'இப்படிக்கு மழை' நூலைப் பற்றி…

சில நாட்களுக்கு முன்பு ஒரு தேவதையைச் சந்தித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும் குட்டி தேவதை. தோழர் ஒருவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றபோது வீட்டின் வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். வழக்கமான குழந்தைகளுக்குரிய தன்மையுடன் "அப்பா ஒங்களப்பாக்க யாரோ வந்திருக்காங்க.." என்று கத்தியபடி உள்ளே செல்வாளோ என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவள் அப்படி இல்லை. புன்னகை தவழ எழுந்து வந்து, “வாங்க தோழர்.. உக்காருங்க.." என்றபடி கை குலுக்கி வரவேற்றாள். அவள் கண்களில் எவ்வளவு தன்னம்பிக்கை. செயலில் எவ்வளவு கம்பீரம். பண்பில் எவ்வளவு மேன்மை. பேச்சில் எவ்வளவு ஆளுமை. பெரியாரிய தோழர்களின் வீட்டில் வளரும் பெண் குழந்தைகள் வெறும் தேவதைகளாக மட்டும் இருப்பதில்லை. அறிவுசார் உலகின் அடுத்த தலைமுறை ஒளிக்கீற்றாய் பிரகாசிக்கிறார்கள்.. அந்த இளம் தோழரைச் சந்தித்த பிறகு எதிர்காலச் சமூகத்தின் நம்பிகை இன்னமும் அதிகரித்திருக்கிறது. அவர் பெயர் கனல் மதி. கவிஞர் கனல்மதி.

நவீனக் கவிதைகள் என்னும் பெயரில் குடிகாரனின் உளறலைப் போன்ற மூன்றாம்தர வார்த்தைகளில் ஜாலம் காட்டிக்கொண்டு, பாலியலைத் தவிர பேசுவதற்கு எதுவுமே உலகில் இல்லையென்ற சிந்தனைச் சகதிக்குள் சீரழிந்து கிடக்கும் கவிஞர்கள் மத்தியில் சமூகம் குறித்த பார்வையும், வர்க்கக் கண்ணோட்டமும், ஏற்றத்தாழ்வு, ஆதிக்க மனோபாவம் குறித்த கோபமும் எளிய வார்த்தைகளில் அழகியலோடு வெளிப்படுத்தியிருக்கும் 'இப்படிக்கு மழை' என்ற கவிதைத் தொகுப்பிற்குச் சொந்தக்காரர் தோழர் கனல்மதி.

முன்னுரையில் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சொல்லியிருப்பதுபோல, “அவர் தாய்மொழிக் கல்வி பெறுவதும், ‘பிராய்லர்' பள்ளிகளில் அல்லாமல் அரசுப்பள்ளியில் பயில்வதும், கொள்கைக் குடும்பத்தில் வளர்வதும்தான் இம்மன ஓட்டத்தை வழங்கியிருக்க முடியும்.."

'மழையை யாரிங்கே மழையாகப் பார்க்கின்றனர்' என்ற வைரமுத்துவின் கவிதையில் மாணவன் மழைக்கு வைத்த பெயர் விடுமுறை, வியாபாரி மழைக்கு வைத்த பெயர் சனியன், விவசாயி மழைக்கு வைத்த பெயர் சாமி.. என்றெல்லாம் அடுக்கிக்கொண்டு போவார். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சொல்ல வேண்டும் மழையை மழையாகப் பார்ப்பது மட்டுமின்றி, அதை அணு அணுவாய் ரசித்து, அதன்மீது கொள்ளைக் காதல் கொண்டு, அழகியலோடு பாடவும் தெரிந்த இளஞ்கவிஞர் ஒருவர் திருப்பூரில் இருக்கிறார் என்று.

'இப்படிக்கு மழை'யில், மழை காதலோடு கசிகிறது, அழகியலோடு பொழிகிறது, விளிம்புநிலை மக்களின்மேல் பரிவுகொண்டு துக்கத்தோடு அழுகிறது, ஒடுக்குமுறைக்கெதிராக கோபத்தோடு எழுகிறது. மொத்தத்தில் வாசிப்பவர்களின் கண்களுக்குள் இயல்பாகவே கரைகிறது. இனி 'இப்படிக்கு மழை'யில் நாமும் கொஞ்சம் நனையலாம்.

எப்படி மறுப்பேன்
விழிகள் சுருக்கி உதடுகள் பிதுக்கி
ஒரு முறை எனக் கெஞ்சும் குழந்தையிடம்
மழையில் நனைய வேண்டாமென்று..

குழந்தை மனம்கொண்ட தாயின் உணர்வு இப்படித்தான் சிந்திக்கும். உண்மையில் குழந்தைகள் மழையை ஆராதிக்கின்றன, கொண்டாடுகின்றன, மகிழ்கின்றன. ஒருவேளை மழை குழந்தைகளுக்கானதோ..? அதனால்தானோ என்னவோ மழையில் நனையும்போதெல்லாம் நாம் குழந்தையாகிப் போகிறோம்.

"மேகம் தன்னை உடைத்து நுனுக்கி
தூவுகிறது மழையாக.. "

"ஆடு மேய்ந்த புல்லுக்கு
மருந்து போடுகிறது பனித்துளி.."

"பழுத்துத் தொங்குகிறது கார்மேகம்
பறித்துச் செல்கிறது காற்று.."

