இயக்குநர், கவிஞர் சீனு ராமசாமியின் ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' - கவிதைத் தொகுப்பின் விமர்சனம்!

படைப்பிலக்கியங்களில் கவிதைக்கும் கதைக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. சொற்செறிவும் பொருட்செறிவும் கொண்ட கவிதை இலக்கியம் கற்றவர்களுக்கு இன்பம் தரும். கதைகள் எல்லா தரப்பு மக்களுக்கும் பொதுவானவை. ஆனால், கவிதைகள் மிகவும் நுட்பமானவை. அதிலும் வாசிக்கும் போது மனக்கண்ணில் காட்சியாக விரியும் படிமக் கவிதைகளை உணர்ந்து கொள்வது ஒரு தவம். எதுவும் எழுதப்படாத காலியான பலகை போன்ற அமைதியான மனநிலை கவிதை வாசிப்புக்கு உகந்தது. அந்த வகையில் தன்னை வாசிக்கும் போது வாசகரை வேறு எதன் மீதும் கவனம் கொள்ளாமல் தன் மடியில் கிடத்திக் கொள்ளும் கவிதைத் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இயக்குநர் சீனு ராமசாமியின் மானுடம் குறித்த உள்ளக்கிடக்கையைக் கவிதைகள் உணர்த்துகின்றன.

உலகத் திரைப்படங்களில் தன்னைக் கரைத்துக் கொண்ட இவரின் கவிதைகள் உலகத்தோடு அன்பு கொள்ள வைக்கின்றன. சத்யஜித்ரேயின் நவீன யதார்த்த கலை மரபில் தன்னை இணைத்துக் கொண்டு, மக்கள் இயக்குநராக இயங்கி வரும் இவர் நவீனமும் செவ்வியல் மரபும் கலந்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது. தலைப்பைக் கேட்டவுடன் புகார் பெட்டியின் மீது பூனை தூங்குகிறதென்றால் புகார்கள் இல்லாத சமூகம் உருவாகிவிட்ட பெருமிதம் மேலிடுகிறது. இல்லையென்றால் புகார் பெட்டியின் மீது அதிகாரப் பூனைகள் படுத்துக் கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது.

seenu ramasamy bookஎளிய உழைக்கும் மக்களின் வீடுகளில் வறுமையின் காரணமாக அடுப்பெரியாமல் இருக்கும்போது பூனைகள் தூங்குமே அது போன்ற கருத்தோட்டத்தையும் தருகிறது. கவிதைத் தொகுப்புக்கு இப்படித் தலைப்பு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு உட்படுத்தும்போது சமூகப் பார்வை கொண்ட கனமான கவிதைகள் வாசகரின் மனங்களை கனக்கச் செய்கின்றன. காலத்தின் சாட்சியாக, ஆன்மாவின் கீதமாக, நியாயத்தின் குரலாகக் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் விளிம்பு நிலை மக்களின் ஒடுக்கப்பட்ட குரலுக்கு மொழி கொடுத்திருக்கும் படைப்பு என்று மதிப்பிடலாம்.

வயிற்றுக்காக வேட்டையாடிய சமூகம் இருந்தது. மெல்ல வளர்ந்து நாகரிகம் பெற்றதுடன் பயிர்த்தொழில் செய்யக் கற்றுக் கொண்டது. இன்னும் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் எல்லாவற்றையும் அத்தியாவசியத் தேவைகளாக மாற்றியது. பசிக்காக மட்டும் பொருள் தேடிய நிலை மாறி வீடு – வாசல், சொத்து – சுகம் என்று நீளும் பட்டியலில் பெரும்பகுதி வியாபித்து நிற்கிறது கல்விக் கட்டணம். தனியார் பள்ளிகளுடன் போட்டியிட முடியாமல் அரசு பள்ளிகள் தோல்வியைத் தழுவுவதால் அடித்தட்டு மக்கள் முதல் அதிகாரம் பெற்ற மனிதர்கள்வரை கலைமகளுக்கு விலை கொடுக்க வேண்டிய ஆபத்து பெருகி விட்டது. இதில் நிலையான வருமானம் இல்லாத சண்டைக்காட்சித் தொழிலாளியின் மகள் கல்விக் கட்டணம் கட்டமுடியாத சூழலில் பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருக்கிறாள். மகளை நினைத்தபடி உயிரைப் பணயமாக வைத்து உயரத்திலிருந்து குதிப்பதற்குத் தயாராகும் தொழிலாளியைப் பற்றி வாசிக்கும் போது வாழ்க்கையைச் சபிக்கத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக வடமாநிலத்தவர் மீது வெறுப்பு பாராட்ட வேண்டாம் என்பது யாவரும் கேளிர் என்பதன் தொடர்ச்சி. வடக்கிலிருந்து வந்த தொழிலாளிகள் உதவியால் போடப்பட்ட சுரங்கப் பாதைகளையும், ரயில் பாலங்களையும் பயன்படுத்துபவர்களாக இருக்கிறோம் என்று விளக்கும் போது ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்காகச் சிந்தித்த கார்ல் மார்க்ஸ் உயிர் பெற்று விடுகிறார்.

அதுபோல, அந்தரத்தில் கயிறு கட்டி நடக்கும் வித்தைக்குப் பின் மறைந்திருக்கிறது பசி. விண்ணில் மிதக்கும் ஒற்றையடிப் பாதையில் நடக்கும் போது சிறகு விரிந்த பட்டாம்பூச்சியின் பரவசத்தை அடையலாம். தரையில் நிற்கும் மனிதர்கள் விசில் அடிப்பதும், கரவொலி எழுப்புவதும் சாகசத்தின் அங்கீகாரமாகக் கிடைக்கும். அத்துடன் முடிந்துபோனால் உணவு எப்படிக் கிடைக்கும். சாகசத்தைப் பார்ப்பவர்கள் தட்டில் போடும் காசுகளை எண்ணியபின் வீட்டுக்குத் திரும்பும் போது எந்தப் பரசவமும் இருக்கப் போவதில்லை பசியைத் தவிர.

"தட்டில் வழும் காசும்

விரைந்தெண்ணும் கணக்கின் ஊடே

சாகசமற்ற மனதின் பாதைவழி

அவன் இல்லம் வரும் வழியில்

ஒரு தட்டானும் பறந்து கொண்டிருக்கும்"

என்ற வரிகள் அழுத்தமானவை.

பிறந்த இடத்தில் வாழக் கொடுத்து வைக்காத வாழ்க்கையை என்ன செய்வது? வளரும் பருவத்தில் விளையாடிய இடங்களை எப்படி மறப்பது? பிழைப்புக்காக இடம் மாறவேண்டிய கட்டாயம் ஏற்படுவது பெரிய சோகம்! வெயில் காலங்களில் நிழல்படுக்கையாக இருக்கும் மலை, மழைக்காலத்தில் குட்டிக் குரங்கு வழுக்கி விளையாடும் பூங்காவாக மாறுகிறது. மலைக்குப் பின்னால் நீர்த்தேக்கமும் உண்டு. மலையைச் சிறுதெய்வத்தின் உறைவிடமாக முன்னோர்கள் வணங்கியிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை, மலையை வியப்போடு பார்க்கிறது. இன்றைய தலைமுறை மலைகளைத் தாயாகப் பாவிக்கிறது. எனினும் பொருளாதாரம் தேடி நகரத்திற்கு இடம்பெயர நினைத்த போது எல்லோரும், எல்லாமும் உறங்கும் இரவு நேரத்தில்,

"நட்சத்திரங்கள் சூழ்ந்துறங்க

மலை

மூச்சுவிடும் சத்தம்

எனக்குக் கேட்டது"

என்று சொல்லும் இடத்தில் பிரிய முடியாத பிரியம் பளிச்சிடுகிறது.

