'வந்தேறிகள்' தலைப்பைப் பார்த்ததும் பல்வேறு சிந்தனைகள் எழுந்தன. ஏனெனில் இன்றைய தமிழ்ச் சூழல் அப்படி. பொதுவாக இன்றைய தமிழகச் சூழலில், எழுந்துவரும் தமிழ்த்தேசியர்கள் முன் வைக்கும் தீவிர சொல்லாடல்களில் ஒன்று இந்த 'வந்தேறிகள்' என்பது. இங்கு பிறமொழி பேசுவோர் வந்தேறிகள். தெலுங்கு வந்தேறிகள், வடுக வந்தேறிகள், மலையாள வந்தேறிகள், இஸ்லாமிய வந்தேறிகள் என ஏற்கெனவே இந்தத் தமிழ் நிலத்தை ஆட்சி செய்தவர்களை வந்தேறிகள் என்றும், அவர்களின் மிச்ச சொச்சமாய் இங்கு தங்கிவிட்டவர்களையும் சேர்த்து வந்தேறிகள் என்கிற பொதுச் சொல்லாடல்களால் விளிப்பர். ஈழ மண்ணிலிருந்து வெளியேறியவர்களை ஏதிலிகள் என்றும் புலம் பெயர்ந்தவர்கள் என்றும் வேறொரு சொல்லாடல்களால் விளிப்பர். இதிலிருந்து நாம அறிந்து கொள்வது, தெரிந்து கொள்வது, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சியதிகாரத்தைச் செய்தவர்கள், அவர்களின் சந்ததியர்களை வந்தேறிகள் என்றும், அதிகாரமற்று பிழைப்பு தேடிப் புகுந்தவர்களை ஏதிலியர் அல்லது புலம் பெயர்ந்தவர்கள் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.

vandherigalஆனால், தோழர் பாரதிநாதன் முன் வைக்கும் வந்தேறிகள் என்பது முற்றிலும் வேறானது. இவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமில்லாக் கூலித் தறியோட்டிகள். தமிழ்ப் பாட்டாளிகள். சொந்த மண்ணில் வேர்கள் இருந்தும், அது கொடிய வறுமையாலும், முதலாளித்துவத்தாலும் அறுபட, அறுக்கப்பட, பிழைப்பிற்காக தமிழகத்திலிருந்து வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு தமிழக ஆந்திர விளிம்புப் பகுதிகளின் எல்லையோரப் பகுதிகளில் புகுபவர்கள். இவர்களைத்தான் வந்தேறிகள் என்று விளிக்கிறார்கள் என்பதாக நாவலாசிரியர் அர்த்தப்படுத்துவது நமக்கு புதிய செய்தியாக இருக்கிறது. புதிய களமாகவும் இருக்கிறது.

சொந்த மண்ணில் வட்டிக்கு வாங்கி, அதைத் திரும்பக் கட்ட முடியாமல் கொத்தடிமையாக வாழ்வது, வட்டிக்கு வாங்கினார்கள் என்ற ஒரே ஒரு காரணத்தாலேயே வாங்கியவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சப் புத்தி மேலிட்டிருக்கிற சிறு குறு தறி முதலாளிகள். அவர்களை எதிர்க்க முடியாமல்... வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல்.... தன் வீட்டுப் பொண்டு பிள்ளைகளை அவர்களின் காமப் பார்வையிலிருந்து தப்பிக்க வைக்க, குடும்பத்தோடு இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடுவது ஒரு வகை என்றால்... நாவலின் முதன்மைப் பாத்திரம் வேறு விதமானது. எதிர்க்கிறான். எதிர்த்துப் பார்க்கிறான். போதுமான எதிர்ப்புச் சக்தி கிட்டாதபோது தனியொரு ஆளாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடி விடுகிறான். அப்படி ஓடி தானும் ஒரு வந்தேறியாகி விடுகிறான். வந்தேறிகள் கூட்டத்தில் பயந்தோடுகிறதும் உண்டு, எதிர்த்தோடுகிறதும் உண்டு. இப்படியும் உண்டு. அப்படியும் உண்டு என்று நாவலாசிரியரின் பாத்திர வார்ப்பைப் பார்க்கிறபோது, நமக்கு உழைப்பைத் தவிர ஏதுமற்ற உழைக்கும் மக்களின் இருவேறு தன்மைகளையும் ஒருசேர நமக்குப் புரியவைத்துவிடுகிறார் நாவலாசிரியர். அது உழைக்கிற மக்களின் அசலான தன்மையை நமக்கு புரிய வைக்கிறது.

