அறம், மனிதாபிமானம் போன்றவை எல்லாம் செத்துப் போய்விட்டன; பெருங்கதையாடல்கள் மனிதர்களை ஒடுக்குகின்றன என்று தீர்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும்¬ - தலித்துகள் கோரிப்பெற பொதுவுடைமைத் தோழர்களிடம் என்ன இருக்கிறது என்று சொன்னாலும், அவற்றையெல்லாம் நிராகரித்துச் செல்கிறது, சிறீதர கணேசனின் படைப்பியக்கம்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் சிறீதர கணேசனின் கதைகள் எளிமையானவை; பாவனைகள் அற்றவை - அவரைப் போலவே. கடந்த ஆண்டு எழுதிய "குழந்தை கோவில் மிருகம்' கதையைப் போலவே இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய "மீசை' கதையிலும் எதிர்ப்புணர்வு இருக்கிறது. தலித் அரசியலால் பெற்ற உத்வேகம் அறச்சீற்றத்தை மேம்படுத்தியிருக்கிறது.

"அவுரி' நாவலைப் போலவே சிறுகதைகள் முழுக்க ஏராளமாகப் பெண்களின் ஆளுமை வெளிப்படுகின்றன. மஞ்சள் தொட்டு மாங்கல்யம் பூஜிக்கும் மெல்லுடல் நங்கையர் அல்லாத பெண்கள் அவர்கள். யாராலும் சண்டையில் வெற்றி கொள்ள முடியாத மாரியம்மாள், "நான் பறைச்சிதான்' என்று முழங்கும் பெண், காதலை வெளிப்படையாகச் சொல்லும் மரியம்மை, கிழட்டு நாயக்கரின் குறியை அறுத்துப்போடும் சக்கிலியப் பெண், குறைந்த கூலிக்கு கக்கூஸ் கழுவ மறுக்கும் ஊர்காளி, கரகாட்டம் ஆடும் வெள்ளையம்மாள் என பெண்களுக்கான இயங்குவெளிகளைக் கண்டடைந்து வெளிக் கொணர்கிறார் சிறீதர கணேசன்.

நிறுவனங்களைத் தகர்க்கும் அரசியல் ஓர்மையை கதைகள் தோறும் கைக்கொள்வதில்லை சிறீதர கணசேன். ஆயினும் "அண்ணாச்சி' என்ற சொல், நாடார்களுக்குரிய சொல்லாகி விட்டது. தன்னை அண்ணாச்சி என்று அழைப்பதை விரும்பாத கதை சொல்லி, “இந்த அண்ணாச்சியில் இருக்கிற "சி' தான் அண்ணன் தங்கை உறவைத் தனிமை எடுத்து விரிசல் படுத்துவதைப் போல எனக்குப்படும்'' என்கிறார்.

சாதி இந்துக்களை அய்யா, அம்மா, எசமான், நாச்சியார் என்றே ஒடுக்கப்பட்டோர் விளிக்க வேண்டும். மைத்துநர், அண்ணி, மாமா எனும் மைதுன உறவுப் பெயர்களால் யாரையும் அழைத்துவிட முடியாது. அக்கா என்று அழைக்கும் ராசாத்தியைக் கண்டு கோபங்கொள்ளும் நாயக்கர் பெண், தன்னை "அம்மா' என்று கூப்பிட வேண்டுமென்கிறாள். அம்மா என்று சொல்லவேண்டுமானால், என் அப்பனைக் கட்டிக்கொள் என்று பதிலடி தருகிறாள் ராசாத்தி.

தலித்துகளை நேரடியாக ஒடுக்கும் முதன்மை ஜாதிகளாக நாயக்கமார், தேவர்கள், ரெட்டியார், கவுண்டர், நாடாக்கமார் காட்டப்படுகின்றனர். “நாடாக்கமாரு கோவிலுக்குப் போகணும்னு எனக்கென்ன தலையெழுத்தா? பறப் பையங்கப் போயித்தானே, நான் செஞ்சுக் கொடுத்த மிட்டாய்யெல்லாம் திருப்பிக் கொடுத்தாங்க'' என்று தலித் பையன் சொல்கிறான். ஒருவர் ஆட்டைக் குளிப்பாட்ட தனிக் கிணற்றுக்குப் போகச் சொல்லுகிறார்.

