மலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும், இலக்கியக் கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியவர். எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் எனப்பன்முக ஆளுமைப் படைத்தவர் அந்தனி ஜீவா.
இவர், கலையையும், இலக்கியத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காக அல்லாது, சமூக விழிப்புணர்வுக்கான ஊடகமாகக் கருதித் தமது பணியை மேற்கொண்டு வருபவர்.
“கலை இலக்கியச் செயற்பாடுகள் எனக்களிப்பது ஊதியமல்ல, உயிர்” என்ற உயர்ந்த லட்சியத்தை மனதில் ஏற்றுச் செயல்படுபவர்.
அந்தனி ஜீவா கொழும்பு நகரில் 26.05.1944 அன்று செபஸ்டியான்-லட்சுமி அம்மாள் வாழ்விiணையருக்கு மகனாகப் பிறந்தார்.
கொழும்பு சுவர்ண வீதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையிலும், பம்பலப்பெட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி பயின்றார். கொழும்பு நாவல திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் இதழியலில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.
அந்தனி ஜீவா 1960 ஆம் ஆண்டு முதல் எழுத்துலகில் பிரவேசித்தார். சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். மேலும், கொழுந்து, குன்றின் குரல், ஜனசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
'அன்னை இந்திரா' என்ற இவரது நூல், அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 31.10.1984 அன்று சுட்டுகொல்லப்பட்டதன் எதிரொலியாக தினகரன் இதழின் வாரமஞ்சரியில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
இலங்கையில் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மலையக மக்கள் பட்ட அவலங்களிலிருந்து அவர்களை விடுவிக்கப் போர்க்குரல் எழுப்பிய முதல் தொழிற்சங்கத் தலைவர் கோ. நடேசய்யர் அவர்களின் வாழ்வும் பணியும் குறித்து ‘காந்தி நடேசய்யர்' என்னும் நூலை 1990 ஆம் ஆண்டு மலையக வெளீயீட்டகம் மூலம் வெளியிட்டார்.
இந்தியாவின் தென்கோடியிலிருந்து தமிழர்கள் தேயிலைத் தோட்ட வேலைக்காக இலங்கைக்குச் சென்ற பொழுது தங்களுடன் பாரம்பரியக் கலை வடிவங்ளையும், வாழ்மொழி இலக்கியங்களையும் கொண்டு சென்றனர். காலமாற்றத்தில் அந்த இலக்கிய வடிவங்களும் மாறி மலையக இலக்கியமாகப் பரிணமித்தது. மலையக இலக்கியத்தின் வரலாற்றை ‘மலையகமும் இலக்கியமும்' என்னும் தலைப்பில் நூலாக 1995 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலுக்கு 1996 ஆம் ஆண்டு தமிழ்த் தின விழாவில் அரச இலக்கிய விருது கிடைத்தது.
‘மலையகமும் இலக்கியமும்' என்னும் நூலில் மலையக இலக்கியத்தின் வரலாற்றுப் பின்னணி, வாய் மொழி இலக்கியம், மலையகமும் கவிதையும், மலையகமும் சிறுகதையும், மலையகமும் நாவல்களும், மலையகமும் கலைகளும் முதலிய தலைப்புகளில் மலையக இலக்கிய வரலாற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
தேயிலைத் தோட்டத்தில் –உடல்
தேய்ந்து தேய்ந்து துரும்பாகி மெலிந்திட
ஓய்வின்றி நாமுழைத்தோம் - மச்சான்
நோய்கண்டு தானிளைத்தோம் -உடல்
ஊறிச் சுரந்திடும் வேர்வைப்புனல் பாய்ச்சி
ஓங்கும் பயிர் வளர்த்தோம் -வளம்
தாங்கும் உயிர் கொடுத்தோம் -வரும்
சாவிலும் நாமிந்தத் தேயிலைக்கே- உரம்
ஆகப் புதைந்திடுவோம் -பெரும்
தியாகம் புரிந்திடுவோம். ” -கவிமணி எம். ஸி. எம். சுபைரின்.
