டாக்டர் பாலகோபால் நமது நாட்டின் மனித உரிமைப் போராளிகளில், மாற்று அரசியல் சிந்தனையாளர்களில் மிகவும் முக்கியமானவர். மிகவும் அரிதான புள்ளியல் (Statistical) துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியராகப் பணி செய்தவர். எமர்ஜென்சிக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டங்கள், நக்சல்பாரி மக்கள் திரள் எழுச்சி, மார்க்சிய அடிப்படையிலான வரலாற்றுக் கண்ணோட்டம் அவரை படிப்படியாக மாற்றி மனித உரிமை செயல்பாடுகளில் தீவிரம் காட்டச் செய்தது. ஆந்திரப் பிரதேச சிவில் உரிமை சங்கத்தின் பொதுச்செயலாளராக (APCLC) பல ஆண்டுகள் பணி ஆற்றினார். சாதி, மதம், மக்கள் இயக்கங்கள், உரிமைகள் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் எழுதினார்.

balagopal bookஅவற்றுள் பட்டியல் சாதிமக்கள், தலித் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைக்கப்பட்ட வன்கொடுமைகள், அநீதிகள், அடக்குமுறைகள், உரிமை மீறல்கள், அவைகளை எதிர்த்த போராட்டங்கள், அவைகளுக்குப் பின்னுள்ள அரசியல்-பொருளாதார- சமூகவியல் காரணங்கள் பற்றியும், இரண்டாவதாக தலித் பிரச்சனை, தலித் அமைப்புகள், சாதி ஒழிப்பு, இந்துத்துவா, டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் என்று அரசியல் தளத்தில் நடந்த பல விவாதங்கள் பற்றிய தனது கருத்துகளை டாக்டர் பாலகோபால் அவர்கள் 1985 ஆண்டு முதல் 2008 வரை எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து (பெரும்பாலும் தெலுங்கில் வந்தவை) தோழர் மாதவ் கட்டா மொழியாக்கத்தில் "தலித்தியம்" என்ற நூலாக 2016-ல் வெளிவந்துள்ளது.

இந்த 33 கட்டுரைகளும் தனித்தனியானவை. அதாவது இதன் ஒவ்வொரு கட்டுரையும் தனியாக விரித்து ஒரு புத்தகமாக போடும் அளவிற்கு ஒரு குறிப்பான சூழலில் நிகழ்ந்த ஓடுக்குமுறையை, சமூக அரசியலை, அதன் பின்னுள்ள பல்வேறு கண்ணோட்டங்களை ஆராய்கின்றன. அதற்கு தீர்வுகளாகவும் டாக்டர் பாலகோபால் இந்தக் கட்டுரைகளில் தனது கருத்துக்களை முன் வைக்கின்றார். அவைகள் இன்றைய சூழலிலும் கள யதார்த்தமாக இருக்கின்றன என்பதை இந்த நூலைப் படிக்கையில் நாம் உணர முடியும். 1995 முதல் 2008 வரையிலான தலித்துகள் மீதான ஓடுக்குமுறைகளை, உரிமை மீறலை இந்தியா முழுவதும் குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் துல்லியமாக கள ஆய்வுகள் செய்து பாலகோபால் அவர்கள் பதிவு செய்துள்ளார். இவைகளில் அவரின் கடின உழைப்பு, தற்சார்பு, கூட்டு சிந்தனை, இருதரப்பினரையும் விசாரித்தல், நடுநிலை தவறாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் பேசுதல் வெளிப்படுவதைக் காண முடியும். 1995யின் கரம்சேடு முதல் 2008யின் நந்திகாமா வரை இந்த உண்மை அறியும் குழு அறிக்கைகள் இந்த நூலில் உள்ளன. இன்றைக்கு இந்த கள ஆய்வு அறிக்கைகள் பலவேறு உண்மை அறியும் குழுக்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றன.

