பெரிய பொருள்கள் சிறியவற்றில் குடியிருக்கின்றன

ஒரு நொடிப் பொழுதேனும்...

ஆடம் ஜாகாஜேவ்ஸ்கி, போலந்து கவிஞர்..

"மலைகளைப் பிரதிபலிக்கும் பனித்துளி” என்று பிரபஞ்சத்தின் சுருக்கத்தை ஜென் கவிதை பேசுகிறது. வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பதும் அந்த வகையான கவிதைத் துளியே.

இயற்கையின் படிநிலையும் சிறிதிலிருந்தே தொடங்கிப் பெருகும் என்பது அறிவியல் அல்லவா?

கவிதை என்பது இலக்கியத்துக்கான சிறு வடிவம். அது படைப்பாளியின் மென்மையான உயிர்த்தெழுதல். கவிஞன் அவனின் சொற்களால் தான் வாழ்கிறான். அது அவனின் ஆசையின் முடிவிலி.

kaali pothalil nirainthirukkum kaatruஇந்நூலின் முதுகில் ஒட்டிக் கொண்டிருக்கும் நான்கு சொற்கள், இந்நாள் வரை தேடிக் கொண்டிருப்பதும் வாசகனாகிய நம் கண்களைத் தான் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. இலக்கியத்தின் எந்தக் கூறுகளையும் சுதந்திர மனவெளியில் வாசிக்க வேண்டியே நாம் பல நாட்களை கடத்தி வருகிறோம். மனம் விரும்பும் சொற்களில் மட்டுமே கவிஞனையும், கவிதை எது என்பதையும் நாம் கண்டெடுக்கிறோம்.

இருக்கட்டும்.

அகவி அவர்கள் முதலில் தோழர், ஆசிரியர், பிறகு ஆகப்பெரும் கவிதைக்காரர். அவரின் எழுத்துக்களில் சொற்களின் பொருள்கூடிக் காத்திருக்கின்றன. அதில் படிந்திருக்கும் நிழல் துண்டுகள் எல்லாம் அவரின் கண்கள் இதுவரை சேர்த்துள்ள ஒளிப்படங்கள். எந்த ஒரு ஒளிப்படக்காரனுக்கும் காணக் கிடைக்காத கோணங்கள். நட்சத்திரங்களில் மினுங்கத் தொடங்கிய கவிதைகள், நாம் அன்றாடம் கண்டு கடந்துவிட்ட, எளிய மனிதர்களுடைய வாழ்வை, வானம் போல தொலைதூரத்தில் போர்த்தி விட்டிருக்கிறது என நான் எண்ணுகிறேன்.

சில கவிதைகள் தன் ஒளியைத் தந்துவிட்டு எரிந்து விழுகின்றன. பல கவிதைகள், நம் மனவெளிக்குள் நுழைந்து பிரவாகமாய் கொப்பளிக்கத் தொடங்குகின்றன. இந்த வகையிலான கவிதைகள் அத்தனைகளிலும் நாம் உணர்வது நம் அக தரிசனப் புரிதல்களே. இடைவேளை என, மழை மேகங்களுக்கும் பனிப்புகைக்கும் நடுவில் அவரின் மனம் கடந்த காலத்திற்காக இடம் தந்ததையும் நாம் காணலாம். இந்த நாஸ்டால்ஜிக் வகைக் கவிதைகள் ஆகச்சிறந்தது.

அவரின் ஆய்வின் மொழிப் புலமை தரும் வெகுமதியாய் அரும்பு, மல்லி, அலர் எனப் பல கவிதைகளில் திணை, நிலம், பொழுது என்ற சங்கத் தமிழ் மணத்தினை சொற்களில் பொதித்துள்ளது மிகச் சிறப்பானது. 

அம்மாவின் பகலிரவு (பக்கம் 26, 27)

...எழுந்து மலரும் பகலைச் சூடிக்கொள்ளாதவர்கள்

வெளிச்சத்தின் கண்களுக்கு

....பூத்துக் கனிந்து விதையுதிர்த்த

பசுமை வற்றிய...

இவ்விடம் அம்மாவைச் சுட்டுவது பொருள் பொதிந்தது. அவளைக் கண்டடையும் ஒரு முன்னகர்வு.

....அதிகாலையில் வெளியேறும் அப்பா

பகலைச் சாறு பிழிவார்

பகல் அப்பாவைச் சாறு பிழியும்

...முன் இராத்திரியில்தான்

அம்மாவின் மேல்

பொழுது சாயத் தொடங்கும்.....

கவி மனத்திலும், எழுத்திலும் எத்தனை பரிவு.

காண் உலகில் எல்லா அம்மாக்களுக்கும் பகல் உள்ளது என்பது தெரியும். ஆனால் அவளின் அக உலகில் தன்வயமாய் உறங்கிட இரவு உண்டா எனக் கவிஞர் கேட்பது ஆயிரம் பொருள் தரும் கேள்வி தானே.

