கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கு தமிழகத்தையே உலுக்கிவிட்டது. நூறாண்டு காலத்தில் காணாத மழை சென்னையில் பெய்தது. இம்மழையில் வரலாறு காணாத அளவிற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாதிப்படைந்தன.

இந்த பாதிப்புக்கு காரணமாக நீர் நிலைகள்/நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, அவை தூர்வாராமல் இருத்தல் ஆகியன இன்னமும் சொல்லப்படுகின்றன. இவை ஒரு வகையில் உண்மையே என்றாலும் ஏன் இது அனுமதிக்கப்பட்டது என்பதை காண வேண்டும்.

அதற்கான கரணமாக ஆட்சி யாளர்களின் அலட்சியம், மெத்தனம், ஊழல் எனவும் சொல்லப்படுகின்றன. இவையும் ஒரு வகையில் உண்மையே.

ஆனால் தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்திலும் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத் திலும் நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்கு பிந்தைய காலத்திலும் நீர் நிலைகளைப் பாதுகாத்த ஆட்சியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வாறு செய்யாதது ஏன்?

தமிழக ஆட்சியாளர்கள்/ஆளும் வர்க்கத்தினர், பல்லவர் ஆட்சிக் காலம் முதற் கொண்டு, கடந்த 30-&40 ஆண்டுகள் முன் வரை, தமது சுரண்டலுக்கான உபரியை விவசாயத்தில் செலுத்தப்பட்ட உழைப்பின் முலமே முதன்மையாக உறிஞ்ச முடிந்தது.

நாயக்கர் ஆட்சிக் காலத்தில் வணிகத்தின் மூலமாகவும் உபரியானது உறிஞ்சப்பட்டது.

கி.பி.தொடக்க ஆண்டுகளிலும் அதற்கு முன்பு கி.மு.வில் சில நூறாண்டு களகவும் வணிகமானது சீனாவுடனும் ரோம் சாம்ராஜ்யத்துடனும் பெரிய அளவில் இருந்தது என்பது வேறு விஷயம். அப்பொழுது உழைப்பாளிகளின் உபரியி னால் கட்டப்படும் சுரண்டும் வர்க்க அரசு எந்திரம் (மிகப்) பெரிதாக இல்லை.

ஆனால் பெருவீத அடிப்படையில் நிலவுடமை உற்பத்தி முறையை கட்டி யமைத்து அதன் வாயிலாகவும் அதற்காகவும் அமைந்த பல்லவர் ஆட்சிக் காலந் தொட்டுதான் நீர் நிலைகள்/நீர் வழித்தடங்கள் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் தமிழகத்தின் நில அமைப்புக்கு ஏற்ற வாறு, பருவ நிலைக்கு ஏற்றவாறு மிகவும் அறிவியல்ரீதியாக உருவாக்கப்பட்டன.

இவ்வாறு கட்டப்பட்ட நீர் நிலை களின் மூலம் விவசாயம் செம்மையாக மேற் கொள்ளப்பட்டு அதன் மூலம் உபரியானது உழைப்பாளிகளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு அதன் வாயிலாக நிலவுடைமை பேரரசை கட்டியமைத்த பல்லவர் ஆட்சிக்காலத்திற்குப் பின் வந்த பிற்காலக் சோழர் ஆட்சிக்காலத்தில் அதைவிட மிகப்பெரும் பேரரசை கட்டியமைத்து தெற்காசியா, தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா வரையில் விரிவாக்கினர் ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும்.

தமிழக விவசாயிகளின் உழைப்பின் விளைவாக உருவான உபரி பலவந்தமாக பறிக்கப்பட்டதன் ஊடேதான் இத்தகைய பேரரசுகள் கட்டியமைக்கப்பட்டன.

இந்த உபரியை பறிப்பதற்கு ஏதுவாகவே அந்த (நிலவுடைமை) உற்பத்தி முறையின் அங்கமான நீர் நிலைகள் என்ற உற்பத்தி சாதனத்தையும் படைத்ததும் பராமரித்ததும் இதே தமிழக விவசாய மக்களே ஆவர்.

இத்தகைய விவசாயப் பொருளாதாரம் பிரிட்டிஷ் ஆட்சியானது இந்திய  துணைக் கண்டத்தில் அமையும்வரை நீடித்தது. அந்த ஆட்சி அமைந்த பின்னர் இந்திய துணைக் கண்டத்தின் விவசாய உழைப்பிலிருந்து அபகரிக்கப்பட்ட உபரியிலிருந்தே முதன்மையாக உலகளவில் அது விரிவடைந்து அதன் பொருளாதாரம் வணிக முதலாளியத்தி லிருந்து தொழிற்துறை முதலாளியத்திற்கு மாறி இறுதியாய் ஏகாதிபத்திய முதலாளிய மாக மாறி 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது எனலாம்.

