கூட்டுறவுக் கூட்டாட்சி (Co-operative Federalism) என்பதே பா.ச.க. ஆட்சியின் குறிக்கோள் என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு, மறுபுறம் அரசமைப்புச் சட்டத்தால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறித்து நடுவண் அரசில் குவிக்கும் நடவடிக்கைகளை நரேந்திர மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இத்தன்மையில் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் என்பதை அமைப்பதற்கான சட்டத்தை (Higher Education Commission of India (Repeal University Grants Commission Act) Act 2018) இந்த சூலை மாதம் தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வேண்டுமென்று நடுவண் அரசு முனைந்துள்ளது.
1947இல் இந்தியாவில் 20 பல்கலைக்கழகங்களும் 500 கல்லூரிகளும் இருந்தன. சுதந்தர இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு, “அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த பத்தாண்டு களுக்குள் 14 அகவைக்குட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவயக் கல்வியை அரசு அளிக்க வேண்டும்” என்று அரசமைப்புச் சட்டம் வகுத்திருப்பதைச் செயல்படுத்து வதில் வேண்டுமென்றே முனைப்புக் காட்டவில்லை. மாறாக, பார்ப்பனர் மற்றும் பிற மேல்சாதியினரின் பிள்ளைகளுக்கு உதவும் வகையில் உயர்கல்வியை ஊக்குவித்தது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் அமைவதற்கான ஏற்பிசைவு வழங்குதல், உயர்கல்வி யின் தரத்தைக் கண்காணித்தல், உயர் கல்விக்கு நிதியைப் பகிர்ந்தளித்தல் ஆகிய பணிகளைச் செய்வ தற்காக 1956இல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் பல்கலைக்கழக மானியக் குழு (UGC - யு.ஜி.சி.) என்பது ஏற்படுத்தப்பட்டது.
இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை கால ஆட்சி யின் போது, 1976இல், மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி, பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன்மூலம் உயர்கல்வியில் மாநிலங் கள் பெற்றிருந்த அதிகாரம் பறிக்கப்பட்டது. இன்று உயர்கல்வியில் உள்ள சீர்கேடுகளுக்கும் ஊழல்களுக் கும் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதே மூல காரணமாக இருக்கிறது.
மற்ற உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு - மனிதன் மட்டுமே உற்பத்தி செய்கிறான்; கருவிகளைக் கொண்டு, தன் உழைப் பைச் செலுத்தி, இயற்கையில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தித் தன் தேவைக்கான பொருள்களை உற்பத்தி செய்கிறான். மனிதகுல வரலாற்றில் மனி தனின் அறிவாற்றலால் கருவிகளில் ஏற்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சி, உற்பத்தித் திறனிலும். உற்பத்தியின் பெருக்கத்திலும் பாய்ச்சலான முன்னேற்றங்களை உண்டாக்கியுள்ளன. இந்த உற்பத்திப் பெருக்கத்தின் பயன்களில் பெரும் பகுதியை நாட்டின் மக்கள் தொகை யில் சிறிய விழுக்காட்டினராக உள்ள மேல்தட்டு ஆளும் வர்க்கத்தினரே துய்க்கும் வகையிலான அரசமைப்பும் ஆட்சி முறையும் இருந்து வருகின்றன.
இத்தன்மையில் 1980களில் மேலை நாடுகளில் தகவல் தொழில் நுட்பம் (Information Technology-IT) வேகமாக வளர்ந்தது. உற்பத்தித் துறையிலும் இதன் பயன்பாடு மிகுந்தது. பன்னாட்டு முதலாளிய நிறு வனங்கள் தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களையும் மக்களின் உழைப்பை மலிவான கூலியிலும் சுரண்டுவதற்காக, வளர்ச்சி பெற்ற முதலாளிய நாடு களின் மூலம் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் என்கிற கொள்கையைக் ‘காட்’ ஒப்பந்தம் மூலம் உருவாக்கின. உலக வணிக அமைப்பின் மூலம் மூன்றாம் உலக நாடுகள் மீது இக்கொள்கைகளைத் திணித்தன. 1991இல் பி.வி. நரசிம்மராவ் பிரத மராகவும், மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் ஆட்சியில் அமர்ந்ததும் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்கிற கொள்கைகள் தீவிரமாகச் செயல் படுத்தப்பட்டன. இதற்காக தொழில்கள், வணிகம், மருத்துவம், கல்வி முதலானவற்றின் மீதான அரசின் பொறுப்புகளும், கட்டுப்பாடுகளும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
இவ்வாறு தனியார்மயமாக்கப்பட்ட சூழலில், முதலாளிய நிறுவனங்களுக்கு, தகவல் தொழில் நுட்பத் தைத் தொழில்களிலும், சேவைப் பிரிவுகளிலும் (Service Sector) வணிகத்திலும் பயன்படுத்துவதற்காக, இதில் பட்டமும் பயிற்சியும் பெற்ற இளைஞர்கள் தேவைப்பட்டனர். இந்தப் பின்னணியில்தான் தனி யார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் 1990 முதல் புற்றீசல்கள் போல் முளைத்தன. தற்போது தமிழ் நாட்டில் மட்டும் 550-க்கும் மேற்பட்ட சுயநிதிப் பொறி யியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்தியாவில் இதுபோல் இருக்கின்ற மொத்த தனியார் பொறியியல் கல்லூரி களில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ளன. இவற்றுடன் வணிகவியல் (B.Com.), வணிக மேலாண் மையியல் (B.B.A; M.B.A.) படிப்புகளில் தனியார் கல்லூரிகள் உருவாயின.
