உலகில் உள்ள அனைத்துமே மாயம், பிரம்மம் மட்டுமே உண்மை என்று சங்கரன் தனது மாயாவாத தத்துவத்தில் அறிவித்தான். பிரம்மத்தை எதைக் கொண்டும் அறிய முடியாது, அதை எதைக் கொண்டும் நிரூபிக்கவும் முடியாது. ஆனால் பிரம்மம் மட்டுமே உண்மை, அது சாசுவதமானது என அனைவரையும் நம்ப வைத்து ஒரு பெரும் முட்டாள் கூட்டத்தையே தனது சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களாக மாற்றி வைத்தான் குழப்பவாதி பார்ப்பன சங்கரன். இன்று தமிழ்நாட்டில் நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது அதிமுக என்ற கட்சி சங்கரனையே மிஞ்சும் அளவிற்கு மாயாவாத தத்துவத்தை தமிழகத்தில் பரப்பி வருகின்றது. மக்கள் எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்கின்றார்கள். ஆனால் அரசு அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சொல்கின்றது அதை நம்ப வைக்க ஊடகங்களில் பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்கின்றது. நீதி மன்றம் சாராயக்கடையை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது நடவடிக்கை எதையும் எடுக்கக் கூடாது என்கின்றது. ஆனால் அரசு குண்டாந்தடியால் வெளுத்து வாங்குகின்றது. ஆனால் ஊடகங்களில் பேசவரும் அதிமுக பேச்சாளர்கள் இந்த அரசு மக்கள் மீது எந்தவிதமான வன்முறையையும் பயன்படுத்தவில்லை என்று சொல்கின்றார்கள்.
எதிர்க்கட்சியினர் அனைவரும் அதிமுகவை பிஜேபி இயக்குவதாக குற்றம் சாட்டுகின்றார்கள். ஆனால் எடப்பாடி மோடி அரசு உத்திரவிட்டதும் சைரனை அவர் கைகளாலேயே கழற்றியும், அதிமுககாரர்கள் யாரும் மோடியை விமர்சிக்கக் கூடாது என உத்திரவிட்டும் தாங்கள் சுயமாகவே சிந்தித்து நடக்கும் அடிமைகள், யாரின் நிர்பந்தமும் இல்லாமல் ஆட்சி செய்வதாக சொல்கின்றார். அப்படி என்றால் மக்களும் எதிர்க்கட்சிகளும் சொல்வது அனைத்தும் பொய்யா என்றால் ஆம் பொய்தான். சங்கரனுக்கு எப்படி தான் அனைவரையும் குழப்பி ஏமாற்றுகின்றோம் என்பது தெரியுமோ, அதே போல எடப்பாடிக்கும் அவர்களின் சகபாடிகளுக்கும் நன்றாகவே தெரியும், தாம் ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றோம் என்று. உங்களிடம் வலுவான ஆதாரங்கள் இருக்கலாம். ஆனால் அவை அனைத்துமே மாயம். நீங்கள் எதைக் கொண்டும் இந்த ஆட்சி ஒரு மோசடி ஆட்சி என்றோ, இல்லை ஊழல் ஆட்சி என்றோ, இல்லை பார்ப்பன அடிவருடி ஆட்சி என்றோ நிரூபிக்க முடியாது. நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
ஏனென்றால் அதுதான் மாயாவாதம். பிரம்மத்தை அடையும் வழி. நல்லாட்சியை அடையும் ஒரே வழி. நம்பிக்கை மிக முக்கியம். டைம்ஸ்நவ் தொலைக்காட்சி மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பேசியதாக ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதில் பேசிய சரவணன் எம்.எல்.ஏ “சொந்த ஊரில் இருந்து வந்த எம்.எல்.ஏக்களை விமான நிலையத்தில் மடக்கி ரூ 2 கோடி தருவதாக கூறினர். எம்.எல்.ஏ விடுதியில் இருந்து ஆளுநர் மாளிகை சென்றபோது ரூ. 4 கோடியானது. கூவத்தூர் விடுதியில் தங்க வைத்தபோது ரூ 6 கோடி தருவதாக உறுதி அளித்தனர். ஒரே நேரத்தில் பணமாகத் திரட்ட முடியாது என்பதால் தங்கமாக தருவதாகக் கூறினர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 10 கோடி பேரம் பேசப்பட்டது. ஒ.பி.எஸ் முதல்வரானால் நாங்கள் 11 பேரும் அமைச்சர்களாகி விடுவோம். ரூ 500 கோடிதான் எங்கள் இலக்கு” என அவர் பேசியதை வெளியிட்டு அதிமுக திருட்டுக் கும்பலின் யோக்கியதையை அம்பலப்படுத்தி இருந்தது.