இன்று தமிழக நீர்நிலைகளின் அழி விற்கு முக்கியப் பங்காற்றி வரும் பொதுப் பணித்துறையானது பிரிட்டிஷ் ஆட்சியின் போது 18ஆம் நூற்றாண்டில்தான் உருவானது. அன்று முதல் தமிழக நீர் நிலைகள் அத் துறையின் கீழ்தான் இருந்து வருகின்றன.

முதன்மையான நீர்நிலைகள் அத்துறையின் கீழ் (40 ஹெக்டேர் பரப்பளவுக்கு அதிக மான 7985 பெரிய ஏரிகள் உள்ளன) இருந் தாலும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் (40 ஹெக்டேர் பரப்பளவுக்கு குறைவான 33142 சிறிய ஏரிகள் பஞ்சாயத்து அமைப்புகளின் கீழ் உள்ளன) நீர்நிலைகள் பின்னர் கொண்டு வரப்பட்டன.

இந்நீர்நிலைகளின் அழிவிற்கு பொதுத்துறையைப் போலவே இந்த உள்ளாட்சி அமைப்புகளும் காரண கர்த்தா வாக இருந்து வருகின்றன.

தமிழகத்தில் விவசாயத் துறைக்கு அப்பாற்பட்ட உழைப்பாளிகளின் உபரியை தொழிற்துறையில் உறிஞ்சுவது என்பது 19-ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே தொடங்கி விட்டது.

அது படிப்படியாக அதிகரித்து 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் 1970களில் குறிப்பிடத்தக்க அளவில்  அதிகரித்து வந்தது.

அது பின்னர் 1980களில் மேலும் அதிகரித்து, அத்துடன் சேவைத்துறையிலும் உபரி அபகரிக்கப்படத் தொடங்கி இன்று அத்துறையே GDP யில் (மொத்த உற்பத்தி மதிப்பு) 60 விழுக்காடு என்பதாக ஆகிவிட்டது.

விவசாயத்துறையோ GDP -இல் இரட்டை இலக்கு விழுக்காட்டை தக்க வைத்துக் கொள்வதே பெரும்பாடாகி விட்டது.

மறுபுறத்தில் தமிழக விவசாயத் துறை யிலோ இன்று 93 விழுக்காடு சிறு மற்றும் குறு உடமை விவசாயமாக மாறிவிட்டது. இதில் பெரிதாக உபரியை உறிஞ்ச முடியாது.

மேலும் மூலதன வர்க்கத்திற்கு மூலதனத் திரட்சியை மேற்கொள்வதற்கு இன்று தொழிற்துறையும் சேவைத்துறையும் பங்காற்றுவது போல சிறு/குறு விவசாயம் பங்காற்ற முடியாது. பெருவீத உற்பத்தியான கார்ப்பரேட் விவசாயமாகவும் தமிழ்நாட்டு விவசாயம் இல்லை. இதனால் சிறு/குறு உடமை விவசாயத்தை பாதுகாக்க நீர்நிலை களை பெரிதாக பாதுகாக்க அவசியமில்லை என எண்ணுகிறார்கள் ஆட்சியாளர்கள்.

அதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பாசனமாக பயன்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரி, வீராணம் ஏரி போன்ற பெரிய நீர் நிலைகளையும் இந்திய பெருமுதலாளிய/ஏகாதிபத்திய தொழிற்தேவைக்கோ குடிநீருக்கோ திருப்பி விடுகின்றனர்.

*நீர்நிலைகளை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், பத்திரப் பதிவுத்துறை, தொழிற்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் அதிகார வர்க் கத்தினர், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆகிய அதிகார வர்க்கத்தினர் முதலானோர் நீர் நிலைகளை பராமரிக்காததோடு அவற்றை ஆக்கிரமிக்கவும் கூட்டுப் பங்காளியாகவே கடந்த 30-40 ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றனர்.

அதே போல் எண்ணற்ற மணல் குவாரிகளையும், கிரானைட் குவாரி களையும் சட்டரீதியாகவும் சட்ட விரோத மாகவும் திறக்க அனுமதித்து நீர்நிலைகளை அழித்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் முன்பாகவும் அக்கம் பக்கமாகவும் வேலூர், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், கரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தோல் தொழிற்சாலை, ஜவுளி தொழிற்சாலைகள் (சாயப்பட்டறை இன்னபிற), ரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியன நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றி வருவதை அனுமதித்து வருகின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இந்த அதிகார வர்க்கத்தினருடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்துக்கு வரும் அமைச்சர்கள், நாடாளுமன்ற/சட்டசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் இச்செயலில் பங்காளிகளாகவே இருந்து வருகின்றனர்.

