பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளியாய் இருப்பதைவிட காஷ்மீரில் சண்டையிடும் ஒரு இராணுவ வீரராய் இருப்பது தான் பாதுகாப்பானது.
இந்த வருடத்தில் மட்டும் கிளர்ச்சியின் விளைவாக 54 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப் பட்டதைப் போலவே ஏறத்தாழ 90 பாதாளச் சாக்கடைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளிகளும் இறந்திருக்கின்றனர்.
நகர்புற இந்தியாவில் இருக்கும் ஒரு பாதாளச் சாக்கடைக் குழிக்குள் இறங்கி, சுத்தம் செய்யும் தொழிலாளியின் வேலையில் இருக்கும் ஆபத்தும், ஜம்மு - காஷ்மிரில் நடக்கும் கிளர்ச்சிக்கு எதிராகப் போராடும் பாதுகாப்பு வீரர்களுக்கு இருக்கும் ஆபத்தும் ஏறத்தாழ ஒன்றுதான். குறைந்தபட்சம் கடந்த எட்டு வருடங்களில் மட்டும் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர் களின் இறப்பு எண்ணிக்கையும் பெரும் ஆபத்துகள் சூழப்பட்ட மாநிலங்களில் தரையிறக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளின் இறப்பு விகிதமும் ஒன்றாகத்தான் உள்ளது.
தீவிரவாதத்தால் ஏற்படும் உயிர் சேதங்களை பதிவு செய்யும் தெற்காசிய தீவிரவாதத்தைப் பற்றிய வலைதள (South Asia Terrorism Portal) பதிவின்படி 2010-ஆம் ஆண்டிலிருந்து ஆகஸ்டு 27, 2017 ஆம் வரையிலும் ஜம்மு - காஷ்மிரில் 4 1 1 பாதுகாப்புப் படைவீரர்கள் இறந்துள்ளார்கள். அதன்படி பார்த்தால், 2010 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டிற்கும் 51 படைவீரர்கள் ஜம்மு -காஷ்மிரில் நடக்கும் கிளர்ச்சியில் பலியாகிருக்கிறார்கள்.
மகசேசே (Magsaysay) விருது வென்ற பெஸ்வாடா வில்சனின் (Bezwada Wilson) Safai Karmachari Andolan என்னும் துப்புரவு தொழிலாளி களுக்காகப் போராடும் அமைப்பு சேகரித்த தகவலின் அடிப்படையில், சுத்தம் செய்வதற்காக மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பாதாளச் சாக்கடைக் குழிக்குள் குதிக்கும் தொழிலாளிகளைப் பிணங்களாகத்தான் மீட்டெடுத்திருக்கிறார்கள் என்கிறது அந்த அமைப்பின் தரவு. 2010 ஆம் ஆண்டிலிருந்து இது போன்று 356 இறப்புகள் அல்லது ஒவ்வொரு வருடமும் 44 இறப்புகள் நடந்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் இந்த வருடாந்திர சராசரி மதிப்பீடு மேலும் அதிகரித்தது.–இதுவரை இந்தியாவின் பாதாளச் சாக்கடை அமைப்பானது 90 பேரைக் கொன்றுள்ளது. ஒப்பீட்டு வேறுபாடு அடிப்படையில், தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 54 பாதுகாப்பு படைவீரர்களும் இறந்துள்ளனர்.
அதன் பின்னர் மறுபடியும், நாடுமுழுவதிலும் 2012 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை தீவிரவாதிகளோடு நடந்த தாக்குதலில் மொத்தம் 171 இராணுவ வீரர்கள் “வீரமரணம்” அடைந்துள்ளனர் என்று முன்னால் இராணுவப் பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றக் கேள்விக்குப் பதில் அளித்தார். அதே காலகட்டத்தில் மொத்தம் 142 பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
பாதாளச் சாக்கடைக்குள் இறந்தவர்களின் எண்ணிக்கையை பற்றிய குறைந்த தகவல்களே Safai Karmachari Andolan அமைப்பிடம் உள்ளது. முதலாவதாக, அந்த அமைப்பு 21 மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் மட்டுமே பதிவு செய்துள்ளது. ஒட்டு மொத்த 36 மாநிலங்களையும் பதிவு செய்யவில்லை. இன்னொரு விதத்தில், ஆண்டலோன் அமைப்பும் உதவியற்ற நிலையில் தான் இருந்தது. காரணம், 2014 ஆம் ஆண்டிலிருந்து தான் அந்த அமைப்பு தரவுகளையே சேகரிக்கத் தொடங்கியது.
அந்த வருடத்தில், எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் மனிதர்களைச் சாக்கடைக் குழிக்குள் இறக்கியதற்காக மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும் பணியின் போது பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு பத்து லட்சம் கொடுப்பதற்கான ஆணையையும் பிறப்பித்தது.
அதன் பின்னர், ஆண்டலோன் அமைப்பு பாதாளச் சாக்கடையில் இறந்தவர்களின் பட்டியலை வகைப்படுத்தினார்கள். ஏனென்றால், இறந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பங் களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதை உறுதி செய்வதே அவர்களின் முக்கியமான பணியாகும். இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் மற்றும் உடற்கூறாய்வு சான்றிதழைப் பெற்ற பிறகுதான் ஆண்டலோன் அமைப்பின் தன்னார்வலர்கள் அந்த இறப்பை ஆவணப்படுத்துகிறார்கள். தனிப்பட்ட பதிவுகள், வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆதாரப்பூர்வமான தகவலைத் தருவதில்லை. இந்தத் தகவல்தளம் 1987-ஆம் ஆண்டிலிருந்துநடந்த இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
ஏன் சமீபகாலமாகப் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளிகளின் இறப்பு விகிதம் அதிகரித்துவருகிறது என்று மிகத் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டலோன் அமைப்பு கண்டுகொண்டதன்படி, இறப்புச் சான்றிதழையும் உடற்கூறாய்வு அறிக்கையும் இறந்தவர்களின் குடும்பத்தினர் தவறுதலாக எங்கேயோ வைத்திருக்கக்கூடும் அல்லது அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டுபிடிக்க இயலாமல் போயிருக்கும். காரணம், அவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாகியவர்களே இந்த சாக்கடைக் குழிக்குள் மூச்சுத்திணறி இறந்ததற்குப் பின்னர் அந்தக் குடும்பம் தங்களின் வாழ்விடத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.
சாவுக் குழியில் வேலை
புள்ளியியல் அடிப்படையில், பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியைவிட காஷ்மிரில் பணிபுரியும் இராணுவ வீரர் மிகவும் பாதுகாப்பாகத் தான் உள்ளார். காஷ்மீரில் 2012 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை 156 லிருந்து 160 இராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று இராணுவ ஆதாரங்களைக் கொண்டு வெவ்வேறு ஊடகங்கள் தங்களுடைய அறிக்கையில் ஒரு மதிப்பீட்டை வழங்கியது. அதே காலக்கட்டத்தில் தான் நகர்புற இந்தியாவின் பாதாளச் சாக்கடையமைப்பு 202 தொழிலாளிகளை மூச்சுத் திணறடித்துத் கொலை செய்துள்ளது.
ஒரு சிக்கலான வலையமைப்பைக் கொண்ட தீவிரவாதிகள் இந்திய இராணுவ வீரர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொன்றுவிடுகின்றனர். பெரும்பாலான நேரத்தில் இந்திய எல்லையைக் கடந்து துப்பாக்கியால் சுடுவதற்கும் உயிர்களைக் கொலை செய்வதற்கும் இந்தத் தீவிரவாத வலையமைப்பை பாகிஸ்தான்தான் ஊக்கு விக்கின்றது. பாதாளச் சாக்கடையயைச் சுத்தம் செய்து அதைத் தொடர்ந்து தடையின்றி ஓட செய்யும் தொழிலாளிகளை இந்தப் பாதாளச் சாக்கடையின் வலையமைப்பு மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்குகிறது. இந்த நகர்புற இந்தியா இப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு தேசத்தின் பார்வையில் இருந்து, ஒரு இராணுவ வீரரின் மரணத்தை நினைத்துப் பெருமைப்பட வேண்டும். அவரை ஒரு தியாகியாக வணங்கி, அவருடைய சவப் பெட்டியை மூவர்ணக் கொடிகளால் போர்த்தி அவரின் உடலை எரியூட்டுவதற்கு முன்போ அல்லது புதைப்பதற்கு முன்போ துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செய்கிறோம். அந்த மரியாதையைப் பெறுவதற்கு அவர் தகுதியுடையவர் ஆகிறார். அனைத்திற்கும் மேலாக அவர் நம்மைப் பாதுகாப்பதற்காக அவர் இறந்திருக்கிறார்.
