"தாய் நாடு தாய்த் திருநாடு" எனப் பெண்களை உயர்த்திப்பிடித்து தம்பட்டமடிக்கும் இம்மண்ணில் தான் பெண்கள் தங்களின் தலையில் "மனிதன் கழிக்கும் மலத்தை" சுமந்து "தேசிய அவமானமாகவும்" வலம் வருகிறார்கள். இந்திய நாட்டின் ஒட்டுமொத்த மலமள்ளும் தொழிலாளர்களில் 80 சதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்தான். இக்கொடுமையை சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான்  மனித இனத்திற்கு "பேரவமானம்". 

சக பெண்கள் இழிவைச் சுமக்க சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது பெண்ணியவாதிகளுக்கு பெருமையாக இருக்கின்றதா? 'பீப்' பாடலுக்கு எதிராக பீரிட்டுக் கிளம்பிய பெண்ணியவாதிகளின் குரல்கள் "பீயை" சுமக்கும் பெண்களைப் பற்றி பேசாமல் மவுனம் காப்பது பேரிழுக்கு இல்லையா? இழிவென்று தெரிந்தும் இதை ஏன் செய்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு நழுவிக்கொள்வதுதான் முற்போக்காளர்களின் முற்போக்கான சிந்தனையா? 

இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா? என அலட்சியத்தோடு அணுகும் அதிகாரிகளும், காவல்துறையும் கள்ளச்சாரயம் காய்ச்சுவதையும், கஞ்சா விற்பதையும், குழந்தைத்தொழில் முறையையும் "விரும்பி செய்தால்" விட்டுவைக்குமா? தமிழ் ஈழமும், காவிரி முல்லைப் பெரியாறும், அணுஉலையும், மீத்தேனும் பொதுப் பிரச்சினைகள் என்றால் இதுமட்டும் தனிப்பிரச்சினையா? இவர்கள் செய்யவில்லை என்றால் இதை நாம்தானே செய்யவேண்டும் என்ற சுயநல சாதிய உள் நோக்கமா? தூய்மை இந்தியா, மேக் இந்தியா என படம் போடும் மோடி அரசு, எந்திரங்களை வாங்கி இந்த இழிநிலையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வராதது ஏன்? 

உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் சென்னை பெருமழை வெள்ளத்திற்கும், கும்பகோண மகாமகத்திற்கும், கோவில் விழாக்களுக்கும் தூய்மை தொழிலாளர்களை விலங்குகளை விடக்  கேவலமாக இழுத்து செல்வதுதான் "அம்மா" பட்டத்தை சுமக்கும் தமிழக அரசின் தாய்மை குணமா? 

இவை கேள்விகள் அல்ல.. ஆயிரமாயிரம் தலைமுறைகளாக தீண்டாமை வன்கொடுமைகளோடு இழிவையும் சேர்த்தே சுமக்கும் கடைக்கோடி மனிதனின் மனவலி, இதில் நியாயம் இருந்தால், இது ஒழிக்கப்பட வேண்டும் என கருதினால்.. நாங்கள் எடுக்கும் தொடர் முயற்சிக்கு கரம் கோருங்கள். இழிவைச் சுமக்கும் இவர்கள் மட்டும் விடுதலையானால் போதாது! இனி எந்த மனிதனும் இதை செய்ய அனுமதிக்கவே கூடாது என்பதே எமது இலக்கு!! 

மார்ச் 8, உலக உழைக்கும் பெண்கள் நாளில்

பெண்களை மலமள்ளும் அவலத்திலிருந்து மீட்டெடுக்க சூளுரைப்போம்!!

மாற்றத்தைக் காண மக்களை உசுப்புவோம்! 

நாற்றத்தை சுமத்திய மனுநீதியை பொசுக்குவோம்!!

athiyaman womens day 1

athiyaman womens day 2

athiyaman womens day 3

athiyaman womens day 4

Comments

1 comment

1
Jeeva
vazhthukkal

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.