ஒரு கவிஞரின் படைப்புலகம் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதில்லை. வாழ்க்கை அனுபவங்கள் மாறும்போது அவரது மொழியும் மாறுகிறது; பார்வையும் மாறுகிறது; கவிதைகளின் மையமும் மாறுகிறது. சில நேரங்களில் அந்த மாற்றம் சமூகத்திலிருந்து தனிமனிதனை நோக்கி நகர்கிறது; சில நேரங்களில் தனிமனிதனிடமிருந்து மீண்டும் சமூகத்தை நோக்கித் திரும்புகிறது.

அந்த வகையில், "சிலுக்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி" கவிதைத் தொகுப்பு, இந்தக் கவிஞரின் படைப்புப் பயணத்தில் குறிப்பிடத்தக்க திருப்பத்தைப் பதிவு செய்கிறது. அவரது முந்தைய தொகுப்புகளில் காணப்பட்ட சமூக அக்கறை, மனித உறவுகளின் பரந்த பரிமாணங்கள், வாழ்வின் பொதுவான கேள்விகள் ஆகியவற்றைவிட, இத்தொகுப்பு பெரும்பாலும் தனிமனிதனின் அக உலகையே மையமாகக் கொண்டுள்ளது.

senthi bookஇந்த அக உலகில் அடிக்கடி எதிர்கொள்ளப்படுபவை காதல், காமம், தனிமை, உடல், வெறுமை, மரணம், தற்கொலை பற்றிய சிந்தனைகள். இவை இலக்கியத்திற்குப் புதிய பொருள்கள் அல்ல. சங்க அகப்பாடல்களிலிருந்து உலக நவீனக் கவிதைகள் வரை மனித மனத்தின் இத்தகைய நுட்பமான, இருண்ட பகுதிகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.

ஆனால் ஒரு கேள்வி இங்கே எழுகிறது:

ஒரு கவிதைத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் ஒரே மனநிலையைச் சுற்றியே இயங்கும்போது, அது கவிஞரின் அக உலகை விரிவுபடுத்துகிறதா? அல்லது அந்த அக உலகிற்குள்ளேயே அவரைச் சிறைபடுத்துகிறதா?

இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியாகவே இந்தத் தொகுப்பிலிருந்து சில முக்கியமான கவிதைகளை வாசிக்க விரும்புகிறோம்.

இந்த நூலை வாசிக்கத் தொடங்கிய அதே இரவு, தொலைக்காட்சியில் "மூன்றாம்பிறை" திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தன் வாழ்வில் நிறைவேறாத அன்பையும் ஏக்கத்தையும் கண்களால் மட்டுமே வெளிப்படுத்திய சிலுக்கின் நடிப்பு, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனித்த இடம் பெற்றது. அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், "சிலுக்கு" என்ற பெயரே ஒரு தலைமுறையினருக்குப் பரவசத்தையும் நினைவுகளையும் கிளர்த்துகிறது.

அதே நினைவின் ஒளியையும், உடல்மொழியின் கிளர்ச்சியையும் இந்தத் தொகுப்பின் தலைப்பே முதலில் வாசகரிடம் ஏற்படுத்துகிறது. நூலை வாசிக்கத் தொடங்கியவுடன் அந்த உணர்வு இன்னும் தீவிரமடைகிறது. காதலும், காமமும், தனிமையும், ஏக்கமும் இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் பல்வேறு வடிவங்களில் பரவிக் கிடக்கின்றன.

கவிஞர்களின் உலகம் என்பது கற்பனை, உணர்வு, அழகியல் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட தனித்துவமான பிரபஞ்சம். தம்மைச் சுற்றியிருக்கும் உலகத்திலிருந்து மனளவில் விலகி, தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட உலகத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். "கவிதை என்பது மனத்தின் குமுறல்" என்று சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில், இந்தத் தொகுப்பின் கவிஞரின் மன உலகம், அவரது முந்தைய படைப்புகளோடு ஒப்பிடும்போது, வேறொரு திசையில் பயணிப்பதை உணர முடிகிறது.