கனவுத் தொழிற்சாலை எனப்படும் திரை உலகம் பல குடும்பங்களின் வாழ்க்கையை உள்ளடக்கியது. பல நேரங்களில் இளமையும், சில நேரங்களில் உயிரும் பணயப் பொருள்களாக வைக்கப்படுகின்றன. ஆனால் ஒருமணி நேர படத்தைப் பார்த்துவிட்டு அதை விமர்சனம் என்ற பெயரில் குத்திக் கிழிக்கின்றனர் பார்வையாளர்கள். ஒரு திரைப்படம் வசூலைக் குவிப்பதற்கு அல்லது குறைந்த பட்சம் போட்ட முதலீட்டைப் பெறுவதற்கு எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கிறது என்ற கவிதை இனி விமர்சனம் செய்யும் போது பொறுப்புடன் இருக்க வேண்டும் என்ற பாடம் கற்க வைக்கிறது.

மழை இல்லாத நாளில், கிரிக்கெட் நடக்காத நாளில், மாநிலத்தில் பதற்றம் இல்லாத நாளில், தேர்வு இல்லாத நாளில் திரைப்படத்தை வெளியிட வேண்டும். அதற்கு முந்தையை நாள் இரவில் அதற்கான விளம்பரத்தைச் சுவரில் ஒட்டியிருக்க வேண்டும். பெரிய நடிகர்களை வைத்து விளம்பரம் செய்ய வேண்டும். சொன்ன தேதியில் படத்தை வெளியிடுதல் நல்லது, பெரிய படங்கள் வெளியாகும் நேரத்தில் வெளியிடாமல் இருப்பது அதைக் காட்டிலும் நல்லது, சீட்டின் விலையைக் காட்டிலும் திரையரங்கில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலை குறைவாக இருப்பது நல்லது, முக்கியமாக மோசமான விமர்சனத்தைத் தவிர்த்தல் நல்லது. திரைப்படம் கவனம் பெற்று வெற்றியை அடைய அப்படம் ரசனைக்குரியதாக இருக்க வேண்டுவது விதி என்றாலும், அதற்குக் கூடுதல் பலம் சேர்க்க இத்தனையும் செய்ய வேண்டும். இல்லையென்றால்,

"அந்நிய

ஆங்கில

சாகசப்படங்களுடன் மோதல் என்பது

சுதேசிக்கப்பல் போல்

யாரும் துணை வராது கைவிடுவர்”

என்ற வரிகள் திரைத்துறையினரின் நிலையையும், விடுதலைப் போராட்டத்தையும் கண்முன் கொண்டு சேர்க்கின்றன.

வீடுகளில், அலுவலகங்களில், சமூகத்தில் பல மாற்றங்களைக் காணும் போது துள்ளிக் குதிக்கிறது மனிதமனம். அறிவியல் வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் என்று மகிழ்ச்சி அடையும்போது அந்த இலக்கை அடைய எத்தனை நபர்கள் பலி கொடுக்கப் பட்டிருக்கின்றனர் என்ற உண்மை உறுத்துகிறது! நகர உருவாக்கத்தின் காரணமாக எத்தனை விளைநிலங்கள் காணாமல் போயிருக்கின்றன; எத்தனை கிராமங்களுக்குக் கல்லறை எழுப்பப்பட்டிருக்கின்றன!

ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களும், வேலைகளும் குவிக்கப்படுவதால் நகரங்களை நோக்கித் தினமும் மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். உலகமே பூம்புகாரை நோக்கித் திரண்டு வந்தாலும் பூம்புகாரில் அத்தனை மக்களும் வாழ்வதற்கான வசதி சாத்தியம் என்று பேசும் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக இன்று வந்தாரை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது தமிழகம்.

பொழுதை ரசிப்பதற்கு மனநிலையும் வாழ்க்கைச் சூழலும் காரணங்களாகின்றன. வேலைக்குச் செல்பவனின் திங்கட்கிழமையைவிட வேலை கிடைக்காதவனின் திங்கட்கிழமை கொடுமையானது என்பார்கள். சேர்ந்திருக்கும் காதலர்களுக்கு இனிமை தரும் மாலைப்பொழுது, பிரிந்தவர்களின் துயரத்தை அதிகப்படுத்துகின்றன. அதுபோல, கலையின் ஆர்வத்தால் சொந்த ஊரை விட்டு நகரத்திற்கு வந்தவர்கள் மதியபொழுதுகளை வெறுக்கின்றனர் என்று விரிகிறது கவிதை. தன் ஊர் நண்பன் வசிக்கும் நகரத்தின் வாடகை வீடுகள் கனவுகளைத் துரத்திக் கொண்டு வரும் அவர்களை விரட்டிவிடத் தயாராகின்றன.

மதிய நேரத்தை ஆறுதலாகக் கழிப்பவர்கள் குடும்ப அமைப்பைப் பாதுகாக்க அடிமைகளாக வாழ்கின்றனர். அவர்கள் சுவையுடன் கூடிய உணவைச் சரியான நேரத்திற்கு உண்பவர்கள். விருந்தாளிகளைக் குறித்து சிந்திக்காதவர்கள். ஆனால் மதிய நேரத்தை வெறுப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல், குடும்பம் அமையப் பெறாமல், நண்பர்களின் அறையில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், அவர்களின் மதியநேரம் துயரமானது.

"கவிதை

கதை

இலக்கியம்

அரசியல்

சினிமா என மீளமுடியாத்துறையின்

பல்லுக்கு இளமையைத் தந்தவர்கள்"

என்ற வரிகள் இரக்கத்தை யாசிப்பவை. கலை வாழ்க்கையில் போராடுபவர்களின் துயரத்தை அதே வாழ்க்கையில் இருந்து கொண்டு துணிச்சலுடன் ஒப்புக் கொள்கிறார் படைப்பாளி.

கடுகு போன்ற உள்ளம் கொண்ட தன்னல வாழ்க்கையிலிருந்து மீட்டெடுக்கிறது ‘நாள்’ என்ற கவிதை. பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு உதவுபவர்களின் வாழ்க்கையில் வரும் துயரங்களைக் காலம் இல்லாமல் செய்துவிடும். மற்றவருக்கு உணவு கொடுத்துத் தானும் உண்பவனைப் பறவைகள் விரும்பும். எனவே வாழ்க்கையை எப்படி வாழப் போகிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறது கவிதை. வாழ்க்கையை எல்லோருக்குமானதாக வாழப்போகிறீர்களா அல்லது சுயநலமாக வாழப்போகிறீர்களா என்று சாதாரணமாக நிறுத்தாமல், எதைத் தேர்வு செய்கிறீர்களோ அதற்கான பலனை அனுபவிப்பீர்கள் என்று முடித்திருப்பது தனியழகு!

வேடிக்கை பார்ப்பவராக இருந்து விடாதீர்கள், கேள்வி கேளுங்கள், எதிர் வினையாற்றுங்கள். எங்காவது அநீதி நடக்கும் போது அதைத் தட்டிக் கேட்க வேண்டும். அதற்கு வலிமையற்றவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் அதற்கு எதிரான குரல் கொடுக்க வேண்டும். அதுவும் இயலாது எனில் அந்த அநீதிக்காகக் கண்ணீர் சிந்துவது மனிதாபிமானம். மௌனமாகக் கடந்து சென்றால் நடக்கும் தீமைக்கு நீங்களும் உடன்படுகிறீர்கள் என்று பொருளாகும் என்கிறார் நபிகள் நாயகம். இதற்குக் கூடுதல் அழகு சேர்க்கிறார் கவிஞர். மலைப்பாதையில் நடக்கும் வாகன விபத்துகளைக் கூறுவதாகத் தொடங்கும் கவிதையில் மூடநம்பிக்கைகளை விபத்துகளுடன் முடிச்சு போடுவதை நிறுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார்.

மலைப் பிரதேசம் என்பதால் குரங்குகள் திடீரெனப் பாதையைக் கடக்கும் போது வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதற்கு எந்தத் தெய்வத்தையும் குறை சொல்ல வேண்டியதில்லை. யானைகளுக்கும் இன்னும் மற்ற உயிரினங்களுக்குமான மலைப்பகுதி மனிதனைத் தூக்கி வீசுவதில் ஒரு ரகசியம் இருக்கிறது. காட்டிற்குத் தீமை செய்பவனை நோக்கி எந்தக் கேள்வியும் கேட்காமல், வேடிக்கை பார்த்தபடி கடந்து செல்லும் அவனுடைய சுயநலத்தை வெறுத்து அவனை இடறி விழச் செய்கிறது மலை. இது வேடிக்கை பார்ப்பவர்களுக்கான எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.