அத்துடன் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., இன்னபிற சிறிய பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கி கட்சிகளின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் அவ்வாறே இருந்து வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளில் அரசு அதிகாரத் தை பயன்படுத்தி புதிய (சொத்து) உடைமை வர்க்கங்களாக தம்மை மாற்றிக் கொண்ட இவர்கள் தமிழக அதிகார வர்க்க முதலாளிகள் (bureaucrat capitalists) எனலாம். இவர் களே நீர்நிலைகளின் அழிவிற்கு முதன்மை காரணம் ஆவர்.

இவர்களே நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் ஆகியவற்றை அழித்து அவை வீட்டு மனைகள், அடுக்ககங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் நிலங்களாக்கி அத்தகைய புதிய (சொத்து) உடைமை வர்க்கங்களாகி அதிகார வர்க்க முதலாளிகளாக உருப்பெற்றுள்ளனர்.

* இந்த அதிகார வர்க்க முதலாளி களுடன் கூட்டுசேர்ந்து உருவாயினர் மணல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் போன்றவற்றை நடத்தும் புதிய ஒப்பந்ததார முதலாளிகள். இப்புதிய முதலாளிகள் அதிகார வர்க்க முதலாளிகளின் பினாமியாகவோ நேரடி யாகவோ கடந்த 10-20 ஆண்டுகளில் உரு வெடுத்தவர்கள் ஆவர்.

* நீர் நிலைகளின் அழிவினால் குடிநீர், விவசாயம், தொழிற்துறை ஆகியவற்றின் தேவைக்காக பம்புசெட் முதலாளிகள் தோன்றி அத்துறையில் இந்தியாவிலேயே தமிழக முதலாளிகள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

இப்புதிய முதலாளிகள் உருவாவதின் நிகழ்வுப் போக்கின் அங்கமாகவும் அக்கம் பக்கமாகவும் பின் விளைவாகவும் ரியல் எஸ்டேட் முதலாளிகள் கடந்த பத்து- பதினைந்து ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையிலும் தோன்றியுள்ளனர் (மத்திய அரசாங்கமானது நாடாளு மன்றத்தில் சென்ற மார்ச் மாதத்தில் தெரிவித்தபடி தமிழ் நாட்டில் 3004 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளன).

அகோர நிலப்பசியை உடைய இம்முதலாளிகள் நிலத்தை அபகரிப்பதற்கு மேலே பார்த்த அதிகார வர்க்கத்தினரின் கூட்டோடு எதையும் செய்ய தயாராக உள்ள மாஃபியா முதலாளிகளாக இருக்கின்றனர்.

இத்தகைய ரியல் எஸ்டேட் மாஃபியா முதலாளிகளைப் போலவே மணல் குவாரி ஒப்பந்ததார முதலாளிகளும் இயங்குகின்றனர். அவர்கள் ஓரிரு வருவாய்த்துறை அலுவலர், வட்டாட்சியர் போன்றவர்களை கொல்லவும் தயங்குவது இல்லை.

இம்மூவகை முதலாளிகள் இடையே ஆன போட்டியினால் மேலே பார்த்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கொல்லப்படுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று தென் மாவட் டங்களில் நடந்த எண்ணற்ற கொலைகளில் ரியல் எஸ்டேட்/மணல் குவாரி சம்பந்த மானவை கணிசமானதாகும்.

National Crime Records Bureau (NCRB) ன் தகவலின்படி தமிழ்நாட்டில் 2012&14ல் சொத்து தகராறில் 400க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன (டைம்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை, 9/5/2016). ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்த சென்ற 10&15 ஆண்டுகளில் இது சம்பந்தமாக நடந்த கொலைகளை கணக் கிட்டால் மூன்று இலக்கத்தை தாண்டும்.

* இக்கொலைகளை தொழில் ரீதியாக மேற்கொள்வதற்கு வழக்கில் உள்ள நிலங்கள், ஏழை மக்கள் வசிப்பிடங்கள் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் கட்டப் பஞ்சா யத்து கும்பல்களை மேற்காணும் மூவகை முதலாளிகள் உருவாக்கி வளர்த்து விட்டதோடு அக்கும்பலகள் பல வகையான/பல மட்டங் களிலான முதலாளிகளாக வளர்ந்து விட்டனர்.

* இந்நால்வகை முதலாளிகள் இவ்வாறு உருவெடுப்பதற்கு அனைத்து மட்டங்களிலும் போலீசின் பாத்திரம் முக்கியப் பங்காற்றுகிறது. மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கும் நீர்நிலைகள்/நீர்வழித் தடங்களை வளைப்பதற்கும் பங்காளிப் பாத்திரத்தை ஆற்றிய போலீஸ் துறையானது அதன் வாயிலாக புதிய உடமை வர்க்க உருவாக்கத்திற்கு காரண மாகியதோடு அந்த வர்க்கத்தின் அங்க மாகவும் ஆகிப்போனது.