கவிஞரைப் பற்றி…

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகிலுள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர்.

இவரது கவிதைப் பயணம் பல்வேறு பரிணாமங்களைக் கண்டுள்ளது:

  • நினைவுகளுக்குப் பின் (1996)
  • பிறிதொன்றான மண் (2005)
  • தனித்தலையும் செம்போத்து (2012) – காலச்சுவடு பதிப்பகம்
  • வத்சலா எங்கிருக்கிறாய் (2023) – காலச்சுவடு பதிப்பகம்
  • சிலுக்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி (2024) – வேரல் பதிப்பகம்

என ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மேலும், "நினைவுகளின் நிலவெளி" என்ற வட்டாரப் பண்பாட்டு ஆய்வு நூல் 2023 ஆம் ஆண்டு மேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. இந்நூலுக்குத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது வழங்கப்பட்டது.

கடந்த பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் "புனைவு" என்ற நவீன இலக்கியச் சந்திப்பைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

"இவரது முதல் கவிதைத் தொகுப்பான நினைவுகளுக்குப் பின் நூலை வாசித்தவர்கள், இன்றைய சிலுக்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி தொகுப்பைப் படிக்கும்போது இயல்பாகவே ஒரு மாற்றத்தை உணர்வார்கள்."

'நினைவுகளுக்குப் பின்' கவிதைத் தொகுப்பில்,

கமலையின்

தொப்பை நிரப்பும்

விவசாயி…

வயிறு காலியாய்.

என்றும்,

ஸ்பிக் விளம்பரத்தில்

மட்டும்

கரன்ஸிகளை எண்ணும்

விவசாயி.

என்றும் சமூக யதார்த்தத்தைத் தீவிரமாகப் பதிவு செய்த கவிஞரின் பார்வை, 'சிலுக்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி' தொகுப்பில் தனிமனிதனின் அக உலகை நோக்கி நகர்ந்திருப்பதை உணர முடிகிறது. இந்த மாற்றம் வெறும் கருப்பொருள் மாற்றமல்ல; கவிஞரின் உள்ளார்ந்த அனுபவ உலகில் நிகழ்ந்த பரிணாமமாகவும் வாசிக்கப்படலாம். அதனால்தான் இத்தொகுப்பை வெறும் காதல் அல்லது காமக் கவிதைகளின் தொகுப்பாகப் பார்க்காமல், ஒரு படைப்பாளியின் மன உலகில் ஏற்பட்ட மாற்றத்தின் பதிவாக வாசிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

கவிதைகளின் மன உலகு...

'சிலுக்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி' கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளை, அவற்றின் மைய உணர்வின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பார்க்கலாம். பெரும்பாலான கவிதைகள் காதலையும் காமத்தையும் மையமாகக் கொண்டவை. அடுத்ததாகத் தற்கொலை, மரணம், வாழ்வின் வெறுமை ஆகியவற்றைச் சுற்றி நகரும் கவிதைகள் வருகின்றன. மிகக் குறைவான கவிதைகளே இயற்கை, வீடு, பால்ய நினைவுகள், மனித உறவுகளின் மென்மையான தருணங்கள் போன்றவற்றைப் பேசுகின்றன.

இந்தக் கவிதைகளை ஒரே இலக்கிய இயக்கத்திற்குள் அடக்கிவிட முடியாது. நவீனத்துவம், பின்நவீனத்துவம், யதார்த்தவாதம், தன்னனுபவக் கவிதை (Confessional Poetry) போன்ற பல்வேறு கூறுகள் ஒன்றோடொன்று கலந்துள்ளன. அதனால் இந்தத் தொகுப்பை ஒரு குறிப்பிட்ட "இசம்" என்ற வரையறைக்குள் அடைப்பதைவிட, கவிஞரின் மன உலகின் வெளிப்பாடாக வாசிப்பதே பொருத்தமாக இருக்கும்.

