நூலின் பெயர் : நிர்வாண மனிதர்கள்

ஆசிரியர் : வி.ஜீவகுமாரன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

     எந்தவொரு செயலுக்கும் ஏதேனும் ஒரு தாக்கம் இருக்கும். அந்த தாக்கம் பேச்சின் மூலமாகவோ அல்லது எழுத்தின் மூலமாகவோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெளிப்பட்டுவிடுவது இயல்பு. அதிலும் ஒரு இலக்கியவாதிக்கு நேர்ந்தது என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதோ மனதின் அடி ஆழத்தில் ஏற்பட்ட ரணத்தின் தழும்புகளைத் தடவிப்பார்த்து சுகம் காண்பதிலும், பகிர முடியா துயரத்தின் வலியை கதைகள் என்ற பெயரில் எழுதி தப்பித்துக் கொள்வதிலும் எழுத்தாளர்களுக்கு நிகர் யாருமில்லை. தற்போது டென்மார்க்கில் வசிக்கும் புலம்பெயர் தமிழரான வீ. ஜீவகுமாரன் அவர்களும் அந்த வரிசையில் நின்று ஈடுசெய்கிறார்.

பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் வீ.ஜீவகுமாரனனின் “நிர்வாண மனிதர்கள்” என்ற இச்சிறுகதைப் புத்தகம், ஆசிரியரின் “யாவும் கற்பனையல்ல” என்ற சுய ஏளனத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. மேலும், இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள் இந்நூலாசிரியரின் ஆகச்சிறந்த நினைவுக் குவியல்களாகவே கடைசிவரை சீராய் நடைபோடுகிறது.

இச்சிறுகதைகளின் சிறப்பே பிரத்யேகமான மொழி நடையும், அதில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் அளப்பரிய பழந்தமிழ் சொற்களும்தான். இலங்கைத் தமிழுக்கே உரித்தான சொல்லாடலும், எதார்த்தத்தை மீறாத தத்துவங்களும், தடம் புரளாமல் நகர்ந்து செல்லும் கதைக் கருவும், இடையிடையே மனதைப் பதற வைக்கும் போர் பிண்ணனியும் என இவற்றிற்கு ஒரு தனி ஆய்வே செய்யலாம்.

புயலும் மழையும் போல் காதலும் காமமும் காலங்காலமாய் ஒன்றோடொன்று கூடிக்குழாவி கும்மாளமிட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அது எந்தச் சூழ்நிலையில் வேதி வினைபுரியும் என்பதுதான் புரியாத புதிர். அப்படியாக இக்கதைகளில் காதலும் காமமும் தவிர்க்க முடியாததால், கதைக்களமும் அதற்கேற்றார் போல் அதன் போக்கில் சுழன்று அடுத்தடுத்த இலக்கை நோக்கி இயல்பாய் கடந்து போகிறது.

ஒவ்வொரு சிறுகதையிலும் இடம் பெறும் கதைசொல்லி, ’நான்’ எனத்தொடங்குவதால் நம்மிடமே கதை சொல்லும் (முன்னெடுத்துச் செல்லும்) பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கதை ஆசிரியர் ஒதுங்கிக்கொண்டது போல் ஒரு மாயையை உருவாக்கி விடுகிறது. அதே சமயம் ஒரு சில இடங்களில் அது நமக்கே ஏற்பட்ட அனுபவமாய் விரிவடைய வியப்பேற்படுத்துகிறது. தொடர் வாசிப்பில், அடுத்தடுத்த கதைகளுக்குத் தாவிச் செல்லும்போது கதை சொல்வது ஆணா? அல்லது பெண்ணா? என்ற சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ஆயினும், மெல்ல மெல்ல கதையின் போக்கில் உரையாடல் அந்த சிக்கலை தீர்த்து வைத்து விடுகிறது.

காலங்காலமாய் சொல்லி வரும், ’வாழ்க்கைப் பயணம் ஒரே சீரான பாதையில் இல்லை’ என்பதை ஒவ்வொரு கதையிலும் தத்துவமாய் சுட்டிக் காட்டப்பட்டாலும் மனிதர்களுக்கிடையிலான உறவுகளையும், அதன் விளைவால் ஏற்படும் உட்கூறுகளையும் கதாப்பாத்திரங்களின் உயிர்ப்பான உரையாடல் மூலமே வெளிப்படுத்துகிறது. அதுவே இக்கதைகளுக்கு தனி அடையாளத்தைக் கொடுக்கின்றன.