மரத்தை அஃறிணையாகப் பார்க்கும் சமூகத்தில் ரத்தமும் சதையும் கொண்ட உணர்வுகளைக் கடத்தும் உயிராக மதிப்பதற்கு ஒரு கவிஞன் வேண்டும். இரவில் தூங்கி வழியும் சில ஓட்டுநர்கள் மரத்தின் மீது மோதி, தன் மரணத்திற்குத் தானே காரணமாகி விடுகின்றனர். ஆனால் இறப்புக்குக் காரணம் ‘புளியமரம்’ என்று குற்றத்தை மரத்தின் மீது சுமத்துகிறது சமூகம்.

ஆதரவற்றவர்களுக்கு, விவசாயிகளுக்கு, விளம்பரதாரர்களுக்கு, பறவைகளுக்கு, விலங்குகளுக்குப் புகலிடமாக இருக்கிறது புளியமரம். வீடுகளில் குழம்புக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டும், பேய் ஓட்டுவதாகச் சொல்லி ஆவிகளின் முடியை ஆணியில் அறைவதற்கு இடம் கொடுத்தும், லாரி ஓட்டுநர்களின் உடல் பசியைத் தீர்க்கும் மறைவிடமாகவும் அமையும் மரத்தின் அதீத பயன்பாட்டை விளக்கும் பகுதி சிந்தனைக்குரியது. தற்கொலை செய்யத் துணிந்தவர்களுக்குப் புளிக்கரைசல் என்ற இயற்கை விஷமுறிவைக் கொடுத்துக் காப்பாற்றும் கிராமத்து மருத்துவம் வியப்பில் ஆழ்த்துகிறது. எனினும் மரத்திலிருந்து இரவில் வெளியேறும் கரியமிலவாயு தாக்கி மனிதர்கள் இறந்து போக நேர்ந்தால் அந்தப் பழி முனியின் மீது விழுகிறது! இந்த மண்ணின் புளியமரத்தின் சகாப்தம் என்றே வரலாறு எழுதலாம்.

"நிறைவேறாமல்

பாதியில் செத்தவனுக்கு

புளியமரமே கதி

என்றாகிப் போயிற்று…"

என்ற வரிகள் அழுத்தமானவை.

புளியமரத்தின் புளிப்பைப் போல வேப்பமரத்தின் கசப்பும் இனிப்பும் கவிதைகளாகிக் கிடக்கின்றன. குழந்தைகளுக்கு வேப்பம்பழம், புளியங்கொட்டை, மயிலிறகு, பயணச்சீட்டு, புதிய ரூபாய்த்தாள் என்று அனைத்தும் பொக்கிஷமானவை. ஒரு கட்டத்தில் வயதானவர்களுக்கு மரநிழல்களே அடைக்கலமாகின்றன, ஆறுதல் தருகின்றன. பல் தேய்க்கும் குச்சியாக, வேல் கம்பு சொருகி வைக்கும் இடமாக, குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டித் தாலாட்ட என்று அத்தனைக்குமானதாக இருக்கிறது வேப்பமரம்.

"வேம்பு

கசப்பின் தானைத்தலைவன்

பாகற்காய்களுக்குத் தந்தை

வேப்பம் பழங்கள்

பழுத்தால் இனிக்கும்

பழுத்தால் தான் எதுவும்

இனிக்கும்"

என்ற வரிகள் மனிதர்களுக்கான அறிவுரை. முதுமையின் பெயரைச் சொல்லிப் புறக்கணிக்கும் மனிதர்களுக்கு, பக்குவப்படும் நிலை முதுமையில் ஏற்படுகிறது என்ற புரிதல் இனியேனும் ஏற்படவேண்டும். எனவே மரங்களைப் பத்திரப்படுத்துங்கள் என்று சூழலியல் சார்ந்து பாடம் புகட்டுகிறது.

நாலு வழிச்சாலை, எட்டுவழிச்சாலை போடப்பட்ட நிலத்தின் அடியில் உழுத நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் விவசாயம் பார்த்தவர் இறந்து போன கிணறு இருக்கிறது. வண்ணத்துப் பூச்சி பிடித்தபின் பறக்கவிடும் பயிற்சி நகரத்துப் பள்ளிக்கூடத்தில் கிடைப்பதில்லை. மற்றவர்களுக்கு நன்மை செய்யும் ஏமாளி மனிதர்களை நகரத்தில் பார்க்க முடியாது என்று கிராமத்து மண்வாசத்தைத் தாங்கிய படைப்புகள் வாசகனை மண்சார்ந்து சிந்திக்க வைக்கின்றன. மேலும், அலைபேசி தொலைந்த நேரத்தில்தான் தவம் சாத்தியப்படுகிறது என்ற நையாண்டி இக்காலத்தின் தேவையே!

அறிவியல் வளர்ச்சியை எதிர்ப்பவன் படைப்பாளியாக இருக்க முடியாது. குறைந்தபட்சம் அவன் படைப்புகளை நவீன அறிவியல் துணை கொண்டு காட்சிப்படுத்துவதற்காகவாவது அறிவியல் தேவை. ஆனால் கையடக்க அலைபேசியை ‘மாயக்கிணறு' என்று சாடுவது எந்த விதத்தில் நியாயம்? வாசிக்கும் பழக்கத்தை, எழுதும் வழக்கத்தை, நேரில் பார்த்துப் பேசிக் கொள்வதை, கடிதப் போக்குவரத்தை அழித்து விட்டது. போதைப் பழக்கத்திற்கு – மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க மறுவாழ்வு மையம் செயல்படுவதைப் போல அலைபேசியில் மூழ்கித் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்க மறுவாழ்வு மையம் உருவாக வேண்டும் என்கிறார். அதிலே மூழ்கிப் போனால் மூச்சும் அடங்கிப் போகும் என்ற அச்சம் கவிஞரை இப்படி எழுதத் தூண்டியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாகப் பேசும் கவிதைகள் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமாக, மனிதகுலம் இயற்கையை நேசிக்க வற்புறுத்துவதாக இப்படிப் பல்வேறு பரிமாணங்களோடு பயணப்படுகின்றன. குழந்தைகளுக்காகப் பிள்ளைத்தமிழ் பாடிய சமூகத்தில் தன் கனவுகளைப் பிள்ளைகள் மீது திணித்து நிறைவேற்றச் சொல்லி வற்புறுத்துகின்றனர். குழந்தைத் தன்மை இல்லாத குழந்தைகளாக மாறிவிடும் ஆபத்தைத் தடுத்து நிறுத்த பாடுபட்டிருக்கிறது படைப்பு. பட்டாம்பூச்சியின் பின் செல்லும் குழந்தையைப் போல ஆட்டுக்குட்டி ஒன்று வழி தவறிவிட்டது. அதற்கான காரணங்களை ஆராயும் பகுதி நயமானது. ஆடுகளை மேய்க்கும் போது ஆட்டுக்குட்டி வழி தவறிப்போக காரணங்கள் இரண்டு. ஒன்று மேய்ப்பவனுடைய கவனக்குறைவு அல்லது அறியாமை, இரண்டு இளம் குட்டியின் துணிச்சல். இன்றைக்குப் பிள்ளைகள் வழிதவறி நடப்பதற்கும் இவையே காரணங்கள் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.

உலகத்தின் உச்சபட்ச இன்பமான இருவருக்குள் நிகழும் கலவி இன்பத்தை இப்படிப்பட்டது என்று சொல்ல முடியாத நிலைக்குக் காதலர்கள் ஆட்படுகின்றனர் என்கிறது சங்க இலக்கியம். ஆனால் இங்கு, தேகம் தொடுவது என்பது ஒரு பூவைத் தீண்டுவதற்கு இணையானது என்றும் குளங்களில் நீந்தும் மீன்கள் தாமரை இலை மீது உரசும் போது ஏற்படும் சிலிர்ப்பு போன்றது என்றும் காதலியின் சிரிப்பு பூக்களின் வாசம் போன்றது என்றும் விளக்கிச் சொல்லப்படுவது பாராட்டுதற்குரியது!