உண்மை அறியும் குழு அறிக்கைகளுடன் பாலகோபாலின் பணிகள் நின்று விடவில்லை. அவர் தலைவராக இருந்த ஆந்திரப் பிரதேச சிவில் உரிமை இயக்கம் (APCLC) சார்பில் கருத்துப் பரப்பல்களை விரிவாக மக்களிடம் கொண்டு சேர்த்தார். பல்வேறு மக்கள்திரள் இயக்கங்களுடன் இணைந்து மக்கள்திரள் நடவடிக்கைகளை அரசியல்ரீதியாக முன் கொண்டுசெல்ல பணியாற்றினார்.

சாதி ஒழிப்பு, தலித்துகள், பெண்கள், பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறை, இந்துத்துவா அரசியல், பார்ப்பனிய மதம், இட ஒதுக்கீடு, சனநாயகம், சிவில் உரிமைகள் பற்றி சமூகம், அரசியல், வரலாறு, சமகால இயக்கங்கள், மக்கள்திரள் போராட்டங்களைப் பற்றி மார்க்சிய கண்ணோட்டத்தில் அவர் ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகள் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதில் சில கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.

டாக்டர் பாலகோபாலின் கருத்துகள் மிகவும் ஆழமானவை

"வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் பின்னிப் பரவியுள்ள சாதி அமைப்பை ஓட்டுமொத்தமாக ஒழிப்பது நடக்காமல் இந்திய நாட்டை ஒரு சனநாயக சமூகமாக மாற்றும் பணி நிறைவடையாது."

"நேற்றுவரை தமது வாழ்வுரிமையை தாமே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை இல்லாத தலித்துகள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிர்ணயிப்போம் என முன் வருகிறார்கள். இது இந்திய வரலாற்றில் மகத்தான கால கட்டம்.”

“அவரவர் சாதிக்கேற்ற வாழ்க்கையை பின்பற்றுவதே சன்மார்க்கம் என தர்மநடத்தை, ( அவரவரின்) குண கர்மங்களைப் பின்பற்றி தானே மனிதர்களை சாதிகளாகப் பிரித்தேன் என, பிற தர்மங்கள் எவ்வளவு ஈர்ப்புடையவையாய் தோன்றினாலும் சுயதர்மத்தை விட்டு அவற்றை பின்பற்றுவது அபாயகரமானது என நாரயணனே பகவத்கீதையில் கூறுகிறார்…”

“புராணங்களிலிருந்து இந்த நாட்டில் ஆயிரக்கணக்கில் பிரச்சாரம் செய்யப்பட்ட போலி புராணங்கள் வரை அனைத்தும் இந்த செய்தியையே கூறுகின்றன. இவற்றைப் பிரச்சாரம் செய்வது பார்ப்பனர்களின் கடமை” என்கிறார்.

இந்த நூலில் முதல் கட்டுரை – கரம்சேடு முதல் குஜராத் வரை என்பது 1985யில் ஆந்திராவின் கரம்சேடுவில் தலித்துகள் மீதும், குஜராத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான பெரும் கலவரத்தில் தலித்துகள் மீதும், இஸ்லாமியர் மீதும் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள், கொலைகளை விவரிக்கின்றது. 2017யிலும் அதை கரம்சேடு முதல் குஜராத் வரை என்பதை டில்லி-இந்தியா முழுவதும் என்று பொருத்தினாலும் இன்றும் அந்த எழுத்துகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்தக் கட்டுரையில் இந்திய துணைக்கண்டத்தில் நிலவும் சாதியத்தின் தோற்றம், சூத்திரர்கள் – பஞ்சமர்கள் உருவாவதற்கான காரணங்களை ஆராய்கின்றார். உலகளாவிய அளவிலும், அதன் நீட்சியாக இந்தியாவிலும் நிலவுடமை அமைப்பு அதன் தொடர்ச்சியாக இந்திய சாதிப் படிநிலை அமைப்பை இயக்கவியல் வரலாற்று பொருள்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து பாலகோபால் வெளிப்படுத்தி உள்ளார். 2000த்திற்குப் பிறகு அதில் சில மாற்றங்கள் இருப்பினும் இறுதி வரையில் இந்தக் கண்ணோட்டத்தில் உறுதியாக இருந்துள்ளது இந்த நூலை வாசிக்கையில் புரிந்து கொள்ளலாம்.