"மழை வருகையில் பூக்கிறோம்
நானும் வானவில்லும்.."

இதுபோன்ற எளிமையான உவமைகளோடு அற்புதமான அழகியலையும் தாங்கி வருவது கனல்மதியில் எழுத்தின் வெற்றி. ஒவ்வொரு எளிய நிகழ்வையும் கவித்துவத்தோடு பார்க்கத் தெரிந்த ரசிக்கத் தெரிந்த மனதுக்குத்தான் இதுபோன்ற உவமைகள் வசப்படும். கனல்மதிக்கு வசப்பட்டிருக்கிறது.

"குளிர்ந்த மரத்தடியில் நிற்கிறேன்
சின்னதாய்ச் சிறகு முளைத்துக்
கூட்டுக்குள் சென்று அடைகாத்து
மரத்தடிக்குத் திரும்பி வருகிறேன்
சில நொடிகளில்.."

இயற்கையை ரசித்து, இயற்கையோடு ஒன்றிப்போய், இயற்கையோடே வாழ்ந்து திரும்பும் மனோநிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்..? கவிஞரின் வரிகள் நம்மையும் அந்த சூழலுக்குள் இழுத்துச் சென்று ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது.

"என் உயிரினும் உயிரான மழையைத்
திட்டியுரைத்தாள் அம்மா
குடிசையின் வழி ஒழுகும் மழை.."

“என் குடிசைக்குள்
குளிர்சாதனப் பெட்டியை
இணைத்துவிட்டது மழை
இலவச இணைப்பாக மண்வாசனை.."

“புகை நிறைந்த நகரங்களிலும்
இருக்கத்தான் செய்கின்றன
சில பள்ளி மரங்களில் அணில்கள்"

“வெட்டப்பட்ட மரத்தின் கதையைச்
சொல்லிக்கொண்டே இருக்கின்றன
வெட்டப்படாத வேர்கள்.."

ஏழை வர்க்கத்தின் மழை அனுபவங்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்பதையும் நகரமயமாக்கலின் இயந்திரத்தனமான போக்கு அழித்தெறிந்த மரங்கள், அதைச் சார்ந்து வாழ்ந்த ஜீவராசிகளின் அழிவையும் சொல்லும்போது சமூகத்தின் மனசாட்சியின் உச்சந்தலையில் கொட்டிச் செல்வது போல இருக்கிறது.

"பண்பாடு எனும் முகமூடியை விலக்கி
மூச்சுவிடத் துவங்குகிறாள் பெண்
பலநாட்கள் ஆகிவிடாது கிழித்தெறிய…"

“நிலத்தைப் பிளந்து துடிக்கிறது துளிர்
கருப்பு விதையிலிருந்து
கவ்வ வரும் பிணம்தின்னிக் கழுகுகளை
ஒற்றைத்தடியில் வீழ்த்திச் சாய்த்து
தடி ஊன்றி எழுகிறான்
கருஞ்சட்டைக் கிழவன்
பிணந்தின்னிப் பிணங்களைப் புதைக்க
கருப்புச் சவப்பெட்டிகள்.."

"சீல்வடியும் நிலவென ஆண்மை
சூரியக்குதிரையுடன் என்றேனும்
எரித்துப் பொசுக்கும் வெறியுடன்
பெண்ணுரிமை.."

போன்ற கவிதைகளில் கொள்கை சார்ந்த கோபங்கள் கொப்பளிக்கின்றன. விடுதலை பெறத் துடிக்கும் ஒரு அடிமையின் கோபம் இப்படித்தான் பேசும். விர்ஜீனிய அடிமைகளின் ராப் இசை வடிவம் போல அழகியலும் சோகமும் கோபமும் ஒருசேர வெளிப்படும் கவிதைகள் இதுபோல ஏராளம்.

"கொஞ்சம் பொறு
இறந்துவிடுகிறேன்
பிறகு அழு.."

“கவிதைக்கான வரையறைகள்
ஏதுமில்லை அவனிடம்
ஆனாலும் கவிதையாகவே நிற்கிறான்.."

"பொறாமைதான் அவனுக்கு
அவனைவிட மழையை அதிகம் நேசிப்பதால்.."

“சிரிப்புகளை மிச்சம் வைத்துக்கொள்
நினைவுகளுக்குப் பயன்படட்டும்.."

என்பன போன்ற சக உயிரின்மீதான நேசிப்பை, ஆதிக்கமற்ற அன்பை, சிலாகித்து மகிழும் கவிதைகளும் இல்லாமலில்லை. மொத்தத்தில் இப்படிக்கு மழை வாசித்து முடிக்கையில் நமக்குள் மழையடித்து ஓய்ந்திருக்கும். ஆனாலும் அதன் குளிர் ஸ்பரிசம் பல நாட்கள் நீடித்திருக்கும்.. தோழர்களுக்கு இந்தப் புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.. நீங்களும் வாசியுங்கள், மழையை நேசியுங்கள், மழையைப் பருகிவாழும் சக்கரவாகப் பறவையாய் கொஞ்சநேரம் மாறித்தான் போவீர்கள்..

இளம் தோழர் கனல்மதிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..

இப்படிக்கு மழை.. கவிதை நூல்
முகிழ் திரை ஓவியம்
தொடர்புக்கு 9842448175
விலை 150 ரூபாய்

- சம்சுதீன் ஹீரா

Pin It