காதல் கவிதைகளுக்கு வரவேற்பு அதிகம். காதலிக்கத் துணிந்தவனுக்குக் கவிதை எழுத வராத போது நண்பனின் கவிதையைத் தன் கவிதையாகத் தந்து காதலை நிறைவேற்றிக் கொள்கிறான். திருமணத்தின் போது கவிதை தந்த நண்பனுக்கு அழைப்பிதழ் கொடுக்க மறந்துவிட்டான். கவிதையை நண்பனுக்கு எழுதிக் கொடுத்த கவிஞன் வாழ்க்கையில் வந்த மனைவியோ கவிதைப் பக்கத்தில் சமையல் எரிவாயு கொண்டு வருபவரின் எண்ணையும், சமையல் குறிப்பையும் எழுதி வைக்கிறாள் என்ற அங்கலாய்ப்பு கணவன் – மனைவி பற்றிய அழகிய முரண்.

தண்டவாளத்தில் தள்ளிவிடும் காதலை, திராவகம் வீசும் காதலை, கொலை செய்துவிடும் காதலைப் பார்த்துக் காதல் மீது வெறுப்பு கொள்பவர்களுக்கு நுட்பமான காதலைப் பரிசாக்கி இருக்கிறது புத்தகம். கைகூடாத, கைவிடப்பட்ட காதலிலும் பழி வாங்கும் உணர்வில்லாமல் அந்தக் காதலைக் கொண்டாடுவதற்குப் பெரிய மனம் வேண்டும். தனக்குத் துரோகம் செய்துவிட்டுப் போன பின்பு, தன்னுடைய காதல் பரிசை,

"காதலின் பரிசு

எப்போதும்

நன்றியின் மௌனத்தின் மனதில்

மலர்ந்த மலர்

ஆனால் அது

இசைக்கும் காற்று"

என்று பாடியிருப்பது தலைமுறைகளுக்கான கவிதை.

அன்பில் அடிபணிதல் எத்தனை சுகமானது! கணவன் மனைவியான வாழ்க்கையில் யார் அந்தரங்கத்தில் தோற்பதற்குத் தயாராக இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்ற மாறுபட்ட விதியைக் கொண்டது இல்லற விளையாட்டு. இடைக்காலத்தில் தன் வாழ்க்கைத் துணையை, சமூகத்தில் சரிபங்கு இருப்பவரை அடிமையாக்கிய ஆண்கள் வயதான காலத்தில் அன்பு கிடைக்காமல் வதைபடுவதை ஆண்களின் மனசாட்சியாக ஒப்புக் கொள்ளும் கவிதை கவிஞரின் அற்புதத் தருணமாக வெளிவந்துள்ளது!

அன்பில் பிரிவு இடம் பெறவே கூடாது என்பது காதலர்களின் வேண்டுதல். நம்மால் அன்பு செலுத்தப்படும் ஒருவர் நம்மை வெறுத்து வெளியேறினாலோ அல்லது வெளியேறச் சொன்னாலோ இதயம் நொறுங்கிவிடும். ஆனால், பிரிவை உணராமல் போனால் அன்பு எப்படிச் சுவைக்கும். காதலி கைவிடும் தருணத்தில் இயேசுபெருமானின் பிறப்பை வழிகாட்டி அறிவித்த விண்மீன்களுக்கும் வேதனை உண்டாகிவிடுகிறது என்ற வரிகளால் காதலின் ஆழத்தைப் பேசுகிறது கவிதை. பிரிவின் வார்த்தைகளைப் பற்றிச் சொல்லும் போது,

"நீ வார்த்தைகளை

ஆயுதக்கிடங்கில் இருந்து

எடுப்பவள்"

என்று நேசித்த ஒருத்தி வெறுத்துப் புறக்கணிக்கும் ஆற்றாமையை வெளிப்படுத்தும் இடத்தில் இதயம் கண்ணீர் சிந்துகிறது. இருவர் சேர்ந்திருந்த இடத்தில் ஒருவராகத் தனித்து வசிக்க நேர்ந்தால் துயரம். வாழ்க்கையில் இணைவதற்கான நாளை கனவு காண்பது மகிழ்ச்சி. பிரிந்து செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நாளை எதிர்கொள்வது வேதனை. நம்பிக்கையின் வழியாகப் பிரிவை மாற்றி மீண்டும் சேர்ந்துவிடும் நாளை எதிர்பார்க்கும் ஒருவராகக் கவிஞர் இருக்கிறார். சேர்ந்துவிட்ட காதலின் ஆழத்தைக் காட்டிலும் சேராத காதலின் தாக்கம் கல்லறைக்குள் போனாலும் அடங்காது என்பதைக் காதல் நினைவுச் சின்னங்கள் பறைசாற்றிக் கொண்டே இருக்கின்றன.

தன் மகள் மட்டுமல்லாமல் மற்ற உயிரையும் மகளாகப் பாவிக்கும் தன்மை மனிதத்தின் பிரதிபலிப்பு. சாளரத்தில் விண்கலம் போல வந்து நிற்கும் சாம்பல் கருப்பி கொஞ்ச நாளில் ‘சந்திரிகா’ என்று அழைக்கப் படுகிறாள். அவள் எந்தக் குறையும் சொல்லாமல் எந்த உணவைத் தந்தாலும் உண்பவள். சமையலை யாரும் பாராட்டாமல் போனாலும் தன் குரல் வழியாக ஊக்கப் பரிசு தருபவள். தன்மனக் குறையைப் பகிர்ந்து கொள்ள கிடைத்த உயிரியாக நினைக்கிறாள் அந்த வீட்டுப் பெண். அடைமழைக் காலத்தில் தனிமையால் சூழப்படும் அவ்வீட்டில் மேகம் மறைத்த வெயில் போல இருள் சூழ்ந்து கொள்ளும்.

அடைமழை நின்று, வெயில் வந்தபோது வெயில் உகந்த அம்மனாக வந்தது சந்திரிகா எனும் காக்கை. காகங்களுக்குச் சோறு வைத்தல், படையலிடுதல், விருந்து பரிமாறுதல் என்ற மரபுக்குச் சொந்தக்காரர்கள் நாம். ஒரு வீட்டில் உலை வைத்தார்களா என்பதை அவர்கள் காக்கைக்குச் சோறு வைப்பதன் வழியாக உணர்ந்து கொள்ள முடியும். காக்கைக்குச் சோறு வைக்கவில்லை என்றால் அந்த வீட்டில் உலை வைக்கவில்லை என்பது பொருள். முன்னோர்கள் காகத்தின் வடிவத்தில் வந்து படையலைச் சாப்பிடுவதாக நம்பிக்கை. காக்கைகள் கரைவதற்கும் தமக்குப் பிடித்தமானவர்கள் இல்லத்திற்கு வருவதற்கும் தொடர்புபடுத்தும் மனிதர்கள் காக்கைக்கு ஏழு கிண்ணங்களில் விருந்து பரிமாறியுள்ளனர் என்ற பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் செய்திகளை ‘உயிர்’ என்ற கவிதை மௌனமாகக் கொட்டித் தீர்க்கிறது. பெண்களுக்குக் காகங்களே தோழியாக அமைகின்றன என்பதும் உச்சமான பகுதி!

துணிவுமிக்க பெண்கள் இந்தச் சமுதாயத்தின் ஒளிவிளக்குகள்! அவர்கள் உடலின் நிறத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. வாழ்வின் வண்ணங்களை உருவாக்கத் தெரிந்த அவர்களுக்குள் இரக்கம் நிலைபெற்றிருக்கும். அவர்களின் காதலுக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களுக்குத் தெய்வத்தின் துணையும் அவசியமில்லை. ஆனால் இப்படிப்பட்ட பெண்களை விரும்புவது,

“சிங்கத்தின் வாய்க்கு

உணவு ஊட்டிவிடுதல் போல

அதன் இயல்பில்

கையை உணவோடு உண்ணும்

அபாயமும் உண்டு”

என்று கம்பீரமாகப் பேசினாலும் ஆண் உதவியின்றி வாழவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படுகின்றனர் என்ற வேதனையும் பேசப்படுகிறது.