தொகுப்பின் முன்னுரையில் கவிஞரே தனது மனநிலையைப் பற்றிய ஒரு முக்கியமான குறிப்பைப் பதிவு செய்கிறார்:

"பதினேழு ஆண்டுகளுக்கு முன் மனக்கொந்தளிப்புக்கு உள்ளானேன். கடும் பிறழ்வு, உளைச்சல், பெரும் அவசம் ஏற்பட்டது. பிறகு தீவிரமாக அகம் பேசத் தொடங்கினேன். எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தேன். பின்னர் அன்பு செய்யும் மனநிலை வாய்த்தது. மனித மனதின் வன்மமும் விரோதமும் பேரச்சம் தருகிறது..."

இந்த ஒப்புதல், இத்தொகுப்பை வாசிப்பதற்கான திறவுகோலாக அமைகிறது. எனவே, இக்கட்டுரையின் நோக்கம் கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதுவது அல்ல; அந்தக் கவிதைகளுக்குப் பின்னால் இயங்கும் மன உலகைப் புரிந்துகொள்ள முயல்வதே.

காதலா? காமமா? அல்லது நிறைவேறாத ஏக்கமா?

"காமம் பூக்கும் இவ்வுடலை

எங்கு

வைத்துவிட்டுத் திரும்புவதென்று

யோசித்தபடியிருக்கிறேன்…"

'காமம் சுமந்தலையுதல்' கவிதையின் இறுதி வரிகள் இவ்வாறு முடிகின்றன.

கவிஞர் முன்னுரையில் குறிப்பிட்டதுபோலவே, இந்தத் தொகுப்பு முழுவதும் காதலும் காமமும் பல வடிவங்களில் பரவி நிற்கின்றன.

தொகுப்பின் தலைப்புக் கவிதையான 'சிலுக்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி'யில்,

"தற்செயலாகத் திரும்பிய நான்

அவளது

கண்களுக்குள் வீழ்ந்தேன்."

என்ற வரிகளிலேயே பார்வை, ஈர்ப்பு, கற்பனை ஆகியவை ஒன்றாகச் சந்திக்கின்றன.

'புலனக்காதல்' கவிதையில், காதல் நேரடிச் சந்திப்பில் இல்லை; அது முழுவதும் மின்னணு உலகில் நிகழ்கிறது.

"அந்த நீலநிற டிக்

பெரும் போதை

சேர்ப்பது..."

இங்கு காதல் ஒரு பச்சை விளக்கு, ஒரு மெசஞ்சர் ஒலி, ஒரு "நீல டிக்" ஆகியவற்றின் வழியே அனுபவிக்கப்படுகிறது. டிஜிட்டல் உலகின் புதிய காதல் மொழியைக் கவிஞர் பதிவு செய்கிறார்.

'பெயர் தெரியாது கலவி கொண்ட ஒருவன்' கவிதையில், அறிமுகமற்ற இரு மனிதர்களின் உடல் நெருக்கமே உறவின் தொடக்கமாகிறது.

"அம்முத்தம் பின்னொரு மாலையில்

அவளுடனான

சம்போகத்தின்

தொடக்கமாகியிருந்தது."

இந்த மூன்று கவிதைகளும் வெவ்வேறு நிகழ்வுகளைச் சொன்னாலும், அவற்றின் மன உலகு ஒன்றே.

இதே போன்று 'ஒரே நேரத்தில் மூன்று சிநேகிதர்களுடன் பேசுபவள்', 'பாம்புக் கண்கள் கொண்ட ஒருத்தி', 'பிங்க் நிறத்தில் ஒரு தேவதை', 'வத்சலா எங்கிருக்கிறாய்?' போன்ற கவிதைகளிலும் பெண் உருவம் பெரும்பாலும் காதல் அல்லது காமத்தின் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது.

இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று உள்ளது. கவிஞர் தனது உணர்வுகளை மட்டும் பதிவு செய்வதில்லை; பிற மனிதர்களின் உறவுகளையும் அதே கண்ணோட்டத்தில் கற்பனை செய்கிறார். ஒரு பெண் ஒருவருடன் பேசினாலும், கைப்பேசியில் பலருடன் உரையாடினாலும், அதன் பின்னணியில் காதல் அல்லது காமம் இருக்கிறது என்ற முடிவை அவரது கற்பனை அடிக்கடி எட்டுகிறது. இதுவே இந்தத் தொகுப்பின் உளவியல் தன்மையாகத் தெரிகிறது.

senthiஇதனை உளவியல் கோணத்திலும் வாசிக்க முடியும்.