முதலாளிய உற்பத்தியின் உயர் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் சேருவதற்கு ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டும் என்கிற கருத்து ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. இதன் விளைவாக இந்தியா முழுவதும் மழலையர்பள்ளி முதல் கல்லூரிக் கல்வி வரை ஆங்கில வழியில் கற்பிக்கும் தனியார் கல்வி நிறு வனங்கள் ஏற்படுத்தப்பட்டன. கல்வி வணிகமயமாகி கொழுத்த இலாபம் தரும் தொழிலாகக் கோலோச்சு கிறது. இப்போக்கிற்கு இந்திய அரசும், மாநில அரசு களும் எல்லா வகையிலும் துணை நிற்கின்றன.
இதனால் தாய்மொழிவழிக் கல்வி அடியோடு புறக்கணிக்கப்பட்ட கொடுமை நேர்ந்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டாக தத்தம் தாய்மொழியில் முறை யாக சிந்திக்கவும், பேசவும், எழுதவும் தெரியாத இளந்தலைமுறையை உருவாக்கியிருப்பதற்காக நாம் நாணித் தலைக்குனிய வேண்டும். “செந்தமிழே உயிரே நறுந்தேனே, உயிரினை - மூச்சினை உனக் களித்தேனே” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார். ஆனால் இன்று ஆங்கிலம் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. நம் தாய்மொழியான தமிழ ரையும், பிற தேசிய இனங்களின் தாய்மொழிகளையும் ஆங்கிலம் எனும் திமிங்கலம் விழுங்குவதிலிருந்து மீட்க வேண்டுமானால், முதலாளியச் சுரண்டலின் வடிவங்களான தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்கிற ஏகாதிபத்தியக் கொள்கையை வீழ்த்தி யாக வேண்டும்.
பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தல், கண்காணித்தல் முதலான பணிகளை மேற் கொள்வதற்கென இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) இருக்கிறது. இதேபோல் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக இந்திய மருத்துவக் குழு (MCI)வும், சட்டப்படிப்பு தொடர்பாக சட்டக்கல்விக் குழுவும்(BCI), ஆசிரியர் பயிற்சிக் கல்விக்காக என்.சி.டி.இ. (NCTE) என்கிற அமைப்பும் மற்றும் மருந்தியல், செவிலியர், கட்டட அழகியல் ஆகிய கல்வி நிறுவனங்களுக்காகத் தனித்தனியாகக் குழுக்களும் இருக்கின்றன. இவை அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) கீழ் இயங்கும் அமைப்பு களாகும்.
2016-2017ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்தியா வில் 864 பல்கலைக்கழகங்களும், 40,026 கல்லூரி களும் உள்ளன. 1991 முதல் இந்திய அரசும், மாநில அரசுகளும் உயர்கல்வி நிறுவனங்களை அமைக்கும் பொறுப்பிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாக விலகிக் கொண்டன. தனியார் கல்வி நிறுவனங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டன. எனவே தனியார் கல்வி நிறுவனங்களை அமைக்க அனுமதி பெறல், உரிய உள்கட்டமைப்பு வசதிகளும், தகுதி சான்ற ஆசிரியர் களும் இல்லாமல் நடத்துதல் ஆகியவற்றுக்காக யு.ஜி.சி. யில் உள்ளவர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெருந்தொகை கையூட்டாகத் தரப்படுகிறது.
மருத்துவக் கல்விக் குழுவின் தலைவராகப் பத்து ஆண்டுகள் இருந்த குசராத் பனியாவான கேத்தன் தேசாய் வீட்டில் ஆயிரம் கோடிக்குமேல் பணமும், நூறு கிலோ தங்கமும் வருமான வரித் துறையால் கைப்பற்றப்பட்டன. ஆனால் கேத்தன் தேசாய் சுதந்தர மாக நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார். முதலில் தனியார் கல்லூரியாகத் தொடங்கி, கல்வி வணிகக் கொள்கையால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக 150 நிறுவனங்கள் ஊழல் மூலம் உயர்த்திக் கொண்டன. இக்காரணங்களால் உயர்கல்வியின் தரம் தாழ்ந்தது. சட்டிப்பானை விற்பது போல் பட்டங்களை விற்கும் கடை களாகவே பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.