வீரயுகக் காலத்தின் தழும்புகளைக் கொண்டாடுவதற்கு நடுகல் வழிபாடு என்ற மரபு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த தலைமுறைக்கு ஆதாரமான கருத்தரிப்பின் போது பெண்கள் வயிற்றின் மேல் பகுதியில் ஏற்படும் கோடுகளுக்கு நன்றி சொல்ல மறந்து போனது சமூகம். அதற்குப் பரிகாரம் தேடும் நிலையில் ஓர் அற்புதமான உவமை கையாளப்பட்டிருக்கிறது. வெயில் நேரத்தில் கானல் நீராகக் காட்சி கொடுக்கும் நிலத்தின் தன்மையைக் குறிப்பிடும் போது அவை ‘பூமியின் பிரசவக் கோடுகள்’ என்று உயர்த்திப் பேசுவது பெரிய ஆறுதல்.

தாய்மையின் அன்புக்கு முன்னால் அறிவியலும் தோற்று மண்டியிடும். பிள்ளைகளுக்குத் தவறாக ஏதாவது நேர்ந்துவிடுவதற்கு முன்னர் அந்தத் தாயின் மனம் சஞ்சலப்படுகிறது. பிள்ளைகளின் நலனுக்கும் தாயின் மனத்திற்கும் கண்ணுக்குப் புலப்படாத கயிறு இருக்கிறது போலும். நள்ளிரவில் ஓசையின்றி வெளியில் செல்லும் மகனை அவனுக்கே தெரியாமல் உணர்ந்து கொள்கிறாள் தாய். மீண்டும் மகன் வீடு திரும்பி படுக்கைக்குச் சென்ற பின்னர் யாரும் எழுப்பாமல் தானாகவே உணர்ந்து கொண்டு வந்து வாசல் கதவைப் பூட்டுகிறாள். இதை எழுதும் மகன்,

"அவள் வாசல் கதவை

பூட்டும் சத்தம்

ஒரு பறவையின் சிறகசைப்பாகக் கேட்டது"

என்று முத்தாய்ப்பாக முடித்திருப்பது நயமானது.

ஆழிப்பேரலையையும் தன் கைத்தடியால் அடித்து அடக்கிவிடும் தாய்மார்கள் இந்த மண்ணில் இருக்கவே செய்கின்றனர். அதற்காக அஞ்சிய கடலலை சக்தியற்றுக் கரையிலிருந்து திரும்பிக் கடலுக்குள் கலந்துவிட்டது என்பது பெண்களைக் கௌரவிக்கும் பகுதி. பெண்களுக்குக் குழிபறிப்போர் உண்டு; குடும்பத்திற்குள் பூட்டி வைப்பவர் உண்டு; நடத்தை என்ற பெயரில் திறமைகளுக்குக் கல்லறை கட்டுவோர் உண்டு. ஆனால் நம்பிக்கை கொடுப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி ஓர் அரிய நபராக இருப்பது கவிஞரின் நற்பண்பு.   பெண் என்பவள் பலவீனமானவள் என்று சொல்லிப் புறக்கணிக்கும் சமூகத்தில் அவளுக்கான பூக்களும், குடிநீரும், மணமகனும், உதவியாளனும், பரிசுப் பொருட்களும் நிச்சயமாகக் கிடைக்கும். எனவே அடிமைக் கயிறுகளை அறுத்துக் கொண்டு, அடக்கும் சன்னலைத் திறந்து கொண்டு வருவதற்கு உத்தரவிடுகிறார். ஏனெனில் அவள் பாதம் பட்டு உருவாக வேண்டிய பாதைகள் காத்திருக்கின்றனவாம்!

"உனக்காக

பாதை இல்லாவிட்டால் என்ன மகளே

நீ நடந்தால்

உன் பாதங்கள்

ஒரு ஒற்றையடியை உருவாக்காதா?"

என்ற நம்பிக்கைவாதம் மிக முக்கியமானது.

தந்தைக்கும் மகளுக்குமான பாச உணர்வுகளை வார்த்தைகளால் வடித்துவிட இயலாது. அதற்கான முயற்சியாகத் தொடங்குகிறது கவிதை. தந்தையின் விரல் பிடித்து நடக்கப் பழகிய நாள்கள் தன்னம்பிக்கையைப் பரிசாக்கின. அப்பாவின் மார்பே மகளுக்கு மெத்தையாகும்போது அவரே பிரபஞ்சமாகவும், மழையாகவும் உணரப்படுகிறார். பாராட்டைத் தந்து, வருத்தப்படும் போது ஆறுதல் தருபவர். இந்த உலகத்தை விட்டு நீங்கினாலும் அருவமாகப் பின்தொடர்வார் என்கிறது கவிதை.

சீறாப்புராணத்தில் ‘மானுக்குப் பிணை நின்ற படலம்’ என்ற பகுதி உண்டு. குட்டி ஈன்று மூன்று நாளான பெண் மான் வேடனின் வலையில் அகப்பட்டுவிடும். அதன் மடியிலிருந்து பால் வழிவதை வெள்ளியை உருக்கி ஊற்றியது போல, நிலவின் கீற்று வழிவது போல என்று உவமைபடுத்தியிருப்பார் உமறுப்புலவர். அப்படி உன்னதமான உவமையை அருவியைச் சொல்லும் போது பாடியிருக்கிறார் கவிஞர். உயர்ந்த மலையிலிருந்து ஊற்றெடுக்கும் அருவிநீர் மூலிகைகளால் நிறைந்திருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் அருவியைப் பாதுகாக்க மலைக்குச் சேதம் விளைவிக்காமல் விட்டுச் சென்ற தலைமுறையைக் கௌரவப்படுத்துகிறார் இயக்குநர். அந்த அருவியை முலைப்பால் என்று கொண்டாடுகிறார்.

"பூரணச் சந்திர ஒளியில்

வெள்ளி நிறத்தில்

முலை ஒதுக்கித் தரும் பாலை

மயிலுக்கு

அருந்தத் தரும் நிலையில்

புல்லூத்து அன்றெனக்கு

தரிசனம் தந்தனள்"

என்ற வரிகள் அற்புதமானவை.

வேறு வேறு பொருள்களில் பயணப்படும் கவிதைகள், நினைவுகள் மீது பார்வை செலுத்துகின்றன. நினைவுகளைச் சேமித்து வைக்கும் நெஞ்சக் குழிகள் சுகமானவை. நினைவு தப்பிய முதுமையின் கோரப்பிடியில் இருக்கும் பெரியவர்களை இரக்கத்துடன் பார்க்கிறோம். அப்படி நினைவு தவறுவதை வரமாக எண்ணுகிறது படைப்பு. குழந்தைகளைச் சீராட்டி, பாராட்டி வளர்த்த பெற்றோர்களை வயதான காலத்தில் சுமையாகக் கருதும் பிள்ளைகளைத் திருத்துவதற்குப் புதுஉத்தியைக் கையாள்கிறது.

உணவு ஊட்டிவிட்ட கைகளை யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளி விடுகின்றனர் பிள்ளைகள். பிள்ளைகளின் பள்ளிச் சீருடைகளுக்காக ஓயாமல் உழைத்தவர்கள் குளிருக்குப் போர்வை இல்லாமல் தவிக்க விடப்படுகின்றனர். விலா எலும்பு தேயும் அளவுக்குச் சொந்த வீடு கட்டுவதற்காகக் கல்லும், மண்ணும் சுமந்த பெற்றோர் அந்தச் சுவரில் சாய்ந்து அழும் அவலத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.   ஆனந்தம் என்பது மற்றவர்களுக்குக் கொடுக்கும் தன்மையில் அமைகிறது என்பதை உணர்ந்து கொடுக்கும் கரங்களாக மாறியவர்கள் இருட்டறைக்குள் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். பெருமைமிக்க வாழ்க்கை வாழ்ந்த தலைமுறையினர் புறக்கணிக்கப்படும் போது அவர்கள் வாழ்ந்த முந்தைய வாழ்க்கையை மறந்து விடுவது நல்லது. இல்லையேல் நினைவுகள் நெஞ்சைக் கிழிக்கும் ரணமாகிவிடும் என்ற இடத்தில் நன்றி கெட்ட தலைமுறை மீது ஆவேசம் கொள்ள வைக்கிறது.

