“எதற்கும் பயப்படாதே
அடியெடுத்து வை
தொடர்ந்து முன்னேறு
சோதனைகள் விலகும்
பாதை தெளிவாகும்
நோக்கத்தை அடைந்தே தீருவாய்
அதை யாராலும் தடுக்க முடியாது.”
- சுவாமி விவேகானந்தர்

dayalan 251உண்மைதான். அப்படித்தான் எழுத்தாளராய் தொழிற்சங்கவாதியாய் சமூகப் போராளியாய் பன்முகத் தன்மையுடன் இலட்சியத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பெரம்பலூர் தோழர் பி.தயாளன் அரசுப் பணியையும், தொழிற்சங்கப் பணியையும், இலக்கியப் பணியையும் ஒன்றுக்கொன்று பலவீனமாகாமல் கையாண்டு வரும் அவரது நான்காவது கட்டுரைத் தொகுப்பான “செம்மொழி செதுக்கிய சிற்பிகள்” எனும் நூல் எழுத்தாளர் பொன்னீலன் அணிந்துரையுடன் அற்புதமாக வந்துள்ளது.

இலக்கியப் புள்ளிகள், இலக்கணக் கோடுகள், புதுமை நதிகள் என நூலை மூன்று பகுதிகளாகப் பிரித்து 51 ஆளுமைகளைத் தனித்தனிக் கட்டுரைகள் மூலம் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இன்றைய இளைய சமுதாயத்திற்கு அவ்வளவு பேரையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஏனெனில் கைபேசியிலும் வலைதளத்திலும் தொலைந்து போகும் இளைஞர்கள் பழைய மறைந்த இலக்கிய ஆளுமைகளை – சமூக ஆர்வலர்களை – தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர்களை அக்கறையாய் அறிந்து கொள்ளும் ஆர்வம் மிகக்குறைவே. இலக்கியப் புள்ளிகளில் 17 பேரை அறிமுகம் செய்து வைத்துள்ளார் நூலாசிரியர்.

“இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியைப் பாருங்கள். இந்த நாடு முழுவதும் தேடினாலும் இவரைவிட சிறந்தவரைக் காண்பது அரிது. கீழ்த்திசை அறிவாயினும் மேற்றிசை அறிவாயினும் அதனைப் பெரிதும் உணர்ந்தவர். ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் நல்லவை எவையோ அவற்றை எடுத்துக் கொள்ளும் பெருந்தகையாளர்” என சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் மூலம் பாஸ்கர சேதுபதியை பைந்தமிழ் மன்னராக அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆலயத்திற்குள் புகுந்த அரிசன மக்களைத் தடுத்து வழக்கு தொடுக்கப்பட்டதும் மன்னர் பாஸ்கர சேதுபதி தலையிட்டு அமைதி ஏற்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்கள் கமுதி மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட உரிமையுண்டு என்பதை அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியதையும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் சுதேசிக்கப்பல் குழுமத்திற்கு அக்காலத்திலேயே ஒன்றரை லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவரை அறிமுகப்படுத்தியுள்ளார் பி.தயாளன். தமிழ்த்தாத்தா உ.வே.சா, மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோருக்குத் தமிழ் கற்றுத் தந்தவர் மாபெரும் புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பதையும் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் தமிழ்வேள் உமாமகேசுவரனார் அரும் பணியாற்றினார் என்பதையும் உணரமுடிகிறது.

தனித்தமிழ் இலக்கியத் தந்தை மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் தந்தையைப் போலவே தமிழ் வளர்ச்சிக்காக மட்டுமின்றி பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பெரும்பாடுபட்டதையும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது. தமிழிசைத் தளபதி ஆர்.கே.சண்முகம் செட்டியார் சிறந்த பதிப்பாளராகத் திகழ்ந்ததோடு 1920ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதையும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் சிறப்பாகப் பணியாற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த கவிஞர், உரைநடை வித்தகர் எனப் பன்முகத் தன்மையுடன் திகழ்ந்த சோமசுந்தர பாரதியாரை அறிமுகம் செய்யும் நூலாசிரியர் தமிழிலக்கியத்துக்காகத் தொண்டாற்றியதையும் எடுத்தியம்பியுள்ளார். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளதை இந்நூல் மூலம் அறியமுடிகிறது.