உயர்கல்வித் துறையின் சீரழிவுகள், முறைகேடுகள், ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளி வந்து பெரும் விவாதத்தைக் கிளப்பின, 2006ஆம் ஆண்டு நடுவண் அரசு உயர்க்கல்வித் துறையின் சீர்கேடுகளைக் களையவும், கல்வித் தரத்தை மேம் படுத்தவும் பேராசிரியர் யசுபால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. 2009இல் யசுபால் குழு அரசிடம் தன் அறிக்கையை அளித்தது.
யசுபால் குழு அறிக்கையில், நிதியைப் பகிர்ந் தளிக்கும் பொறுப்பு மட்டும் யு.ஜி.சி.யிடம் இருக்க வேண்டும். பாடப் பிரிவு, பாடத் திட்டம், கல்வியின் தரம் முதலானவற்றைக் கண்காணிக்க உயர்கல்வி ஆணையம் என்கிற தனியான ஒரு அமைப்பை ஏற் படுத்த வேண்டும். பொறியியல், மருத்துவம், சட்டம் முதலானவற்றின் கல்வி தொடர்பாக உள்ள அமைப்பு களைக் (AICTE, MCI) கலைத்துவிட வேண்டும். உயர்கல்வி என்பது எல்லாத் துறைகளையும் தழுவிய தாக-ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களையும் உள்ளடக்கிய தாக இருக்க வேண்டும். இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (IIT) போன்றவற்றில் கலை-அறி வியல் படிப்புகளும் இடம்பெற வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தந்தை வேந்த ராகவும், ஒரு மகன் இணை வேந்தராகவும், இன் னொரு மகன் துணைவேந்தராகவும் உள்ள கொடுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று யசுபால் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர் கள் இதை வரவேற்றனர். ஆனால் 2014 வரையில் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசு இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி ஆட்சி, இதன் அடிப்படை நோக்கத்திற்கு எதிரான வகையில் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
28-6-18 அன்று நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்-யு.ஜி.சி.க்கு மாற்றாகக் கொண்டு வரப்படவுள்ள உயர்கல்வி ஆணையத்திற்கான சட்ட வரைவை வெளியிட்டது. இதுகுறித்து சூலை 7ஆம் நாளுக்குள் பொதுமக்கள் கருத்துரைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டது. நீண்டகால நோக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உயர் கல்வி ஆணையம் குறித்து பத்து நாள்களுக்குள் கருத்துக் கூறவேண்டும் என்று அரசு ஏன் அவசரம் காட்டுகிறது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதன்பின் இந்தக் கால அளவு சூலை 20 வரை என்று நீட்டிக் கப்பட்டிருக்கிறது.
உயர்கல்வி ஆணையச் சட்ட வரைவில் உள்ள முதலாவது பெரிய தீமை என்பது, யு.ஜி.சி.யிடம் 1956 முதல் இருந்து வந்த நிதி நல்கும் அதிகாரத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வது ஆகும். யு.ஜி.சி. குறைந்த அளவிலேனும் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இயங்கி வந்தது. நிதி வழங்கும் அதிகாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்ச கத்திடம் செல்லுமானால், நடுவண் அரசில் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியின் தலையீடு நிதிப் பகிர்வில் அதிகமாக இருக்கும். எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங் களின் உயர்கல்விக்குக் குறைவாக நிதி ஒதுக்கப்படும். எனவே உயர் கல்வி மேலும் சீரழியும்.
இந்த வரைவில், “இந்திய அரசால் தேசிய அளவில் முதன்மையானவை என்று அறிவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, நாடாளுமன்றத்தின் எந்த வொரு சட்டத்தின் கீழும், மாநிலச் சட்டமன்றத்தின் எந்தவொரு சட்டத்தின் கீழும் நிறுவப்பட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்” என்று கூறப்பட்டுள்ளது. எனவே தமிழகச் சட்டமன்றத் தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலமாக நிறுவப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், அறிஞர் அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் மீது தமிழக அரசுக்குள்ள உரிமைகள் புதிய உயர்கல்வி ஆணையத்தின் மூலம் பறிக்கப்படும்.
தமிழ்நாட்டில் உயர் கல்வியில் ஆராய்ச்சிக்குத் தேவையான நிதியை யு.ஜி.சி. இதுவரை அளித்து வந்தது. இனி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இதற்காகக் கையேந்தி நிற்க வேண்டும் என்பது ஏழரைக் கோடித் தமிழர்களை இழிவுபடுத்துவதாகும். அதேபோன்று, பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கிடைப்பதும் அரசியல் தலையீடு கொண்டதாகி விடும்.