சுத்தம் செய்வதற்காகச் சாக்கடைக் குழிக்குள் இறங்கி இறந்த மனிதர்களைப் பற்றி யாரேனும் எண்ணியதுண்டா?அவருடைய இறப்பானது சமீபத்தில் டெல்லியில் நடந்த இரண்டு இறப்புகளைப் போல மிகவும் மோசமான வழக்கத்திற்கு மாறுபட்ட இறப்பாக இல்லாவிடில் அந்தத் தொழிலாளி நகர்புறப் செய்தித்தாள்களில் ஒரு சில பத்திகளைப் பெறுவதற்கே தகுதி யுடையவராகிறார்.
இவர் இந்திய தேசியவாதத்தில் ஒரு முக்கியமான பேசும் அடையாளமாக உறுதியாக இருக்க முடியாது. அந்தச் சாக்கடைக் குழியின் நச்சுத்தன்மை வாய்ந்த நாற்றத்தோடு அந்த எண்ணமும் அருவெருப்பாகிவிடுகிறது. ஒருவேளை இதனால் தான் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியின் புகைப்படங்கள் ‘துாய்மை இந்தியா’ திட்டத்தின் விளம்பரப் பிராச்சாரங்களில் இடம்பெறுவதில்லை.
இது வெறும் இறப்பைப் பற்றி மட்டுமல்ல என்றும், மனிதர்கள் வாழுவதற்கு ஏற்ற சூழலில்லாத பகுதியில் பணியமர்த்தப்படும் இராணுவ வீரர்களைச் சுட்டிக் காட்டி இதை வாசிப்பவர்கள் கூறலாம். உதாரணத்திற்கு, சியாச்சின் மலைப் பகுதியில் ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு பாதுகாப்பு படைவீரர்கள் இறக்கின்றனர். சமூகத்திலிருந்து தனிமையில் வாழ்கின்றனர், குடும்பத்தினரிடம் இருந்து வெகு தொலைவில், அவர்கள் விளிம்பில் வாழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 100 படைவீரர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டில் வழக்கமாக நிகழும் படைவீரர்களின் இடமாற்றத்தின் போது ஏற்பட்ட விபத்தின் போது மட்டும் 300 வீரர்களின் உயிரைப் பலிகொண்டது.
ஆனால், மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைட், கார்பன் டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற விஷவாயுக்களை சுவாசித்து – மனிதக் கழிவுகளின் நடுவில் வெறும் கோவணத்தோடு சாக்கடைக் குழிக்குள் இறங்கி அந்தக் குழியில் ஏற்பட்டிருக்கும் அடைப்பைச் சரிசெய்வதைவிட சியாச்சின் மலைத்தொடர்களில் பணிபுரிவது ஒரு கடினமான காரியமாக இருக்க முடியாது.
அதற்கென பிரத்யோக ஆடையில்லை, முகமூடியில்லை, ஆக்சிஸன் சிலிண்டர்கள் இல்லை, இன்னும் மோசமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அந்தச் சாக்கடைக் குழியைச் சுத்தம் செய்வதைப் பற்றி எவருமே சிந்திப்பதில்லை. இந்த மனிதத் தன்மையற்ற பணிச்சூழலில் உயிர்வாழ்வதற்கு ஒரே வழி மதுவின் மூலம் புலன்களை உணர்விழக்கச் செய்வது தான்.
Scroll.in க்கு வில்சன் கொடுத்த தகவலின்படி, “சரியான ஆய்வறிக்கை இல்லாவிடினும், 90 சதவிகித தொழிலாளிகள் மதுவுக்கு அடிமையாகி யுள்ளார்கள். பலபேர் சிறுவயதிலேயே இறந்து விடுகிறார்கள் அதிலும் நகராட்சியால் பணி யமர்த்தப்படும் ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய ஓய்வு வயது வரை வாழ்கின்றனர்”.
தினப்படி மற்றும் சலுகைகள் போக இந்திய இராணுவப் படைவீரர் மாதம் ரூபாய் 25,000 பெறுகிறார், மாறாக நகராட்சிகளால் பணியமர்த்தப்படுபவர்களுக்கு மாதம் 10,000 லிருந்து 15,000 வரை கிடைக்கும் என்று வில்சன் கூறினார். தற்போது இவர்களின் வேலைகளும் தனியார் ஒப்பந்தக் காரர்களிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம் இவர்கள் வேலையிழக்கின்றனர். மேலும், ஒப்பந்தக் காரர்கள் 4,000-லிருந்து 6,000 ரூபாய் வரை என அவர்கள் நினைத்ததைத் தான் கொடுக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த நாட்டின் அதிகார வர்க்கம் தான் ஒருவருடைய பணியையும் இறப்பையும் சிறப்புக்குரியதாக உருவாக்குகிறது.