அக்காலத்தில் அந்நிய மொழிமோகம் பல்கிப் பரவியிருந்ததைத் “தாய்நாட்டிலிருந்து கொண்டே பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றிவிட்டதே இந்த அந்நிய மொழிக் கல்வி என அண்ணல் காந்தியடிகள் போன்ற சான்றோர் கூறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை” என 1954 ஆம் ஆண்டு உலகம் போற்றும் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி முழங்கியதை உணர்த்துகிறார் நூலாசிரியர்.

“ஆட்சிச் சொல் அகராதி”, “ஆட்சித் துறை தமிழ்”, “ஆட்சித்தமிழ்”, “தமிழில் எழுதுவோம்" என பலநூல்களை எழுதி தமிழுக்கு வலுசேர்த்த ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனாரை இந்நூல் அறிமுகப்படுத்தியுள்ளது. உலக தமிழ் பேரமைப்பு 2005ல் நடத்திய மாநாட்டில் உலகப் பெருந்தமிழர் எனும் விருதுபெற்ற வ.அய்.சுப்பிரமணியம் என்பவரை நம்மால் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

இலக்கணக் கோடுகள் எனும் தலைப்பில் 17 ஆளுமைகளை இந்நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார் பி.தயாளன் அரசு நிகழ்வுகளின் துவக்கத்திலும் பள்ளிகளில் அன்றாடம் காலை துவக்கத்திலும் பாடப்படும் புகழ்பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்தைப் படைத்த மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளைக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இங்கு குறிப்பிடத்தக்கது.

“தங்கள் கோத்திரம் என்ன?” – விவேகானந்தர்.

“எனக்கும் கோத்திரத்திற்கும் சம்மந்தம் ஒன்றும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” - பெ.சுந்தரம்பிள்ளை.

மகாகவி பாரதியுடன் நட்பு கொண்டவரும், தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபட்டவருமான காசிவிசுவநாதப் பாண்டியன் தன்னுடைய திரைப்பட அரங்கிற்கு பாரத மாதா டாக்கீஸ் என பெயர் சூட்டியதும், இவரது திரையரங்கில் பங்கிம் சந்திரரின் வந்தேமாதர கீதத்துடன் திரைப்படத்ததைத் துவக்கியதும் அரிய செய்திகள். இறுதி மூச்சுவரை கதராடையுடன் செந்தமிழைப் பாடிய செய்குத் தம்பிப் பாவலர் பற்றித் திறம்பட எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.

கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாச்சலனார், சீர்மிகு செந்நாப்புலவர், கார்மேகக் கோனார், இசுலாமியர்களின் மண்டிக்கிடந்த மூடக் கொள்கைகளையும் கண்மூடிப்பழக்க வழக்கங்களையும் களைந்தெறியப் போராடிய புரட்சியாளர் இசுலாமியர் கண்ட பெரியார் தஞ்சை தாவூத் ஷேக் ஆகியோரைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் பி.தயாளன்.
நாமக்கல் கவிஞர் தம் கவிதைகளால் தமிழர்களைத் தட்டி எழுப்பியதோடு நில்லாமல் அரசவைக் கவிஞராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும், சாகித்ய அகாடமி உறுப்பினராகவும் பணியாற்றி பத்மபூக்ஷன் விருதும் பெற்றுள்ளார் என்பது இந்நூலில் காணக்கிடக்கிறது.

தமிழக அரசு இசைக்கல்லூரி இயக்குநராக பத்தாண்டுகள் பதவி வகித்த சி.எஸ்.ஜெயராமன் 1972ல் கலைமாமணி விருது பெற்றுள்ளதையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளமுடிகின்றது. உலகத்தமிழ் முகில் இலக்குவனன் குறித்தும் சிறப்பாக எழுதியுள்ளார் நூல் ஆசிரியர்.

மூன்றாம் பகுதியாக புதுமை நதிகள் எனும் பகுதியில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர். “பல துறைகளில் தடம்பதித்த இலக்கிய ஜாம்பவான் கு.ப.ராஜகோபாலன் போல் பெண்ணினத்தின் சார்பில் தமிழ் இலக்கியத்தில் வலுவான போர்க்குரல் எவராலும் எழுப்பப்படவில்லை" எனும் எழுத்தாளர் அசோகமித்திரனின் குறிப்பு இந்நூலில் காணப்படுகிறது. தனது நாவல்களில் விதவை மறுமணம், வரதட்சணைக் கொடுமை, தேவதாசி முறை ஒழிப்பு, கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் துயரம், கைம்பெண்களின் அவலம் போன்ற பெண்களின் வாழ்வியல் துன்பங்களைக் கூறி அவற்றிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளையும் பதிவு செய்துள்ள வை.மு.கோதைநாயகி குறித்தும் நல்ல பதிவுகள் விரவியுள்ளன.