* நீர்நிலைகளின் அழிவினிலே பலனடைவது மேலே பார்த்த முதலாளிகள்/புதிய உடமைவர்க்கப் பிரிவினர் மட்டுமன்றி ஆயிரக்கணக்கான குடிநீர் லாரி உரிமையாளர்களும் தனியார் குடிநீர் நிறுவன முதலாளிகளும் ஆவர்.

கடந்த முப்பது ஆண்டு களுக்கும் மேலாக சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளுக்கான குடிநீர் வழங்கலை அரசாங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன் தனியார் நட்சத்திர விடுதிகள், பெரிய உணவகங்கள், கேளிக்கை வளாகங் கள், அடுக்கு மாடி குடியிருப்பு வளாகங்கள் போன்றவற்றிற்கும் லாரிகளின் மூலம் தனியார் ஏற்பாட்டின் வாயிலாகவும் குடிநீர் வழங்கல் நடந்து வருகிறது.

இத்துடன் ஆற்று மணல் லாரி உரிமையா ளர்கள் (சுமார் 15,000) கடந்த பத்து ஆண்டு களில் அதிக எண்ணிக்கையில் தோண்றியுள்ளனர்.

* அடுத்ததாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 1200 தனியார் குடி நீர் உற்பத்தி நிறுவனங்கள் தோன்றியுள்ளன.

மேற்காணும் தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமது விவசாய கிணறு களில் இருந்து தண்ணீர் வழங்கி உருவாகி யுள்ளனர் கிராமப்புற புதிய முதலாளிகள்.

* மேலே பார்த்தவாறு நீர்நிலைகளில்/நீர்வழித்தடங்களில் கழிவு நீரை வெளி யேற்றி அவற்றை மாசுபடுத்தும் வகையில் சாய/சலவைப் பட்டறைகள், தோல் தொழிற் சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள் இன்ன பிறவாக உள்ள எண்ணற்ற குறு/சிறு நடுத்தரரக தொழிற்துறை முதலாளி நிறுவனங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இதை நடத்துவோரில் கணிசமானோர் புதிய முதலாளிகளே ஆவர்.

பச்சமுத்து என்ற பாரி வேந்தர், ஜேப்பியார், ஏ.சி.எஸ்., ஜெகத்ரட்சகன் போன்றோர் நீர்நிலைகளின் மேல் கல்லூரி களை கட்டி அத்துறையில் பெருமுதலாளி களாக உருவெடுத்துள்ளனர். இன்றைக்கு பல நூறு கோடிகளுக்கு சொந்தமான முதலாளிகளாக வளர்ந்துள்ளனர்.

இவர்களில் பச்ச முத்து தலைமையிலான எஸ்.ஆர்.எம். குழுமமானது தொலைக் காட்சி, பேருந்து, போக்குவரத்து, திரைப்ப டம், தகவல் தொழிற்நுட்பம் ஆகிய துறை களில் பெரிய அளவில் இறங்கி அத்துறைகளில் தீர்மானிக்கும் சக்தி படைத்ததாக வளர்ந்துள்ளது.

ஜெகத்ரட்சகனோ டாஸ் மாக்கிற்கு சப்ளை செய்யும் மதுபான முதலாளிகளில் முக்கியமான ஒருவர் ஆவார். 

மிகப்பெரும் சரக்காகிவிட்ட நிலம்

இவ்வாறு நீர்நிலைகள்/நீர்வழித் தடங்களின் அழிவுக்கு ஏதுவாக தமிழகத்தில் நிலம் மிகப்பெரிய சரக்காக மாறிவிட்டது.

தமிழ் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் இரண்டு கோடிகளுக்கு மேல் நிலப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளையும் சேர்த்தால் இந்த எண்ணிகையானது மேலும் பெரிய அளவில் கூடியிருக்கும்.

இந்தியாவிலேயே வேறங்கும் இல்லாதவாறு தமிழக அரசாங்கமானது சிப்காட், சிட்கோ, போன்ற தொழிற்துறை முகமைகளின் மூலமாக விவசாயிகளிடமிருந்து முன்ன தாகவே விலை கொடுத்து வாங்கி நிலவங்கியை (land bank) அமைத்து பின்னர் அடி மாட்டு விலைக்கு ஏகாதிபத்திய முதலாளிய/பெரு முதலாளிய/நடுத்தர முதலாளிய தொழில் நிறுவனங்களுக்கு குத்தகை கொடுத்து நிலத்தை மிகப்பெரும் சரக்காக மாற்றி அவ்வாறு சுமார் 100 சிப்காட்/ சிட்கோ தொழிற்பேட்டைகளை (இவற்றில் சில தொழிற்பேட்டைகள் 50--60களில் அமைக்கப் பட்டவை என்பது வேறு விஷயம்) விளை நிலங்கள்/நீர்நிலைகள்/நீர்வழித் தடங்களில் அமைத்து வெள்ளப் பெருக்குக்கு பங்காளியாக தொழிற் துறையையும் பாத்திரமாற்ற வைத்து உள்ளது.