அந்த கட்டுரையில் 1947 முதல் இந்திய ஆட்சியாளர்கள் கையாண்ட இரு நெறிமுறைகள் 1) தொழில் நுட்ப வளர்ச்சி 2) சமூக நலம் (welfare state) பற்றி விவரிக்கிறார். அது இங்கு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது, வளர்ச்சி என்ற பெயரில் கள்ளத்தனமான வழிகளில் பணக்காரர்கள், நிலவுடைமையாளர்கள் இத்திட்டங்கள் மூலம் எப்படி 100 மடங்குகள் பயன் அடைத்தார்கள் என்று புள்ளிவிவரங்கள் மூலம் விளக்குகிறார். அதே சமயம் சமூக நலம் (welfare state) எப்படி மிகக் குறைந்த அளவில் அதிகாரிகளால், ஆட்சியாளர்களால், ஓட்டுக் கட்சிகளால் நடைமுறை படுத்தப்பட்டது என்றும் புள்ளிவிவரங்கள் மூலம் விளக்குகிறார். அதையும் கூட உயர்நிலை சாதிகள், இடைநிலை சாதிகள் எப்படி காழ்ப்புணர்வுடன் அணுகின என்றும், அதற்கு பார்ப்பனிய மனநிலை எப்படி பயன்பட்டது என்றும் கூறுகிறார். மேலும் 90களில் உலகமயமாக்கலுக்குப் பின்பும் இன்று மோடி ஆட்சியிலும் வளர்ச்சி தான் பிரதானம் என்றும், சமூக நலம் (welfare state) அரசின் - ஆட்சியாளர்களின் வேலை அல்ல என்று படிப்படியாக நடைமுறைப்படுத்தி மக்களை பழக்கப்படுத்தி வருகிறார்கள் என்றும் நாம் இணைத்து புரிந்த கொள்ள வேண்டும்.

சாதி பற்றிய அரசியல் கண்ணோட்டம் என்ற கட்டுரையில் டாக்டர் பாலகோபால்,

“சாதி என்பது ஒரு மேல்கட்டுமான அம்சம் என்பது இன்றல்ல என்றும் உண்மையல்ல. சாதி அடித்தளத்திற்கும் மேல்கட்டுமானத்திற்கும் தொடர்புடைய விசயம். அது பொருளியல்ரீதியான உற்பத்தி உறவாகவும், கருத்துநிலையாகவும் விளங்குகிறது.( Caste is a material relation pf production as well asa Ideology) அதுவே அதன் பலம்…பக் ”

“மக்கள் ஒரு உழைக்கும் வர்க்கமாக ஒன்று திரள வேண்டுமானால் தம்மை தாம் ஒரு வர்க்கமாக கருத துவங்க வேண்டும் . அதாவது தமக்கான வர்க்கமாக( Class-for-themselves) அவர்கள் மாற வேண்டும். இதற்கு சாதி உணர்வு தடையாகிறது’ அவ்வலவு ஏன், சதாரண மனிதர்கள் தொடுக்கும் சாதாரண எதிர்வினைச் செயலுக்கு கூட சாதி உணர்வு தடையாகிறது..”

“நமது நாட்டின் அரசியலில் சாதி பற்றிய பாத்திரம் மூன்று வகைகளாக காண்ப்படுகிறது

1.ஆளும் வர்க்கங்கள் போட்டுக் கொள்ளும் சண்டைகளில் சாதி.