இலக்கியச் செம்மல் துரைக்கண்ணன், மக்கள் எழுத்தாளர் விந்தன் ஆகியோர் பற்றிய அரிய செய்திகள் இந்நூலில் உள்ளன. தமிழ் வளர்ச்சிக் கழகம் அளித்த சிறுகதைக்கான பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளர் விந்தன் என்றும், வாழும் காலத்தில் பாட்டாளிகளின் துயரங்களைப் படைப்புகளில் கொணர்ந்த சிறந்த இலக்கியவாதி என்பதையும் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” எனும் முழக்கத்தின் மூலம் தமிழர்களைத் தட்டி எழுப்பியதோடு 1942 முதல் 1953 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக செயல்பட்டதையும் உணர முடிகிறது. இந்திய விடுதலைப்போரில் மாணவப்பருவத்திலேயே வீதிகளில் இறங்கிப் போராடியவர்கள் பலர். அவர்களுள் உலகம் சுற்றும் தமிழன் ஏ.கே.செட்டியார் ஒருவர் என்பதையும் விடுதலைப்போரில் பகத்சிங், ராஜகுரு சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்து இளங்கலைப் பட்டப்படிப்பை துறந்தவர் ம.பெ.தூரன் என்பதையும் இந்நூலின் மூலம் அறியலாம்.

திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன், சமூக சீர்திருத்தப் போராளி அ.மு.பரமசிவானந்தம் ஆகியோரை பற்றிய அரிய செய்திகளையும் இந்நூலில் தொகுத்துள்ளார் நூலாசிரியர். மனிதநேயத் துறவி குன்றக்குடி அடிகளார் தமிழுக்காகவும், மதநல்லிணக்கத்துக்காகவும், பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். மேலும் அவர் தீண்டாமை ஒழிப்பு குழு தலைவராகவும், மேலவை உறுப்பினராகவும், அனைத்திந்திய சமாதானக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு எழுத்து சீர்திருத்த குழு உறுப்பினராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பாடத்திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியது பல அறிந்திராத அரிய செய்திகள்.

இந்நூலின் அணிந்துரையில் பொன்னிலன் முத்தாய்ப்பாய்க் குறிப்பிட்டுள்ளவாறு பொதுவுடமைக் கவிஞர் ஜீவாவை அழகுறப் படம்பிடித்து காட்டியுள்ளது பாராட்டத்தக்கது. “இந்தியாவின் சொத்து ஜீவா” என மகாத்மா புகழ்ந்துரைத்தது, பெரியார் தலைமையிலான வைக்கம் தீண்டாமை எதிர்ப்புப் போரில் பங்கேற்றது, குருகுலத்தில் பின்பற்றப்பட்ட வருணாசிரம முறைக்கு எதிராகப் போராடியது, தாழ்த்தப்பட்டோருக்கான ஆலய நுழைவுப்போராட்டங்களில் பங்கேற்க உள்ளூர் வைத்தியர்களின் சினத்துக்கு ஆளாகி கத்திக்குத்து பட்டது, விடுதலைப்போரில் காங்கிரசுக்காக சிறையேகி, விடுதலையின்போது கம்யூனிஸ்டாக மாறியது, மாவீரன் பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகனானேன்” எனும் கட்டுரையைத் தமிழாக்கம் செய்து சிறை தண்டனை பெற்றது, 2ஆம் உலகப் போரின் போது யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து சிறையேகியது, தலைமறைவு வாழ்க்கையின்போது தொழிலாளர் போராட்டங்களுக்கு வழிகாட்டியது என அர்த்த அடர்த்தி மிக்க நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

“தயாளன் தந்த தமிழ் வரலாற்றை
ஒருமுறை படித்தால் தலைமுறை நிமிரும்”

என மு.பழனி இராகுலதாசன் இந்நூலில் வாழ்த்துரைத்தது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. “செம்மொழி செதுக்கிய சிற்பிகள்” அனைவர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இடம் பெற வேண்டியது இன்றியமையாதது.

“செம்மொழி செதுக்கிய சிற்பிகள்” – பி.தயாளன் நியூ செஞ்சுரி புக் ஷவுஸ் (பி) லிட் (பக்கம் 252 – விலை ரூ.200)

- பெரணமல்லூர் சேகரன்

Pin It