இந்த நிலப்பரிவர்த்தனையில்/நில விற்பனையில் ஊக வாணிகமும் முக்கியப் பங்காற்றி நிலத்தின் மதிப்பை கூட்டி அது மிகப்பரவலான பாதுகாப்பான முதலீட்டு வடிவமாகவும் இருந்து வருகிறது. அசையாச் சொத்தான நிலமும் அசையும் சொத்தான தங்கமும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, திருமணம் போன்றவற்றிற்கான நிதி தேவையை மேல்/நடுத்தர வர்க்கத்தினருக்கு நிறைவேற்றும் சாதனங்களாக ஆகிவிட்டன.

விவசாயம் நசிந்து வருவதாலும் கல்வியும் சுகாதாரமும் மிகவும் வணிகமயமாகி விட்டதாலும் வேலையின்மையாலும் திருமணமானது உடைமை விரிவாக்கம் என்ற நோக்கிற்கான பாத்திரத்தை ஆற்றுவ தாலும் மேல் நடுத்தர/நடுத்தர வர்க்கத்தின ரிடையே மட்டுமன்றி அனைத்து வர்க்க விவசாயிகளிடையேயும் பரவலாக நிலம் மிகப்பெரும் சரக்காகிவிட்டது.

விவசாயம் செய்வதாலேயே விவசாயக்கடன் கிடைத்து விடாது. விவசாயிகள் தங்களுடைய நிலத்தை அடகு வைத்துதான் நிதி நிறுவனங்களிடமிருந்து கடனைப் பெற முடிகிறது.

இதனாலும், நிலமானது மேலும் சரக்குத் தன்மையை அடைவதற்கு காரணமாகிறது. இவ்வாறு தமிழகத்தில் நிலம் சரக்காக மாறிவிட்ட நிலையில் அது விளை நில மாகவோ நீர்நிலையாகவோ நீர்வழித்தட மாகவோ இருந்தாலும் அதனை விற்பதும் வாங்குவதும் பெருமளவில் நடக்கவே செய்யும்.

வேலைவாய்ப்புக்காக வாழ்வா தாரத்திற்காக தமிழகத்தில் நகரங்களை குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர் போன்றவற்றை நோக்கியும் அவற்றின் அண்டை மாவட்டங்களை நோக்கியும் இந்தியா எங்கும் வந்து குவிவதால் குடி யிருப்புத்தேவை அதிகரிப்பதாலும் நிலத்தின் சரக்குத்தன்மை அதிகரிக்கவே செய்யும்.

அண்மைய மத்திய பட்ஜெட் சமர்ப் பித்த அன்று இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்க மகா சம்மேளனத்தின் தலைவரான அஜித் குமார் சோர்டியாவின் கூற்றுப்படி (டைம்ஸ் ஆப் இந்தியா, சென்னை 01.03.2016) சென்னையில் டெவலப்பர்ஸ் ஆண்டுதோறும் 40,000 அப்பார்ட்மென்ட்களை விற்கின்றனர்.

அவற்றில் பரந்துபட்டளவில் ரூ50 இலட்சத் திற்கு உட்பட்ட அபார்ட்மெண்ட்டுகள் தான் அதிகமாக விற்கப்படுகின்றன. அவற்றின் விற்றுமுதல் (turnover) சுமார் 25,000 கோடியாகும்.

(விளை) நிலத்தின் சரக்குமயமாக்கலை மேலும் தீவிரப்படுத்தும் மோடியின் புதிய திட்டங்கள்

தமிழ்நாட்டில் நீர் நிலைகளின் அழிவினாலும் (விளை) நிலம் சரக்குமயமாவதாலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுதோறும் சராசரியாக 1 இலட்சம் ஏக்கர் நிலம் விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாற்றப்படுகிறது. தவிர 10 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குப் படி (ஜெயலலிதா 2004-05இல் சட்டமன்றத் தில் தெரிவித்தபடி) தரிசு நிலமானது 60 இலட்சம் ஏக்கர் ஆகும், இதுதவிர சாகு படிக்கு ஏற்ற தரிசு நிலம் சுமார் 10 இலட்சம் ஏக்கர் ஆகும்.