தனக்கு நெருக்கமான அசல் காட்சிகளை கவிச்சித்திரமாக்கிடும் நுட்பம் அவரின் கலை. அதனைப் பல கவிதைகளில் நாம் காணலாம்.

சான்றாக,

ஞானக்கதவின் பாஸ்வேர்டு (பக்கம் 44 )

....யார் கவனத்தையும் சீண்டும் சிரிக்கும் பூக்களினுள் மடியில் தான் மறைந்துள்ளது....

மலர்களை ,மரங்களை கணினி மென்பொருட்களாக வைத்து விட்டபிறகு ஞானத்திரை காண ஒரு மந்தனச் சொல்லை திறவுகோலாக கவிஞர் ஆக்கிக் காட்டுவது எது தெரியுமா? அது உலகைத் தொடங்கிவைக்கும் பூக்களின் தாது. பூமியில், யாருக்கும் உரிமை இல்லாத எத்தனை ஆயிரம் மரங்களை, செடிகளை, கொடிகளை இப்படியான எல்லாப் பச்சையையும் அழித்தொழித்த மனித நுகர்வு. அது தீவிரமாகத் தொடர்வதை நாமும் அறிந்திருக்கிறோமே !அதை நாம் எப்படி குறைப்பது என்ற துயர் வருகிறது. ஒரு செடி வளர்ப்பது மிக எளிய பரிமாணம் தான் ஆனால் அதுவே தீர்வல்ல. எளிமையான வாழ்வை வாழத் தீர்மானிப்பதே இயற்கையை வளப்படுத்தும்.

நாய் பற்றிய ஏழு கவிதைகள் ( பக்கம்80,81 )

......பூமியை ஆரத்தழுவி

சத்தமில்லாமல் படுத்திருக்கும் நாய் .....

நிலத்தின் மார்பில் அவ்வப்போது நிற்கவும், எதிரிகளைக் கண்டால் ஓடவும் தெரிந்திருக்கும் அவை படுத்துறங்கத் தழு‌வுவதும் அந்நிலமே...

...பாதி நேரபகல் தூக்கம்

உழைப்பதில்

நாய்கள் நாணயமானவை....

நாணயமற்ற மனித மனங்களை, நாநயத்தோடு விளிப்பது சிறப்பு.

கண்கள் மூடாத உயிர்ப் பேரியம் ( = சாலை) பக்கம் 32

ஆளுக்குத் தகுந்தாற்போல,

அவரவர்க்குமான இடத்தில் சேர்த்துவிடும்

அசாத்தியமானவை....

நாம் கணக்கில் கொள்ளாத மரணங்களைப் படிமமாய் வைத்திருக்கும் இப் பல்லுயிர்ப் பேரியத்தின் மாறா நிகழ்வு மரணம் தான். மரண நிகழ்வை நிறை வேற்றும் சாலைகள் கடவுளைப் போல் மனம் இல்லாதவை. மரணம் இல்லாதவை என்பதும் ஆகப் பெரிய உண்மையும்கூட.

நட்பு (பக்கம் 40, 41)

இசையில் மூழ்கி

இமைகள் மூடுவது

ஆற்றில் மூழ்கி

உயிரை மூடிக்கொள்வது

இரண்டும் ஒன்றா?

என்று வினவும் கவிஞருக்கு விடை ‘இல்லை’ என்பதே!

இமைகள் மூடுவது அல்லது உயிரை மூடிக்கொள்வது இரண்டும் வேறு வகை. வேறு தருணம். ஏனென்றால் நட்புக்கொள்ள, இயைந்தே துடிக்கும் சில இதயங்கள் வேண்டும் என்பதே காலவிதி.

நூறு பக்கங்களுக்கும் மேலான கவிதைகள் பதிப்பிக்கப் பட்டுள்ள இந்நூலில் சிலவற்றை மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளேன். மிக்க மகிழ்ச்சி.

அனைத்துக் கவிதைகளும் உங்களை இழுத்துக் கொள்ளும் ஆழச்சுழல். வாழ்வு நதியின் நீர்த்துளிகளாம் இக் கவிதைகளை கண்களால், மனம் குவித்துப் பருகுங்கள். மொழியின் பெருந்தாகம் தீர்ந்துவிடும்.

இதில் நிரப்பப்பட்டுள்ளது காற்றில்லை. உயிர்க்கும் கவிதைகள். உயிர்ச் சொற்கள். நன்றாகப் படித்துப் பாருங்கள் மனம் பூக்களாக மாறும். கவிஞருக்கு என் வாழ்த்து மற்றும் நன்றி நவில்தலும்.

- அ.சுரேஷ்குமார்

Pin It