நாவலின் முதன்மைப் பாத்திரம் சந்துரு. தன் சொந்த ஊரிலிருந்து...(?) இந்த சொத்துடைமைச் சமூகத்தில் சொந்த ஊர் என்றால் சட்டென்று வேறொரு அர்த்தம் வந்துவிடுகிறது. ஆனால், பிறந்து வளர்ந்த ஊரைத்தான் நாம் சொந்த ஊர் என்கிறோம்... அல்லது என்பதாக நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். இளமைத் துடிப்பிலோ அல்லது கந்து வட்டிக்காரன் கொடுமையைத் தாங்க முடியாத நிலையிலோ அல்லது சாரத்தில் ஒரு பொதுவுடைமைக் கட்சிக்காரரின் மகன் என்கிறதால் இயல்பாய் எழும் முதலாளித்துவ எதிர்ப்பு, மரபணுவில் ஊறிய குணாம்சம், இவற்றில் ஏதோ ஒன்றினால் எதிர்த்து எழுந்து, கந்து வட்டிக்காரனைத் தாக்கிவிட்டு, ஊரைவிட்டு ஓடிப்போகும் வெற்றுக் கோபம் கொண்ட ஒரு இளைஞன், வந்தேறியாய்... போன இடத்தில் தன்னையொத்த பிற வந்தேறிகளின் துயர்கண்டு பொறுக்கவொண்ணாது இயல்பாய் கொதித்து, எதிர்த்துப் போராடி, தளைப்படுத்தப்பட்டு, பின் உழைக்கும் வர்க்கத்தின் துயர் துடைக்க உதித்தெழுந்த புரட்சிகரத் தோழர்களின் அரவணைப்பாலும், அரசியல்படுத்தலாலும் கொஞ்சங் கொஞ்சமாக உழைக்கும் வர்க்கத்தின் தலைவனாக படிப்படியாக உருமாறும் யதார்த்தமான
புனைவற்ற தெளிவான பாத்திர வார்ப்புதான் சந்துரு.

துவக்கத்திலிருந்தே முன் கோபக்கார துணை முதன்மைப் பாத்திரமான மாதேசு, கந்தப்பன், ஏழுமலை, உற்ற... நன்கு தெரிந்த பெயர்களைக் கூட கட்டென்று உச்சரிக்கத் தெரியாமல் நாவல் முழுக்க அவஸ்தைப்படும் ஓபுளி, கலை இலக்கியக்காரன் சிற்பி, மச்சக்காளை, பச்சையப்பன் என விசைத்தறி கூலித் தொழிலாளர்கள். மலையடியில் கல்லுடைக்கும் அனுமந்து, கொண்டையா, பாலியல் தொழில் செய்யும் சரிதா, சுந்தரி உள்ளிட்ட தோழிகள், கூலிகளுக்கு சாப்பாட்டுக் கடை நடத்தும் அங்கம்மாள், இவர்களோடு சிறு குறு விசைத்தறி முதலாளிகள், அவர்களின் மனைவிமார்கள், மெல்ல மெல்ல வளர்ந்து மாணவர் தலைவனாகும் இளங்கோ, எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சிகர இயக்கத்தின் வசீகரன், தோழர் அனுராதா, கொஞ்ச நேரமே வந்தாலும் ஒரு புரிதலுள்ள வளர்ப்பிற்கு அடையாளமாய் வசீகரன் மகள் நிர்மலா, கடைசிவரை தலைமறைவாயும் பெயர் மறைவாயும் இருக்கிற தலைவர், என சரியான கவனமான வர்க்கச் சேர்க்கையினை நாவலாசிரியர் கட்டமைத்திருப்பது சரியானதும் சிறப்பானதும், களத்தில் நிற்பவர்கள், களத்தினைச் சமைப்பவர்கள் படித்துக் கொள்ள வேண்டியதுமாகும்.

