தனியார் பள்ளிகளைப் புற்றீசல் போல் அனுமதித்துவிட்டார்கள். கல்விக் கட்டணம் பெரும்பாலான குடும்பங்களை வறுமையின் பிடிக்குத் தள்ளுகிறது. ஆங்கில வழிக் கல்வியே அறிவுக் கல்வி என்ற போலி நம்பிக்கையில் பலர் அறியாமைப் புதைகுழியில் சிக்கி தானும் அவதிப்படுவதோடு குழந்தைகளையும் அறிவுக் குருடாக்கி வருகிறார்கள்.
அய்யோ! நாட்டில் சமத்துவமில்லை, சகோதரத்துவம் இல்லை, என்று துடிப்பவர்கள் கூட அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் இல்லை... கழிப்பறை இல்லை... என்று குறைசொல்லிவிட்டு தனியார் பள்ளிக்குப் போகும் நிலைதான் உள்ளது. ஊருக்குள் சமத்துவம் வேண்டும் என்று பேசுபவர்களே ஊர்ப்பள்ளிகளைத் தீண்டத்தகாத பள்ளிகளாகத் தான் பார்க்கின்றனர். ஏழைகள் இருக்கும் ஊரில் மட்டும் இனி அரசுப்பள்ளிகள் இருக்கும் நிலை வந்துவிட்டது. அரசுப்பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைய வழி தேடாமல், போராடாமல் இருக்கும் வரை இந்த அவலங்கள் தான் நீடிக்கும்.
கல்வி எளியவர்கள் ஏற்றம் பெறும் வழியாக இருக்கவேண்டும். ஆனால் கடந்த முப்பதாண்டு காலக் கல்விக் கொள்கைகள் எளியவர்களை ஏமாற்றும் வழியாக மாறிவிட்டது. ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் ஏழைக் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள். ஆனால் இவர்களில் ஆண்டுக்கு 30 பேர் கூட மருத்துவக் கல்விப்படிப்பில் சேர முடியவில்லை.
நீட் தேர்வினால் மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்படுவார்கள் என்று இப்போது நாம் போராடி வருகிறோம். 1976 இல் பறிக்கப்பட்ட மாநில அரசுகளின் கல்வி உரிமை குறித்து இப்போது அதிகமாகப் பேசுகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலப் பாடத்திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள் மொத்தமாக ஏமாற்றப்பட்டார்கள் என்பதற்கெல்லாம் நாம் இத்தனை நாட்களாக வீதிக்கு வரவில்லை.
அரசுப்பள்ளிகள் மீதும் அரசுப்பள்ளிகளில் படிப்போர் மீதும், படிக்கவைப்போர் மீது போலி அருளிறக்கம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. உண்மைகளை மக்களிடம் பேச எல்லோரும் வீதிக்கு வருவோம்... வாருங்கள்.
- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு