அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு,தமிழர் சமயம் பாதுகாக்கப்பட

 ''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”  என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நேரம் :  30-04-2011 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை.

இடம் : சென்னை பொது மருத்துவமனைக்கு எதிரிலுள்ள நினைவு அரங்கத்தின்  (மெமோரியல் ஹால்) முன்னர்.

அழிந்து வரும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் அழியாமல் பாதுகாக்கப்படுவதன் முதல் முயற்சியாக, இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டபொழுது தமிழ் இனத்திற்காகக் குரல் கொடுத்து கைது செய்யப்பட்ட வெவ்வேறு அணிகளையும் வெவ்வேறு கட்சிகளையும் சார்ந்த 46 வேட்பாளர்கள் வெற்றி பெறுமாறு அவர்கள் நிற்கும் தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பரப்புரை நிகழ்த்தித் திரும்பியுள்ளோம். இதன் தொடர்ச்சியான இரண்டாம் முயற்சியாக

''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”

என்னும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அன்று. இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழி பேசுவோரே ஆட்சி செய்து வருகின்றனர். இதனால் தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை நியாயமான ஒன்றே ஆகும். மேலும்,  இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் தமிழர்கள் எத்தனை பேர் அமைச்சராக்கப்பட்டிருக்கின்றார்களோ அத்தனை பேர் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழ் நாட்டில் அமைச்சராக்கப்படலாம் என்னும் கருத்து இத்துடன் இணைத்துக் கூறப்படுகிறது.

அவ்வாறு மற்ற மாநிலங்களில் தமிழர்கள் அமைச்சராக்கப்படாத நிலையில் தமிழ் நாட்டில் தமிழரல்லாத  அம்மாநிலத்தவரை அமைச்சராக்கும் கட்சிகள்  முற்றிலும் தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட, தமிழர் அல்லாத, தமிழ் இனத்திற்கு எதிரான அந்நியர்களின் கட்சிகள் என்றும், தன்மானத் தமிழர்கள் அவற்றிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இந்த நிலையே தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் காக்கப்படுவதற்கு ஏற்ற நிலையாகும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

காரணம் தமிழ் இனப் பகைவர்களால் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன என்பதை எவரும் மறுத்தல் இயலாது.

தமிழ் இனம் :

இலங்கையில் தமிழ் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தமிழ் நாட்டில், அவர்களுக்காக நடத்தப்பட்ட   தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் மதிக்கப்படவில்லை. தமிழ் இனம் இன்றும் முள்வேலியில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறது.

தமிழக மீனவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றார்கள். தமிழ் நாட்டில் பிற தமிழர்களும் வேட்டையாடப்படும் காலம் அதிகத் தூரத்தில் இல்லை என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

தமிழ் மொழி:

உலகில் அழிந்து வரும் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் மொழி குறிக்கப்படுகிறது. தமிழகத்திலும் திட்டமிட்டு, தமிழ் மொழி சிதைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வாழும் அந்நியர்களால் தமிழ் மொழி கீழான 'நீச மொழிஃ என இகழப்படுகிறது.

தமிழர் பண்பாடு:

தமிழர் பண்பாட்டுக்கு எதிராக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்தார். அதைத் தமிழ் உணர்வாளர்கள் வன்மையாக எதிர்த்தனர். ஆனால், குஷ்புவே தேர்தல் பரப்புரைக்குச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டார். எதிர்த்தவர்களும் அடங்கிப் போக வேண்டிய சிக்கலான நிலை ஏற்படுத்தப்பட்டது. தமிழர் பண்பாடு நாள்தோறும் சிதைக்கப்பட்டு வருகிறது.

தமிழர் சமயம்:

சைவம், வைணவம் ஆகிய இரண்டும் தமிழ் நாட்டில் தோன்றிய பக்தி இயக்கத்தின் பயனாகத் தமிழகத்தில் வளர்ந்த, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழர் சமயங்கள் என்பது வரலாறு. ஆனால்,  இடைக்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அந்நியர் ஆட்சியின் காரணமாக இப்பொழுதும் தமிழ் நாட்டிலுள்ள தமிழர் சமயக் கோவில்கள் அந்நியர் ஆதிக்கத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனச் சட்டம் கொண்டு வந்து இரண்டாண்டு காலப் பயிற்சி கொடுத்து அர்ச்சகர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், தமிழ் நாட்டில், தமிழர் கட்டிய, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழர் சமயக் கோவில் கருவறையில் கால்வைக்கத் தகுதியில்லாத கீழான நீச இனத்தினர் என, தமிழ் இன அர்ச்சகர்கள் அந்நியர்களால் வெளியே இப்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

புதைக்கப்பட்டுக் கிடக்கும் தமிழர் ஆன்மவியல்:

தமிழர் சமயத்தின் மணிமுடியாக விளங்குவது தமிழர் ஆன்மவியல். ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வி ஆன்மவியல். உலகிலுள்ள மொழிகளில் மனிதனின் உடலைப் பற்றிய கல்வியாகிய அறிவியல், மனிதனின் உயிரைப் பற்றிய கல்வியாகிய மெய்யியல், மனிதனைப் படைத்ததாக நம்பப்படும் இறைவனைப் பற்றிய கல்வியாகிய இறையியல் ஆகிய மூன்றும் இருக்கின்றன. ஆனால், இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியாகிய ஆன்மவியல் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கிறது.

 மற்ற உயிரினங்களுக்கு இல்லாத மனிதனுக்கே உரிய ஆறாவது அறிவைப் பற்றிய இலக்கணம் உலக மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதால்  ஆறாவது அறிவைப் பற்றிய இலக்கணத்தின் வழியாக ''கடவுள் இருக்கின்றார்" என்று அறிவியல் வழியில் நிலை நாட்டுவது தமிழர் ஆன்மவியல்.

 தமிழ் நாட்டில் மாறி மாறி நடைபெற்று வரும் அந்நியர் ஆட்சிகளால்  தமிழர் ஆன்மவியல் புதையுண்டு கிடக்கிறது.

அடிமையாய் இருப்பதில் சுகம் காணும் ஐந்தறிவுத் தமிழர்:

ஆறாவது அறிவை அறிய இயலாத தமிழர்கள்அந்நியர்களால் ஐந்தறிவு படைத்த ஆடுமாடுகளைப் போன்று அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய தமிழர்கள் ஆன்மவியலை அறியாமலும் ஆன்மவியலின் சிறப்பை உணராமலும் அந்நியர்களுக்கு அடிமையாய் இருப்பதிலும், அந்நியர்களைத் தலைமேல் வைத்துச் சிறப்பிப்பதிலும் சுகம் காணும் அடிமைகளாக இருக்கின்ற காரணத்தால், தமிழ் இனமும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும், தமிழர் சமயமும் அந்நியர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.

 ஆறறிவுள்ள தன்மானத்தமிழர்

இந்நிலையில் தமிழர்களை மென்மேலும் பிளவுபடுத்தும் சாதி, மதம், கட்சி, அணி என்னும் கட்டுகளைத் தாண்டி, அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் ஆகிய இவற்றைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயக் கடமை, ஆறறிவுள்ள தன்மானத் தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகின்றோம். ஆறறிவுள்ளவர்கள் தாங்கள் தெளிவாக அறிந்து ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது வரலாறு.

இந்த நிலையில் அனைத்துத் தன்மானத் தமிழர்களும்

''தமிழ் நாட்டைத் தமிழரே  ஆள வேண்டும்” என்னும்

ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டு தங்கள் பிறவிக் கடமையை நிறைவேற்ற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு

ஒருங்கிணைப்பாளர்,

அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு.

தொடர்பு முகவரி :

பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம்

ஒருங்கிணைப்பாளர், அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு,

278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை- 23. ( 044-26743842; 9840003842 ; 9444817394)

____________________________________________________________________________________________________

கலைஞர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்

அனுப்பபப்பட்ட முதல் கடிதம்

தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் வழிபாடு, தமிழர் சமயம் முதலியன பற்றித் தமிழ் மக்களின் உள்ளங்களில் புகுத்தப்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்குகின்ற தமிழ் இன விடுதலைக்கான - சாதி, மதம், கட்சி, ஆத்திகம், நாத்திகம் முதலிய அனைத்துப் பிரிவுகளையும் கடந்த அனைத்துத் தன்மானத் தமிழர்களின்கூட்டமைப்பு

ஒருங்கிணைப்பாளர்,

பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் M.A., Ph.D., நாள் : 21-04-2011

பதிவு அஞ்சல் அனுப்பப்பட்டு அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

பெறுநர்

தமிழ் இனத்தின் மீது அக்கறை கொண்டு தமிழ் இனத்தின் நலன் கருதிச் செயல்படுவதாக நம்பப்படும்

தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும்

டாக்டர். கலைஞர் அவர்கள்,

தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா அறிவாலயம்,

அண்ணா சாலை, சென்னை-600 018.

அன்பின் ஐயா,

வணக்கம்.

தமிழ் இனப் பகைவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் பாதுகாக்கப்பட

''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”

என்பதை இந்திய இறையாண்மைக்கு ஊறு ஏற்படா வண்ணம் வலியுறுத்தி 30-04-2011இல் நடத்தப்பட இருக்கும் எங்கள் ஆர்ப்பாட்டம் குறித்த துண்டு வெளியீடு ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தாங்கள் தயவு கூர்ந்து இத்துண்டு வெளியீட்டின் கருத்துகளை ஆழ்ந்து நோக்கி, தமிழ் நாட்டிற்குச் சொந்தமானவர்களும், தமிழ் நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வாழுகின்றவர்களுமாகிய தமிழ் இனத்தினரின் நலன் கருதித் தங்கள் கட்சி செயல்படும் தன்மையை நாங்கள் புரிந்து கொள்ளுவதற்கு வாய்ப்பாக, எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு உங்கள் ஆதரவை எங்களுக்குத் தெரிவிக்க உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.

ஆதரவுக் கடிதங்கள் ஆர்ப்பாட்டத்தின்பொழுது வாசித்துக் காண்பிக்கப்படும்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்க இயலா நிலை இருக்குமானால் அதற்கான காரணங்களை நாங்கள் அறிந்து அதற்கேற்ப எங்கள் செயல் திட்டங்களை நாங்கள் வகுத்துக் கொள்ள எங்களுக்குத் துணை புரிய உங்களை அன்புடன் வேண்டுகின்றோம். ஒன்று எங்களுக்கு எழுதலாம் அல்லது எங்களுடன் கலந்து பேசலாம்.எவ்விதப் பதிலும் எழுதாமல் அமைதியாயிருக்கும் கட்சிகள், தமிழ் இனத்திற்கு எதிரான நிலைப்பாட்டையுடையவை அவை என்பதை விளக்குவதாக அமையும் என்பது வெளிப்படை.

நன்றி.

தங்கள் அன்புள்ள,

(மு. தெய்வநாயகம்)

ஒருங்கிணைப்பாளர்.

இணைப்பு: 1. ஆர்ப்பாட்டம் பற்றிய துண்டு அறிக்கை

2. தேர்தல் பரப்புரைக்கான துண்டு அறிக்கை

278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை - 600 023. +9144-26743842; 9444817394; 9840003842 மின்னஞ்சல்: ­இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

____________________________________________________________________________________________________

கடிதம் 2: நாள்: 03.05.2011

தமிழ் இனத்தின் மீது அக்கறை கொண்டு தமிழ் இனத்தின் நலன் கருதிச் செயல்படுவதாக நம்பப்பட்ட தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும்

அன்புடையீர்,

வணக்கம்.

21-4-2011 நாளிட்டு நாங்கள் உங்களுக்கு அனுப்பி, நீங்கள் 23-4-2011 அன்று பெற்றுக் கொண்ட ''தமிழ்நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்” என்னும் கோரிக்கைக்கான ஆர்ப்பாட்டம் தொடர்பான கடிதத்தையும் அதன் இணைப்புகளையும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.

உங்கள் நிலை

''எவ்விதப் பதிலும் எழுதாமல் அமைதியாயிருக்கும் கட்சிகள் தமிழ் இனத்திற்கு எதிரான நிலைப்பாட்டையுடையவை அவை என்பதை விளக்குவதாக அமையும் என்பது வெளிப்படை”

என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி, எவ்விதப் பதிலும் எழுதாமல் அமைதியாயிருந்து உங்கள்  கட்சி, தமிழ் இனத்திற்கு எதிரான கட்சி என்பதைத் தெளிவுபடுத்தியமைக்காக உங்களுக்கு எங்கள் நன்றி.

உங்களை நாங்கள் குறை கூற முன்வரவில்லை. உங்கள் நிலைமையை உங்களுக்குப் புரிய வைக்க எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.

அரசியல் கட்சிகளுக்கு 'நிலையான நண்பரும்’ இல்லை, 'நிலையான பகைவரும்’ இல்லை; அவற்றிற்கு நிலையான கொள்கை பணம், பதவி ஆகிய இரண்டையும் எந்த முறையிலாவது அடைவதே என்னும் உங்கள் நிலையை நீங்கள் உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.

தமிழகத்தில் முக்கிய கட்சிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்துள்ளன.

ஆளும் கட்சியான தி.மு.க.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டபொழுது தமிழ் இன அழிப்புச் செயல்பாட்டிற்கு, இலங்கைக்குத் துணைநின்ற கட்சி காங்கிரஸ் என்பதும், காங்கிரஸ் கட்சிக்குத் துணைநின்ற கட்சி தி. மு. க. என்பதும் உலகம் அறிந்துள்ள உண்மை.

''தமிழ் இனத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கலைஞர், ''தமிழர் அல்லர், அவர் தெலுங்கு பரம்பரையில் பிறந்த தெலுங்கர்” என்பதாகக் கூறுகிறவர்களுக்கு இதுவரை கலைஞரால் மறுப்பு வெளியிடப்படவில்லை.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டபொழுது இவருடைய உண்ணாவிரதம் ஒரு நடிப்பாக அமைந்ததை அனைவரும் அறிவர்.

''தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்னும் தமிழ்ப் பழமொழியின்படி, தமிழ் இனம் அழிக்கப்பட்டபொழுது இவருடைய செயல்பாடுகள் இவர் ஒரு தமிழர் அல்லர் என்பதாக முடிவெடுக்கத் தூண்டுகின்றன.

ஆகவே, தமிழரல்லாத கலைஞரோடு இணைந்து, தேர்தலில் நின்று பதவிகளைப் பிடிக்க முயன்று கொண்டிருக்கும் கட்சிகள்,

''தமிழ் நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்”

என்னும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க இயலாது என்பது வெளிப்படை.

எதிர்க் கட்சியான அ.தி.மு.க.

இதன் தலைவர் யார் என்பது நாடறிந்த உண்மை. ''தமிழ் இனம் ஒரு நீச இனம்” என்றும், ''தமிழ் மொழி ஒரு நீச மொழி” என்றும் இகழ்ந்து இழிவுபடுத்தி வரும் தமிழ் இனத்திற்கு எதிரான பிராமணர் குலத்தில் பிறந்த பெண்மணி. ''நான் பாப்பாத்திதான்” என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தவர். இவர் பின்னால் நின்று, இவரால் நிகழ்த்தப்படும் அவமானங்களைப் பொறுத்துக் கொண்டு, பணம், பதவியைப் பெறும் நோக்கில் கூட்டணியில் இருப்பவர்கள்,         ''தமிழ்நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்” என்னும் ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு ஆதரிக்க இயலும்?

தமிழரல்லாத தலைவரைக் கொண்ட கட்சிகள்

மேலும், ஆளும் கட்சியாகிய தி.மு.க. வும், எதிர்க்கட்சியாகிய அ.தி.மு.க. வும் தமிழரல்லாத அந்நியர்களின் தலைமையில் இருப்பது மட்டுமல்லாமல், தே.மு.தி.க. வின் நிறுவனரும் தலைவருமாகிய விஜய்காந்த் அவர்களும், ம.தி.மு.க. வின் நிறுவனரும் தலைவருமாகிய வைகோ அவர்களும் தெலுங்குப் பரம்பரையினர் என்பது அனைவரும் அறிந்துள்ள உண்மையாகும்.

சாதிக் கட்சி என்னும் முத்திரை

தமிழரல்லாதவர்களைத் தலைவர்களாகக் கொண்டுள்ள இக்கட்சிகளைத் தவிர, தமிழ் இனத்தவர்களைத் தலைவர்களாகக் கொண்டுள்ள கட்சிகளில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுமே ஆகும். இவை இரண்டும் தமிழ் இனத்தவர்களின் தலைமையில் உள்ள தமிழர்களின் கட்சிகளாக இருந்தபோதிலும், தமிழ் இனம் முழுமைக்கும் உரிய கட்சிகளாய் இல்லாமல் குறிப்பிட்ட சாதிக்கட்சிகள் என்னும் முத்திரையைப் பெற்றுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. காரணம் குறிப்பிட்ட சாதிகளின் முன்னேற்றத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்ட சாதிச் சங்கங்களே பின்னர் அரசியல் கட்சிகளாக மாற்றப்பட்டமையையே அவற்றின் வரலாறுகள் வெளிப்படுத்துகின்றன.

உங்கள் அமைதிக்குக் காரணம்

இந்த நிலையில் ''தமிழ்நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்” என்னும் முழக்கம் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளால் எள்ளி நகையாடப்படக்கூடிய ஒன்றாகத் தோற்றம் அளிப்பது இயல்பானதே ஆகும். இப்பொழுது தமிழ்நாட்டில் இருக்கும் இந்த அரசியல் சூழ்நிலையையே தமிழ்நாட்டிலுள்ள  அரசியல் கட்சிகளின் தலைவர்களாகிய நீங்கள் உங்கள் அமைதியின் வழி வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்.

விடை கொடுக்கும் வெளியீடு

இந்த நிலைக்குக் காரணம் என்ன? என்பதையும், ''தமிழ்நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்” என்னும் கோரிக்கை நியாயமானதா? இந்திய இறையாண்மைக்கு ஏற்றதா? என்னும் கேள்விகளுக்கு விடை கொடுத்தும் எழுதப்பட்டு, நீதிமன்ற ஆணையின் வழி 30-4-2011 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது வழங்கப்பட்ட வெளியீடு ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள,

''இந்தியாவை வெள்ளையர் ஆளுவதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த தமிழரல்லாத அந்நியர்கள், தமிழ்நாட்டில் பெற்ற அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்”

என்னும் பகுதியைத் தமிழ்நாட்டை ஆளவிரும்பும் தமிழரல்லாதவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகின்றோம். ''தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்” என்னும் கருத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.

இனியும் சகிக்க இயலாது

தமிழரை இழிவாக எண்ணும் தமிழ் இனப் பகைவர் தமிழ்நாட்டில் தங்கி இருந்து, தமிழர் ஆட்சியைக் கைப்பற்றி, தமிழ் இனத்தையும், தமிழ்மொழியையும், தமிழர் பண்பாட்டையும், தமிழர் சமயத்தையும் அழிக்கும் கொடுமையைத் தன்மானத் தமிழர்களால் இனியும் சகித்துக் கொண்டிருக்க இயலாது.

தமிழ்நாடு தமிழ் இனத்தாருடையது. இன்றும் தமிழ் இனத்தினர் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பகுதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நடைபெறுவது மக்கள் ஆட்சி. ஆகவே, தமிழ் இன மக்கள் ஒன்று திரண்டு அந்நியர் ஆட்சியை அகற்றுவார்கள் என்பதில் ஐயம் இல்லை. இது காலத்தின் கட்டாயம். ஏனெனில், அந்நியர்களின் சூழ்ச்சியால் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால், தமிழகக் கட்சிகளுக்குத் தலைமை தாங்கும் தமிழரல்லாதார், சோனியாகாந்தியைப் பின்பற்றி உங்கள் கட்சிக்குத் தலைமை தாங்குங்கள். தமிழ்நாட்டு ஆட்சிக்குத் தலைமை தாங்க ஆசை கொள்ள வேண்டாம். உங்கள் கட்சியிலுள்ள தமிழர் அனைவரும் ஆட்சித் திறன் அற்றவர் என்று நீங்கள் எண்ண வேண்டாம். தமிழ்நாட்டு ஆட்சிக்கு உங்கள் கட்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் வர இடம் கொடுங்கள். இது தருமம். நியாயம். இந்திய இறையாண்மைக்கு ஏற்ற வேண்டுகோள்.

இதைப்பற்றி நீங்கள் கவலைப்படாமல், அமையப்போகும் தமிழக அமைச்சரவையைத் தமிழர்களை இழிவுபடுத்தி நசுக்கும் அந்நியர்களின் அமைச்சரவையாக அமைக்க நீங்கள் முற்பட்டால், உங்களைக் கடைசிவரை, நீங்கள் ஆட்சியிலிருந்து அகலும்வரை போராடவேண்டிய கட்டாயக் கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள தன்மானத் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

நகைக்க வேண்டாம்

எங்கள் போராட்டம் வன்முறையைத் தூண்டுவது அன்று. அமைதிவழி, பக்திவழி, பிரார்த்தனைவழி. பிரார்த்தனை என்றவுடன் நீங்கள் நகைக்க வேண்டாம்.

''ஆட்சி” என்பது, தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ, உலக அளவிலோ நின்றுவிடவில்லை. இப்பேரண்ட அளவிலும் ஆட்சி இருக்கிறது. இப்பேரண்ட ஆட்சிக்குத் தலைவரே கடவுள். அவருக்கு உட்பட்டவையே இவ்வுலகிலுள்ள அனைத்து ஆட்சிகளும் என்பது ஆறறிவுள்ள ஞானிகளின் அனுபவம். கடவுளை அனுபவிக்கும் இந்த அனுபவத்தையே, உலகில் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆன்மவியல், அறிவியல் வழியில் விளக்கிக் கூறுகிறது. ஆன்மவியலின் வழி, தமிழர்கள் ''அன்பே சிவம்” என்று அன்பு மயமான கடவுளை உலகுக்குக் காட்டியுள்ளார்கள். இதையே மாணிக்கவாசகப் பெருமான், தமிழர்களின் அன்பு மயமான கடவுளே உலகின் கடவுள் என்பதை, ''தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” எனப் போற்றுகின்றார்.

எவரும் அழிக்க முடியாது

ஆகவே, உலகுக்கு அன்பைப் போதிக்கும், அன்புமயமானவனே இறைவன் எனப் போதிக்கும் தென்னாட்டவர்களாகிய தமிழர்களையும், அவர்களின் மொழியாகிய தமிழ் மொழியையும், அவர்களின் பண்பாடாகிய தமிழர் பண்பாட்டையும், தென்னாட்டவரின் சமயமாகிய தமிழர் சமயத்தையும் எவரும் அழிக்க முடியாது என்பதை உங்களுக்குக் கூறிக் கொள்ளுகின்றோம்.

வெளிப்படுத்துங்கள்

அந்நியர்களாகிய உங்களோடு நாங்கள் அமைதியாக ஒருவருக்கொருவர் அன்புடன் தமிழ்நாட்டில் வாழ வேண்டுமா? அல்லது உங்கள் ஆதிக்க வெறியை எதிர்த்து அமைதி வழியில், பக்தி வழியில் போராட வேண்டுமா? என்பதை நீங்களே முடிவெடுத்து, நீங்கள் அமைக்கப்போகும் உங்கள் அமைச்சரவையின் வழி வெளிப்படுத்துங்கள்.

