தொடர்புடைய படைப்புகள்

ravikumar translationலத்தீன் அமெரிக்க வாழ்வியலுக்கும் இந்தியத் துணைக்கண்ட வாழ்வியலுக்கும் அவை மூன்றாம் உலக நாடுகள் என்ற ஒற்றுமையைத் தாண்டி, கலாச்சார பண்பாட்டு ரீதியிலும் கலை இலக்கிய ரீதியாகவும் கூட ஒப்புநோக்கத்தக்க இணைவு உள்ளது. அதனாலேயே இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் போர்ஹே, மார்க்வெஸ், நெரூதா, ஆக்டாவியோ பாஸ் போன்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகள் பலர் இங்கு அறிமுகமாகி நமது கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் நெருக்கமானவர்களாக மாறியிருந்தனர்.

இந்தச் சூழலில் அவர்களில் ஒருவரானவரும், ஆனால் பெரிதாக இங்கு அறியப்படாதவருமான எடுவர்டோ கலியானோ எழுதிய Mirrors - Stories of Almost Everyone (2009)-லிருந்து பெரும்பாலான கட்டுரைகளையும், Days and Nights of Love and War (2000) என்ற நூலிலிருந்தும் 2008ஆம் ஆண்டு அவரது தாய்நாடான உருகுவேயில் ஆற்றிய உரை ஒன்றிலிருந்தும் சில கட்டுரைகளையும் பகுதிகளையும் தேர்வு செய்து மொழிபெயர்த்து, 'வரலாறு என்னும் கதை' என்ற சிறு நூலை கடந்த 2010இல் ரவிக்குமார் தனது மணற்கேணி பதிப்பகம் மூலமாக வெளியிட்டு கலியானோவுக்கு ஒரு சிறப்பான அறிமுகத்தை தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

இந்திய அளவில் பெரும் அரசியல் ஜாம்பவான்கள் என்று ஊதிப் பெருக்கப்படுவோரால் நடத்தப் பெற்ற வாக்குத் திருட்டு போல, தமிழ் அறிவுலகில் பெரும் எழுத்தாளுமைகளால் நடைபெறும் எழுத்துத் திருட்டும் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் நிகழும் கூகுள் டிரான்ஸ்லேட் அபத்தங்களும் தொடர் வாசிப்பில் உள்ளோர் பலரும் அறிவர். இது குறித்து சமீபத்தில் நண்பரும் எழுத்தாளருமான விஸ்வாமித்திரன் சிவக்குமார் கூட தனிப்பேச்சில் தனது வருத்தத்தையும் தார்மீகக் கோபத்தையும் வெளிப்படுத்தினார். ரவிக்குமாரின் இத்தொகுப்பில் அத்தகைய அசட்டுத்தனம் ஏதுமில்லை என்பதோடு, நேர்மையான அரசியல் நெறி கொண்டு கட்டுரைகளைத் தேர்வு செய்ததிலும், அக்கட்டுரைகளின் வழியே கலியானோவின் சிந்தனை வெளியையும் வாழ்வையும் அரசியலையும் வாசிப்போருக்கு எளிய முறையில் முன்வைத்ததிலும் அவரது தனித்துவமும் அதற்கான சீரிய முன்னெடுப்பும் தெரிகிறது.

1970களில் லத்தீன் அமெரிக்காவில் நிலவிய ஜனநாயக அரசுகளைக் கவிழ்க்கும் ராணுவப் புரட்சிகள் பற்றியும் அதன் ஒடுக்குமுறைகளைப் பற்றியும் பேசும் இசபெல் அலெண்டே, அந்நிகழ்வுகளை எடுவர்டோ கலியானோவின் Open Veins of Latin America என்ற நூல் முன் அனுமானித்திருந்தது என்றும் கூறியதாகத் தனது முன்னுரையில் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். 'லத்தீன் அமெரிக்கா உலக வரைபடத்தில் நொந்துபோன ஒரு இதயத்தைப் போன்று காட்சியளிக்கும் ஒரு கண்டம்' என்ற அலெண்டேவின் வார்த்தைகளைக் கொண்டே இச்சிறு நூலின் முகப்பட்டைப் படமானது ஓவியர் Anil Vardan என்பவரால் மிக அழகாக உருக்கொண்டுள்ளது — கலியானோவின் முகப் பின்னணியில் நொந்துபோன இதயமாக தென் அமெரிக்கக் கண்டம்..!

இத்தொகுப்பில் உள்ளவை எல்லாமே அரை பக்க, ஒரு பக்க, அதிகபட்சம் 3 பக்கங்களைக் கொண்ட சிறு கட்டுரைகள். ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒரு வரலாறைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவை சலிப்பேற்படுத்தும் புள்ளிவிவரங்களால் ஆன வறண்ட வரலாறாகவன்றி, தொடர்பற்ற ஒரு மூலையிலிருந்து தொடங்கி கவித்துவமான முடிவை நோக்கி நகரும் கதைகளாக வாசிப்போருக்குக் கடத்தப்படுகின்றன. எளிய கதைசொல்லல் மொழியில், சிறுமியின் பாசாங்கற்ற வியப்பாகவும், அன்னையின் பரிவோடும் கடமையுணர்ச்சியாகவும், காதலியின் அப்பாவித்தனத்தோடு கூடிய குறும்பு மொழியோடும் வெளிப்படுகின்றன கலியானோவின் வரலாற்றுக் கதைகள்.