ஈழப்போரின் உச்சத்தையும் பின்ஈழப்போரின் எச்சத்தையும் ”காணாமல் போனவர்கள் மற்றும் சுவடே இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்று வேரறுக்கப்பட்ட வெறுமையை இடையிடையே சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆங்காங்கே புலம் பெயர்ந்த தமிழர்களின் சினத்தையும் அதை வெளிக்காட்டமுடியாமல் தவிக்கும் கையறு நிலையையும் வாசிக்கும்போது கண்களில் கண்ணீர் ததும்புவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த ”நிர்வாண மனிதர்கள்” புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த போதுதான் இந்தப் பதிவுகள் சிறுகதையாய் உயிர் பெற ஏதேனும் ஒரு பின்புலம் இருந்தே தீரவேண்டும் எனத் தீவிரமாய்த் தேடியதில் ’விஸ்வசேது இலக்கிய பாலம்’ பதிப்பகத்தால் 2011-ல் வெளியிடப்பட்ட ‘முகங்கள்’ – (சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைத் தொகுதி - 2011) கிடைத்தது. இதன் தொகுப்பாசிரியர் வீ. ஜீவகுமாரன் என்றறிந்தபோது நெஞ்சம் நெகிழ்ந்தது. இந்த தொகுப்பில் 50 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை எழுதிய (50 எழுத்தாளர்கள்) அனைவருமே ஏதோ ஒரு சூழலில் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். இதில் எழுதப்பட்ட 50-ஆவது கதை ஜீவகுமாரன் அவர்களின் “நிர்வாண மனிதர்கள்” சிறுகதை.

 இப்புத்தகத்தை வாசித்து முடித்தபோதுதான் எந்தக் கோணத்திலிருந்து தற்போதைய ”நிர்வாண மனிதர்கள்” என்ற புத்தகம் 20 சிறுகதைகளுடன் படைக்கப்பட்டது என்பது புலனானது. அதுமட்டுமில்லாமல் புலம்பெயர் இலக்கியம் தற்போது எப்படியெல்லாம் பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துணரச்செய்தது.

இந்த “நிர்வாண மனிதர்கள்” கொண்டுள்ள கதைகள் எதார்த்தத்தை சுற்றிப் பின்னப்பட்டதாலேயே அத்தனை கதைகளையும் ஒரே மூச்சில் வாசித்து முடிக்க ஏதுவாகிறது. இயல்பான எழுத்தும், இலங்கைத் தமிழருக்கே உரித்தான பேச்சுநடையும் நம்மை விடாமல் தொற்றிக் கொள்கின்றன.

சிதறிப்போன வாழ்க்கையின் விரக்தியால் எழும் மனக்குமுறல்கள், இறக்கிவைக்க முடியாத வலி, மீண்டு எழும்போதெல்லாம் ஏற்படும் ஏமாற்றம் என மறத்துப்போன அனைத்து நிகழ்வுகளையும் முன்வைக்கும் ஜீவகுமாரனனின் ஜீவனுள்ள கதைகள் நேர்மறையான தீர்வை எதிர்நோக்கியே உரையாடுகின்றன.

இக்கதையின் பக்கபலம் என்று கீழ்க்கண்டவற்றை வகைப்படுத்தலாம்

*மினுக்கல்கள் இல்லாத வர்ணனை, முடிச்சுகளற்ற கதைக் கரு, காதல், காமம், கோபம், ஏமாற்றம் என எல்லாம் கலந்த கலவையாய் ஒரு வித்தியாசமான சிறுகதைகள் என்ற கோணத்தில் தந்து ஜீவகுமாரன் அவர்கள் இப்புத்தகத்தைப் பலப்படுத்தியிருக்கிறார்.

*புலம் பெயர் படைப்புகள் பெரும்பாலும் தாயகம் சார்ந்த படைப்புகளாகவோ அல்லது புலம் பெயர் சூழல் சார்ந்த படைப்புகளாகவோ இருந்தபோதும் தனக்கென்ற தனித்த மொழி நடையும், சொல் பிரயோகங்களும் இப்புத்தகத்தை மெருகேற்றுகின்றன.