திரு. வைகோ அவர்களுக்குச் சிறப்பு வேண்டுகோள்

அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் அழியாமல் பாதுகாக்கப்பட, ''தமிழ்நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்” என்னும் கோரிக்கை வெற்றி பெறத் துணை நிற்கக் கூடிய சிறந்த வாய்ப்பு திரு. வைகோ அவர்களுக்கு இருக்கிறது. திரு. வைகோ அவர்கள் உடலால் தெலுங்கராயினும், உள்ளத்தால் தமிழர் என்பதை இதுவரை பல்வேறு நிலைகளில் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால், தமிழ் இன எதிரிகள் அவரைக் குறி வைத்து, அவருடைய கட்சி தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி இருக்கும் நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். திரு. வைகோ அவர்கள் தந்நலத்தை விட தமிழ் இன நலத்தை முன்னிறுத்துகிறவர் என்பது தமிழ் இன மக்களின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை சரியானதே என்பதை உலகுக்குக் காட்டும் வண்ணம், அவர் தன்னுடைய தியாக உள்ளத்தை வெளிப்படுத்த இது ஒரு நல்ல தருணம் ஆகும்.

''தமிழ்நாட்டை தமிழரே ஆள வாய்ப்பாக, நான் ம.தி.மு.க. கட்சிக்குத் தலைவனாக இருப்பேனே தவிர, எப்போதும் தமிழக ஆட்சியில் அமரமாட்டேன் என்று உறுதி எடுத்துள்ளேன்”

என்று அறிவிக்க முன்வந்தால், அவருடைய தியாக உள்ளம் முழுமையாக வெளிப்படும்.

இவ்வாறு அவர் அறிவிக்க வேண்டும் என்று அவரை உரிமையோடு வேண்டிக் கொள்ளுகின்றோம். இதன் வழி தமிழ் இன எதிரிகளால் குறி வைத்து அழிக்க முற்படப்படும் அவருடைய கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்பதில் ஐயம் இல்லை.

12-5-2011 அன்று நடை பெற இருக்கும் பிரார்த்தனை

நாம் வேண்டிக் கொண்டவாறு திரு. வைகோ அவர்கள் அறிவிக்க முன்வந்தால், தேர்தல் முடிவுகள் வெளிவந்து அமைச்சரவை பற்றிய சிந்தனை எழுவதற்கு முன்னர், 12-4-2011 அன்று, தமிழ்நாட்டைத் தமிழரே ஆள தமிழ் நாட்டிலுள்ள அந்நியர் தடையாயில்லாதவாறு அவர்களின் உள்ளங்களில் தமிழர்களை அடக்கி ஆள நினைக்கும் ஆதிக்க வெறி தோன்றாமல் அவர்களைப் பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவனை நோக்கி நடத்தப்படும் பிரார்த்தனைக்குத் தலைமை தாங்கி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவார்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நல் வழியில் நடத்துவாராக.

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள,

(மு. தெய்வநாயகம்)

(கடிதங்கள் இரண்டும் கீற்றில் இணைக்கப்பட்ட நாள்: 10.05.2011)

Comments

4 comments

4
இறைகற்பனைஇலான்
அய்யா, ஆன்மையல் இருப்பதினாலேயே தமிழ்ர் இந்து என் தன்னை நினைத்து அழிகிறான்.தனிப்பிரித்த அழிகிறான்.
kartheeswaran
unmaiyil thamizhargal maanm, rosam ullavargalaaga irunthaal kandippaga avargal intha ina meetpu porattathil kalanthu kolvargal endra nambikkai enakku irukkirathu...
முத்துக்குட்டி
தோழர் இறைகற்பனை இலான்,
ஆன்மவியல் என்பது மதங்களைக் கடந்தது. ஆன்மா என்று குறிப்பிடப்படுவது, ஆறாவது அறிவுக்குக் காரணமான 'மனிதம்' அல்லது 'உள்ளம்' என்பதாகும்; மக்கள் மதங்களைக் கடந்து மனிதத்தைச் சிந்திக்கத் துணை புரிவதாகும். இதைப் பற்றி மேலும் விளக்கம் அறிய 'உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்' என்னும் நூலைப் படியுங்கள். நூல் கிடைக்குமிடம்: பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை-23. பேசி: 9444817394
RAMA.RAASENTHIRAN.
miga sirantha poraattam !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.