ஆபிரகாம் மாஸ்லோ முன்வைத்த தேவைகளின் படிநிலை (Maslow's Hierarchy of Needs) கோட்பாட்டின்படி, மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவை நிறைவேறிய பின், அன்பு, நெருக்கம், அங்கீகாரம், சுயநிறைவு போன்ற உயர்நிலைத் தேவைகள் மேலெழுகின்றன. வாழ்க்கையில் ஒரு வெற்றிட உணர்வு உருவாகும்போது, மனித மனம் புதிய உணர்ச்சி அனுபவங்களைத் தேடத் தொடங்குகிறது.

அதேபோல், சிக்மண்ட் பிராய்ட் மனித மனம் இயல்பாகவே வலியைத் தவிர்த்து இன்பத்தை நாடும் தன்மை கொண்டது என்று கூறுகிறார். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, இத்தொகுப்பில் காமமும் காதலும் வெறும் உடல் சார்ந்த அனுபவங்களாக அல்ல; வெறுமை, தனிமை, நிறைவேறாத ஏக்கம் ஆகியவற்றின் மொழியாகவும் வாசிக்கப்படலாம்.

எனவே, இந்தக் கவிதைகளை வெறும் காமக் கவிதைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. கவிஞரின் அக உலகு அந்த எல்லைக்குள்ளேயே தொடர்ந்து சுழல்கிறது என்ற உணர்வும் வாசகருக்குத் தோன்றுகிறது.

"இந்தக் கவிதைகளில் வெளிப்படும் உணர்வுகள், நிறைவேறாத நினைவுகளின் எதிரொலிகளா, தனிமையின் மொழியா, அல்லது கவிஞரின் அக உலகின் படைப்பாக்கமா? அந்தக் கேள்விக்கான பதிலைக் கவிஞர் சொல்லவில்லை; அதை வாசகரின் சிந்தனைக்கே விட்டுச் செல்கிறார்."

மரணத்துடன் உரையாடும் கவிதைகள்

காதலையும் காமத்தையும் அதிகமாக எழுதிய கவிஞர், மரண உணர்வுகளையும் மையப்படுத்தி பல கவிதைகளை எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது. 'ஞாயிறன்று தற்கொலை செய்துகொள்பவர்கள் பாக்கியவான்கள்', 'மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவனின் சிறுகுறிப்பு', 'கடைசிக்கால ஞாபகங்கள்', 'இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருப்பவனின் மனத்துயர்', 'இறுதி ஊர்வலத்தைப் பார்த்தல் என்பது…' போன்ற கவிதைகள் அனைத்தும் மரணத்தை வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றன.

இந்தத் தொகுப்பில் மரணம் ஒரு நிகழ்வாக மட்டும் வருவதில்லை; அது வாழ்வின் மறுபக்கமாகவும், சில நேரங்களில் தோழனாகவும், சில நேரங்களில் விடுதலையாகவும், சில நேரங்களில் அமைதியாக வந்து நிற்கிறது.

'தற்கொலையை ருசிக்கும் ஒருவன்' கவிதையில்,

வஞ்சகம்

பகை கொண்ட

இந்த

மனிதர்களிடத்தில்

புழங்குவது

பெரும்

தொந்தரவாக

இருக்கிறது அவனுக்கு…

என்று தொடங்கி,

ஒன்பது அடி

கொண்ட நைலான் கயிறும்…

முத்துநகர்

எக்ஸ்பிரஸை

இரு கைகளால்

தடுத்து நிறுத்தினால்

அவனுக்கு

எல்லாம்

போதுமானதாகிவிடும்.

என்று முடிகிறது.

