத்தால் ஆண்டாள் சர்ச்சை என்று பக்கத்துக்குப் பக்கம் செய்திகள். அப்படி யென்ன ஆண்டாளுக்கு ஆகிவிட்டது? கவிப் பேரரசு வைரமுத்து ஆண்டாளைத் தேவதாசி என்று கூறி விட்டார். உண்மையில் அவர் அவ்வாறு கூறவில்லை என்பது வேறு விஷயம்.

aandaal 311அவர் “தமிழை ஆண்டாள்” என்னும் தலைப்பில் ஆண்டாள் எழுதிய திருப்பாவை என்னும் ஆண்டாள் பாசுரத்தில் உள்ள தமிழின் சிறப்பைக் குறித்து எழுதிய கட்டுரையின் இறுதியில், “வேறொரு ஆய்வாளர் ஆண்டாள் கோயிலில் தேவதாசியாக இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பக்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று தெரியவில்லை” என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குள் இந்துமதக் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள், ஆண்டாள் கோயிலுக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தனர். ஒருநாள் மட்டும்தான். அடுத்த நாளே வைரமுத்து வுக்கு 03.02.2018-க்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கெடு வைத்துவிட்டு உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டார்கள்.

சரி,தேவதாசி என்றால் யார்? ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த பெண்களைக் குறிப்பிட்ட வயதில் பொட்டுக்கட்டி, கோயில்களில் விட்டுவிடுவார்கள். அவர்கள் கோயிலில் நடனமாடுவது மட்டுமல்ல, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் , இறைவ னுக்குப் பணிசெய்ய பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்வார்கள். இந்த நடைமுறையை எதிர்த்து, இது பெண்களை மிகவும் இழிவுபடுத்துவதாக உள்ளது, இதைத் தடைசெய்யவேண்டும் என்று பெரியார் குரல் கொடுத்தபோது பார்ப்பனர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.

சட்டமன்றத்தில் தேவதாசி முறையை ஒழிக்க மசோதா நிறைவேற்றியபோது, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.சத்தியமூர்த்தி அய்யர் அதைக் கடுமையாக எதிர்க்கிறார். எதிர்த்தது மட்டு மல்லாமல், தேவதாசி என்பவர் கடவுளுக்குத் தொண்டு செய்பவர், அந்தப் பாக்கியம் எல்லோ ருக்கும் கிடைக்காது. ஏற்கனவே உள்ள மரபுகளை மாற்றக்கூடாது என்று வாதிடுகிறார்.

அப்போது சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரான டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், தோழர் பெரியாரின் ஆலோசனையைப் பெறுகிறார். பிறகு சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி அய்யருக்குப் பதிலளிக்கிறார், “இத்தகைய கடவுள் தொண்டினை இவ்வளவு நாளும் எங்கள் இனப்பெண்கள் செய்து வந்தார்கள். இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் செய்யட்டும்” என்றார். சத்தியமூர்த்தியால் இதை மறுத்துப் பேசமுடிய வில்லை. இதற்குப் பிறகுதான் தேவதாசி ஒழிப்பு சட்டமாக்கப்பட்டது.

அன்று தேவதாசி என்பவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்பவர்கள் என்று கூறிய பார்ப்பனர்கள் இன்று ஆண்டாளைத் தேவதாசி என்று வைரமுத்து கூறியதற்கு, அதாவது அவர்கள் மொழியில் சொன்னால் கடவுளுக்குத் தொண்டு செய்பவர் என்று கூறியதற்காக ஏன் கோவப்படுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இதிலிருந்து தேவதாசி என்பது பெண்களை இழிவுபடுத்தும் சொல் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. அந்த இழிவை நீக்கவும் பெரியாரால்தான் முடிந்தது.

உண்மையில் ஆண்டாள் என்று ஒரு பெண் இருந்தாளா? அவள் பெரியாழ்வாரின் மகளா? அல்லது அவரால் கோயிலில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவளா? என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. ஆனால், உண்மையில் அப்படியொரு பெண் இருந்து பெருமாளைத் தன் கணவனாக மனதில் நினைத்து உருகி உருகிக் காதலித்து அந்த உணர்வுகளைப் பாசுரங்களாக பாடியிருப்பதாகவும் எடுத்துக்கொண்டால்,

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பெண் தன் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியதைப் பாராட்டி அவளைக் கடவுளாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா? என்பது சந்தேகத்துக் குரியது. ஏனென்றால், இந்த நூற்றாண்டில் கூட குட்டிரேவதி எழுதிய “முலைகள்” கவிதை நூல் சக ஆண் எழுத்தாளர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. ஒரு பெண் இப்படி யெல்லாம் எழுதலாமா? என்று ஆளாளுக்கு விமர்சனம் செய்தார்கள். எனவே பல நூற்றாண்டு களுக்கு முன் ஒரு பெண் தன் காம இச்சைகளைப் பாசுரங்களாகப் பாடியிருப்பாள் என்பதோ, அவளைக் கடவுளாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதோ நம்பும் படியாக இல்லை.

இப்படிப்பட்ட கற்பனைக் கதாபாத்திரமான ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்திவிட்டார் என்றும் அவர் மன்னிப்புக் கேட்கும்வரை உண்ணா விரதம் இருக்கப்போகிறேன் என்றும் திருவில்லி புத்தூர் ஜீயர் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறார். இரண்டாவது நாளன்று பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் (பார்ப்பனர்) ஆகியோரது வேண்டுகோளை ஏற்று எந்த நிபந்தனையும் இன்றி உண்ணாவிரத்தைக் கை விடுகிறார்.

ஆனால், இதே எச்.ராஜா வைரமுத்துவை சாதாரண மனிதர்கள்கூட பேசத் தயங்கும் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். அவரைத் திட்டு வதற்குப் பதிலாக அவரது தாயார், மனைவி ஆகியோரை இழிவுபடுத்துகிறார். மேலும், இந்துக் கடவுளை இழிவுபடுத்தியதுபோல் பிற மதக் கடவுளைப் பற்றி பேசியிருந்தால் இந்நேரம் அவரது தலை தரையில் உருண்டிருக்காதா? என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிப் பார்க்கிறார். தமிழக மக்கள் 60 ஆண்டுகளாக பண்படுத்தப் பட்டவர்கள். அவர்களுக்குத் தெரியும் எந்த விஷயங்களுக்கெல்லாம் எதிர்வினையாற்ற வேண்டுமென்று ஆண்டாளைப் பற்றிய கவலை நமக்கில்லை. நாம் நமது பகுத்தறிவு பரப்புரையைத் தொடர்வோம்.

Pin It