வேறு தொழில்கள் செய்தாலும் பாட்டு எழுதும் ஆற்றலால் செய்யுட்கள் எழுதியவர்கள் புலவர்கள் என்ற பெருமை பெற்றனர். பாடல்களில் அவர்தம் வாழ்வியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெறுவது இயற்கை. கணக்கில் கெட்டிக்காரராக இருக்கும் ஒருவர் உலகச் செயல்பாடுகளைக் கணக்குகளுக்குள் கொண்டு வருவது போலக் கவிஞனும் இருப்பதில் வியப்பில்லை. கவிஞர் சிற்பி உலகம் முழுக்க முள்ளால் நிறைந்திருப்பதாக எண்ணிக் கொள்கிறார்.

மீன் பிடிக்க தூண்டில் முள் வீசுகிறோம், மீன் சாப்பிடும் போது மீனின் முள் தொண்டைக்குள் குத்திவிடுகிறது, பூந்தோட்டத்திற்கு முள்ளால் ஆன வேலியை அமைக்கிறோம், முள்ளம்பன்றி உடல் முழுக்க முள்ளே ஆயுதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது, இயேசுபெருமான் தலையில் முள்கிரீடம் அணிவித்ததால் மனித மூளைக்குள் முட்கள் முளைத்துக் கொண்டன, காலத்தின் கன்னத்தைக் கீறுவதால் கடிகாரத்தின் கைகளை முள் என்கிறோம் – இப்படிப் பல உணர்வுகளைப் பேசும் அந்தப் படைப்பில், கடைசியாக அப்பாவைப் பார்த்து உங்கள் முகத்தில் ஏன் முட்கள் முளைத்திருக்கின்றன என்று தாடியையும் மீசையையும் பார்த்து மகள் கேட்பதாக முடியும்.

அதுபோல, உலகின் மீது நம்பிக்கை கொள்ளும்போது உலகையே இசையாக வர்ணிக்கும் கவிஞர், வெறுப்பு கொள்ள நேர்ந்தால் எல்லாவற்றையும் புழுக்கள் என்று கற்பனை செய்கிறார். துர்நாற்றம் மூலம் புழுக்களின் இருப்பை உணர்கிறார். உடலில் உள்ள அழுக்குப் பகுதிகளில் புழுக்கள் இருப்பதாகக் காட்டுகிறார். பாம்புகளையும், தலையில் இருக்கும் ஈரையும், பேணையும் புழுக்கள் என்பதுடன் நிற்காமல் எழுதும் தன் விரலையும் புழுவாகக் கற்பனை செய்வது அதிரச் செய்கிறது. மனிதனே நடக்கும் புழுக்கள் என்று கூறுவதன் மூலம் உலகத்தையே புழுவாகக் காட்டுகிறார்.

எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருக்கும் மனம் அமையவேண்டும் என்ற பிரார்த்தனையும் படைப்பில் இல்லாமல் இல்லை. முந்தைய தலைமுறை பல நேரங்களில் பழிவாங்கும் எண்ணத்தை விதைத்துவிட்டுச் சென்று விடுகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் அடுத்தடுத்த தலைமுறைகள் பழிவாங்கும் எண்ணத்தில் தம் வாழ்க்கையைப் பலி கொடுத்துக் கொள்கின்றன. இதிலிருந்து மீட்டெடுக்க பொறுப்புணர்வுடன் ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அவமானங்கள், துரோகங்கள், அலைக்கழிப்புகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் சாம்பலாக்கிப் பூசிக் கொண்டது போல, விபூதி பூசிய தாத்தாவை பெயரன் அறிமுகப்படுத்துகிறான். பொறுமைக்கு தாத்தா கொடுக்கும் விளக்கம் மிகவும் கவனத்திற்குரியது!

"பொறுமை என்பது

பழியுணர்ச்சி நீங்கப் பெற்ற

நம்பிக்கையென்பதை உணர்த்தி

தன் சந்ததி தழைக்க

எங்கள் வீட்டின்

தென்னம்பிள்ளைகளுக்கு

நீருற்றியபடி

தன் காலத்தைக் கடந்தார்."

இப்படி நல்ல விதைகளை விதைத்து மனமாற்றத்திற்கு வழிவகுக்கிறது படைப்பு.

முன்னோர்களின் நிலமோ, வீடோ பின் தலைமுறைகளுக்குச் சொந்தமாக வேண்டுமெனில், முன்னோர்களின் உழைப்பின் உன்னதத்தை உணர்ந்திருக்க வேண்டும். இல்லையெனில் பூர்வீகச் சொத்து கிடைப்பதற்கு வழியில்லை. சொத்துப் பத்திரத்தின் எழுத்துக்களை அவர்களின் கண்களாக உழைப்பின் வியர்வையாகப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரே ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு வாழ்நாளெல்லாம் வருத்தப்படும் மனிதர்களுக்குப் பாடம் போதிக்கிறது ‘ஆளுக்கொரு திசையுண்டு’. கவலைகளுக்குக் கொஞ்ச நேரத்திற்கு மேல் கவனம் கொடுக்கத் தேவையில்லை. சாப்பிட்ட பின் தட்டைக் கழுவும் இடைவெளிகளில் பிரச்சினைகள் காகங்கள் பறப்பது போலப் பறந்துவிடும். இதைச் சொல்லக்கூடியவன் குறிசொல்பவனோ, புடுபுடுப்பைக்காரனோ அல்லது எந்த மாயக்காரனோ அல்லன். இப்படி நம்பிக்கையை விதைக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும்! வாழ்க்கை முழுவதும் அன்பு செய்பவர்களாக இருங்கள்; அந்த அன்பு கொடிய மிருகத்தின் மனதையும் மாற்றிவிடும்.

"மனிதக் கண்கள்

தாங்கொண்ணா தாயின்

வலி பொறுத்த

சக்தியில் பிறந்தவை”

என்பதில் பெண்ணின் ஆற்றல் வெளிப்படுகிறது.

தமிழனின் ஆதி இசை பறை. பறை ஒலியின் ஓசை எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும். அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த பறை இசை காலப்போக்கில் இழவுக்குப் பயன்படுத்தப்படும் இசையாக மாற்றப்பட்டது.   ஆதிக்கச் சாதியினர் இசைக்கும் மிருதங்கம், தவில், வீணை, வயலின், புல்லாங்குழல் ஆகியவற்றை இசைப்பவரின் பெயருக்கு முன்னால் சக்கரவர்த்தி என்ற அடைமொழி வந்து சேர்கிறது. ஆனால் பறை அடிப்பவர்களைத் தாழ்த்தப்பட்ட சாதியினராக முத்திரை குத்தி எந்த விருதும் வழங்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று மனம் நொந்து பேசுகிறார் கவிதைப் போராளி.

ஒரே நிலத்தில் வாழ்ந்தும் வித்தியாசப்படுத்தும் மனிதர்கள் மீது கேள்வித் தாக்குதல் நடத்துகிறது கவிதை. ஒருவரை - காளையாகவும், இன்னொருவரை - நாயாகவும் சித்தரிப்பதில் இருக்கிறது அரசியல். காளைகள் ஊர் மக்களால் வளர்க்கப்படுகின்றன. நாய்களை எத்தனையோ முறை ஊரே விரட்டுவதற்காக அடித்திருக்கிறது. நிலத்தில் சாகசம் செய்து கொண்டு காளை வாழ்கிறது. ஆனால் நாய்க்கு அது இயல்பான வாழ்க்கை. காளையை வீரனாகவும், ஊரின் பெருமையாகவும் பார்க்கின்றனர். நாயை நன்றிக்காக விட்டு வைத்திருக்கின்றனர். நாயின் கண்ணீர் ஊளையிடும் சத்தமாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படுகிறது. இதிலிருந்து சமத்துவத்தைக் கொண்டுவர பலவாறாக முனைந்து செயல்பட்டிருக்கிறது தொகுப்பு.

