கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகிலுள்ள நீராவி தயாரிப்பான் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இது ரஷ்யாவிலுள்ள மோசடி நிறுவனமான சியோ பொடால்ஸ்க் எனும் கம்பெனியிடமிருந்து வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கொள்முதல் இயக்குனர் செர்கே ஷுட்டோவ் தரமற்ற எஃகினை வாங்கி உதரிப்பாகங்கள் தயாரித்த ஊழல் குற்றச்சாட்டுக்களால் 2012ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்திய மக்களிடம் உண்மையைச் சொல்லி நம்மை பாதுகாப்பதற்கு பதிலாக, வருடாந்திர பராமரிப்பு, எரிகோல்கள் மாற்றம் என்று என்னென்னவோ கதைகளை யார் யாரையெல்லாமோ வைத்து சொல்லிக் கொண்டிருக்கிறது அணுசக்தித் துறை.

 கூடங்குளம் அணுஉலை அக்டோபர் 22, 2013 அன்று மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் டிசம்பர் 31, 2014 அன்று வணிக ரீதியிலான மின்உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 31, 2015 வரையிலான 586 நாட்களில் அணுஉலை 226 நாட்கள் ஓடவில்லை. மொத்தம் 64 நாட்கள் அணுஉலை பராமரிப்புக்காக மூடப்பட்டது. டர்பைனில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காகவும், டர்பைனை மாற்றுவதற்காகவும் உலை 72 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டது. மேலும் 15 முறை அணுஉலை தடைபட்டு மொத்தம் 90 நாட்கள் மூடிவைக்கப்பட வேண்டியதாயிற்று.

 இந்தாண்டு ஜனவரி 1 முதல் மே 31 வரை, அணுஉலை இரண்டு முறை பலவந்தமாக மூடப்பட்டது. பொங்கலன்று (ஜனவரி 14, 2015) மூடப்பட்ட உலை நான்கு நாட்கள் செயலிழந்து கிடந்தது. ஏப்ரல் 2 முதல் முனகிக்கொண்டிருந்த அணுஉலை மே 9 அன்று மாலை 6:30 மணிக்கு மீண்டும் பலவந்தமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மே 14 அன்று அதிகாலை 4:47 மணிக்கு மீண்டும் ஓடத் துவங்கியது. அன்றிலிருந்து அணுஉலை வெறும் 55 விழுக்காடு மின்சாரம் மட்டுமே தயாரிப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் மே 19 அன்று அணுசக்தித் துறை செயலாளர் முதல் அணுஉலையின் டர்பைன் பாகங்கள் சில புதிதாக தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவித்தார். கூடங்குளம் அணுமின் நிர்வாகத்தினர் மீண்டும் ஏராளமான டீசல் வாங்கத் துவங்கினர்.

 மே 21, 2015 அன்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் அணுஉலை வெறும் 600 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்வதாகவும், அணுஉலை வருடாந்திர பராமரிப்புக்காக இரண்டு மாதங்கள் மூடப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி யூன் 24, 2015 அன்று அணுஉலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 12 அன்று அணுஉலையில் எரிகோல்களை அகற்றும் பணி முடியாததால், மின் உற்பத்தி மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என்று அறிவித்தார் வளாக இயக்குனர். மிக முக்கியமான அந்த வேலையைக்கூட இவர்களால் முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்கவோ, செயல்திட்டம் வகுத்துப் பணியாற்றவோ முடியவில்லை. கடுகளவும் பொறுப்பின்றி சிறுபிள்ளைத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் கூடங்குளம் அதிகாரிகள்.

 தற்போது திடீரென ரஷ்யாவிலிருந்து ஆறு பேர் கொண்ட குழு கூடங்குளம் வந்து பரிசோதனைகள் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். நீராவி தயாரிப்பான் சரியாக வேலை செய்யவில்லை; கூடங்குளம் திட்டத்தில் மிகப் பெரும் ஊழல்கள் நடந்திருக்கின்றன; இந்தத் திட்டத்தை பாதியில் போட்டுவிட்டு ஓடிய திரு. எஸ். கே. ஜெயின், திரு. காசிநாத் பாலாஜி போன்ற அதிகாரிகளுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது சக அமைச்சர் நாராயணசாமி போன்ற காங்கிரசு அரசியல்வாதிகளுக்கும் இந்த ஊழல்கள் பற்றித் தெரியும் எனும் உண்மை களை மக்களிடம் சொல்ல வேண்டியதுதானே? உலக நாடுகளுக் கெல்லாம் ஓடி ஓடி போய்க்கொண்டிருக்கும் நமது பிரதமர் கூடங்குளத்துக்கு வருகைதந்து முதல் அணுஉலையை நாட்டுக்கு இன்னும் அர்ப்பணிக்கவில்லையே ஏன்?

 காங்கிரசுக் கட்சியின், மன்மோகன் சிங் அரசின் மெகா கூடங்குளம் ஊழலை பாரதிய ஜனதா அரசு மறைக்க முயல்வதேன்? நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது மன்மோகன் சிங் அரசு 3, 4 அணுஉலைகளுக்கு ரூ. 45,000 கோடி என விலை நிர்ணயித்து அவசரம் அவசரமாக ஒப்பந்தம் கையெழுத்திட்டு ரஷ்யர்களை மகிழ்வித்தது ஏன்? கூடங்குளத்தில் இரண்டாவது அணுமின் நிலையத்தில் 96 விழுக்காடு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் 2014 யூன் மாதம் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவித்தார்கள். ஆனால் இன்று வரை அங்கே எதுவும் நடந்தபாடில்லையே, ஏன்?

 கூடங்குளம் அணுமின் திட்டம் எனும் மாபெரும் ஆபத்திலிருந்து தமிழர்களை காக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு மவுனம் காக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மின்சாரத் துறையில் மாபெரும் புரட்சி நடந்திருப்பதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையங்களும், சில்லஹல்லாவில் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையமும், வடசென்னை அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் நிலையமும், உப்பூரில் இரண்டு 800 மெகாவாட் அனல்மின் நிலையங்களும், உடன்குடியில் இரண்டு 660 மெகாவாட் அனல் மின் நிலையங்களும், எண்ணூரில் கூடுதலாக ஒரு 660 மெகாவாட் அனல்மின் நிலையமும் அமைக்கப்படவிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். சூரியஒளி மூலம் 648 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம். அப்படியானால் கூடங்குளம், கல்பாக்கம் போன்ற இடங்களில் ஏன் கூடுதலாக அணுஉலைகள் கட்ட அனுமதிக்கிறீர்கள்? இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் இன்னொரு பெரிய கட்சியான தி.மு.க.வும் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?

 மொத்தத்தில் கூடங்குளம் அணுமின் திட்டம் ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இங்கே கூடுதல் அணுமின் நிலையங்கள் கட்டுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். அணுஉலை விரிவாக்கத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். கூடங் குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் போடப்பட்ட பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அழைப்பாணைகள் அனுப்பி மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். போராட்டத்தில் உயிர்துறந்த இடிந்தகரை சகாயம், ரோஸ்லின் அம்மா, கூடங்குளம் ராஜசேகர் போன்றோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். காவல்துறையால் கொல்லப்பட்ட மணப்பாடு அந்தோணி ஜாண் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளும் மேற்கண்ட பிரச்சினைகளில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை உடனடியாக தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

Pin It