இங்கு தற்கொலை ஒரு செயல் அல்ல; மனிதர்களால் நிரம்பிய உலகிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற ஆழமான சோர்வின் உருவகமாக வெளிப்படுகிறது.

அதேபோல 'மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவனின் சிறுகுறிப்பு' கவிதையில்,

எப்போதோ

நிகழப்போகும்

மரணத்தை

அவன்

தன்னுள் நிகழ்த்திப்

பார்த்துக் கொள்கிறான்…

என்று தொடங்கி,

சாகுமுன்

தனது மரணத்தை

ஒருமுறை

எழுதிப் பார்த்துக் கொள்கிறான்.

என்று முடிகிறது.

மரணம் நிகழ்வதற்கு முன்பே அதை மனதில் பலமுறை நிகழ்த்திப் பார்க்கும் மனித மனத்தின் அச்சத்தையும் கற்பனையையும் இந்தக் கவிதை பதிவு செய்கிறது.

'கடைசிக்கால ஞாபகங்கள்', 'இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருப்பவனின் மனத்துயர்', 'இறுதி ஊர்வலத்தைப் பார்த்தல் என்பது…' போன்ற கவிதைகளும் இதே உணர்ச்சி வட்டத்திற்குள் வருகின்றன. இயல்பான மரணத்தைக் கூட அமைதியாக ஏற்றுக்கொள்ள முடியாமல், அதை மீண்டும் மீண்டும் சிந்திக்கும் மன உலகைக் கவிஞர் உருவாக்குகிறார்.

இந்தத் தொகுப்பில் காதலும் காமமும் ஒரு முனையாக இருந்தால், மரணம் மறுமுனையாக இருக்கிறது. இன்பத்தின் உச்சத்தையும் வெறுமையின் அடியையும் ஒரே மன உலகில் கவிஞர் தொடர்ந்து அலைந்து திரிகிறார். அதனால்தான் இந்த இரண்டு கருப்பொருள்களும் ஒன்றுக்கொன்று எதிரானவையாக அல்லாமல், ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் மனநிலைகளாக இந்தத் தொகுப்பில் தோன்றுகின்றன.

இந்த இடத்தில் பிரெஞ்சுத் தத்துவவாதி ஆல்பர்ட் காம்யூவின் சிந்தனை நினைவிற்கு வருகிறது. "மனிதன் வாழ வேண்டுமா, வேண்டாமா?" என்பதே தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி; அதனால்தான் தற்கொலை அவரது சிந்தனையின் மையமாகிறது. அந்தக் கோணத்தில் வாசிக்கும்போது, இத்தொகுப்பிலுள்ள மரணம் மற்றும் தற்கொலை பற்றிய கவிதைகள் வெறும் மரண விருப்பத்தின் பதிவுகளாக அல்ல; வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் மனத்தின் ஆழமான போராட்டங்களாகவும் தோன்றுகின்றன.

இந்தக் கவிதைகள் சில கேள்விகளை எழுப்புகின்றன. மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், "என்னை யாரும் உண்மையில் புரிந்துகொள்ளவில்லை" என்ற தனிமை உணர்வு... ஒரு மனிதனை இத்தகைய சிந்தனைகளுக்குள் தள்ளுகிறதா? வஞ்சகம், ஏமாற்றம், நிராகரிப்பு போன்ற அனுபவங்கள் சிலரிடம் வாழ்வைவிட மரணத்தை அதிகமாக சிந்திக்கச் செய்கிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதிலைக் கவிஞர் தரவில்லை; ஆனால் அந்த மன உலகிற்குள் வாசகனை அழைத்துச் செல்கிறார். மரண உணர்வுகளை மையமாகக் கொண்ட கவிதைகள், உள்ளார்ந்த மன அழுத்தங்களைப் படைப்பாக்கமாக மாற்றும் ஒரு முயற்சியாகவும் வாசிக்கப்படலாம்.