தவறான தேசியவாதம்
உண்மையில், யாரலெல்லாம் தங்களுடைய பல்கலைக்கழத்தினுள் இராணுவ பீரங்கியை நிறுத்தி, அங்கிருக்கும் இளைஞர்களுக்கு இராணுவத்தின் நற்பண்புகளை வியந்து பாராட்ட நினைக் கிறார்களோ அவர்கள், இத்தனை வருடமும் ‘துாய்மை இந்தியா’ திட்டத்தில் துரதிர்ஷ்ட வசமான பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியாக வேலை செய்யும் ஒருவருக்கு சிறிய அளவிலான நன்றியையும் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
ஒருவேளை இவர்களுடைய தியாகங்கள் இல்லாமல் கூட இந்தியாவால் தொடர்ந்து இயங்கமுடியும் என்று அவர்கள் எண்ண முடியும். அந்தத் தொழிலாளிகளின் உணர்வுகளை உணராமல் இருப்பது என்பதே ஒரு குற்றச் செயல். இதோ பிரிவினைக் காலகட்டத்தில் நடந்த கதையொன்று அவர்களின் இந்த எண்ணைத்தைப் தெளிவாக்கும்.
ஆகஸ்டு 17, 1947 ஆம் ஆண்டு ராட்கிளிஃப் கோடு (Radcliff line - இந்தியா பாகிஸ்தான் இடையேயான எல்லைக்கோடு. (பஞ்சாப் மற்றும் வங்காள எல்லைகள்) அறிவிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவில் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தானில் உள்ள தலித்துகள் இந்தியாவில் குடியேறத் தொடங்கினார்கள்.
The Other Side of Silence: Voices from the Partition of India என்னும் புத்தகத்தில் ஊர்வசி பட்டாலியா (Urvashi Butalia) எழுதியிருப்பதன்படி, “அவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் நிவாரணச் சலுகைகள், வீட்டுக் கடன், வேலைகள் என்று ஆசைக்காட்டியது இந்தியா, அதே நேரத்தில் இந்தியாவில் வாழ்வது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நினைவுப்படுத்தி பாகிஸ்தான் அவர்களைத் தடுப்பதற்கு முயற்சி செய்தது...”
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தலித்துகளுக்கு கடல் வழியான பயணம் மட்டுமே மிகவும் சுலப மானதாகவும் வசதியாகவும் இருந்தது. ஆனால், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் கராச்சியிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் மக்கள் செல்ல முடியும் என்னும் வரையறையைப் பாகிஸ்தான் அரசு கொண்டு வந்தது. காரணம், கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களின் தட்டுப் பாடே முக்கியயமாக இருந்தது. அதனால், ஒரு பெரும் எண்ணிக்கையிலான தலித்துகள் இந்தியாவிற்குச் செல்வதற்காக கராச்சியின் பயண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்கள் வேலை செய்யத் தவறியதன் விளைவு, கராச்சியின் கழிவுநீர் மற்றும் சுகாதார அமைப்பு இரண்டுமே தகர்ந்து போனது. மிக வேகமாக அந்த நகரம் முழுவதும் ஒரு நாற்றமடிக்கும் ஒரு குப்பைக் குவியலாக மாற ஆரம்பித்தது. இதன் விளைவாக சிந்து அரசாங்கம் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் (Essential Services Maintenance Act) என்ற சட்டத்தைக் கொண்டு வருவதற்குத் துாண்டுகோலாய் இருந்தது. தலித்துகள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு அந்தச் சட்டம் அனுமதி மறுத்தது. இந்திய அரசியல் வர்க்கத்தினர் கோபத்தில் பொங்கியெழுந்தனர். ஆனால், எந்தவித பயனும் இல்லை.