"வீடியோவில் இருப்பது நான் தான், ஆனால் பேசியது நான் கிடையாது, யாரையோ வைத்து டப்பிங் பேசியிருக்கின்றார்கள்" என்று சரவணன் மறுத்துக் கூறியிருக்கின்றார். இது சசிகலா மற்றும் அவரது அணியினரின் திட்டமிட்ட சதி என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றார். இதன் மூலம் தான் மாசுபடாத அக்மார்க் யோக்கியன் என்று தன்னை காட்ட முற்படுகின்றார். இது போன்று எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு பின்பு வீடியோவில் இருப்பது நான் கிடையாது என்று சொல்வதெல்லாம் நாம் நித்தியானந்தா தொடங்கி பல பேரிடம் பார்த்திருக்கின்றோம். முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் அயோக்கியர்கள் இப்படித்தான் ஒரு நாள் முச்சந்தியில் அம்பலப்பட்டு விடுகின்றார்கள். ஆனால் தாங்கள் என்னதான் அம்பலப்பட்டாலும் தங்களை நம்பும் முட்டாள் கும்பலிடம் தங்களை யோக்கியவானாக நம்ப வைக்க அவர்களால் முடிகின்றது. ஜெயலலிதா சிறைக்குப் போவதும், பதவியை இழப்பதும் வாடிக்கையான தொடர் சம்பவமாக நடந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தன்னை ஒரு பற்றற்ற துறவியைப் போல காட்டிக் கொள்ள முடிந்தது. மக்கள் ஜெயலலிதாவின் கபட பேச்சைக் கேட்டு, அவரை மறுபடியும் மறுபடியும் தேர்ந்தெடுத்து, தங்கள் இழிந்த அடிமைத்தனத்தை நிரூபித்தார்கள்.
எப்படி தன்னை தரிசிக்க இன்னமும் பக்தர்கள் கூட்டத்தை பரவசத்துடன் வரவழைக்க நித்தியானந்தாவால் முடிகின்றதோ அப்படித்தான் நம்ம ஊர் அரசியல்வாதிகளும். என்னதான் அதிகார, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் அவர்களால் திரும்பத் திரும்ப தேர்தலில் நின்று வெற்றிபெற முடியும். இதற்காக அவர்கள் பெரிதாக எல்லாம் மெனக்கெடுவதில்லை. ஊழல் வழக்கிலோ, இல்லை வேறு கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என எந்த வழக்கில் மாட்டிக் கொண்டாலும் உடனே அது தனக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்று ஒரே போடாக போட்டுவிட வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டு சிறைக்குப் போனாலூம் தான் குற்றமற்றவர் என்றும், தன்னை அரசியலில் இருந்தே ஒழித்துக்கட்ட நடக்கும் சதி என்றும், இந்த மக்களுக்காகவே தான் வாழ்வதாகவும், அவர்களுக்காக உழைத்துச் சிறை செல்வதைப் பெருமையாக நினைப்பதாகவும், தன்னுடைய அயோக்கியத்தனத்தையும் மோசடித்தனத்தையும் மக்களுக்கான தனது சேவையாக, தியாகமாக மாற்றிவிட வேண்டும். அவ்வளவுதான் பிறகு மக்கள் பார்த்துக் கொள்வார்கள். வேண்டுமென்றால் நாஞ்சில் சம்பத் போன்ற நாக்கு சுழட்டிகளைக் கூட வைத்துக் கொள்ளலாம். விபச்சாரிகள் எப்படி தனது தொழில் தேவைக்காக தரகனை வைத்துக் கொள்ளுகின்றார்களோ அது போல. பிரச்சினை இல்லாமல் தொழில் நடந்துகொண்டே இருக்கும்.
மக்களை நம்ப வைக்க வேண்டும் அவ்வளவுதான். அவர்களுக்கு நம்மைப் பற்றிய பெருமித உணர்வு எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். நம்மைப் பற்றிய எந்த ஒரு குற்றச்சாட்டும் அம்பலமாகும் போதும் உடனே மறுத்துவிட வேண்டும். அதை அப்பட்டமான பொய் என்று கூறிவிட வேண்டும். இது போல வீடியோவே வெளியாகி மாட்டிக் கொண்டாலும் சரவணன் போல வீடியோவில் இருப்பது நான் தான், ஆனால் பேசியது நான் இல்லை என்று சொல்லிவிட வேண்டும். இல்லை நித்தியானந்தா போல வீடியோவே பொய்யானது என அமெரிக்காவில் ஏதாவது ஒரு பிளேடு லேபில் பணம் கொடுத்துச் சான்றிதழ் வாங்கி முழுப்பூசணிக்காவை மக்கள் பார்க்கும் போதே சோற்றில் மறைத்து, பூசணிக்காவும் மாயை, சோறும் மாயை என்று மக்களை நம்பவைக்க வேண்டும். அதுதான் ஒரு தேர்ந்த மோசடிப் பேர்வழியின் வெற்றிக்கான ரகசியம்.
அதனால் கூவத்தூரில் கடத்திவைக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு மன்னார்குடி கும்பல் 6 கோடி கொடுப்பதாக குதிரை பேரம் பேசியது, கூவத்தூரில் கோல்டன் பே ரிசார்டில் எம்.எல்.ஏக்கள் குடித்துவிட்டுக் கொட்டம் அடித்தது, இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, சசிகலா ஊரை அடித்து உலையில் போட்டு ஊழல் வழக்கில் சிறை சென்றது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஊழல் வழக்கிற்காக பறிமுதல் செய்யப்பட்டது, அதிமுக ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்னும் அளவிற்கு மிகப் பெரிய ஊழல் பட்டியலையே எதிர்கட்சிகள் ஆளுநரிடம் கொடுத்து, கடைசியாக பன்னீர்செல்வம் அணியின் தோற்றமே 500 கோடியை அடிப்பதற்காக தான் என்ற மாபெரும் உலுத்துப்போன உண்மையை சரவணன் போட்டுடைத்தது என எல்லாமே மாயை. அதை எல்லாம் மக்கள் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் அதிமுகவை பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்து மீண்டும் புனிதர்களின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவரவேண்டும். இல்லை என்றால் எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் உங்களை மன்னிக்காது.
- செ.கார்கி