இந்நிலையில், (விளை) நிலத்தின் சரக்கு மயமாக்கலை மேலும் அதிகரிக்கும் வகையில் மோடியின் ஆட்சியானது ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள், நிலக் குத்தகைச் சட்டம், ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 2016 (இது கடந்த மே 1 முதல் நடைமுறைக்கு வந்து விட்டது), மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் வரைவு அறிவிக்கை ஆகியனவற்றை கொண்டு வருகிறது.

இதில் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் தமிழ் நாட்டில் அமலாகிறது. இதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படும். நிலக் குத்தகைச் சட்டத்தின் வரைவானது மாநிலங்களுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இதன்படி சாகுபடி நிலத்தை குத்தகைக்குவிடுவது  முழுமையாக சட்டபூர்வமாகிறது. இதற்கு மே.வங்கம், கேரளா ஆகியன தவிர ஏனைய மாநிலங்கள் சாதகமாக முடிவெடுத்துவிட்ட தாக தெரிகிறது.

இக்கட்டுரையின் முந்தைய பத்திகளில் பார்த்தவாறு நீர் நிலைகளின் அழிவை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றிப் புதிய உடமை வர்க்கமாக மாறி ஏனைய புதிய உடமை வர்க்கங்களின் உருவாக் கத்திற்கு வழிகோலிய உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரவர்க்கம் மேலும் அதே போல் செய்வதற்கு கூடுதல் அதிகாரங் களுக்கு வழிவகை செய்யும் 10 பக்க வரைவு அறிவிக்கையை மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் படி, 20000 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமானப் பகுதிக்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதியை பெறவேண்டிய தற்போதுள்ள விதியை திருத்தி அதை 1.5 இலட்ச சதுர மீட்டராக உயர்த்தப்படுகிறது.

ஏற்கனவே ரியல் எஸ்டேட் துறையில் பெருமூலதனம் / ஏகாதியபத்திய மூலதனம் அதிகமாக நுழைவதற்கு ஏதுவாக வழிகாட்டி மதிப்பை உயர்த்திவிட்ட ஜெயலலிதாவின் ஆட்சியைப் போலவே மோடியின் ஆட்சியும் ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம் பாட்டுச் சட்டம் ஒன்றை சென்ற மார்ச்சில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி கடந்த மே 1 அன்று நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடி யாக அதிகமான அளவில் உழைப்பாளிகள் ஈடுபட்டிருக்கக்கூடிய ரியல் எஸ்டேட் துறையானது GDPல் 9 விழுக்காட்டை கொண்டுள்ளது.

கட்டுமானத் துறையானது 250 துணைத் தொழிற்துறைகளை வளர்த்து விடுகிறது. இந்தியாவெங்கும் 76000 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆண்டிற்கு 10 இலட்சம் மக்கள் வீடுகளை வாங்குகின்றனர். ரியல் எஸ்டேட் துறையில் 2015ல் வெளிநாடுகளிலிருந்து தனியார் பங்கு முதலீடானது (Private equity investment) அதற்கு முந்தைய ஆண்டைவிட 33% உயர்ந்து

ரூ. 14974 கோடியை எட்டியுள்ளது; கட்டு மானத் துறையில் நேரடி அன்னிய முதலீ டானது 2015&ல் அதற்கு முந்தைய ஆண்டை விட 18% அதிகரித்து 4405 மில்லியன் டாலரை எட்டியுள்ளது.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் சம்பந்த மான மேற்காணும் சட்டத்தின்படி ஏற்கன வே இருக்கும் போக்கான ஏகாதிபத்திய மூலதன/பெரு மூலதனத்தின் நுழைவை அதிகப்படுத்தும் விதமாக, நடுத்தர ரியல் எஸ்டேட்/ கட்டுமான நிறுவனங்களை வீழ்த்தி, சாதாரண நடுத்தர மக்கள் பாதிக் கின்ற வகையில் நிலமானது மேலும் சரக்குமயமாகிறது.

இன்னொரு புறத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரிச்சலுகை க்காகவும் நிலத்தை/ குடியிருப்பை வாங்கு மாறு மேல் நடுத்தர வர்க்கத்தினர்  நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அதற்கு வங்கிகளும் ஏனைய நிதி நிறுவனங்களும் கடன்களை வழங்குகின்றன. விவசாயத் துறைக்கோ, சிறு/குறு தொழிற்துறைக்கோ கடன்களை வழங்க தயாராக இல்லாத இவை உபரியை எளிதாக நீடித்த தன்மையில் கொள்ளையடிப்பதற்கு நிலம்/குடியிருப்புகளை வாங்குவதற்கு அவற்றை வழங்குகின்றன.