1952 ஆம் ஆண்டு தேர்தல் பிராச்சாரத்தின் போது இந்த நிகழ்வை பற்றி பி.ஆர். அம்பேத்கர் நினைவு கூறுகிறார்,
“தேசப்பிரிவினை நடந்த உடனேயே, அட்டவணைச் சாதிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியா செல்வதற்குத் தடையாணை பிறப்பித்தது பாகிஸ்தான் அரசு. இந்துக்கள் வெளியேறுவதைப் பற்றியெல்லாம் பாகிஸ்தானுக்குக் கவலையில்லை, ஆனால், தீண்டத்தகாதவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டால் பிறகு அங்கிருக்கும் துப்புரவாளர்கள், சுத்தம் செய்பவர்கள், பங்கிஸ் என்னும் இன மக்கள் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட சாதிகளின் ‘அழுக்கடைந்த’ வேலைகளை யார் செய்வது என்பதைப் பற்றி தான் வருத்தம்.”
- தோழர் அம்பேத்கர்
அப்போதைய இந்திய பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவிடம் போதுமான நடவடிக்கை எடுக்கக் கோரி வேண்டுகோள் விடுத்ததாக அம்பேத்கர் கூறினார். மேலும்,
“பாகிஸ்தானிகளிடம் நடந்த பல்வேறு விவாதங்களின் போதும் யதார்த்தமாகக் கூட அவர் இந்தத் பிரச்சினைகளைப்பற்றி குறிப்பிடாமல் துாங்கிப் போனார்” என்று அம்பேத்கர் குற்றஞ்சாட்டுகிறார். மேலும்,
“காங்கிரஸில் உள்ள எந்த ஹரிஜன்களும் பாகிஸ்தானில் உள்ள தங்களின் உடன்பிறந்தவர் களுக்கு நடக்கும் இந்தஅடக்குமுறையை எதிர்த்து ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை” என்றும் சுட்டிக் காட்டினார்.
எழுபது வருடம் கழித்து, அன்றைக்குத் தீண்டதகாதவர்களாய் இருந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தான் இன்றும்கூட நகர்புற இந்தியாவின் பாதாளச் சாக்கடைக்குள் மூச்சுத் திணறி இறக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். உயரத்தில் மூவர்ணக் கொடியைப் பல்கலைகழகங்களில் பறக்கவிட்டு இராணுவ பீரங்கியையும் நிறுத்த வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், ‘துாய்மை இந்தியா’ திட்டம் என்பது ஒரு கட்டியெழுப்ப வேண்டிய ஒரு புரட்சி என்று தவறான நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் யாரும் பாதாளச் சாக்கடையினுள் இறங்கிச் சுத்தம் செய்வதற்கோ அந்தத் தொழிலாளிகளின் இறப்பைப் பற்றி பேசுவதற்கோ தயாராக இல்லை. - நன்றி: Scroll.in
பாம்போரில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் கீழ் ஜாதி என்பதால் அவரின் இறுதிச் சடங்கு அந்த கிராமத்திலிருந்த மேல் ஜாதியினரால் தாமதப்படுத்தப்பட்டது என்று முடிவுக்கு வரும் இந்த மூடத்தனம்?
- அபிஷேக் சாக்சேனா
இந்த நாடு எப்பொழுதுமே கற்றுக் கொள்ளப் போவதில்லையென்றே தெரிகிறது. $நகர் அருகில் உள்ள பாம்போர் என்னும் இடத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.ஃப் ஜவான்களின் மரணத்தால் கூட நம்மை ஒரு ஒற்றை தேசமாக ஒன்றிணைய முடியவில்லை. இந்த முறை ஜாதிய வேறுபாடு நம் நாட்டை இழிவுபடுத்தியிருக்கிறது.
எல்லைப் பகுதியிலிருக்கும் தீவிரவாதிகள் நம்மைத் துாண்டிவிடுகின்ற நேரத்தில் ஒட்டு மொத்த நாடும் ஒற்றுமையாயிருந்து இழப்புக்காக வருந்த வேண்டிய அவசியமுள்ள நிலையில் உத்திரப் பிரதேசத்தில் ஃபிர்சோபாத் என்னும் மாவட்டத்தில் உள்ள நாக்லா கெவால் என்னும் கிராமம் இன்றும் கூட ஜாதிய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாக வெளியுலகுக்கு தெரிந்திருக்கிறது.
இராணுவ வீரர் வீர் சிங்கின் (Vir Singh) இறுதிச் சடங்கிற்கு ஊர்ப் பொது நிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி அங்கிருந்த உயர் ஜாதியினர் அவருடைய இறுதிச் சடங்கை தடுத்து நிறுத்தினார்கள்.