ஒங்கம்மா ஒரு பறைச்சி. பறைச்சி புத்தியைக் கேட்காதே. நான் தான் தெரியாத்தனமா இருந்துட்டேன். என்ன இருந்தாலும் நீ ஒரு நாயக்கச்சி. யார் கேட்டாலும் எம் பெயரைச் சொல்லி, நாயக்கர் மகளுன்னு சொல்லு'' என்று சாதிப் பெருமிதங் கொள்ளுகிறார் ஒரு நாயக்கர். “எலே என்ன? சாரம் குண்டிக்கு மேலே போவுது; குண்டியில சதை வச்சுப் போச்சா?'' என்கிறார் மாடசாமித் தேவர்.

அருந்ததியர்கள், பறையர்கள் மற்றும் வண்ணார்கள், கதையோடு இயைந்து காட்டப்படுகிறார்கள். ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதாக சிறீதர கணேசன் காட்டும் பள்ளர் சித்திரம் வலுவாக இல்லை. "கணக்கு' சிறுகதையில் வரும் “நம்மங்கிட்ட கைகட்டி வேலை செய்கிறவன் பள்ளப்பயல். அவம்புள்ள இன்னைக்கி டாக்டராயிருக்கு?'' என்று ரெட்டியார் சொல்லும் தொடரை நீக்கிவிட்டால், கதையை எந்தச் சாதிக்கு வேண்டுமானாலும் பொருத்தலாம். பாத்திர வடிவமைப்பு கச்சிதமாக இல்லை.

தொடர்ந்து வேலை செய்யும் தன்மை கொண்ட "பூதம்' என்ற தொன்மத்தை மாற்றுகிறார் சிறீதர கணேசன். தொடர்ந்து வேலை கொடுக்கும் கவுண்டர் பெண்ணை பூதமாகக் காட்டுகிறார். நாலாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட சேரிப் பையன் பூதம் தரும் வேலையைச் செய்ய முடியாமல் ஓடுகிறான். “இந்த நாலாயிரம் ரூபாய்க்கு இந்த எடுப்பட்ட பய நாலு மாசங்கூட வேலை பாக்கலையே'' என்று ஒப்பாரி வைக்கிறாள் கவுண்டர் அம்மா. சிறீதர கணேசனின் புவியியல் பரப்பில் கவுண்டர்கள் இல்லை என்பதால் கதையின் உயிர் குன்றி விடுகிறது. “ஏலே ஒன்ன ஆடுக அடைக்கிற இடத்தையெல்லாம் தூத்து கழுவச் சொல்லியிருந்ததுல, ஏன்ல கழுவல?'' என்று தூத்துக்குடி மொழியில் கவுண்டர் பெண் பேசுகிறாள்.

பெரும்பாலான கதைகள் தூத்துக்குடியைச் சுற்றி வருபவை. குழந்தைகள், குமரிகள், கிழவர்கள், மனைவிமார்கள், நண்பர்கள், சாமியார்கள் என பலதரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். தலித் கதைகள் மட்டும் எழுதுபவர் என்ற வரையறைக்குள் சிறீதர கணேசன் இல்லை. ரொமாண்டிக் தன்மை கொண்ட கதைகூட "மீசை'த் தொகுப்பில் உண்டு. பிடில் வாசிக்கும் கிழவரைக் காட்டும் "ரசிகனைத் தேடி' கதையில் வரும் நீளவசனங்கள், சினிமாத்தனமான சம்பவங்கள் கதையை இறக்கி விடுகின்றன.

வர்க்கமும் சாதியும் இணையாதவை என்பது சிறீதர கணேசனின் நம்பிக்கை அன்று. பணத்தை சுருட்டும் சங்க நிர்வாகியைத் தோலுரித்தாலும் தொழிலாளிப் பாசம் பல இடங்களில் வெளிப்படுகிறது. நகரத்துத் தொழிலாளிகளை விட கிராமத்துத் தொழிலாளிகள் வஞ்சிக்கப்படுவதை "ஆசைகளும் ஆழங்களும்' கதையில் சொல்கிறார். "நேற்று உனக்கு இன்று எனக்கு' கதையில் தொழிலாளிகளுக்காக வேலை இழந்தும் போராடும் ராஜசேகரனைக் காட்டுகிறார்.