*மனிதர்கள் மட்டுமல்லாமல் ஜானு என்ற நாயும், சோதிட சீட்டு எடுத்துக்கொடுக்கும் கூண்டுக்கிளியும் கனமான கதாப்பாத்திரங்களாக வலம்வருகின்றன.

*ஆயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் தாய்நாட்டு பாரம்பரிய உணவுக்கு ஏங்கும் நாக்கை, குறிப்பாக வாட்டிய வாழையிலையில் சுற்றி வந்த இடியாப்பம், புட்டு, பயற்றம் பணியாரம், பருத்தித்துறை வடை, ரவை லட்டு போன்றவை கதைக்கு ருசியூட்டுகின்றன,

*நாடு விட்டு நாடு சென்று வாழும் போதும் கைவிட முடியாத சம்பிரதாயங்கள், சாதியம், திருமணப் பேச்சு, ஜாதகப் பொருத்தம், துடக்கு கழிவு, சாமந்திய சடங்கு இன்னபிற பாரம்பரிய நிகழ்வுகள் தாங்களிடையே இன்னும் தாய்மண்ணின் தொப்புள் கொடி உறவு அறுபடாமல் உள்ளதை நினைவூட்டுகிறது.

*வாழ்வின் ஏற்ற இறக்கத்துக்கு இலகுவாய்ச் சுட்டிக்காட்டப்படும் (பரமபதம்) பாம்பும் ஏணியும் விளையாட்டு கதையின் சிக்கலான பகுதியை இலகுவாக்குகிறது.

*இடையிடையே அதிகமாய் மனதைக் கவர்ந்த தமிழ்ச்சொற்கள் என்றால் கதிரை, குசினி, மணித்தியால, தேத்தண்ணி, வழமைபோல, தூஷணம், புகையிரதம், சாமந்திய சடங்கு, மொழிப்பாடசாலை, சாமான்பொதிகள் போன்றவை.

*ஆங்கில உச்சரிப்புகளில் ‘ட’ ‘டி’ ’டே’ போன்ற சத்தங்களுக்குப் பதிலாக பிரயோகிக்கப்படும் ‘ரி’.’ரே’ போன்றவை. உதாரணமாக ரியூட்டர், ரியூசன், ரிவி, ரேஸ்ட், அன்ரி என்ற உச்சரிப்புகள்.

*மேலும் சொன்னால், சின்னச் சின்ன வாக்கியக் கோர்வைகள், அழகியல் உணர்வோடு சீராய் அடுக்கி வைத்து கட்டப்பட்ட திடமான கதைக் கட்டமைப்பு, வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் வேறுவேறு கதாப்பாத்திரங்களையும் கதைக்களத்தையும் கொண்ட பதிவுகள் என ஆகச்சிறந்த பக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இருப்பினும், தமிழக புழக்கத்தில் குறைந்து காணப்படும் சொல்லாடல், அழுத்தம் குறைந்த சிந்தனை மற்றும் அனுபவப் பதிவுகள், சிறுகதைக்கு உரிய இலக்கண வரம்பை மீறிய அதிகப்படியான பக்கங்கள், பல புலம்பெயர் இலக்கியப் படைப்புகளில் அடிக்கடி சொல்லப்பட்ட பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே சீர்குலைந்து வரும் குடும்ப உறவுகள் அல்லது உறவு இடைவெளிகள் அதன் விளைவாக உருவாகும் உளவியல் சிக்கல்கள் எனச் சில சிறுகதைகள் மையம்கொள்வதால் இப்புத்தகத்தின் பலத்தைக் குறைத்துக் காட்டிவிடுமோ என மனம் படபடக்கிறது.