செயல்பட விரும்புபவன் அதிகம் பேசமாட்டான் என்று பல காலமாக நம்பப்பட்டு வருகிறது. பேச்சு செயல்பாட்டுக்கு எதிரி என்றும் சிறந்த சொல் என்பது செயல் என்றும் பேசப்பட்ட நிலத்தில், பேச்சின் ஆழ அகலங்களை அலசுகிறது படைப்பு. சுதந்திர உரை வழியாக விடுதலையைப் பெற்ற தேசத்தில் சொற்கள் என்பவை சக்திமிக்க ஆயுதம் என்கிறது.

"பேச்சு செயல்

பேச்சு சுடும் கங்கு

சுடாத நிலவு

அழைத்துச் செல்லும் விதி

பொய்யின் புதையல்

மெய்யின் வெற்றிவேல்

பழியின் வழி

குற்றச்சாட்டின் பதுங்கு குழி

தர்மத்தின் நாயகன்

தரணிக்குப் பெருமை

குழந்தைக்கு தெய்வம்"

என்றெல்லாம் கொண்டாடுகிறது.

ஆடு மேய்ப்பவர்களுக்கும் நாய் மேய்ப்பவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்பது வர்க்க வேற்றுமையை மௌனமாகச் சொல்கிறது. வசதியில்லாதவன் உழைக்க வேண்டி சாலைகளில் நடந்து தன் பசியைப் போக்கிக் கொள்கிறான். பணக்காரனோ பசி எடுக்கவில்லை என்பதற்காகச் சாலைகளில் நடைபயிற்சி செய்கிறான். இருவரும் ஒன்றுபோலத் தோன்றினால் அதற்குள் ஒளிந்து கிடக்கிறது பொருளாதார ஏற்றத் தாழ்வு. அப்படித்தான் கயிறு திரிப்பவர்களும், வாயில் கதை திரிப்பவர்களும். கயிறு திரிப்பவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் வறுமைதான். வயிறு நிறைய உண்ண முடியாமல், கைகளுக்கு மருந்து தடவிக் கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். ஆனால் வாயால் ஏதேதோ கதை திரிப்பவர்களுக்குச் சுகமான வாழ்வு காத்திருக்கிறது என்று வேதனை கொள்கிறது படைப்பு.

வழிநெடுக துரோகத்தின் வாடை வீசிக் கொண்டு இருக்கிறது. எதிரில் நின்று வெற்றிபெற முடியாதவர்கள் மறைந்து நின்று தாக்குதல் நடத்துவதை வாழ்வின் நுட்பமாகச் சித்தரிக்கின்றனர். தகுதியற்ற நபர்கள் பேராசை பிடித்து அலையும் போது மற்றவர் இடத்தைத் தட்டிப் பறிக்க எத்தனையோ சூழ்ச்சி செய்கின்றனர். ஒருவரின் திறமைகளை அங்கீகரிக்க மறுக்கும் நிறுவனங்கள் அவர் மீதான அவதூறுகளைக் கேள்வி இல்லாமல் நம்பிவிடுகின்றன. குடும்ப உறுப்பினர்களை நம்பத் தவறும் வேளையில் அமைதி காணாமல் போய்விடுகிறது. நேருக்கு நேராக நின்று பேச முடியாத வஞ்சகர்கள் ரகசிய உத்தியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அதை ‘மொட்டைக் கடிதம்' என்கிறது படைப்பு. வீரமில்லாத மனிதர்கள் பொறாமை பிடித்தவர்களாகத் தரக் குறைவாகக் கடிதம் எழுத முற்படுகின்றனர். கையொப்பம் இடும் இடத்தில் எழுதியவர் யார் என்ற குறிப்பிடத் தயங்குகின்றனர். பழிஉணர்ச்சி மிக்க முதலைகள் போலவும், வீரமற்ற கோழைகளின் வாள் போலவும், ஏக்கப் பெருமூச்சு போலவும், இறந்தவரின் ரோமங்கள் போலவும் செயல்படுகின்றனர்.

"மொட்டைக் கடிதாசிகள்

வளரிளம் பருவத்தில் பிரியத்தை

சொல்லத்துடிக்கும்

துணிவற்ற காதலின் இசை"

என்ற வரிகள் அற்புதமானவை.

மொட்டைக் கடிதம் பற்றிப் பேசிய இந்தத் தொகுப்பு, புறம்பேசுதல் குறித்துச் சிலாகிக்கிறது. ஒருவருக்குத் தெரியாமல் அவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசுவது சுவாரசியமிக்கவை. இது பெண்களின் குணம் என்று தொடங்கும் கவிதை, ஒருவரைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லத் தொடங்கி, கடைசியில் இழிவில் கொண்டு முடியும் என்கிறது. கற்பனையின் செயல்பாடு என்றும், அறிவு நிலையின் சிகர ஒளி என்றும் காழ்ப்புணர்ச்சியில் உயிர்க்கும் புழுக்கள் என்றும் கவிதை – கதை – அரசியல் – கருத்துக்கணிப்பு என்றும் காதல் முத்தம் என்றும் விவரிக்கிறது. ஆனால் புறம்பேசுபவனுக்கு உண்மையான நட்பும் உண்மையான பகையும் கிடைக்காமல் போய்விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறது.

அரசியல் காரணங்களால் அதிகார மையமாக மாற்றப்படும் நகரங்கள் காலப்போக்கில் தனக்கான அடையாளம் இழக்கின்றன, வாழத் தகுதியற்ற இடங்களாக மாறிவிடுகின்றன. வருபவர்கள் போவோர்கள் எல்லோருக்குமான அடைக்கலமாகின்றன. கூட்ட நெரிசலில் சுவாசிக்க முடியாமல் தவிக்கும் நகரங்கள் தன் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள ஏமாற்றிப் பிழைக்கும் மனிதர்களையும் மௌனமாகக் கடந்து போகின்றன. யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படாத நகரத்துச் சாலைகளில் தாய்நாய் தன் குட்டிகளுக்குப் பாலூட்டி வாழும் வாழ்க்கைக்காக நகரங்கள் வாழத் தகுதியுடையவை என்கிறது கவிதையின் ஆன்மா.

நகரத்தை வாழ்வதற்கான இடமாக ஏற்றுக் கொள்ள மேலும் என்னென்ன தகுதிகள் வேண்டும்? தென்னை மரக்காற்று வீச வேண்டும்; காலி மனைக்குள் வேம்பம் பழங்களும், இலந்தைப் பழங்களும் காணப்படவேண்டும்; மின்சாரம் இல்லாத மழை நின்ற இரவில் நட்சத்திர வெளியைப் பார்க்குமாறு அமைய வேண்டும்; விபத்தில் அடிபட்டவனைக் காப்பாற்ற தன் வண்டிகளை நிறுத்திவட்டு மனிதாபிமானத்தோடு அவனுக்கு உதவ முன்வரவேண்டும்; சாலையோர மரங்களில் அணில்கள் இருக்க வேண்டும். இந்தச் சூழல் அமையப் பெற்றால் ஒழிய நகரத்தை வாழ்விடமாக ஏற்க முடியாது. இந்தக் கிராமத்து வாழ்க்கையை வாரித் தின்று செரித்துவிட்டு நகராக உருவாகி இருக்கிறதே என்ற ஆதங்கமும் கூடவே வெளிப்படுகிறது.

ஒருசிலரின் சுயநலத்திற்காக, சுயலாபத்திற்காக எல்லோருடைய உரிமைகளை அபகரிக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சொந்த மண்ணில் வாழ்வதற்கு இல்லாமல் விரட்டியடிக்கப்பட்ட ஆதி குடிகளின் வேர்களை அதன் கிளை உறவுகளின் இரத்தம் நனைத்துக் கொண்டிருக்கும் கொடுமை அரங்கேறி விடுகிறது. வேரின் வாசத்தை உணர்த்தும் ‘புரட்சி’ என்ற கவிதை எச்சரிக்கையாக எழுதப்பட்டிருக்கிறது. நகரத்தில் யாரும் அறியாதபடி தங்களுக்கான நிழல்தேடி வந்த பூர்வகுடிகள் ஒன்றாகச் சேர்ந்து புரட்சிக்குக் காரணமாகும் நாளில் முதலாளித்துவம் முடிவுக்கு வந்துவிடும். அதற்குச் சொல்லப்படும் உவமை மிகுந்த கவனம் பெறுகிறது.