மேற்கண்ட பாடல் அந்தனி ஜீவா எழுதிய 'மலையகமும் இலக்கியமும்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. மலையக மக்களின் வாழ்க்கையை, துன்பதுயரங்களை, சோகங்களை, உழைப்புச் சுரண்டலை, அடக்குமுறைக் கொடுமைகளை, தியாகத்தை இப்பாடல் வரிகள் உலகிற்கு உணர்த்துகிறது.
இலங்கை மலையக மக்களின் அவல வாழ்வினை உலகிற்கு எடுத்துக் காட்டியவரும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடியவருமான 'மலையக மக்கள் கவிமணி' என்று போற்றப்பட்டவருமான சி.வி.வேலுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் குறித்து, 'சி.வி. சில நினைவுகள்' என்னும் நூலை எழுதி 2002 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
அறிஞர் ஏம்.எம்.ஏ.அசீஸ், அறிஞர் சித்திலெப்பை, அருள்வாக்கி அப்துல் காதிர், கோட்டாறு செய்குபாபா, கி. மு. நல்ல தம்பிப் பாவலர், பண்ணாமத்துக் கவிராயர், அப்துல் லத்தீப், கவிஞர் அல் அசுமத் போன்றோர் மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை ஆய்வு செய்து, ‘மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு' என்னும் நூலை எழுதி 2002 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
மலையகக் கவிதைகளின் வளர்ச்சி பற்றி கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தாம் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'மலையகம் வளர்த்த கவிதை' என்னும் நூலை கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் வாயிலாக 2002 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
கண்டி மாவட்டத் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம், கலை, பண்பாடு முதலான பல்துறை அம்சங்களை வரலாற்று ரீதியில் ஆய்வு செய்து, 'கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்' என்னும் தொகுப்பு நூலை 2002 ஆம் ஆண்டு மத்திய மாகாண சாகித்திய அமைப்பு மூலம் வெளியிட்டார். அந்நூலில், கண்டி மாவட்டத் தமிழர்கள் சில வரலாற்றுப் பதிவுகள், கண்டிராசன் கதை, கண்டி மாவட்டத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் வழிபாடும், கண்டித் தமிழர்களின் சமூக அசைவியக்கமும் பொருளாதாரப் பின்புலமும், கல்வி வாய்ப்புக்களும் கண்டி மாவட்டத் தமிழரும், கண்டி மாவட்டத்தில் இந்து மதம்: வரலாறும் வளர்ச்சியும், கண்டி மாவட்டத் தமிழர்களது அரசியல், நாட்டாரியலில் கண்டி, இந்திய வம்சாவளித் தமிழரின் வர்க்க அடுக்கமைவு மாற்றம், கண்டியில் தமிழ் இலக்கியம் -ஒரு கண்ணோட்டம் ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்து வரும் 12 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘குறிஞ்சி மலர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
மலையகத்தின் தேர்ந்த 21 பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து ‘குறிஞ்சிக் குயில்கள்' என்னும் நூலினை 2002 ஆம் ஆண்டு உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு கொண்டு வந்தார்.
'அம்மா' என்ற தலைப்பில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து, சென்னை கலைஞன் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தார்.
மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்தோரும், மலையக மக்களிடம் உரத்த சிந்தனைகளை விதைத்தோரும், மலையக மக்களின் விடுதலைக்கு உழைத்தோரும் எனப் பன்னிருவர் பற்றிய தகவல்கள் அடங்கிய 'மலையக மாணிக்கங்கள்’ என்னும் நூலை 1998 ஆம் ஆண்டு கொழும்பு துரைவி வெளியீடாக கொண்டு வந்தார்.
அந்நூலில், மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளான கோ. நடேசய்யர், மீனாட்சி அம்மையார், பெரி. சுந்தரம், இராமானுஜம், ஜெ.எஸ். பெரோ, ஜார்ஜ் ஆர். மேத்தா, மலையக காந்தி ராஜலிங்கம், வி.கே. வெள்ளையன், சி.வி. வேலுப்பிள்ளை, ஏ. அஸீஸ், சோமசுந்தரம், அசோகா பி.டி. ராஜன் ஆகியோர் பற்றிய பதிவுகள் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.