போதிய உள்கட்டமைப்புகளோ, தகுதி சான்ற ஆசிரியர்களோ இல்லாத உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆண்டுதோறும் யு.ஜி.சி. வெளியிட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்குத் தடைவிதித்துள்ளது. உயர்கல்வி ஆணை யத்தின் வழிகாட்டி நெறிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைக் கட்டத் தவறினால் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் மூன்றாண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களை மூடுகின்ற அதி காரமும் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தடையற்ற-சுதந்தரமான சிந்தனை வளர்ச்சிக்கும், புதிய அறிவுத் தளங்களை உருவாக்குவதற்கும், பன்முகக் கண்ணோட்டங்களுக்கும் இடமளிப்பதற்கும், புதிய ஆராய்ச்சி முறைகளை உருவாக்குவதற்கும் வாய்ப்பளிக்கும் இடமாக உயர்கல்வி நிறுவனங்கள் விளங்க வேண்டும். ஆனால் உயர்கல்வி ஆணை யமோ எல்லாப் பல்கலைக்கழகங்களும் ஒரே வார்ப்பில் வடிக்கப்பட்டது போல் இயங்காவிட்டால், தண்டிக்கப் படும் என்று எச்சரிக்கிறது. நடப்பில் உள்ள இருப்பைக் கேள்வி கேட்டு ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலமே எல்லாத் துறைகளிலும் அறிவு அடுத்த கட்டத்தை நோக்கி உயர்ந்தது என்கிற இயங்கியலை, பழமையை நிலைக்க வைக்க வேண்டும் என்பதையே நோக்க மாகக் கொண்ட பா.ச.க. ஆட்சியிடம் எதிர்க்க முடியாது தான்! ஆனால் இதை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
உயர்கல்வி ஆணையத்தின் அமைப்பில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் நடுவண் அரசு அமைக்கும் ஒரு குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆணையத்தின் தலை வரையோ, துணைத் தலைவரையோ, உறுப்பினர் களையோ ஒன்பது காரணங்களின் பேரில் நீக்கு வதற்கு நடுவண் அரசுக்கு அதிகாரம் உண்டு. இதில் “மோசமாக நடந்து கொள்ளுதல்” (Misbehavior) என்பதும் ஒன்றாகும். இது ஆணையத்தின் உறுப்பினர்களை அச்சுறுத்தி அடங்கி நடக்குமாறு செய்யும். ஆணையமே சுதந்தரமாகச் செயல்பட முடியாத போது, அதன்கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் எவ்வாறு தன் னாட்சி அதிகாரம் கொண்டவைகளாக இயங்க முடியும்? மேலும் விதி 25இல் நடுவண் அரசின் கொள்கை முடிவுகளை ஆணையம் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், ஆணையத்திற்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் நடுவண் அரசின் முடிவே இறுதியானது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே உயர்கல்வி ஆணையம் நடுவண் அரசின் ஓர் அடிமையாகவே செயல்படும்.
இந்திய அளவில், பள்ளிக் கல்வியில் பாதிக்கு மேலும், கல்லூரி நிலையில் 80 விழுக்காடு அளவுக் கும் தனியாரிடம் உள்ளன. இத்தனியார் கல்வி நிறு வனங்களில் இடஒதுக்கீடோ, சமூக நீதிக் கண்ணோட்டமோ இல்லை. பணம் கொடுத்தால்தான் படிப்பு. இதனால் உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி விட்டது. இந்நிலையில் உயர்கல்வி ஆணையம் உயர் கல்வியை மேலும் தனியாரிடம் தாரைவார்க்கிறது. தகுதி-திறமை என்கிற சமூக நீதிக்கு எதிரான மோசடிக் கொள்கையை நிலைநாட்டுகிறது. மாநிலங்களின் உயர்கல்வி உரிமையைப் பறிக்கிறது. உயர்கல்வி அதிகாரம் முழுவதையும் நடுவண் அரசில் குவிப்பதன் மூலம் முதலாளியச் சுரண்டல் சிந்தனையும், இந்துத் துவப் பற்றும் கொண்ட இளைஞர்களை உருவாக்கும் கூடங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் மாறிவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
எனவே உயர்கல்வி ஆணையத்தை முழுமூச்சுடன் எதிர்த்துத் தடுப்போம். யு.ஜி.சி.யின் சீர்கேடுகளைக் களைந்து மேம்படுத்துவதே சரியான தீர்வாக அமையும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்ப்பதே தேசிய இனங்களின் கல்வி உரிமையை நிலைநாட்டும்.