நதி ஒரே திசையில்தான் நகர முடியும். நதிப்படகு இரு திசைகளிலும் நகரும். நதி மீன் நான்குதிசைகளிலும் நகர முடியும். ஆனால், அதை ரசித்துக் கொண்டிருக்கும் மனிதனின் மனமோ எல்லா திசைகளிலும் நகரும். இது பெர்க்ஸனின் உருவகக் கதை தரும் செய்தி. இதை நாம் படைப்புகளுக்கும்பொருத்திப் பார்க்கலாம். சில எழுத்துக்கள் ஒற்றைத்தனமாய் அமைந்திருக்கும். ஒரு சில படைப்புகள் கொஞ்சம்கூடுதலாகச் சென்று படைப்பாளி, வாசகன் என்ற இருமை அனுபவத்தைக் கோரும். சாத்தியப்படுத்தும். வேறு சில படைப்புகள் நாலாபுறமும் விசிறியடித்து பன்முகப் படைப்பாய் விகசிக்கும். ஆனால், ஒரு உன்னதப் படைப்பு என்பது எல்லா வாசகனுக்கும் எல்லாபுறமும் எல்லையற்று விரியும் அனுபவத் தொகுப்பாய் காலகாலத்தையும் விஞ்சி நிற்கும்.

THOPPUL PULLI WRAPPERபொதுவாக படைப்புப் புலங்களில் தலைமை வகிப்பது கவிதைகள்தான். ஒரு தேர்ந்த சிறுகதையோ அல்லதுஒரு புதினக் காட்சியோ அல்லது அந்தப் புதின மாந்தரின் பாத்திரத்தின் ஒரு செய்கையோ நாம் கவிதைபோல என்று விளிப்பதுண்டு. வியப்பதுண்டு. ஆக, கவிதை என்பது காலகால உன்னதம். தீவிர மன எழுச்சியின் சன்னதம். எம்மைப் பொறுத்தவரை நான் எழுதுவது கொஞ்சம். ஆனால், படிப்பது நிறைய. அதன் வரிசையில் சமீபத்தில் வெளியான கவிஞர் அகவியின் 'தொப்புள் புள்ளி' என்கிற கவிதை நூலைப் படித்து முடித்தேன்.

'தொப்புள் புள்ளி' தலைப்பு எம்மை வெகுவாக யோசிக்க வைத்தது. பொதுவாக இன்றைய வழக்கில் தொப்புள்என்றும் நல்ல தமிழ்ச் சொல்லாக 'கொப்பூழ்' என்று இலக்கியங்களிலும் விளிக்கப்படுகிற தொப்புள், தாய்க்கும் நமக்கும் உறவுக்கொடி, உணவுக்கொடி, உணர்வுக்கொடி, நம் உருவ வடிவமைப்புக் கொடி என மகத்தானதொரு மையம் ஆகும். அந்த மகத்தானதொரு மையத்தை விரசமாக்கி விகாரமாக்கி, சீரழித்து, சின்னா பின்னமாக்கி, அதை ஒரு பாலியல் பண்டமாக்கிய பெருமை நம் சினிமாக்காரர்களுக்கு உண்டு. பம்பரம் விடுவதும், மணல்அள்ளிப் போடுவதும், ஏன் உச்சமாய் ஆம்லேட் போடுவதுமாய்... விரசமாக்கி, விகாரமாக்கி, சீரழித்து, அதை ஒருபாலியல் பண்டமாக்கிய பெருமை நம் சினிமாக்காரர்களுக்கு உண்டு.

ஆனால், உண்மையில் நமது கலை இலக்கியங்களிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் மிக உயர்வாகவே, மரியாதையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆன்மீக வழிபாட்டு மையங்களிலும் கூட இதன் தாத்பர்யம் முகாமையாகியிருக்கிறது. ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும், அதன் எதிரே செம்மாந்து காணப்படும் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று நாம் வணங்கக்கூடாது என்றொரு விதி உண்டு. ஏன்? ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக்காற்றினால்தான் கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு உயிர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக்கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இது கோயிற் கட்டுமான இடவமைப்புக் கலையின் விதிகளுள் ஒன்றாகும். அதன்படி இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே, நாம்மூலவருக்கும் நந்திக்கும் இடையே குறுக்கே நின்று வணங்கக் கூடாது என்கிறது கோயிலமைப்பு விதி.

நம் தமிழ் இலக்கியங்களில் பொருநராற்றுப்படையில் ஒரு பாடினியின் வடிவழகை வர்ணிக்கும்போது "நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்" என்று குறிப்பிடப்படுகிறது. "நீரிடத்துத் தோன்றும் சுழிபோன்ற இலக்கணம் பொருந்திய தொப்புள்" என்பது இதன் பொருளாகும். சீவக சிந்தாமணியில் விசயையின் தோற்றம் பற்றிக்குறிப்பிடுகிறபோது "அங்கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்" என்று தொப்புள்வர்ணிக்கப்படுகிறது. ஒரு பெண்ணிற்கு தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தால் செல்வம் பெருகும் என்பது அந்தக் காலத்து நம்பிக்கை. இடது பக்கமாக சுழித்திருந்தால் உகந்தது அல்ல என்றும் நம்பப்பட்டது. தொப்புள்என்பது பெண்களுக்கு மட்டுமா என்ன? ஆண்களுக்கு இல்லையா? இலக்கியத்தின் கண்களுக்கு அதுபடவில்லையா? என்று கேள்விகேட்டு அவசரப்படக்கூடாது. நாச்சியார் திருமொழி ஆண்களுக்கும் அழகியகொப்பூழ் உண்டு என்று சொல்கிறது "குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்எம்மானார்" என்று "அவன் குழல் அழகு, வாய் அழகு, கண் அழகு, தாமரை மலர்ந்து கிடக்கும் தொப்புள் அழகு"என்று அழகுற வர்ணிக்கிறது