போர் வளையத்தில் தொலைந்துபோன அல்லது தொலைந்துபோகச் செய்யப்பட்ட தன் மகன் திரும்பி வருவான் எனக் கடைசி நேரம் வரை காத்திருக்கும் ஒரு குடும்பத்தின் வேதனைக் குரலின் எதிரொலி ‘தவம்’ சிறுகதை. பல்கலைக் கழகம் செல்வதற்கு முன்பாக நாட்டிற்குச் சேவை செய்ய என விரும்பி முன் வந்த 13 பேரில் பதின் பருவ ரேணுகாவிற்கு ‘கோபி’ என்ற சகமாணவன் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பை 13 வருடங்களுப்பிறகு உணர்ந்து அவனைத் தேடிச் செல்வதில் தொடங்குகிறது இச்சிறுகதை. அவன் தற்போது தடுப்பு முகாமுக்குள் பிணையாய் இருப்பதையும் அதனால் அவன் தந்தை கடந்த 6 ஆண்டுகளாய் சோற்றைக் கையால் தொடாமல் விரதம் என்ற பெயரில் தவம் இருப்பதையும் வலியுடன் விவரிக்கிறது இக்கதை. இங்கே ஒரு தந்தையின் பரிதவிப்பும், 13 வருடங்கள் கண்டிராமல் காதல் கொண்ட ரேணுகாவின் பரிதவிப்பும் கண்ணீரை வரவழைக்கத் தவறவில்லை. அதே சமயம் கதை சொல்லியின் 13 என்ற எண்ணின் மேல் உண்டாகும் அதீத மனநெருடலையும், மூடநம்பிக்கையையும் உலக மக்களின் பொதுக் குறியீடாய் இன்றுவரை உள்ளதை ஊர்ஜிதம் செய்கிறார்.

     ’உங்கள் கல்வியும், உங்கள் வாழ்வனுபவமும் உங்களுடையது மட்டுமே, அதனை வைத்துக் கொண்டு நீங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை அளக்காதீர்கள்’ என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு நகரும் ‘சின்னத்தங்கம்மா’ என்ற சிறுகதை கருக்கலைப்பிற்கு எதிரான குரல் கொடுக்கிறது. ஃபேஸ்புக்கில் நட்பாய் உருவான பழக்கத்தால் 4 மாத கருவைச் சுமந்து நிற்கும் தன்மகளின் செய்கையால் கலங்கி நிற்கும் சின்னத்தங்கம்மா சற்றே ஆவேசப்பட்டாலும், கருவைக் கலைப்பதற்கு பலரும் யோசனை சொல்லும் போது “அதுக்கு நான் விடமாட்டேன், அதுவும் ஒரு உயிர்தானே’ என்று கூறும் போது அனைவருக்கும் ஒருவித சிலிர்ப்பு உருவாகத்தான் செய்கிறது.

குழந்தை இல்லாததற்கு யாரிடம் குறை என்பதில் ஆர்வம் காட்டக்கூடாது என்பதில் வைராக்கியமாய் வாழ்ந்து 35 வயதில் தன் மனைவியை இழந்து, கடந்து போன சுவாரசியமான வாழ்வனுபவத்தை நினைவு கூர்கிறது “சண்டியனும் சண்டிக்குதிரையும்” என்ற சிறுகதை. சுற்றத்தாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி மறுமணம் செய்ய எத்தனிக்கும் போது யாரும் எதிர்பாராத நிபந்தனையாக “எதிர்காலத்தில் குழந்தை பிறக்கிற ஆசை இருக்கக் கூடாது” என்ற வாசகம் உறவினர்களை அதிர்வலையில் ஆழ்த்துகிறது.

அதற்கான காரணமாக அவரே கூறும் காரணம் ‘குழந்தை ஒன்று பிறந்தால் செத்தவளை நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து மலடி ஆக்கிப் போடுவியள்……பிறக்காவிட்டால் நீங்கள் இன்னொருமுறை என்னை மலடன் ஆக்கிப் போடுவியள்’ என்பதுதான் இக்கதையின் ஹைலைட். ’சண்டியனுக்குள் இருக்கிற மலடன் அல்லது அந்த சண்டிக்குதிரைக்குள் இருக்கிற மலடி தங்கள் இருவருடன் மட்டுமே இருக்கட்டும்’ என்ற தீர்க்கமான முடிவு ஒவ்வொரு செல்லிலும் வியாபித்திருக்கும் எண்ணம் மற்றவர்களுக்கு எப்படியோ, கதை சொல்லிக்கு அதுவே ஆதார சுருதி.