’புதிய வார்ப்புகள்' என்ற வரிசையில் இளைய தலைமுறை எழுத்தாளர்களையும், ‘பெண் பிரம்மாக்கள்' என்ற தலைப்பில் பெண் படைப்பாளர்களையும் இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் அந்தனி ஜீவா.
'முகமும் முகவரியும்' என்னும் தொகுப்பு நூலின் மூலம் 68 மலையக எழுத்தாளர்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டார்.
‘திருந்திய அசோகன்' என்ற சிறுவர் நூல் 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அந்தனி ஜீவா 2003 ஆம் ஆண்டு, லண்டன், பாரீஸ் ஆகிய அய்ரோப்பிய நகரங்களுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டார். இவரது பயணக்கட்டுரை தினகரன் இதழில் தொடராக வெளியிடப்பட்டது. பின்னர் சென்னை மணிமேகலை பிரசுரத்தினால் ‘நெஞ்சில் பதிந்த அய்ரோப்பிய பயணம்' என்னும் நூலாக வெளியிடப்பட்டது.
அந்தனி ஜீவா 2005 ஆம் ஆண்டு 'மலையகத் தொழிற் சங்க வரலாறு' என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில் கோ. நடேசய்யர், டாக்டர் மணிலால், மீனாட்சி அம்மாள், ஏ. ஈ. குணசிங்க, கலாநிதி என்.எம். பெரேரா, என். செல்லையா, என்.பி. தர்மலிங்கம், வி.எஸ். ராஜா, என்.சிவசாமி, எஸ்.இராமநாதன், கலாநிதி விஜயகுமார், பி. எஸ்.வேலுசாமி, வி. ஆர். எம். வி. ஏ.லெட்சுமண செட்டியார், ஏ. அஸீஸ், எச்.எம். தேசாய், மலை நாட்டு காந்தி கே. இராஜலிங்கம், ஜி. ஆர், மேத்தா, எஸ். சோமசுந்தரம், சி.வி.வேலுப்பிள்ளை, வி.கே. வெள்ளையன், எஸ்.எம். சுப்பையா, கே.ஜி.எஸ். நாயர், ரொஸாரியோ பெர்னாண்டோ, எஸ். நடேசன், எஸ்.தொண்டமான், கலாநிதி கொல்வின், ஆர்,டி, சில்வா, ஓ.ஏ. ராமையா முதலியார், டியூடர் கீர்த்தி மெண்டிஸ், ஜே. ஆர். ஜெயவர்த்தனா, ரணில் விக்கிரமசிங்க, காமினி திசாநாயக்கா, ராஜாசெனிவிரத்தின, மொஹீதீன், எஸ். பெருமாள், சண்முகதாசன் ஆகிய மலையகத் தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் செயல்பாடுகள், பணிகள் குறித்து சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன், தொழிலாளர் தேசிய சங்கம், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடிச் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், பொதுச் சேவையாளர் சங்கம், ஐக்கிய இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், லங்கா சுதந்திர சேவையாளர் சங்கம், புதிய செங்கொடி சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, இலங்கை விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் முதலிய தொழிற்சங்கங்களின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், போராட்டங்கள் முதலியவைகள் குறித்து சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'ஈழத்தில் தமிழ் நாடகம்' என்னும் நூலில் உலக நாடக மேடை, தமிழ் நாடக மேடை, நாட்டுக் கூத்து முதலிய தலைப்புகளில் நாடகங்களின் வளர்ச்சி மற்றும் நாட்டுக் கூத்தின் செழுமை, வளமை குறித்து பதிவு செய்துள்ளார். மேலும் ஈழத்தில் தமிழ் நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட சி. வை.தாமோதரம் பிள்ளளையவர்களின் புதல்வரான வண.பிரான்சிஸ் கிங்ஸ்பரி, விபுலாந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிபிள்ளை, பேராசிரியர் சரத் சந்திரா, அ. ந, கந்தசாமி, பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வைரமுத்து, நடிகவேல் லடீஸ் வீரமணி முதலியவர்களின் நாடகப் பணிகளையும், நாடகத்திற்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகளையும் பதிவு செய்துள்ளார்.