தேசியத்தின் பாராமுகம்
ஏன் அந்தக் கிராமத்தின் உயர் ஜாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள், கொல்லப்பட்ட அந்த இராணுவ வீரரின் இறுதிச் சடங்கை நடத்துவதற்காக ஊர்ப் பொது நிலத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை மறுத்தார்கள்? ஏனென்றால், அந்த வீரர் நாட் (Nat- Acrobats) என்னும் ஜாதியைச் சார்ந்தவர். அந்த மாவட்ட அதிகாரிகள் தலையிட்டுப் பேசியதற்குப் பிறகே அந்த கிராமத்து மக்கள், அந்தப் படைவீரரின் இறுதிச் சடங்கிற்கு 10 : 10 என்ற அளவில் இடம் தர ஒப்புதல் அளித்தனர்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்ற போது, அந்த கிராமத்தின் சாலை யருகில் உள்ள பொது நிலத்தில் கொல்லப்பட்ட வீரருக்குச் சிலை வைக்கவேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் பண்டிகைக் காலங்களின் போது அந்த இடத்தில்தான் உள்ளுர் விழாக்கள் கொண்டாடப்படும்.
காந்தாரி கிராமப் பஞ்சாயத்தின் கிராம தலைவரான விஜய் சிங், டைம்ஸ் ஆப் இந்தியா செய்திப் பத்திரிகையிடம் கூறியது,
“பொது நிலத்தில் அந்த வீரரின் உடலை எரியூட்ட வேண்டும், அதன் பின் அவருக்கு சிலையெழுப்ப வேண்டும் என்ற இரண்டு கோரிக்கையையும் அங்கிருந்த கிராமத்தார்கள் எதிர்த்தார்கள். அதன் பிறகு துணை மண்டல நீதிபதி (Sub-Divisional Magistrate) நடத்திய நெடுநேரப் பேச்சுவார்த்தையை அடுத்து, கிராமத்தார்கள் அந்த வீரரின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக கூறினார்கள்”.
1981 ஆம் ஆண்டு சி.ஆர்.பி.ஃப் பிரிவில் சேர்ந்த வீர் சிங் (52 – வயது) தான் அந்த குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவராக இருந்தார். ஏறத்தாழ 500 சதுர அடியில் ஒற்றை அறையுடன் தகர மேற்கூரை கொண்ட இடத்தில் தான் அவர் குடும்பம் வசிக்கின்றது. அவருக்கு 22 வயதில் ஒரு பெண் (ரஜின்), முதுகலை அறிவியல் பட்டப் படிப்புப் பயின்று வருகிறார் மற்றும் இரண்டு மகன்கள் ரமன்தீப் (18 வயது) இளங்கலை அறிவியல் பட்டப் படிப்புப் பயின்று வருகிறார். 16 வயதான சந்தீப் இப்பொழுது தான் பள்ளி இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.
வீர் சிங்கின் தம்பி ரஞ்சீத் ஒரு கூலித் தொழிலாளி, மேலும் எழுபது வயதைக் கடந்த அவரின் தந்தை ஃபிர்சாபாத்தில் கைவண்டி யிழுக்கிறார். அவர் கூறியவை,
“நம் நாட்டைப் பாதுகாப்பதற்காக தன்னுயிரையே கொடுத்துள்ளான் என் மகன், ஆனால், இங்கேயோ அவனை எரியூட்டுவதற்தாக 10:10 அளவுள்ள இடத்தைக்கூடத் தர மறுக்கின்றனர் நம்முடைய மக்கள். என்னுடைய மகனின் குழந்தைகளை இனி யார் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் எனக்கு தெரியவில்லை” என்று அந்த துணிச்சலான வீரரின் தந்தை கூறினார்.
சிக்கோகாபாதின் துணை மண்டல நீதிபதி, சந்திர பான் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை தொடர்பு கொண்டபோது, “அனைத்துப் பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்துவிட்டோம். மேலும், ஒட்டு மொத்த மாவட்டமும் நம்முடைய இறந்த வீரருக்கு மரியாதை செலுத்துவார்கள்” என்று கூறினார். கொல்லப்பட்ட அந்த வீரரின் நினைவாக அந்த கிராமத்தில் அவருக்கு நுழைவுவாயில் கட்டப்படும் என்று ஜிலா பஞ்சாயத்துத் தலைவர், விஜய் பிரதாப் யாதவ் அறிவித்தார்.
தமிழில்: பேராசிரியர் கிரண்குமார்