'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்'
என்று திருக்குறள் செங்கோன்மை அதிகாரத்தில் சொல்கிறது. அதாவது கொடிய செயல் செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும்பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும் என்று அதற்கு புலியூர் கேசிகன் விளக்கமளிக்கிறார். ஆனால் அதே குறளுக்கு கலைஞர் மு.கருணாநிதி, கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும் என்று விளக்கமளிக்கிறார். முதலாமவர் கொடிய செயலுக்குக் கொலைத் தண்டனை சரி என்றும், இரண்டாமவர் கொலைக் குற்றம் புரிவோருக்குத் தண்டனை கொடுப்பது போதும் என்ற ரீதியில் விளக்கம் அளிக்கிறார். கொலைத் தண்டனை குறித்த புரிதல் காலத்தில் ஏற்படுத்திய சிந்தனை மாற்றத்தின் விளைவாகவே இவ்விளக்கங்களைப் புரிந்து கொள்கிறேன்.
சமீபகாலங்களில் மரண தண்டனை கூடாது என்ற வாதம் அகிலம் முழுதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் தமிழ் சூழலில் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட எழுவர் விடுதலைக்காக ஒரு சமூக இயக்கமாகவே இக்கருத்து முன்வைக்கப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டது.
'எங்களைப் பொறுத்தவரையில், மரண தண்டனை வழங்குவதன் மூலம் குற்றங்கள் குறைவதில்லை. இதுபற்றி விரிவாக, ஆழமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என இந்திய சட்ட ஆணையத்தின் 35-ஆவது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றங்களில் இந்தியா முழுமைக்கும் 165 மரண தண்டனை தீர்ப்புகளும், 2023-ஆம் ஆண்டு 120 மரண தண்டனை தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன (தகவல் ஆதாரம்: The 'Death Penalty in India: Annual Statistics Report', published by Project 39A). நிற்க.
எனது பதின்ம வயதில் நான் வாசித்த ஜூலியஸ் பூசிக் எழுதிய 'தூக்குமேடைக் குறிப்புகள்' நூலே எனது சிந்தனைப் போக்கினை மாற்றிய நூல்களில் முதன்மையான ஒன்று. இடதுசாரி போராளியாகச் சிறையில் தனது இறுதிக்காலத்தைக் கழிக்க நேர்ந்த பூசிக் எழுதிய மரணகாலக் குறிப்புகள் அவை. அவர் தூக்கிலிடப்பட்டவர். அவர் போல் தூக்குமேடைக்காகக் காத்திருந்த போராளிகள் சிலர் தங்களது சிறை அனுபவங்கள் மற்றும் தாங்கள் தெரிவிக்க வேண்டிய இறுதிச் செய்திகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக எழுதியுள்ள பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் தூக்கிலிடுபவர் எழுதிய நூல் ஒன்றையும் வாசித்ததாக எனக்கு நினைவில்லை. அவ்வகையில் சசிவாரியர் ஆங்கிலத்தில் எழுதி, தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடாக வந்துள்ள 'தூக்கிலிடுபவரின் குறிப்புகள்' தனித்துவமானதாகும்.
தமிழ்நாட்டின் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழரான ஜனார்த்தனன் பிள்ளை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவராகப் பணியாற்றி, தொடர்ந்து மன்னராட்சி முடிவுற்று நாடு விடுதலை பெற்ற நிலையில் இந்திய அரசின் தூக்கிலிடுபவராகவும் பணியாற்றி 117 மனிதர்களைத் தூக்கிட்டுள்ளார். பிரதியானது மெதுவாக தூக்கிலிடுபவரின் மனவோட்டம் வழியாக அவரது வாழ்க்கையை மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கி, தூக்கு மேடைக்கும் நாளார்ந்த வாழ்நிலைக்கும் மாறி மாறிப் பயணித்து, இறுதிக் கட்டத்தில் தூக்கிலிடும் உணர்வு குறித்த அழுத்தத்தைக் கனமாக வாசிப்பவருக்குக் கடத்திவிடுகிறது.