இவர்கள் வித்தியாசமானவர்கள் என்னும் நூலில், தனிநாயகம் அடிகளார், சி.வி. வேலுப்பிள்ளை, கலையரசு சொர்ணலிங்கம், பேராசிரியர் உவைஸ், அறிஞர் அ. ந. கந்தசாமி, மார்ட்டின் விக்ரமசிங்க, கே. டேனியல், பெரியார். பி.டி.ராஜன், சரத் முத்தெட்டுவேகம, வி. கே. நவஜோதி, கவிஞர் ஈழவாணன், வி.கே.வெள்ளையன், நாடக மேதை டி.கே. எஸ், கே.எஸ். சிவகுமாரன், பேராசிரியர்.மு. வ., எழுத்தார் வல்லிக்கண்ணன், டொமினிக் ஜீவா, எஸ். அகஸ்தியர் என 30 அறிஞர்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.
அந்தனி ஜீவா எழுதிய நூல்கள் மற்றும் தொகுத்து பதிப்பித்த நூல்கள்:
ஈழத்தில் தமிழ் நாடகம், காந்தி நடேசய்யர், குறிஞ்சிக் குயில்கள் ( கவிதைகள்) ( தொகுப்பு நூல் ), குறும் பூக்கள் ( தொகப்பு நூல்), சுவாமி விபுலானந்தர், திருந்திய அசோகன் ( சிறுவர் நாவல்), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம், பார்வையின் பதிவுகள், அன்னை இந்திரா, மலையகமும் இலக்கியமும், அமைதி கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது.
கூhந ழடைட ஊடிரவேசல ஐn ளுசடையமேய கூயஅடை டுவைநசயவரசந, மலையக மாணிக்கங்கள், இவர்கள் வித்தியாசமானவர்கள், மலையக தொழிற்சங்க வரலாறு, மலையக கவிதை வளர்ச்சி, மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்கு, சி.வி.சில நினைவுகள், சிறகு விரிந்த காலம், அ.ந.க. ஒரு சகாப்தம் முதலிய நூல்களாகும்.
‘பார்வையின் பதிவுகள்’என்னும் நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள், பிரேமின் என்ற மேதை, அ.ந.க.அறிவுலக மேதை, காலத்தை வென்றவர் கலாநிதி கைலாசபதி, மலை நாட்டுக் காந்தி, கே.டேனியல் நினைவாக, பிரேம்ஜி என்ற ஞானதிரியன், தமிழன்பர் எஸ். எம். ஹனிபா, திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன், இலங்கையின் இலக்கிய இதழ்கள், அயலகத் தமிழறிஞர்கள், புலம் பெயர் இலக்கியம் உட்பட 40 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
“ தொழிலாளர்கள் சாதரணமானவர்கள் அல்லர் ; அவர்கள் அக்கினியில் பூத்த பூக்கள்; நெருப்பின் மக்கள் ; நெருப்புச் சுவாலையை எதிர்த்து அக்கினிப் பிரவேசம் நடத்துபவர்கள். அவர்களின் உழைக்கும் கரங்களின் உறுதியையும் உரிமைப் போராட்டத்தினையும் முதலாளி வர்க்கம் உணரத்தான் போகிறது .. துடிக்கும் இரத்தம் பேசட்டும், துணிந்த நெஞ்சம் நிமிரட்டும் . உழைக்கும் வர்க்கம் சேரட்டும். ” –அந்தனி ஜீவா எழுதி இயக்கிய 'அக்கினிப் பூக்கள்' நாடகத்தில் பேசப்படும் வசனம்.
