கவிதை என்பது காலத்தின் கண்ணாடி மொழியின் சுவை வாழ்வின் பிம்பம் என்பதனை டாக்டர் எஸ். பிருந்தா இளங்கோவன் எழுதிய எனக்கென பொழிகிறது தனிமழை எனும் கவிதை நூல் நிறுவுகிறது. தமிழில் முன்னணி இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூல்.புதிர்களை உள் நிறுத்துவதாய் காட்டி புரியாத் தன்மையோடு வாசகனை நகர்ந்து போகச் செய்யும் நவீனம் சாராமல் வரி விளையாட்டு, வார்த்தைத் திருகல் எதுவுமின்றி எளிமையான மொழியில் சம்பவங்களையும், காட்சிகளையும், நிகழ்வுகளையும் நேரடியாக விரித்துச் செல்கின்றன இத்தொகுப்பின் கவிதைகள். 

அன்பு கொடுக்கப்படுவதுமல்ல, பெறப்படுவதுமல்ல. உணரப்படுவது, அறிவது. இதுதான் பிருந்தா இளங்கோவன் கவிதைகள் தரும் செய்தி. ஒளியைப்போல, ஒலியை, வாசனையை, நாற்றத்தைப்போல, காற்றைப்போல அறிய, உணரப்படுகிற ஒன்றாக இருக்கிறது இவரது புனைவு. இந்த முடிவை நோக்கி அதிரடியாக இல்லாமல், வெறும் அறிவிப்பாக இல்லாமல் மிக இயல்பாக நகர்ந்த விதம் பிரமிப்பு.

brinda ilangovan book"அந்தக் கருப்பு பக்கங்களில்
அவன் தன்னைத்தானே
பார்த்துக் கொள்ளட்டும் என்றேன்
புத்தகத்தின் தாள்கள்
படபடத்து மூடிக்கொள்ளாமல்
காவல் இருந்தது காற்று"

மனிதர்கள் குறித்த மதிப்பீடுகள் காலத்தின் இடையூறுகளால் காலம் தோறும் மாறிக்கொண்டே இருக்கும். ஒருவகையில் ஆணாதிக்கத்தை மறைமுகமாக சாடும் உத்தி இந்த கவிதையில் இருந்தாலும் கவிதை தனது கவித்துவத்துடன் நெஞ்சுக்கு அருகில் அமர்கிறது. 

கவிதைகளை நோக்கும்போது வயது, இடம், பொருள், ஏவல் அனைத்தையும் தாண்டி இதனை ஒரு பிரதியாக பார்ப்போமாயின் அது சர்வதேசத்திற்கும் பொதுமையான உணர்வுகளை பிரதிபலிப்பதனை அவதானிக்கலாம். பாலியகாலத்தை அசை அசைபோடவும் நெஞ்சம் நிறைய காதலை சுமக்கவும் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

"நேரமாகிறது கிளம்பலாமா என்றான்
சரி என்று எழுந்து கொண்டேன்
ஓரமாய் கிடந்த
உலகத்துக்கான என் முகமூடியை
கையில் எடுத்துக் கொண்டேன்.
மெல்லிய சிரிப்புடன்
என்னுடையது
காரில் இருக்கிறது என்றான்."

கவிதையில் பகடியை நுழைத்து மனிதர்களின் போலித்தனத்தை அம்பலப்படுத்தும் சிறப்பான கவிதை இது. ஒரு வகையில் தத்துவார்த்தமான சிந்தனையை தன்னகத்தில் கொண்டிருக்கும் கவிதை என்றாலும் சமகால நடப்பியல் கூறுகளை வெளிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பானது.

"இந்த அவல நாடகத்தை
கண்ணுற்ற இரவு விளக்கு
மௌனமாய் அழுகிறது"

என்று முடியும் கவிதை ஒரு சிறு கதைக்கான கருவை கொண்டது. குழந்தை பெற இயலாத தம்பதிகள் படும் தாம்பத்திய துயரத்தை வலி மிகுந்த வரிகளால் வார்த்தெடுத்து இருக்கிறார் கவிஞர். யாரும் இதுவரை தொட்டிறாத தளம் இது என்று சொன்னால் மிகையல்ல.

"லட்சங்களைக் கொட்டி வடிவமைக்கப்பட்ட என் படுக்கை அறையில் வியர்வை
கசகச ப்பில்லை கொசுக்கடி இல்லை
மாத்திரைகள் விழுங்காமல்
எனக்கு தூக்கமும் இல்லை"

கூட்டுக் குடும்பத்தில் இரண்டர கலந்து வாழ்ந்த வாழ்க்கை தொலைந்து போய் விட்டதையும் தான் இழந்தது மட்டுமல்ல சமுதாயமே இழந்து கொண்டிருக்கிறது என்பதனை தனது புனைவின் வழி பாலிய காலத்தை நினைவு கூறுகிறார் கவிஞர். இந்த கவிதைகளின் வழி நாமும் நமது பாலிய காலங்களின் நிகழ்வுகளையும் காதலையும் அசை போடாமல் இருக்க முடியாது. 

"படபடக்கும் அந்த சின்ன பறவை விண்ணில் பாய அனுமதியுங்கள்.
அது
வல்லூறுகளும் பறக்கும்
வானம் என்பதை மட்டும்
மெதுவாக சொல்லி வையுங்கள்" எனும் கவிதையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அக்கரையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
வெட்ட வெட்ட தழைக்கும் மரம்போல நம்பிக்கை இழக்காத வார்த்தைகள் ஏனைய பெண்களுக்கு வழிகாட்டியாகிறது.

கவிதையின் உருவம், உள்ளடக்கம் அனைத்தையும் மீறி, தான் சொல்ல வேண்டும் என நினைக்கும் அத்தனை கருப்பொருட்களையும் ஆங்காங்கே விசிறிச்செல்கிறார் கவிஞர்.பரபரப்பான மனித வாழ்க்கையில் ஆற்றுப்படுத்தும் அசைபோடும் கவிதைகளை வாரி வழங்கி இருக்கிறார் பிருந்தா இளங்கோவன். 

எனக்கெனப் பொழிகிறது தனிமழை.
ஆசிரியர்: டாக்டர் எஸ்.பிருந்தா இளங்கோவன்.
பக்கங்கள் 94. விலை ரூ 110.
வெளியீடு: சந்தியா பதிப்பகம்.
77,53 வது தெரு, 9 வது அவன்யூ.
அசோக் நகர். சென்னை 83.

- அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா

Pin It