"என் அடுக்குமாடியின் குடியிருப்புகளுக்குள்

நீர்போக வழியற்ற மழைக்காலத்தில்

பூர்வஜென்ம மோப்பசக்தி

ஏதுமற்ற தவளைகள் எப்படி

ஆதிகுடிகளின்

நிலமீட்பு முற்றுகையென

சூழ்ந்திருந்து

ஒரு சேரக்குரல் எழுப்பி

உறங்கவிடாது

ஸ்தம்பிக்கச் செய்கின்றன.”

எல்லாம் கிடைக்கும் நிலைக்கு உயர்ந்த பின் அமைதி இல்லாமல், மகிழ்ச்சி இல்லாமல் வாழ நேர்ந்த வாழ்க்கை ஒரு சாபம். "நூறு சொந்தம் வந்த பின்னும் தேடுகின்ற அமைதி எங்கே?" என்ற பழைய திரைப்படப் பாடல் போல வாழ வேண்டிய நெருக்கடி அவத்தை. வசதி வாய்ப்பு இல்லாத காலத்தில், வாழ்க்கை பற்றிய பெரிய கனவு கண்டு கொண்டிருக்கும் காலத்தில் கொட்டும் மழைக்கும், நிலையான வாழ்க்கை வாய்த்திருக்கும் போது பொழியும் மழைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவே செய்கிறது. சாளரத்தின் வழியாக மனதிற்குப் பிடித்தவளைப் பார்ப்பதும், ஒழுகும் வீட்டில் கதைப் புத்தகங்களை நனையாதபடி பத்திரப்படுத்துவதும், பக்கத்து வீட்டிலிருந்து சுடச்சுட உணவு பரிமாறப்படுவதும் இல்லாத இன்றைய வாழ்க்கையை எப்படி வாழ்வது, இந்த மழையை எப்படி ரசிப்பது?

காதலர்களுக்குப் பிடித்தமான மழையில் இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் நனைய விரும்பாமல் ஒதுங்கி நிற்கிறார்கள். மழையில் நனையும் காதலர்கள் ஒருவருக்குள் இன்னொருவர் குளிர்காய்ந்து கொள்கின்றனர். இளைய மகளுக்கு மருந்து வாங்கச் சென்ற அப்பா திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மூத்த மகள் ஒருபுறம். இடி மின்னலுக்குப் பயந்து கடவுள் பெயர்களை உச்சரித்தபடி தாத்தா இன்னொரு புறம். இவையெல்லாவற்றையும் விழுங்கிவிடுகிறது சாலையோரத்தில் வசிக்கும் தாயின் துயரம். மழையில் நனைந்து விட்டதால் அடுப்பு எரியாமல் போனது. பசியோடு இருக்கும் அவளின் குழந்தைக்குத் தன் ரத்தத்தைப் பாலாக மாற்றித் தருகிறாள் என்ற இடத்தில் பொதுவுடைமை மலர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்கிறது.

திரும்பி வராத வாழ்க்கைக்காக, தொலைத்துவிட்ட வாழ்க்கைக்காக அடம்பிடிக்கும் மனதை ஆறுதல் படுத்துவதற்கு வழியே இல்லை. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு கவிதை கிடைத்திருக்கிறது. காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடிய மகாகவி பாரதியாரையும் காலம் ஒருநாள் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்துவிடலாம். ஆனால் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றுப் போன இனிமைகள் திரும்பக் கிடைப்பதில்லை. பாரதியார் தூக்கிக் கொஞ்சிய கழுதைக் குட்டி காணாமலேயே போய்விட்டது; சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டன; பொன்வண்டு காணாமல் போய்விட்டது; மைனாக்களும் தேன்சிட்டுகளும் காணாமல் போய்விட்டன. பூமிக்குக் கீழும் பாதை அமைக்கத் தெரிந்த மனிதனுக்கு மண்ணைப் பாதுகாக்கத் தெரியவில்லையே, அதில் வாழும் மண்புழுக்களை வாழ்விக்கத் தெரியவில்லையே என்பது கவிதையின் வேதனை.

வாழ்க்கைப் போராட்டத்தில் இரையின் மீது மையம் கொள்ளும் சிறுத்தையைப் போலக் கவனமாக இருக்க வேண்டும். வெறும் ஆசைகளோடு போராட்டக் களத்தில் இறங்குவது என்பது புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனையின் கதையாக மாறிவிடும். இலட்சியத்தை அடைவதற்கான பயணம் வெகுதூரம் இருப்பதால் திரும்பிப் பார்க்காமல் முன்னேறிச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

முன்பு போர் செய்வதற்கு என்று தனியான நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. போர் முறைகளுக்கான அறம் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் இன்று வசிப்பிடங்களையும், விளை நிலங்களையும் குறிவைத்துத் தாக்கும் போர்விமானங்கள் கொடுமையின் உச்சம். ஈழத்துப் போரை எவராலும் மறக்க முடியாது. இராணுவ விமானத்தின் குண்டு மழையிலிருந்து தப்பித்துக் கொள்ள திமிங்கலத்திற்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் இயலும். ஆனால் வேர் பரப்பிய மரவள்ளிக் கிழங்குக்கும் அதற்காகக் காத்திருக்கும் மனிதர்களுக்கும் எப்படிச் சாத்தியம்! இராணுவ விமானத்திடமிருந்து தப்பிப் பிழைத்த ஈழத்தமிழர்கள் வேற்று நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர் வசிப்பிடச் சான்றிதழ் பெறுவதற்காகத் தவம் கிடக்கின்றனர் காவல்நிலைய வாசலில். காவல் நிலையம் கேட்கும் பணம் தரமுடியாததால் ஒரு குற்றவாளியை நடத்துவது போல் நடத்தப்படுகின்றனர். வாசலில் இருக்கும் மண்ணை அள்ளிப் பின்புறம் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.

"காவல் நிலைய வாசலில்

கொட்டப்பட்டிருக்கும் மண்ணை

அள்ளிக் கொண்டிருக்கின்றன

நாடற்ற கைகள்"

சிலருக்குப் போர் மேகம் சூழ்ந்த தங்கள் நாட்டை விட்டு வேறு இடம் செல்ல விருப்பமில்லை வாழ்வோ – சாவோ இங்கேயே இருந்து விடுகிறேன் என்று வைராக்கியத்துடன் இருக்கின்றனர். கால்கள் இருப்பவர்கள் தப்பி ஓடுங்கள் என்று சொல்லும் அவர்கள் தமக்குக் கால்கள் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். ஏனெனில் அவர்கள் கால்களுக்குப் பதிலாக ஊடுருவிய வேர்கள் இருப்பதாகச் சொல்லும் இடத்தில் கண்கள் குளமாகின்றன.

உலகத்தின் ஆவணப்படமாக இருக்கும் கவிதைகளில் அழகியல் தோன்ற படைத்திருப்பதில் கவிஞர் – இயக்குநர் என்ற கலைஞர்களின் வெற்றியைத் தரிசிக்க முடிகிறது.  காதலின் உன்னதத்தைப் பேசும் அதே வேளையில் சமூக விடுதலைக்கான ஓங்கிய குரலாகவும் ஒலித்திருக்கிறது தொகுப்பு. உண்மையை உணர்ந்து கொள்ளும் துணிவில்லாததால் மனிதர்கள் பொய்யின் சாயலைத் தேடி அலைகின்றனர் என்று கருதும் கவிஞர் அதைக் கனவில் தரும் முத்தமாகச் சாடுகிறார். இப்படிப் படைப்பு முழுக்க மனித குலத்தின் நன்மைக்காகவும் மேன்மைக்காகவும் பாடுபட்டிருக்கும் இத்தொகுப்பு இலக்கிய உலகின் கூடுதல் வரவு, கூடுதல் வரம்!

- முனைவர் மஞ்சுளா, சென்னை சமூகப் பணிக் கல்லூரி, 32, காசா மேஜர் சாலை எழும்பூர், சென்னை - 08

Pin It