உளவியலாளர்கள் கூறுவதுபோல, கலை மற்றும் இலக்கியம் பல நேரங்களில் மனவலிகளுக்கான வெளிப்பாட்டு வடிகாலாகச் செயல்படுகின்றன. அந்த வகையில், இந்தக் கவிதைகள் மரணத்தைப் போற்றுவதில்லை; மரணத்தை நோக்கிச் செல்லும் மனத்தின் இருண்ட பாதைகளை மொழியாக்கம் செய்ய முயல்கின்றன என்றும் வாசிக்க முடிகிறது.

சில கேள்விகள்…

"சிலுக்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி" கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்கும்போது, ஒரு கவிஞரின் கவிதைகளை மட்டும் வாசித்த உணர்வு ஏற்படவில்லை; அவரது அக உலகிற்குள் சில மணி நேரம் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வே மேலோங்குகிறது.

கவிதை என்பது சமூகத்திற்காக மட்டும் எழுதப்பட வேண்டியதல்ல. அதேபோல், தனிமனித உணர்வுகளின் பதிவாக மட்டும் சுருங்கிப் போகவும் கூடாது. ஒரு சிறந்த கவிதை, தனிமனித அனுபவத்தைச் சமூக அனுபவமாக மாற்றும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும். அந்த இடத்தில்தான் இந்தத் தொகுப்பைப் பற்றிய சில கேள்விகள் எழுகின்றன. காதல், காமம், தனிமை, மரணம் ஆகியவை மனித வாழ்வின் இயல்பான அனுபவங்கள்தான். ஆனால் அவை தொடர்ந்து ஒரே மன வட்டத்திற்குள் சுழலும்போது, கவிதை புதிய வாழ்க்கை அனுபவங்களைத் தேடுகிறதா? அல்லது அதே அக உலகிற்குள் மீண்டும் மீண்டும் திரும்புகிறதா? என்ற கேள்வி வாசகரிடம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

இந்த விமர்சனம் அந்தக் கேள்விகளுக்குத் தீர்ப்பளிப்பதற்காக எழுதப்படவில்லை. மாறாக, ஒரு கவிஞரின் படைப்புப் பரிணாமத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். 'நினைவுகளுக்குப் பின்' தொகுப்பிலிருந்து 'சிலுக்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி' வரை வந்திருக்கும் இந்தப் பயணம், ஒரு கவிஞரின் மொழி மட்டுமல்ல; அவரது மன உலகும் காலத்தோடு எவ்வாறு மாறுகிறது என்பதையும் பதிவு செய்கிறது.

இலக்கியம் இறுதியில் மனித மனத்தின் ஆவணம்தான். அந்த ஆவணத்தை வாசிக்கும்போது, கவிதைகளுக்கு அப்பால் இருக்கும் மனிதனையும் நாம் வாசிக்கத் தொடங்குகிறோம். அந்த வாசிப்பைத் தூண்டுகிறது என்பதாலேயே, இந்தத் தொகுப்பு கவனிக்கப்பட வேண்டிய கவிதைத் தொகுப்பாக மாறுகிறது.

"ஒரு கவிஞரின் படைப்புலகைப் புரிந்துகொள்வது என்பது, அவர் எழுதிய கவிதைகளை மட்டும் வாசிப்பதல்ல; அவர் எழுதாமல் விட்ட வாழ்க்கையையும் வாசிப்பதே ஆகும்."

"இந்தத் தொகுப்பு வாசகனை எப்போதும் சம்மதிக்க வைக்காது; ஆனால் சிந்திக்க வைக்கிறது."

- அ. தமிழ்ச்செல்வன்

நூல் விவரம்:

  • நூல்: சிலுக்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி
  • ஆசிரியர்: செந்தி
  • பதிப்பகம்: வேரல் புக்ஸ்
  • பக்கங்கள்: 142
  • கவிதைகள்: 91
  • விலை: ₹180

ஆசிரியர் தொடர்புக்கு:

  • மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
  • செல்லிடப்பேசி: 9080314831
  • முகவரி: செந்தி, 81A, ஜவஹர் நகர், 12-வது தெரு (மேற்கு), மங்கம்மாள் சாலை, திருமங்கலம் – 625706, மதுரை மாவட்டம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.