2.ஆளும் வர்க்கங்களுக்கும் மக்களுக்கும் இடையாலான முரண்பாடுகளில் சாதி

3. மக்களிடையிலான உறவுகளில் சாதி..பக்கம் 81

“பண்பாட்டுரீதியான அடக்குமுறைக்காக பிராமண கருத்தியலை இன்று நன்கு பரப்புகிறார்கள். கடந்த காலத்தில் எப்பொழுதும் இல்லாத அளவில் வெளிப்படையாக இது நடக்கிறது. அநீதியையும், சமத்துவமின்மையையும் ஏற்க செய்யும் சாதி தர்மம் இந்த பிராமண கருத்தியல்களில் உள்ளார்ந்து இருந்து மீண்டும் பரவுகின்றது. சாதி பற்றி பேச்சு வரும்பொழுதெல்லாம் அதை எதிர்ப்பதாக தோற்றமளித்து பிராமண கருத்தியலின் பகுதியாக அதனை பரவச்செய்வது என்பது நமது நாட்டின் ஆளும் வர்க்கங்களுக்கு கைவந்த கலை..” பக்கம்83

என்று ஆளும் வர்க்கங்களின், பார்ப்பனீயத்தின் சாதி அரசியலை துல்லியமாக விளக்குகின்றார்..

இன்றைய மோடி அரசின், முந்தைய காங்கிர அரசின் பெருமுதாளிய – கார்ப்பரேட் ஆதரவு அரசியல், கொள்கைகள் பற்றியும் அவற்றுக்கும் பார்ப்பனீய தத்துவத்தை அடிப்படையாக கொண்ட இந்து மதத்திற்கு எவ்வாறு பொருத்தமாக உள்ளது என்று ஒப்பிட்டு விளக்குகிறார். இன்றைய யோகி உ.பி அரசின் நடவடிக்கைகள் எப்படி கார்ப்பரேட் நலன்களும், இந்துத்துவ நலன்களும் ஒன்றாக பொருந்துகின்றன என்பதை புரிந்து கொள்ள இவைகள் உதவும்.

அவைகள்

“முதலாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் கடமை, போலிஸ் அமைப்பை சாமர்த்தியமாக நடத்தும் கடமை. – இவைகள் தவிர அரசாங்கத்திற்கு சமூகத்தின்பால் வேறு கடமைகள் ஏதும் இல்லை என்பது தற்பொழுது சர்வதேச ரீதியாகவே ஆதிக்கம் செலுத்துகிற கண்ணோட்டமாக இருக்கின்றது. இதுதான் இந்திய அரசாங்க கண்ணோட்டமாக உள்ளது…பக்கம்119

“இந்துத்துவத்தின் படிநிலை தர்ம கருத்து உலகமயமாக்கலுக்கு நன்கு ஒத்து போகும் கருத்தியலாகும். சுயதர்மம் எவ்வளவு தவறானதாக தோன்றினாலும், பிற தர்மம எவ்வளவு ஈர்ப்புடையத்தாக தோன்றினாலும் பிற தர்மத்திற்கு ஆசைப்படக் கூடாது . அது சர்வநாசத்திற்கு இட்டுச் செல்லும் என்று கிருஷ்ண பரமாத்மா கூறவில்லை…”.

“..அதே போல் உனக்கு உணவு இல்லை என்று சமூகத்தை திட்டக்கூடாது. உன்னிடம் வளங்கள் இருந்தால்தான், உனக்கு சாமர்த்தியம் இருந்தால்தான் உனக்கு உணவு கிடைக்கும் என்றும் இல்லாவிட்டால் உன் தவறே என்பதை நீ உணர வேண்டும் என்று உலகமயவாதிகள், (உலகமய ஆதரவாளர்கள்) கூறவில்லையா?..” பக்கம் 217