முலதனம் பரவலான தொழில்மயமாக்கத் தையோ பொருளாதார வளர்ச்சியையோ விரும்பாது. அதன் வளர்ச்சிக்கோ குவிப்புக்கோ உதவாது. இதனாலும் நிலத்தின் தேவை அதிகரிக்கிறது.

இவ்வாறு உழைப்பதற்காக வரும் நடுத்தர/மேல் நடுத்தர வர்க்கத்தினரையும் (மேல் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு பிரிவினர் தேவைக்கு மிகையாக குடியிருப்புகளை வாங்கி அவ்வர்க்கத்தினரில் உயர்மட்டப் பிரிவாக ஆகின்றனர்) குடியிருப்பை வாங்க வைத்து புதிய உடமை வர்க்க உருவாக்கத்தின் அங்கமாக்கி நிலவும் சுரண்டல் சமூக அமைப்பு தன்னை தகவமைத்து தற்காத்து வருகிறது.

புதிய உடைமை வர்க்க உருவாக் கத்தினால் பயனடைந்த பழைய உடமை வர்க்கம்

புதிய முதலாளிகளின் உருவாக்கத் தில் பயன் பெற்ற பழைய முதலாளிகள் மேலே பார்த்த பல்துறைசார் புதிய உடமை வர்க்கங்களின் இத்தகைய வளர்ச்சியினால் தமிழகத்தை தலைமையகமாக உடைய டி.வி.எஸ்., சக்தி குழுமம், அமல்கமேஷன்ஸ் (இம்மூன்று குழுமங்களும் லாரி/டிரக் போன்ற கனரக வாகனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்பவை), அசோக் லேலண்ட், ஐசர், மஹிந்திரா - மஹிந்திரா போன்ற ஏனைய ஆட்டோமொபைல் குழுமங்களுக்கும் லாரி/டிரக் சந்தை கிடைக்கிறது.

அதாவது ஆற்று மணல் குவாரிகளி லிருந்து மணலை கொண்டு செல்லும் லாரி/டிரக்குகள், அரசாங்கம்/தனியார் குடிநீர் லாரிகள் ஆகியவற்றினை விற்பதற்கான சந்தையானது இக்குழுமங்களுக்கு கிடைக் கின்றது.

* இந்த லாரி/டிரக் வாகனங்களை வாங்க முனைவோருக்கு கடன் கொடுத்தே பெரிதாக வளர்ந்தது ஸ்ரீராம் குழுமம்.

இங்ஙணம் புதிய உடமை வர்க்க உருவாக்கத்தினால் பழைய பெருமுதலாளி களும் வளர்ந்தனர்; புதியதாக ஸ்ரீராம் குழுமம் போன்றவையும் வளர்ந்து பெரு முதலாளிய பட்டியலில் நுழைந்துவிட்டன.

அதே போல், கட்டுமானத் துறையில் சிமெண்ட் சந்தையை கைப்பற்றி கடந்த 10 ஆண்டுகளில் தென்னிந்தியாவிலேயே சிமெண்ட் உற்பத்தியில் முன்னணியில் நிற்கின்றன செட்டிநாடு சிமெண்ட் குழுமம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் குழுமம். பழைய முதலாளிய குழுமங்கள் LMW /லட்சுமி மில்ஸ், பின்னி ஆகியவையும் ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்துவிட்டன.

தமிழ்நாட்டில் வளர்ந்த டி.டி.கே. குழுமமானது டி.டி.கே. எஸ்டேட்ஸ் என்ற பெயரில் பெங்களூரை தலைமையகமாக கொண்டு ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்துள்ளது.

புதிய உடமை வர்க்கத்தின் உருவாக்கத்தை சாத்தியமாக்கிய முதலாளியம்

இங்ஙணம் தமிழக மழை வெள்ளத் திற்கு காரணமான புதிய உடமை வர்க் கத்தின் உருவாக்கமானது அதன் அங்கமாக பழைய பெருமுதலாளிய/ஏகாதிபத்திய வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் உதவி வருகிற வேளையில், மேலும் அதைவிட முக்கியமானது என்னவெனில் இந்நிகழ்வுப் போக்கு இல்லாவிடில் பழைய முதலாளிய உடமை வர்க்கமானது தனது இருத்தலை காப்பாற்றி கொள்ள முடியாது.

அது முதலாளிய உடமை வர்க்கத்திற்கே வேட்டு வைத்தாற் போன்று ஆகிவிடும். அத்துடன் ஒருபடித் தான உடமை வர்க்க கட்டமைப்பைவிட படிநிலை வகைப்பட்ட உடமை வர்க்க கட்டமைப்பே அக்கட்டமைப்பை தக்க வைப்பதற்கு ஒரு வகையில் உதவும்.

