இந்திய உச்சநீதிமன்றத்தில் இப்போது ஒரு மீளாய்வு நடத்தப்படுகிறது. அது என்னவெனில் மரண தண்டனையை அநாகரிகமான முறையில் மாந்த நேயமில்லாமல் கொடுமையான வகையில் தூக்கிலிட்டு நிறைவேற்றாமல் அமெரிக்காவில் உள்ளதைப் போல ஊசி மூலம் நஞ்சு செலுத்தி நிறைவேற்றலாமா அல்லது மின்சாரம் பாய்ச்சுவதன் மூலம் நிறைவேற்றுவதா அல்லது இன்றைய அறிவியல் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி அறிவார்ந்த வலி குறைவான, கண்ணிய மான புதிய முறை ஒன்றைக் கண்டறிந்து, அந்தப் புதிய முறையில் நிறைவேற்றலாமா என்பதே ஆகும்.

ரிஷி மல்ஹோத்ரா என்பவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 354(5)அய் நீக்க வேண்டும்; அது அரசமைப்புச் சட்டம் கூறு 21 அளித்துள்ள உயிர்வாழ் வதற்கான உரிமைக்கு எதிரானது என்றும் 2003ஆம் ஆண்டு அளித்துள்ள சட்ட ஆணையத்தின் 187ஆம் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி தூக்கிலிட்டு சாகச் செய்யும் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக 2017 அக்டோபர் 6இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். “ஒருவருக்கு சாவுத் தண்டனை அளிக்கப்பட்டால், அவர் சாகும் வரை தூக்கிலிடப்படல் வேண்டும்” என குற்றவியல் நடைமுறைச் சட்டம் 354(5) கூறுகிறது.death sentenceமேற்படி வழக்கை விசாரணை செய்யும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்களும் நீதிபதி பி.எஸ். நரசிம்மா அவர்களும் அடங்கிய அமர்வு 21.3.2023 அன்று, மரண தண்டனையை நிறைவேற்ற, தற்போதுள்ள தூக்கிலிடும் முறைக்கு மாற்று முறையைப் பரிந்துரைக்க தேசியச் சட்டப் பல்கலைக்கழக வல்லுநர்களையும் மருத்துவர்களையும் அறிவியலாளர்களையும் கொண்ட குழு அமைக்க லாமா என ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞரான ஆர். வெங்கடரமணியிடம் கேட்டுள்ளது.

சாகப் போகிறவர் துன்பத் துடிப்பைக் குறைக்க வேண்டுமாம்; விலங்காண்டித்தனமான கொடூரத் தன்மையில்லாத, பண்பார்ந்த மாற்றுமுறை வேண்டுமாம்.

மரண தண்டனை பண்பார்ந்த முறையா? மனிதநேயமா? கொடுமையற்றதா? என்பதே மாந்த உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்போர் எழுப்பும் வினா. மரண தண்டனை என்பதே நாகரிகமற்ற விலங்காண்டித்தனமான -கொடுமையான ஒன்று. எனவே மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

1860ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சியில் இயற் றப்பட்ட இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், இன்றைக்கு 125 ஆண்டுகளுக்குமுன் 1898-இல் சேர்க்கப்பட்ட பிரிவே மரண தண்டனை ஆகும். 1973இல் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும் மரண தண்டனையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மரண தண்டனை விதிப்பது பற்றிக் கூறும் பிரிவுகள் 120B,
121, 132, 194, 302, 305, 364A, 376A, 396 மற்றும் பிரிவு 31A அனைத்தும் நீக்கப்பட வேண்டும்.

சட்ட ஆணையத்தின் 262ஆம் அறிக்கை, பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர மற்ற குற்றங் களுக்கு மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் சட்ட ஆணையத்தின் 187ஆவது அறிக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 354(5)-இல் திருத்தம் செய்து தூக்குத் தண்ட னைக்கு மாற்றாக ஊசி மூலம் நஞ்சு செலுத்தலாம் என்று கூறுகிறது.

2020-இல் இருந்த நிலைப்படி உலகில் 108 நாடு களில் அதாவது 70 விழுக்காடு நாடுகளில் மரண தண்டனை என்பது முற்றாக இல்லை. வங்கதேசம், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், சப்பான், நைஜீரியா, சவூதி அரேபியா, தென் கொரியா, இலங்கை, தாய்வான், வடஅமெரிக்கா முதலான நாடுகளில் இன்னமும் மரண தண்டனை நீடிக்கிறது.

மரண தண்டனை நீடிக்க வேண்டும் என்போர் கொடிய குற்றங்களுக்கு தண்டனையும் கடுமையாக இருந்தால் தான் எதிர்காலத்தில் கொடுங்குற்றங்கள் நிகழ்வது குறையும் எனக் கூறுகின்றனர். ஆனால் தண்டனை கடுமையாக இருந்தும் கொடிய குற்றங்கள் இழைக்கப்படுவது பெருகிக் கொண்டுள்ளதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தக் காரணம் ஏற்புடையதாக இல்லை.

மரண தண்டனை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21 உறுதி செய்துள்ள குடிமக்கள் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை மறுப்பதாகும். குற்றம் எதுவாயினும் அதற்குத் தண்டனை அம்மனி தனைக் கொல்வது என்பது நாகரிக உலகத்தில் ஏற்கத் தக்கதன்று.

பிழையான ஆதாரங்கள் அடிப்படையிலோ சான்றாளரின் பிழையான சான்றுரை அடிப்படையிலோ மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் உண்மை வெளிப்பட்டால் தண்டனைக்கு உள்ளானவருக்கு நியாயம் வழங்க முடியுமா என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். தண்டனை எதுவாயினும் ஏதோ ஒரு சூழலில் குற்றமிழைத்த ஒருவர் திருந்தி வாழ்வதற் கான வாய்ப்பு அளிப்பதாக இருக்க வேண்டும்.

அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு மரண தண்டனை கூடாது என்ற கருத்தை உறுதி செய்கிறது. பெரும்பான்மை மக்களின் பொதுக் கருத்தும் மரண தண்டனைக்கு எதிரானதாகவே உள்ளது.

உச்சநீதிமன்றம் மாற்றுமுறைத் தேடாமல் மரண தண்டனையை முற்றாக ஒழித்திட முன்வர வேண்டும்.

மரண தண்டனை ஒழிப்போம்! மனிதம் காப்போம்!

- சா.குப்பன்

Pin It