“சமூகத்தைத் தக்க முறையில் தண்டிக்க முடியாவிட்டாலும், தனிநபர்மீதே தவறு அனைத்தையும் சுமத்தி “நீ கொன்றாய்..ஆகையால் நீ சாக வேண்டியதுதான்” என்பது பொருத்தமானதல்ல. மரண தண்டனை என்றாலே கொலைக்கான முழுபொறுப்பையும் கொலையாளி மீதுமட்டுமே சுமத்துவது என்பதன் அர்த்தம் சமூகத்தின் பொறுப்பை அங்கீகரித்தால் தண்டனைகளின் கடுமையை குறைக்க வேண்டி இருக்கும். மரண தண்டனையை கோட்பாட்டுரீதியாக எதிர்ப்பதற்க்கான காரணங்களில் இது ஒன்று. யாரொருவர் சமூக, பொருளாதார அமைப்பில் இருந்து உருவாகும் நெருக்கடிகளால் குற்றங்களுக்கு தள்ளப்படுகிறார்களோ அவர்கள் விஷயத்தில் தண்டனைகள் மேலும் எளிதானவையாக இருக்க வேண்டும். ஆனால், வியப்பு என்னவென்றால் இன்றைய நீதி அமைப்பு முறையில் அவர்கள்தான் அதிகமாக தண்டிக்கப்படுகிறார்கள்…” பக்கம் 129

NGO கள் எப்படி மக்கள் இயக்கங்களை காயடித்து நீர்த்து போக செய்வதை ஒரு கட்டுரையில், “.இயக்கங்கள் எந்த மக்களிடன் பணியாற்றுகின்றனவோ அந்த மக்கள் திரட்டும் நிதி ஆதாரங்களை பணியாற்றுவது சிறப்பு. அல்லது குறைந்த பட்சம் தமது நடவடிக்கைகளை மதிப்பவர்களை சார்ந்து இவை நிதி ஆதாரங்களை திரட்டிக் கொள்ளலாம். யாரோ வழங்கும் நிதிகளுடன் பணியாற்றுவது இயக்கங்களின் ஆரோக்கியத்திற்கு நலனுக்கு நல்லதல்ல. என்.ஜி.ஓக்கள் நுழைவுக்குப்பின் இயக்கத்தினர் இருந்த இடத்தில் இயக்க பணியாளர்கள், இயக்க மேனேஜர்கள் என்பவர்களே உருவெடுத்து உள்ளனர். அவர்களில் பலருக்கும் இயக்கம் என்பது ஒரு தொழிலே தவிர மனப்பூர்வமாக பணியாற்றும் ஆதர்சம் அல்ல. பக்கம் 222”என்கிறார்.

இன்று ரோகித் விமுலா, முத்துகிருஷ்ணன் தற்கொலைகளுக்கு காரணமாக உயர் கல்வி நிலையங்களின் பார்ப்பனீய சாதி வெறியை பத்தாண்டுகளுக்கு முன்பே விரிவாக அய்த்திராபாத் உயர்கல்வி நிலையத்தை பற்றிய கட்டுரையில் கூறும் அவர், “அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்களில் திறமையுள்ளவர்களின் அகங்காரம் கொஞ்சநஞ்சமல்ல. ..சமூக முக்கியத்துவம் உள்ள எந்த முடிவையும் விஞ்ஞானிகளிடம் விட்டு விடக் கூடாது.. அவர்களுக்கு வாய்த்துள்ள குறுகிய விஞ்ஞான வரம்பிற்குள் அவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள அபிப்பாரயங்களே எல்லாமுமாக இருப்பதாக அவர்கள் கருதுவார்கள் . எல்லா இடங்களிலும் விஞ்ஞானிகளிடத்து இருக்கும் பிரச்சனையாக கூட இது இருக்கலாம். ஆனால், இந்தியாவில் விஞ்ஞானிகளில் பெரும்பகுதியானவர்கள் பார்ப்பனர்களானதால் அந்த வர்க்கத்திற்கு இருக்கும் பார்வை கோளாறு மிகவும் ஆழமானதாகும். பக் 224 “ என்று தோலுறிக்கிறார்.