     அன்னையர் தினத்தன்று மேற்கொள்ளும் ரயில் பயணத்தில் சந்திக்கும் ஒரு வயது முதிர்ந்த தாய் ஒருத்தியின் உரையாடலில் தழும்பும் தாய்பாசம். போதுமென்ற மனமில்லாத அல்லது தன் தங்கையின் திருமணச்செலவுக்கு பணம்தர மனமில்லாத மகன் வெளிநாட்டில் (சுவிசில்) பணத்திற்கு பிச்சையெடுப்பதாய்ச் சொல்ல அதை நம்பிக்கொண்டு சித்தபிரமையோடு பயணிக்கும் வயதான பெண்ணிற்காக மனம் இளகவைக்கும் கதை “இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500”

பெண்மைக்கே உரிய பூப்பெய்தலை ஒரு நாடு சுதந்திரம் பெற்றது போல ஒரு நகரத்தையே திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில் நடத்தும் நிகழ்வை சரி அல்லது தவறு என விவாதிக்கும் “வயதுக்கு” என்ற சிறுகதை.

சில நேரங்களில் விருது வழங்கப்படுகிறதா அல்லது வாங்கப்படுகிறதா என்று குழம்பிப் போகும் மானிட ஜென்மங்களுக்கு கிடைக்கும் சூட்சுமமான பதில் இந்த “சாகித்திய மண்டலப் பரிசு” என்ற சிறுகதை.

22-வயதில் இயக்கத்தில் இணைந்து பெண்போராளியாய் வாழ்வைத் (தியாகம் செய்து) தொலைத்து நிர்கதியாய் சரணடைந்து, விடுதலையாகி வந்தபோது அவளுக்கு வயது 40. அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துத் தருவதாய் நினைத்துக் கொண்டு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முன்வருகிறார்கள். ஆனால் அவளின் போராட்ட கால வாழ்வை சந்தேகிக்கும் மாப்பிள்ளை வீட்டாரின் கேள்விக்கு தன் பெற்றோரிடம் சொல்லும் பதில் “ இனிமேல் நீங்களாவது எங்கள் போராளிகளை கொச்சைப் படுத்த இடம் கொடுக்காதையுங்கோ” என்பதுதான் “போராட்டம்” என்ற சிறுகதையின் உச்சபட்ச பலம்.

போர்காலத்தில் இயற்கை மரணம், அகால மரணம் என்ற இரு மரண வகைகளைத் தாண்டி நிகழும் வன்கொலை மரணத்திற்கு பயந்து நாடு விட்டு நாடு தாவி உயிர் பிழைத்த ஒருவன் 37 வயதில் திருமண பந்தத்திற்கு ஆசை கொண்டு தட்டுத் தடுமாறி பெண்பார்க்கும் படலம் எல்லாம் சுமூகமாய் முடியும் வேளையில் பெண் வீட்டாருக்கு காசு பிரதானமாய் போவதால் நின்றுபோகும் திருமணத்தை அழகியல் தன்மையோடு விவரிக்கிறது “நானும் எனது திருமணமும்” என்ற சிறுகதை.

போர், புலம்பெயர்வு, அகதி வாழ்வு, உலக நாடுகளில் நிலவும் வெவ்வேறுபட்ட காலநிலை அதனால் விளையும் மனஉளைச்சல், விரக்தி, வலி, மரணம், அகதிகளுக்கிடையிலான ஒற்றுமைக் குறைவு, பிடிவாதமாய் கடைபிடிக்கப்படும் சாதியம் என்று ஒரு முகத்தையும், புலம்பெயர் தமிழர்களுக்கிடையே அவ்வப்போது கொண்டாடப்படும் பிறந்த நாள் விழாக்கள், வாழ்த்துக்கள் என மற்றொரு முகத்தையும் புகலிடத்தில் பெற்றதையும் இழந்ததையும் விவரிக்கும் ‘நிவேதாவும் நானும்’ என்ற சிறுகதை. “நாங்கள் நாட்டுக்கு திரும்பிப் போகாமல் இருப்பதற்காகவேனும் இந்தப் போர் முடிந்துவிடக்கூடாது என்பது ஒரு சிலரின் வேண்டுதலாய் இருந்தது” போன்ற வரிகள் அடி வயிற்றில் அமிலம் சுரக்கவைப்பவை.

கிடைக்காத சுகத்திற்கு ஏங்குவதும் கிடைத்தபின் அதையே சுமையென எண்ணிக்கொள்வதும், சிறையடைப்பில் பழகிப்போன அடிமைத்தனமே சுகம் என பரிதவிப்பதுமாய் ‘சிறையுடைப்பு’ என்ற சிறுகதை மானங்கெட்ட மனித மனத்தைப் பிரதிபலிக்கிறது. அதுவும் குறிப்பாக ஒரு ஜோசிய சீட்டு எடுக்கும் பறவையான கூண்டுக்கிளியின் மூலம் கூறியிருப்பதுதான் சிறப்பு.