இவர் ஈழத்து நாடக மேடையில் புதிய வீச்சுக்களையும், புதிய தரிசனங்களையும் கொண்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
மலையகத்தில் 1980 களில் வீதி நாடகங்களை முதன் முதலில் ஆரம்பித்தவர் என்ற பெருமை அந்தனி ஜீவா அவர்களையேச் சேரும்.
இவர் 1980 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்குச் சென்று வீதி நாடக முன்னோடியான பாதல் சர்கார் சென்னையில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றார்.
மக்களுடன் நேரடியானதும், நெருக்கமானதுமான தொடர்பினை ஏற்படுத்தும் சிறந்த கலை ஊடகமான தெரு நாடகங்கள் அந்தனி ஜீவாவின் முயற்சியால் மலையகத்தில் புத்துயில் பெற்றது.
இவரின் 'வீணை அழுகிறது' என்ற சமூக நாடகம் பெரிய இடத்து அரசியல் வாதிகளின் தோலை உரித்துக் காட்ட முனைந்ததால், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.
'அலைகள்' நாடகம் இலங்கை கலாச்சாரப் பேரவை 1978ஆம் ஆண்டு நடத்திய தேசிய நாடக விழாவில் இரு விருதுகளைப் பெற்றது.
கொழும்பிலும், மலையகத்திலும் பல வீதி நாடகங்களை நடத்தியுள்ளார். இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 1994 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் நாடக விழாவில் இவரது 'ஆராரோ ஆரிவரோ' என்ற நாடகம் விருது பெற்றது. மகாகவி பாரதி, ஆராரோ ஆரிவரோ, கவிதா, பறவைகள், வெளிச்சம், சாத்தான் வேதம் ஓதுகின்றது, ஒன்று எங்கள் ஜாதியே, அக்கினிப் பூக்கள், தீர்ப்பு, வீணை அழுகின்றது, முள்ளிள் ரோஜா, அலைகள், பறக்காத கழுகுகள் முதலிய நாடகங்கள் உட்பட 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
'முள்ளில் ரோஜா' என்ற பெயரில் அந்தனி ஜீவா எழுதி இயக்கிய நாடகம் 1970 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட முதல் நாடகமாகும். இந்நாடகம் அந்தனி ஜீவாவை ஈழத்து தமிழ் நாடக உலகில் இனம் காட்டியது.
‘அக்கினிப் பூக்கள்' நாடக நூல் 1999 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலுக்குரிய இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்றது.
மீனவர் பிரச்சனைகளைக் கருவாகக் கொண்ட 'அலைகள்' என்ற நாடகம் இலங்கை கலாச்சாரப் பேரவையின் 1978 ஆம் ஆண்டுக்குரிய தேசிய நாடக விழாவில் இரண்டாவது பரிசினைப் பெற்றது.
அந்தனி ஜீவா, மலடு ( ஈழநாடு ), விதி ( சிந்தாமணி), புரூட் சலட் ( சிரித்திரன்), தவறுகள் (அமுதம்), நினைவுகள் ( தேசபக்தன்) ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார்.
கண்டியில் 1980 களில் 'மலையக கலை இலக்கியப் பேரவை' என்ற அமைப்பை நிறுவினார்.
கண்டியில் 1980 களில் 'மலையக கலை இலக்கியப் பேரவை' என்ற அமைப்பை நிறுவினார். அந்தனி ஜீவா அந்த அமைப்பின் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். இவர் 'மலையக வெளியீட்டகம்' என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
மலையக கலை இலக்கியப் பேரவையின் சார்பாக, சி.வி.வேலுப்பிள்ளையின் இலக்கிய, தொழிற்சங்க பணிகளைப் பாராட்டி பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி அவர்களால் 'மக்கள் கவிமணி' என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
மலையக இலக்கியப் பேரவையின் மூலம் இலக்கிய கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், நூல் வெளியீடுகள் முதலிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டது.