இப்படியான கொப்பூழ் என்கிற தொப்புளை 'தொப்புள் புள்ளி' என்று தலைப்பிட்டு என்னவாகக் காண்கிறார்கவிஞர் அகவி? கவிஞர் அப்துல் ரகுமான், தான் படித்த கல்லூரியை இரண்டாவது கருப்பை என்பாரே அதுபோல, கவிஞர் அகவி தாம் பிள்ளைப் பிராயத்தில் படித்த பள்ளியை இரண்டாவது கொப்பூழ் கொடியாகக் காண்கிறார். அதுமட்டுமல்ல. அவரின் அரிச்சுவடிக்கு அடியெடுத்துக் கொடுத்த முதலாசான் பீமசேனன், மார்த்தாள் டீச்சர், பல்லைக் கடித்துத் தண்டிக்கும் செல்லத்துரை வாத்தியார், காது நுனியையும் மென் தொடைச் சதையையும்திருகித் திருகிக் கற்பித்த சிவானந்தம், வெண்பாவூர் துரைராசு, பழனிமுத்து எனத் தொடர்ந்து தமது அடிநாளைய ஆசிரியப் பெருமக்களையெல்லாம் நினைவு கூர்கிறார். அதோடு மட்டுமல்ல கால்சட்டை காலத்து நட்புநெத்தமுட்டி வரதராசன், மஞ்சள்மாவு கோதுமை உப்புமாவை சுடச்சுட பரிமாறிய செல்லம்மா ஆயா என பசிய நினைவுகளாய் அந்த தொப்புள் புள்ளியைக் காணுகிறபோது, நமக்கு மரியாதை கூடுகிறது. கிட்டத்தட்ட நம் எல்லோருக்கும் வாய்த்த அனுபவம்தான் இது என்றாலும், அதை மடைமாற்றி நல்லதொரு கவிதையாய் நெய்கிறார் கவிஞர் அகவி.

"பெருமழை நின்றபிறகு/ கூரை விளிம்பில்/ குதிக்கும் நீர்க்குஞ்சுகள்" என்று சட்டென்று அழகியல் கட்புலப்படிமமாய் அழகியதொரு காட்சியை நம் முன் விரித்துப்போடுகிறார் 'சிறிதினும் சிறிது பார்' என்கிற கவிதையில்.(ப.87) "சூரியனின் கறுப்பு வெளிச்சம்" (ப.62) என்று நிழலை உருவகிக்கிறபோதும், "புளியம்பூ உண்ணும்/பெருவீடாய்க் கொண்ட/ மென் பஞ்சு அணில்கள்/ மரஞ்சாய்த்த முரட்டு எந்திரத்தை/ சபிக்கும்... 'மனிதர் தழைக்க'(ப.30) என்கிற கவிதையில், நமக்கு அழகுணர்வைவிட அளவிளாக் கோபம்தான் எழுகிறது.

இயற்கையின் மீதான நேசத்தையும், அழகிலையும் மட்டும் இவர் பாடு பொருளாக்கவில்லை. அடக்கப்படும், ஒடுக்கப்படும், தாழ்த்தி வைக்கப்படும், எளிய மனிதர்கள், கூலி உழைப்பாளிகள் என அவர்களின் வதைபடும்வாழ்வை, வலி மிகும் வாழ்வை, கருணையோடு மட்டும் அல்ல. அந்த அவல வாழ்வின் விடுதலைக்கும், விடிவுக்கும் சேர்த்துப் பாடுகிறார். கூடவே நம் தொப்புள் கொடி உறவுகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டஇன அழிப்பு வன் கொடுமைகளுக்கெதிராய் கொதித்தெழுந்தும் பாடியுள்ளார்.

இங்கு புதுக்கவிதை, மரபுக்கவிதை என்கிற பிழையான சொல்லாடல் காலத்தில் நாம் இயங்குகிறோம். உண்மையில் மரபில்லாத கவிதை இருக்க முடியாது. புதுமையில்லாமல் ஒரு கவிதை இயங்கவும் முடியாது. எழுதப்படுகிற மொழியின், எழுதுகிற கவிஞனின் இனத்தின் மரபின்றி எந்தப் படைப்பும் எழ முடியாது. ஆனால், நாம் இங்கு மரபு என்று சொல்லிக் கொள்வது என்பது எதுகை, மோனை, சந்தம் என்கிற உருவ உத்தியே அன்றிவேறில்லை. அதன் நோக்கில் கவிஞர் அகவிக்கு அருமையாய் சந்த இயைபுகளோடு கூடிய, எதுகை, மோனைகளின் களிநடங் கொள்ளும் கவிதைகளைப் படைத்தளிக்கும் வல்லமை வாய்த்திருக்கிறது என்பதையும்வாசகனுள் கடத்திப்போகிறார்.

"தொப்புள் புள்ளி" கவிஞர் அகவி. முதல் பதிப்பு : செப்டம்பர் 2015.

விலை ரூ. 80 வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011.

Pin It