’நிழல் வாழ்க்கை’ என்ற சிறுகதை ஒரு பெண்ணின் (மனைவியின்) பொசசிவ்நெஸ் ஐத் தாண்டி ஒரு மகள் தந்தைக்கு செய்யும் உபதேசம்.

நமக்கெதுக்கு வம்பு என ஒவ்வொன்றிற்கும் ஒதுங்கிப்போகும் சராசரி மனிதனின் சாகஸ சிந்தனைதான் ‘பொரிவிளாங்காய்’ என்ற சிறுகதை. ஒற்றை வரி கதைக்கருதான் என்றாலும் ஒன்பது பக்கங்களுக்கு மேல் நீட்டித்து கதைசொல்லி கடந்துவந்த காலவோட்டத்தை நீர்த்துப்போன நினைவலைகளால் நிரப்பி விடுகிறது.

ஒரு நேர்மையான ஆட்டோ ஓட்டுனரின் அழகியல் வாழ்வும் அது சார்ந்த சாராம்சமுமாய் நகரும் ‘கூலி’ என்ற சிறுகதை. இறுதியில் ஊடகங்களின் மறுபக்க முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

உண்மைச் சம்பவம் என்பதை மறைமுகமாய் சுட்டிக்காட்டும் ‘என்றும் அன்புடன்’ என்ற சிறுகதை உளவியல் மற்றும் உடலியல் சிக்கல்களுக்கு விடைதெரியாமல் விழிக்கும் திருநங்கை மற்றும் திருநம்பிகளின் வாழ்வியல் நெறிமுறைகளை அழகாக சித்தரிக்கிறது.

நேர்த்தியாய் ஆடை உடுத்திக்கொண்டு வக்கிர புத்தியோடும், சுயநலத்தோடும், பாரபட்சமில்லாமல் ஏமாற்றிக்கொண்டும், பஞ்சமா பாதகங்களில் ஒன்றைக்கூட விட்டுவைக்காமல் நல்லவன்போல் வேடமிட்டுக் கொண்டு ஓடும் ஓட்டத்தில் இல்லாத அரியண்டமா (அருவருப்பு) வெளிநாட்டில் ஆடையில்லாமல் ஓடும் மனித நிர்வாணத்தில் உள்ளது? என்ற தத்துவார்த்தக் கேள்வியோடு நிறைவடைகிறது ‘நிர்வாண மனிதர்கள்’ என்ற சிறுகதை. அதனால்தான் இப்புத்தகத்தின் தலைப்பே ‘நிர்வாண மனிதர்கள்’.

இப்படியாக அனைத்துச் சிறுகதைகளையும் சுருங்கச் சொல்லிக் கொண்டே செல்வது சிறுபிள்ளைத் தனமாகக்கூட தெரியலாம். ஆனால் இப்புத்தகத்தை வாசித்த பிறகு மனதுக்குள் நீடிக்கும் இறுக்கமான வெற்றிடம், அதற்கான தீர்வைத் தேடி ஏதேனும் மெனக்கெடவேண்டும் என சிந்தனையை வலுவேற்றுகிறது என்பதுமட்டும் உறுதி.

இன்றளவில்கூட புலம் பெயர்ந்த படைப்புகள் இலக்கிய வெளியில் சற்று குறைவாகவே தென்படுகின்றன. தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருந்தாலும் தன் தாய்நாட்டின் வாழ்க்கையை (பண்பாட்டை) மறக்க முடியாத நினைவுகளுக்கு மத்தியில் தன் தொலைந்துபோன சுவடுகளைத்தேடும் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மேலும், புகலிடக் கலாச்சாரத்திற்கு பழகிப்போன அல்லது தன் தாய் மொழியை மறந்து வாழும் இளம் தலைமுறையின் மேல் அக்கறைகொண்டு ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும் என எழுதப்படும் இதுபோன்ற சிறந்த புலம்பெயர் இலக்கியத்திற்கு இந்த மதிப்புரை சமர்ப்பணம்.

- வே.சங்கர்

Pin It