நேற்றுவரை தமது வாழ்வுரிமையை தாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்துகள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிர்ணயிப்போம் என முன் வருகிறார்கள். இது இந்திய வரலாற்றில் மகத்தான கால கட்டம் என்று பாலகோபால் கூறினாலும் தலித் இயக்கங்களின் போக்குகளை விமர்சிக்க தயங்குவதில்லை.

“ தலித்துக்களின் அரசதிகாரம்” எனும் கருத்தாக்கத்தை ஏதோ ஒரு வகையாக யாரோ ஒருவருடன் கை கோர்த்து, தற்போதைய அரசு இயந்திரத்தில் அதிகாரத்தை தலித் கட்சி ஒன்று கைப்பற்றுஅது என்ற அர்த்ததிற்கு மாயாவதி அவர்கள் அதைச் சுருக்கி விட்டார். தற்பொழுது தலித் சாதியில் பிறந்த நபர் எதையாவது செய்து முதலமைச்சராக இருப்பதே தலித் அரசதிகாரம் என்று அவரது அரசியலுக்கு விளக்கமளிக்கப்பட்டு வருகிறது..”

உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று பெருமை படுத்தி பீற்றிகொள்ளும் இந்தியா அதற்க்கான தகுதி உள்ளதா என்பதை அம்பேத்கார் சிந்தனை வெளிச்சத்தில் கூர்மை படுத்தி அம்பேத்கார் பார்வையில் சனநாயகம் என்று விவாதிக்கிறார்.

“ஜனநாயகம் என்பது மேற்கத்திய நாடுகளில் மிகவும் விவாதிக்கப்பட்ட கருத்து. ஆட்சி இயந்திரத்தை அதாவது அரசாங்கத்தை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த அரசாங்கம் சட்டப்படி ஆள வேண்டும். அந்தச் சட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்கள் ஜனநாயகத்தை வரையறுக்கின்றன என்பது அவர்களது கருத்து. இவற்றுடன் அம்பேத்கர் மற்றொன்றை சேர்த்தார். அவர் சமூகத்தில் அதிகாரத்தை தன் கையில் வைத்துக்கொள்ளும் கவர்னிங் கிளாஸ் என்பது இருக்கக் கூடாது என்றார். கவனிங்க் கிளாஸ் என்றால் ஆட்சி புரியும் வர்க்கம் என்று மொழி பெயர்க்கலாம். ஆனால், மார்க்சிய செல்வாக்கால் ஆளும் வர்க்கம் என்றதும் அதற்கு வேரொரு அர்த்தம் வருகிறது. இதன் படி அரசியல் பொருளாதார அமைப்புகளில் மேல்மட்ட வர்க்கத்தை ஆளும் வர்க்கம் என்கிறோம். அம்பேத்கார் அந்த அர்த்தத்தில் கவனிங்க் கிளாஸ் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தவில்லை. ஆட்சியில் எந்த சமூக வர்க்கம் அதிகாரத்தை செலுத்துகிறதோ அதனையே கவனிங்க் கிளாஸ் என்கிறார். வம்ச பாரம்பரியமாக ஒரு சமூக வர்க்கமே ஆட்சியிலும், அதிகார இயந்திரத்திலும் இருக்கிறது எனக்க் கூரி அதனையே அம்பேத்கார் கவனிங்க் கிளாஸ் என்றார். அவர்கள் தேர்தல்கள் மூலம் சட்டப்படியாக தேர்வாகி ஆட்சி செய்தாலும், அந்தச் சட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்டு இருந்தாலும் அந்த அமைப்பு ஜனநாயகம் இல்லை என்றார். அது ஒரு வர்க்கத்தின் ஆட்சியே என்றும் குறிப்பிட்டார். அந்த நாட்களில் பிராமணர்களை குறிப்பிடவே இந்த சொற்றொடரைப் பயன்படுத்தினார்.”