முதலாளித்துவத்தின் இயங்கு நிலையானது அதன் விதியின் அடிப்படையில் அவ்வப்பொழுது எழும் அரசியல் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப படிநிலைவகைப்பட்ட பல்வகைப்பட்ட வர்க்க கட்டமைப்பையும் புதிய உடமை வர்க்க உருவாக்கத்தையும் தோற்றுவிக்கிறது.

இதனால்தான் முதலாம் உலகப் போரில் தோற்ற ஜெர்மனியானது இரண்டாம் உலகப்போருக்கு காரண கர்த்தாவாக பெரும் ஏகாதிபத்தியமாக எழ முடிந்தது.

 அப்போரிலும் அது ஜப்பானுடன் நிர்மூல மானாலும் அடுத்த 30/40 ஆண்டுகளில் மீண்டும் எழுந்து அவற்றை தோற்கடித்த அமெரிக்காவின் உதவியுடனே அமெரிக்கா வுக்கு அவையிரண்டும் (ஜெர்மனி, ஜப்பான்) போட்டியாக வளர்ந்துள்ளன.

இந்த நிகழ்வுப் போக்குதான் இந்தியா போன்ற நாடுகளே G 7+4 உச்சி மாநாடுகளில் அங்கமாகவும் அமெரிக்காவுக்கு போட்டியாக BRICS -இன் அங்கமாகவும் 2008-இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஒப்பீட்டளவில் அதிகப் பாதிப்பில்லாமல் எதிர்கொள்ளவும் சாத்தியமாக்கியது. 

அதேபோல் தமிழ்நாட்டில் 1947-முதற்கொண்டு ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு (சில) பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பழைய உடமை வர்க்கத்தின் தொடர்ச்சி யோடு புதிய உடமை வர்க்கங்களின் உருவாக்கத்தையும் இந்நிகழ்வுப் போக்கின் அங்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.

1947-க்கு பின்பு மட்டுமல்லாமல் கடந்த 2000-ஆண்டுகால தமிழக வரலாற்றில் ஒவ்வொரு சில நூறாண்டுகளிலும்/ஒவ்வொரு ஆட்சியிலும் இந்நிகழ்வுப் போக்கே நடந்தேறியது.

முதலாளியத்தை கட்டிக் காப்பாற்று வதற்கு 1952ல் இந்தியாவில் அறிமுகமான நாடாளுமன்ற அமைப்பானது அதன் சட்டம் இயற்றும் அவைகளிலும் அதிகார வர்க்கத்திலும் அதுவரையிலும் அவற்றில் இடம்பெறாத ஒரு பெரும் பிரிவினரில் ஒரு சிறிய பிரிவினரை இடம் பெறவைத்ததன் வாயிலாகவும் இப்புதிய உடமை வர்க்கங்கள் உருவாக வழி வகுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் தோற்றமும் வளர்ச்சியும் அதன் 6 ஆட்சிகளும் இதில் முதன்மையான பங்கை வகித்தன.

அத்துடன் புதிய உடமை வர்க்க உருவாக் கத்தின் ஒரு சிறிய பிரிவு மட்டுமே ஆளும் வர்க்கமாக உருவெடுக்க முடிகிறது என்பதையும் ஏனைய உடமை வர்க்கங்கள் சுரண்டப் படுகின்றன என்பதையும் அவற்றின் வளர்ச்சியும் நலனும் முடக்கப்படுகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆனால் புதிய உடமை வர்க்கங்களின் உருவாக்கமானது உடமையற்ற / சிறு உடமை / குறு உடமை வர்க்கங்களின் சமூக கொந்தளிப்பை தணிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பரவலான தொழில்மயமாக்கமே நீர்நிலைகளை காப்பாற்றும்

மேலே பார்த்தவாறு மூலதன வர்க்க மாக உருவாவதற்கும் மூலதனத் திரட்சிக் காகவும் அதன் வாயிலாக புதிய உடமை வர்க்க மாக ஆவதன் பொருட்டும் அதன் ஊடே புதிய ஆளும் வர்க்கமாக வளர்வதற்கும் அழிக்கப்பட்ட/அழிக்கப்பட்டு வரும் நீர்நிலைகளை/நீர் வழித்தடங்களை பரவலான தொழில்மயமே காப்பாற்ற முடியும்.

ஏற்றுமதி சந்தையை மய்யமாக கொள்ளாத உள்ளூர்/வட்டார அளவிலான பரவலான தொழில்மயமாக்கமே மூலதனக் குவியலை கட்டுக்குள் கொண்டு வரும். சுற்றுச் சூழலை/ இயற்கையை காக்க வேண்டுமெனில் முதலாளியத்தை வேரோடு அழித்தல் அவசியமாகும்.  

Pin It