எதிர்நிலைத் பாத்திரங்களாக... முதலாளித்துவம், ஒட்டுண்ணி முதலாளிகள், அவர்களுக்குத் துணை போகும் காவல்துறை, கருங்காலித்தனம் புரியும் சிறு குறு முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த கைப்பாவைகள், கூலிப்படை ரவுடிகள், எனச் சரிக்குச் சரியாய் எதிர்நிலைப் பாத்திரங்களையும் கட்டமைத்திருப்பது சிறப்பு. அது நாவலின் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்கும் வாசக ஈர்ப்பிற்கும் தகுந்த எதிர் முகம் கொடுக்கிறது

அடுத்து நாவல் முழுக்க குறுக்கும் நெடுக்குமாய் தடதடத்து ஓடும் ரயில். நல்லதொரு சிறப்பான குறியீடு. உண்மையில் ரயில் தன்போக்கில் ஓடவில்லை. இயக்குகிறார்கள். பயணிகளை ஊர் சேர்க்க, அதேசமயம் அரசு, 'சேவை' என்கிற பெயரில் பணம் சம்பாதிக்க.... வந்தேறிகளும் தன்போக்கில் ஓடவில்லை. வயிற்றுக்காக சலியாது இயங்குகிறார்கள். முதலாளித்துவம்.... அதன் கொடூர லாபப் பசி வேட்கையால் வந்தேறிகளை ஓட ஓட வைக்கிறார்கள். வந்தேறிகளும் எதிர் முகம் கொடுக்கிறார்கள் என்றாலும், அவர்கள் வாழ்க்கைப் பயணம் என்பது மகிழ்ச்சியாக இயல்பாக ஓடவில்லை. அதிர்ந்து தடதடத்து எதிர்முகம் கொடுத்து குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது என சிறப்பான குறியீட்டில்.

அடுத்து நாவலில் மனோகரமான இடம் அரப்புக் காட்டு மயில்கள். பழகியவர் குரலுக்கு, அரவணைப்பிற்கு, தத்தித்தாவி ஓடி வரும் மயிற்கூட்டம். குறிப்பாக பாபு. அதன் வாஞ்சை, அரவணைப்பு, குதூகலம், மகிழ்ச்சி, அது சரிதாவை மட்டுமல்ல. பொன்னியையும் பொங்கவைக்கிற அற்புதக் காட்சிப்படுத்தல்.

ஒரு பெரிய திரைச்சீலையில் ஊடும் பாவுமாக மிக அற்புதமான பாத்திரங்களையும், அவர்களின் குணவியல்புகளையும், வாழ்க்கை அனுபவங்களையும், போராட்டங்களையும், போராட்டக் களங்களுக்கிடையே... அவர்களுக்கிடையே எழும் மெலிய சந்தோஷங்களையும், கேலிகளையும், கிண்டல்களையும், அதேசமயம் பாட்டாளிகளின் வலிகளை, வேதனைகளை, வாழ்வனுபவங்களை, போராட்டக் களங்களை, களமாடல்களை, அவற்றினூடே அவ்வப்போது எழும் தற்காலிக வெற்றி பிறகு இறுதி வெற்றி என அற்புதமான நெசவு செய்திருக்கிறார்.

தோழர் பாரதிநாதனின் 'தறியுடன்' நாவலுக்குப் பிறகான 'வந்தேறிகள்' அவருடைய படைப்பு வரிசையில் அடுத்த மைல்கல்லாக மிளிர்கிறது.

வந்தேறிகள்
இரா.பாரதிநாதன்
பக்கங்கள் 379
விலை 325
வெளியீடு: மதி நிலையம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It