தமிழ் நாட்டில் திருப்பூர் நகரில் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் அந்தனி ஜீவா கலந்து கொண்டார். அம்மாநாட்டில் 'ஈழத்தில் தமிழ் நாடகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில், உலக நாடகப் பின்னணியில் தமிழ் நாடகத்தின் படிமுறை வளர்ச்சி குறித்தும், நாடக வளர்ச்சியிலும், கூத்து ஆராய்ச்சியிலும் ஈழத்தவர்களின் பங்கு குறித்தும் விரிவாகப் பதிவு செய்தார். அவரது உரை நூலாக சிவகங்கை அகரம் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது.
அந்தனி ஜீவா கண்டி, கொட்டகலை, நுவரெலியா முதலிய இடங்களில் வீதி நாடக பயிற்சி பட்டறைகள் நடத்தினார். மேலும், ‘வெளிச்சம்' என்ற வீதி நாடகக் குழுவொன்றை உருவாக்கி அதன் பொறுப்பாளராகவும் செயற்பட்டார்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகை புரிந்த வீதி நாடகக் கலைஞரான பிரளயன், மட்டக்களப்பு பல்கலைக் கழகத்திற்கு தமிழகத்திலிருந்து வருகை தரு பேராசிரியராகப் பணி புரிந்த பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் ஆகியோர் ‘வெளிச்சம்' வீதி நாடகக் குழுவினருக்கு பயிற்சி அளித்தனர். பேராசிரியர் கே.ஏ. குணசேகரன், ‘மக்கள் கவிஞர்’ இன்குலாப்பின் ‘நாங்க மனுசங்கடா' பாடலை மலையக மக்கள் பத்தியில் பாடி உணர்வைத் தட்டி எழுப்பினார்.
இலங்கை அரசின் கலாச்சார அமைச்கத்தின் கீழ் இயங்கிய கலைக்கழக நாடகக்குழுவில் அங்கம் வகித்து நாடக வளர்ச்சிக்காக பாடுபட்டார். மேலும், மலையகத்தின் பாரம்பரிய கலைகளை மேம்படுத்தும் குழுவிலும் இடம் பெற்று செயற்பட்டார். அந்தக் குழு மூலம் மலையகத்தின் பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஈடுபட்டார். தோட்டங்களில் முடங்கிப்போன மரபுக்கலைஞர்களை தேடிப்பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ‘கொழுந்து'இலக்கிய இதழ் வெளிவந்தது. அதன் ஆசிரியராக அந்தனி ஜீவா செயற்பட்டார். 'குன்றின் குரல்' என்ற இதழின் ஆசிரியராகவும் அந்தனி ஜீவா செயற்பட்டார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் 2005 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய சமூகவியாளர்களின் மானிடவியல் பிரிவு நடத்திய கருத்தரங்கில் மலையகம் குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து அந்தனி ஜீவா உரை நிகழ்த்தினார். மேலும், திருச்சி, மதுரை நகரங்களில் மலையக இலக்கியம் குறித்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியுள்ளார்.
“மலையகத்தின் விழிப்புணர்வு, அரசியல் மாற்றம், கலாச்சாரச் செழுமை என்பனவற்றை வெளிப்படுத்திய பெருமக்களை உரியமுறையில் எல்லோரும் அறிய வேண்டுமென்பதில் அந்தனி ஜீவா மிகுந்த ஆர்வம் கொண்டு இயங்குபவர். அவர் எழுதியிருக்கும் நூல்கள், நடத்திவரும் சஞ்சிகைகள் என்பன இந்தக் குரலையே அடிநாதமாகக் கொண்டவை. மேலும் அந்தனி ஜீவா ஒரு கலகக்கார கலைஞன்” என ஈழத்து நாவலாசிரியர் செ. யோகநாதன் புதழ்ந்துரைத்துள்ளார்.
“படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும். அதில் மண்ணின் மணம் இருக்க வேண்டும். கலைஞன் மானுடம் படைக்கும் ஆத்மாவின் ராகமாகத் திகழ வேண்டும்” என்ற தமது கூற்றின் வழி இன்றும் இலக்கியம் படைத்து வரும் அந்தனி ஜீவாவின் புகழ் ஈழத்து மலையக இலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.