ஜனார்த்தனன் பிள்ளையின் குறிப்புகளைப் பெற்று அதனை அப்படியே எவ்வித நகாசு வேலைகளையும் செய்யாமல் மூலத்தைத் திருத்தமின்றி வெளியிடுவதாகப் பிரதியில் எழுத்தாளராக வரும் பாத்திரம் கூறுகிறது. சசிவாரியரின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் - 'இப்புத்தகம் உண்மையும் புனைவும் கலந்ததாக இருக்கும் நிலையில் இதன் முக்கியப் பாத்திரம் பெரும் அளவில் எனது உருவாக்கமே, இதற்காக (ஜனார்த்தனன்) பிள்ளைக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்'. ஆக இங்கு ஒரு புனைவும் எதார்த்தமும் கலந்த முயக்க நிலை ஏற்படுகிறது. இதுவே இப்பிரதியின் சிறப்பம்சமாகக் கருதுகிறேன்.
எது ஜனார்த்தனன் பிள்ளையின் குரல், எது எழுத்தாளரின் குரல் என்று பிரித்து அறிய முடியாத உணர்வு எழுகிறது. அது பிரதிக்கு, தூக்குமேடையின் கீழ் உள்ள மரணமுறுபவரின் மலசலம், குருதி சிதறிய இருண்ட அறை போன்ற ஒரு பூடகத்தன்மையை அளிக்கிறது. மாஷ் என்ற ஆசிரியர், ராமைய்யன் பூசாரி போன்ற பாத்திரங்களின் அறிவுநிலையும் அப்பாத்திரங்களுக்கும் தூக்கிலிடுபவருக்கும் இடையிலான உரையாடல்களும் ஆசிரியரின் இடையீடுகளோ என ஐயம் கொள்ள வைக்கின்றன. தூக்கு மேடை, தூக்கு மரம், கயிறு ஆகியவற்றின் கனம், நீளம், அகலம், அடர்த்தி குறித்த கணித சமன்பாடுகள் பற்றிய விவரணைகள், தூக்கிடுதல் என்ற செயலினை ஒரு சூத்திரமாக்கி அதில் உணர்வு நிலைக்கு எவ்வித இடமும் இல்லை என்று பிரதிச் செயல்பாடாய் விளக்குகிறது.
இறுதியில் வேதங்கள், மதங்கள், அறிவொளி மரபுத் தத்துவங்கள் என்று எந்த ஒரு நிறுவனமும் அமைப்பும் தூக்கிலிடுபவரின் உணர்வுநிலையை, வெறுமையை, இருண்மையை விளக்கப் போதுமானதாக இல்லாமல் ஆனதுடன், எழுதும் செயல்பாடு ஒன்றே பிள்ளைக்கு ஒரு பெரிய விடுதலை உணர்வை ஏற்படுத்துவது பிரதிக்கு ஒரு பின்நவீனத்துவத் தன்மையையும் தருகிறது.
இரா.முருகவேளின் மொழிபெயர்ப்பு வழக்கம் போல நேரடிப் படைப்பாக உணரும் வகையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூக்கிலிடுபவர் தான் கடவுளின் பெயரால், மன்னரின் பெயரால், அரசாங்கத்தின் பெயரால் ஒருவரைக் கொல்லும்போது அச்செயலைத் தான் செய்யவில்லை என்றும், தான் ஒரு கருவிதான் என்றும் ஒரு தற்காலிகத் தப்பித்தல் உணர்வில் திளைத்து, பின்னர் வாழ்நாள் முழுவதும் விடை தெரியாத கேள்விகளுடனே அலைந்து திரிய நேர்வது பிரதியில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
ஒரு முறை ஜேம்ஸ் என்பவரைத் தூக்கிலிடும் முன்னர் இவரைப் பார்த்து கெஞ்சும் கண்களுடனும் குரலுடனும் கேட்கிறார் - 'நீங்கள் ஏன் என்னைக் கொல்ல நினைக்கிறீர்கள்?'.
இறுதியாக மரண தண்டனை குறித்த அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளுடன் முடிக்க விரும்புகிறேன்.
'மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்' - டாக்டர் அம்பேத்கர்
மரண தண்டனை மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கலாம் என்பதற்கு மாறாக, மரண தண்டனையை முழுவதுமாக ஒழித்து விடுவதை நான் ஆதரிக்கிறேன். இந்த முடிவைப் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் பல முரண்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும். நமது நாடு அகிம்சையில் நம்பிக்கை கொண்ட நாடு. அகிம்சை நமது நாட்டின் பண்டைய கலாச்சாரம். மக்கள் தற்போது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத்தீர்ப்பாக மக்கள் முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான். ('பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13, பக்கம் 639)
தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - சசிவாரியர் - தமிழில் இரா.முருகவேள் - எதிர் வெளியீடு - விலை ரூ.350.00
- அன்புச்செல்வன்