முற்போக்குக் கதைகளில் வெளிப்படும் மனிதாபிமானம் சிறீதர கணேசனையும் பாதித்திருக்கிறது. வெட்டு, குத்து, அடிதடி, சிறை என அலையும் கில்லாடி கணேசன், மதக் கலவரத்தின் போது கிறித்துவப் பெண்களைத் தன் வீட்டில் வைத்துக் காப்பாற்றுகிறான். இயலாத பெண்ணை ஏற்றி வரும் ரிக்ஷாக்காரர் கேட்டதை விடக் குறைவாகப் பணம் பெறுகிறார். "நெருப்புக் குமிழிகள்' கதையிலும் தீக்காயமுற்ற உடல்களைச் சுமந்து மருத்துவமனைக்குச் செல்கிறார் ரிக்ஷாக்காரர் ஒருவர். இம்மாதிரியான மனிதாபிமானக் கதைகள் உள்ளதைச் சொன்னாலும் எதையோ இழந்துவிடுகின்றன.

இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதிய கதைகளில் தலித்தியச் சார்பு மிகுந்திருக்கிறது என்றாலும், பொதுப்புத்தி சார்ந்த மனநிலையை சிறீதர கணேசனால் தேற முடியவில்லை. கிராமங்கள் உன்னதமானவை; பசுமை நிறைந்தவை என்ற எண்ணம் உண்டு. “குளத்தின் தண்ணீர் சூழ்ந்த பசுமைக் கிராமம்.

தன்னோடு நாத்து நடும் இளம் பெண்கள். யம்மா என்று கனைக்கும் கறவை மாடுகள். நெல், நெல்லிலிருந்து எடுக்கப்பட்ட அரிசி இவை எல்லாம் மாறி மாறித் திரையிட்ட படம் மாதிரி வந்து போய்க் கொண்டே இருந்தன'' என விவரிக்கிற வழக்கமான மனப்பதிவுகளிலிருந்து மீளாமல் சொல்லப்படும் வரிகள், திரைப்படக் காட்சியை ஒத்ததாய் அமைகின்றன.

தாய்மை குறித்து சிறீதர கணேசனின் அவதானிப்பு இப்படி அமைகிறது: “தாயாகப் போகிற சேதி ஒரு பெண்ணுக்குப் பெருமை தரக் கூடியது. ஒரு பிள்ளைப்பேறு இல்லாத பெண் தாய்மை அடைவதைப் போல ஆனந்தம், மகிழ்ச்சி, இன்பம், சுகம், நிம்மதி வேறு எதிலும் இருக்க முடியாது'' என்ற வரிகளை ஒரு பெண் எழுதும் போதுதான் - அதுவும் ஓர்மை, உண்மை என்று கருத முடியும். தாய்மை, பெண்மை, ஆண்மை போன்றவை எல்லாம் ஆணாதிக்கச் சமாச்சாரங்கள்.

சிறீதர கணேசனின் நடை அசாத்திய எளிமை கொண்டிருக்கிறது. சிறுசிறு தொடர்கள். பூடகம் ஏதுமற்று உடைத்த தேங்காயைப் போலப் பளிரிடுகின்றன. வட்டாரச் சொற்கள் வந்து விழுகின்றன என்றாலும் சீறிதரகணேசன் இன்னும் தன்னை மொழி, சிந்தனை ரீதியாக செதுக்க வேண்டித்தான் இருக்கிறது என்றாலும், அவரின் "மீசை' நிமிர்ந்து நிற்கிறது என்று சொல்ல முடியும்.

நிமிர்ந்து நிற்கும் ‘மீசை’
க.காசி மாரியப்பன்
Meesai _book
மீசை
பக்கங்கள் 300
விலை ரூ.100
வெளியீடு : பாலம்
இ/7, பாரத் அடுக்ககம்
ஆர்.வி.நகர்
அண்ணா நகர் கிழக்கு
சென்னை - 600 102