மேலும் அம்பேத்ட்கர் சிந்தனைகளை இந்த காலத்திற்கு ஏற்ப எப்படி பொருத்தி பார்ப்பது என்று பல இடங்களில் விளக்குகிறார். அதில், “அம்பேத்கர் சாதி அமைப்பை, மனுதர்மத்தை விட்டு விலகுங்கள் என கூறியது தலித்களுக்கு வழங்கிய செய்தி நீங்கள் இந்து மதத்டிதன் பகுதியாக இருந்து அந்த கருத்தியலை எதிர்த்து போராடுவது அநாவசியம் காரணம், தலித்கள் இந்துக்கள் அல்ல என, அவகைள் தம்மை தாம் இந்து மதத்தின் பகுதியாக கருதுவது அவசிமில்லை என்று கூறினார். இந்து சமூகத்தின் காலுக்குக் கீழுள்ள தலித்களை அங்கிருந்து விடபட்டு வெளி வரவேண்டும் என்று அழைத்தார், இறுதியாக பவுத்தத்தை அவர் சுவீகரித்தார். இந்து சமூகத்தை சீர்திருத்த வேண்டும். சரிப்படுத்த வேண்டும், புரட்சிகரமாக்க வேண்டும் எனக் கூறியது இந்துக்களுக்காகவே என்பதை நாம் உணர அவண்டும். நீங்கள் நாகரீகமானவர்களாக இருக்க விரும்பினால், நீங்கள் சுயமரியாதையுடன் வாழ நினைத்தால், உங்களை நீங்கள் நாகரீகமானவர் என அழைத்தகொள்ள நினைத்தால். உங்கள் சமூகத்தை ஜனநாயகப் படுத்திக் கொள்வது உங்களுகே அவசிம் என்று இந்துக்களுக்கு கூறினார். தலித்துக்கள் வேறுமதம் தழுவினாலும் இந்து சாதி அமைப்பின் அவசியமே இருப்பதே நடக்கிறது ஆகையால், அவர்களுக்காகவும் அவசியமே என அவர் சொன்னார். அந்த முயற்சியின் பகுதியாகவே அவர் இந்து கோட்பில்லில் மாற்றங்கள் கொண்டுவரும் முயற்சியை செய்தார் ஆனாலும் அது நடக்கவில்லை.’ பக்கம் 279 என்ற கருத்தாகத்தை விரிவாக விளக்குகின்றார். சொல்வது மட்டுமல்ல தான் பிறந்த பிராமண சாதியை கருத்துரீதியாக ஆழமாக விமர்சித்ததோடு அதை தன் வாழ்விலும் செயல்படுத்திய சுயசாதி நீக்கம் செய்த சுயவிமர்சகராக டாக்டர் பாலகோபால் இருந்தார் என்பதை அவருடைய எழுத்தும், செயலும் சொல்லுகின்றது.

அதோடு தலித் பிரச்சனைகளுக்கு தலித்துக்ககளே தீர்வு காண்பார்கள், பெண்கள் பிரச்சனைகளுக்கு பெண்களே தீர்வு காண்பார்கள். பழங்குடியினர் பிரச்சனைகளுக்கு பழங்குடியினரே தீர்வு காண்பார்கள். முஸ்லிம்கள் பிரசச்சனைகளுக்கு முஸ்லிம்களே தீர்வு காண்பார்கள் என கருதுவது எவர் பிரச்சனையும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கே பயன்படும். அதனால்தான் காங்கிரஸ் அரசாங்கம் தயாரித்து நாடாளுமன்றம் முன் வைத்த தொழிற் தகராறு திருத்த மசோதாவில், தொழிலாளர் பிரச்சனைகளை தொழிலாளர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் எனும் வாதத்தை முன்வைத்தது. தொழிலாளர்கள் அல்லாதவர்கள் தொழிற்சங்கங்களில் பாத்திரம் வகிப்பதை குறைப்பதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று கூறும் பாலகோபால தலித்துக்கள், பெண்கள், முஸ்லீம்கள், பழங்குடியினர், தொழிலாளர்கள், இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து போராட வேண்டும் என்பதை தனது கண்ணோட்டோமாக முன் வைக்கிறார்.

