ஆங்கிலத்தை மொழிப் பாடமாக (Language) கற்பிப்பதை நாம் ஆதரிக்கிறோம். அம்மொழியைச் சிறப்பாகக் கற்பிக்க ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இப்போது பெரும்பாலும் வரலாறு, பொருளியல், கணக்கு, வணிகவியல் ஆகியவற்றைப் படித்த இளநிலைப் பட்டதாரிகளோ அல்லது முதுகலைப் பட்டதாரிகளோ தான் ஆங்கில ஆசிரியராக உள்ளார்கள்.

கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் படிக்கும் போது மாணவர்களுக்கு மனனம் செய்யும் சுமை ஏற்படுகிறதே தவிர, இயல்பாக அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழி மூலம் கல்வி கற்பதே சிறந்த வழி என்று உலகெங்கும் கல்வி இயல் வல்லுநர்களும் குழந்தை உளவியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள். சற்றொப்ப எல்லா நாடுகளிலும் தாய்மொழி வழியிலேயே தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரை, கற்பிக்கிறார்கள்.

தமிழ் தவிர இதரப் பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும்போது, கிராமப்புற மாணவர்கள், அட்டவணை வகுப்பு மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பெண்கள் இயல்பாகப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் சுமைக்கு ஆளாவார்கள். இவர்கள் நகர்ப்புற, மற்றும் முன்னேறிய வகுப்பு மாணவர்களோடு போட்டியிட முடியாமல் பின்தங்கி விடுவார்கள். தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி, மனப்பாதிப்பு அடைவார்கள். இதனால் கூடுதல் மதிப்பெண் பெற முடியாமல் பின்தங்கி விடுவார்கள்.

பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காமல், ஆங்கில வழி வகுப்புகளுக்காக தனியாரின் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனால் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உள்ளது என்று தமிழக அரசு, ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறது.

இந்நிலையில், கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன் வைத்து தமிழக அரசின் முடிவுக்கெதிராக, 28.05.2013 அன்று காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

1.  1 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

2.  அரசுப்பள்ளிகளின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும். தண்ணீர்க்கும் துப்புரவிற்கும் தட்டுப்பாடில்லாத கழிவறைகள், விளையாட்டுத் திடல் போன்றவை வேண்டும். விளையாட்டு, ஓவியம், இசை போன்ற துறைகளுக்குத் தனித்தனி ஆசிரியர் வேண்டும்.

3.  மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிலியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

மேற்கண்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஆங்கில வழி வகுப்புகளைப் பெருமெடுப்பில் அரசுப் பள்ளிகளில் தொடங்கினால், கிராமப்புற, அட்டவணை வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்படுவர். அத்துடன் தமிழ் மொழியின் அழிவுக்கும் அது வழி கோலும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.