அக்கதைகளில், முரண்பாடுகளின் வழி இன்மையைச் சந்திக்கும் லாவோ சூ, பன்றிக்கறி உண்ணும் புத்தன், தீண்டப்படாதவர்களுக்கு விதிமுறைகளை உருவாக்கிய மனு, ஆண்களின் பெருமையாக விளங்கிய கணிதத்தையும் பௌதிகத்தையும் உடைத்து கோலோச்சிய பிரெஞ்சுப் பெண் சோஃபி, நுஷூ என்ற சீனப் பெண்களின் பிரத்யேக மொழி பேசிய கடைசி சீனப் பெண் யாங் ஹுயான்யி, வெள்ளையராய்ப் பிறந்து கறுப்பர்களுக்காகக் கறுப்பர்களுடன் இணைந்து போராடிய ஜோஸ் அர்திகாஸ், ஆண் வேடமிட்டு சட்டம் பயின்று வல்லுநரான ஆங்கிலேயப் பெண் கான்செப்சியான் அரெனால், தோழர் ஸ்டாலினால் கொல்லப்பட்ட ரஷ்ய இலக்கியவாதி ஐசக் பாபெல், ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் அநாகரிகவாதி என்று தற்கொலைக்குத் தூண்டப்பட்டவரும் முதல் கணினியை உருவாக்கிய குழுவை வழிநடத்தியவருமான ஆலன் டூரிங், 1960 மார்ச் மாதம் ஹவானா புரட்சி சதுக்கத்தில் கூடிய கொதிப்பு மிகுந்த மக்கள் திரளை வியப்பும் பிரமிப்பும் கலந்த பார்வையில் பார்க்கும் சே குவேராவைப் படம் பிடித்த ஆல்பர்ட்டோ கோர்டா, அவரை விரட்டியடித்த இடங்களில் எல்லாம் இன்று அவரது ஓவியங்கள் நிறைந்து காணப்படும் ஓவியர் வான்கோ, "நான் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல" என்று கூறிய காரல் மார்க்ஸ், கண்டறிந்த கதிர்வீச்சுக்கே பலியாகிப் போன பியர் கியூரி - மேரி கியூரி குடும்பம், 'லிட்டில் பாய்' அணுகுண்டைச் சுமந்து சென்று ஹிரோஷிமா மீது வீசிய 'எனோலா கே' என்ற விமானம், அதிகாரத்தின் வழி ஆதிக்குடிகளின் படைப்புகளில் தங்களின் பெயர்களை எழுதிக் கொண்ட அய்ரோப்பியக் கலை இலக்கியத் திருவுருக்கள் — இப்படி இப்படி இன்னும் நிறைய வரலாறுகள் பொதிந்துள்ளன.

வரலாறு நெடுகிலும் வரலாற்றாலேயே கைவிடப்பட்டவர்கள், நாகரிகத்தின் பெயரால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டவர்கள், பேரரசுகளாலும் ராணுவங்களாலும் காணாமலாக்கப்பட்டவர்கள், அடிமையாக்கப்பட்டவர்கள், உலகெங்கும் புறக்கணிக்கப்பட்டவர்கள், அதிகாரத்திற்கு எதிராகச் சிறு குரலேனும் எழுப்பியவர்கள், மக்கள் புரட்சியைச் சமைத்தவர்கள் என கலியானோவின் வரலாறு எழுதுதல் என்பது உதிரிகளின், லும்பன்களின் கதைகளை எழுதுவதாகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது அதிகார வர்க்க சர்வாதிகாரத்தின் இன்னொரு பெயராக மாறிப்போன அவலத்தையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அந்த வகையில் மானுடகுல மீட்சிக்கான குரலாகவே கலியானோ இத்தொகுப்பில் வெளிப்படுகிறார்.

மேலும், பாட்டிக் கதைகளின் வழி வளர்ந்த அவரது பால்யம், தனிமையின் கண்ணாடிச் சுவர்களில் மோதித் தெறித்த அவரது இளமை, வெறுமை உணர்வினால் எழுத முயற்சித்தல், தற்கொலைக்கான முன்னெடுப்புகள், நோய்மையில் படுத்திய உடல்வாதை, வலிகளை அனுபவிக்க வலியுறுத்தும் கத்தோலிக்க நம்பிக்கையை உடைத்துக் கொண்டாட்டங்கள், காதல்கள் மீதான விழைவு, பாலியல் தொழிலாளர்களுடன் நட்பு என்று அவரது சொந்த வாழ்க்கைச் சுவடுகளும் நூலில் காணக்கிடைத்து, அவரது வாழ்வு பற்றிய ஓர் அரூபக் கோட்டோவியத்தை வாசகர் மனதில் உருவாக்குகிறது.

குறுங்கதைகளைப் போன்ற பதிவுகளின் வழி எடுவர்டோ கலியானோ என்ற 'பிரபஞ்ச நோக்கு கொண்ட' லத்தீன் அமெரிக்க ஆத்மாவைத் தரிசிக்கவும் தொட்டுணரவும் முடிகிறது — இந்நூல் நமது புறக்கணிக்கப்பட்ட கதைகளை வரலாறுகளாகப் பேசுவதால்..! தோழர் ரவிக்குமாருக்கு நன்றியும் அன்பும்.

வரலாறு என்னும் கதை — எடுவர்டோ கலியானோ — தமிழில்: ரவிக்குமார் — மணற்கேணி பதிப்பகம் — தொடர்புக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - 63827 94478

- அன்புச்செல்வன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.