edwinaஇந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, அதிகார மாற்றம்,மதக் கலவரம், ஐந்து இலட்சம் மக்களின் இடப்பெயர்வு, காந்தி படுகொலை, பிரிவினையில் ஆங்கிலேய அரசின் சதி குறித்த நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன. இது நேரு மீதும், காந்தி மீதும் கரிசனையுள்ள, கலவரங்களைக் கண்டு நெஞ்சுருகும் ஒருத்தியின் கதை. அதிகார மட்டத்தின் உள்ளடுக்கில் பணியாற்றிய ஒருத்தியின் கதை என்று கூட சொல்லலாம்.
 
நேருவின் மீது அளப்பரிய மரியாதை உள்ள எனக்கு இந்தக் கதை முடிந்த பிறகு எனக்கு அவர் மீது பரிதாபமே வருகிறது. அவர் ஒன்பது ஆண்டு காலம் சிறையில் இருந்திருக்கலாம். ஆனால் அதைவிட எட்வினாவுடன் தனக்குள்ள நெருக்கத்தை இழந்ததுதான் பெரிய தியாகம் என்று இந்த நாவலின் கடைசி அத்தியாயத்தை (1960 - எட்வினா இறப்பிற்கு மறுநாள்) படிக்கையில் எனக்குத் தோன்றியது. ஒருவேளை அழுதேனோ! தெரியாது.

இந்தக் கதை மௌண்ட் பேட்டனை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக அறிவிக்கும் நாளிலிருந்து இங்கிலாந்தில் தொடங்கி அவர் எட்வினாவோடு இந்தியாவை விட்டு வெளியேறும் நாள்வரை நடக்கிறது என்று கிட்டத்தட்ட சொல்லலாம்.

எட்வினா தனது பள்ளித் தோழி லெட்டியை தனக்கு உதவி செய்வதற்காக தன்னோடு அழைத்து வருகிறார். நாள்தோறும் லெட்சியா வாலஸ் - வைஸ்ரினின் (வைஸ்ராயின் மனைவி) சிறப்பு உதவியாளர் குறிப்புகள் எழுதுகிறார். அவர் சொல்லுவது போல கதை நகர்கிறது. அற்புதமான ஓட்டம். ஒரு வரலாற்று நாவலை இவ்வளவு ரசத்தோடு சொல்ல முடியுமா. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு (பத்மஜா நாராயணன்)

மௌண்ட் பேட்டனின் பகட்டு, கலவர முகாமில் அயர்வின்றி பணியாற்றும் எட்வினா, வி.பி. மேனன் (இந்தியாவின் குடிமை அதிகாரி) குறித்தெல்லாம் நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் ஒரு சில நுட்பமான தகவல்கள் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. எட்வினா தன் பள்ளித் தோழியான லெட்டியின் மகிழ்வான வாழ்வைக் கண்டு படும் பொறாமை, நேருவும் எட்வினாவும் யார்க் சாலையில் - இப்போது மோதிலால் சாலை சாப்பிடும் இரவு உணவு, தனியாக வந்து லெட்டியிடம் எட்வினாவின் கடிதங்களைக் காட்டி அழும் நேரு, ஷாஜஹானின் வழித்தோன்றலை தனது உதவியாளராகப் பெற்ற லெட்டி, நேருவின் சிறுவயது நண்பரான ஹரி ரத்தோர்- உடன் லெட்டிக்குள்ள உறவு, யானைகளுக்கு மதம் பிடிக்க வைத்து சண்டைபோட வைக்கும் ஜெய்ப்பூர் ராஜா என்பது போன்ற பல சுவையான தகவல்கள் கதையின் போக்கில் வருகிறது.

எட்வினா நேருவிற்கு எழுதிய கடிதங்களை எட்வினாவிடம் திருப்பித் தர வைக்கும் ஜின்னா ஒரு சுவையான சம்பவம். நல்லதொரு நாவல். இந்த நாவல் நேருவை தவறாக சித்தரிக்கவில்லை என்றே கருதுகிறேன். ரியனான் ஜென்கின்ஸ் ஸேங் என்பவர் எழுதியிருக்கிறார்.

நற்றினை வெளியீடு. 380 பக்கங்கள்.

- பீட்டர் துரைராஜ்

Pin It