கம்யுனிஸ்டு கட்சிகளில் உள்ள பார்ப்பனர் தலைமை பற்றியும் விமர்சிக்கின்றார். தலித் இயக்க தலைமைகளின் பலவீனங்களை எப்படி பார்ப்பது அவற்றை விமர்சிப்பது என்பதையும் விரிவாக இந்நூலில் கூறுகிறார்.

“ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் செய்கிற தவறுகளை அவற்றுக்கான மூலங்களை கண்டறிந்து அவர்களை எப்போது ஆதரிக்கலாம், ஆதரிக்காவிட்டாலும் எப்போது அனுதாபத்துடன் பார்க்கலாம் எனும் பகுப்பாய்வு முறையை ஜனநாயக உலக கண்ணோட்டம் கற்றுகொள்ளவில்லை. கற்றுக் கொள்ள தயாராகவும் இல்லை ஒடுக்குமுறைக்கு ஆளாகும் சமூக வர்க்கத்தினரும் ஒடுக்கு முறைக்கான மூல காரணத்தை சுட்டி, தமது தவறுகளையும் பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவது என்பது எப்போது சரியாக இருக்கும், எப்பொழுது நெறியற்றதாகிவிடும் என்பதை பகுத்தாயந்து பார்க்கும் அணுகுமுறையை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பின்பற்றுவதில்லை. தலித் வர்க்கங்களிடையே மட்டுமல்லாது, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களிலும் அடிக்கடி தலைதூக்கும் போக்கு இது. இந்த பலகீனம் பற்றி பேச முடியாமல் போவதும், அதற்கொரு பெயர்வைக்க முடியாமல் போவதும் ஒருபுறம் இருக்க, அந்த பலவீனத்தையே என முன்நிறுத்தி காட்டுவதும் மறுபுறத்திலிருந்து வருகிற நெருக்கடி அந்த நெருக்கடிக்கு எந்த நிலையிலும் உட்பட் போகக் கூடாது.” என்று சாதி ஒழிப்பு இயக்கங்களும், கம்யுனிச இயக்கங்களும், ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவர்களும் பொறுப்புடன் சுயவிமர்சனத்துடன் இயங்க வேண்டியதன அவசியத்தை விரிவாக கூறுகிறார்.

இந்த நூல் முழுவது ஒருவிதத்தில் மார்க்சியத்தின் அடிநாதமான சுயவிமர்சனம் –விமர்சனத்தை இந்திய சாதி அமைப்பில் ஒவ்வொருவரும், ஒவ்வ்வொரு இயக்கமும், அரசியல் கண்ணோட்டங்களும் எப்படி பொருத்துவது என்பதை விளக்கும் நூலாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

தோழர் மாதவ் கட்டா தெலுங்கில் இருந்து மிக சிறப்பாக தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிடவும் செய்துள்ளார். இந்த நூல் விரிவாக கவனம் பெற வேண்டும். அனைவரும் வாசிக்கப்பட வேண்டிய நூல்.

இந்த நூல் விலை ரூ 200. கிடைக்குமிடம்-வெளியீடு: சிந்தன் புக்ஸ், 132/251, அவ்வை சண்முகம் சால, கோபாலபுரம், சென்னை 600 086.

(பனுவல் நூல் விற்பனை நிலையத்தில் நடந்த டாக்டர் அம்பேத்ட்கர் நினைவு கூட்டத்தில் பேசியதன் சுருக்கம்..)

- கி.நடராசன்