புகுஷிமா அணு உலை விபத்து தலைப்புச் செய்தியாய் இருந்த காலம் மாறி, 2ஜி ஊழல், கனிமொழி கைது, ராம்தேவ், அண்ணா ஹசாரே, புதிய ஆட்சி, சமச்சீர் கல்வி ஒழிப்பு என்று தலைப்புச் செய்திகள் மாறிவிட்டன. எனினும் ‘பூவுலகு’ எதிர்கால அழிவை ஒத்திகை செய்து பார்த்த புகுஷிமா அணு உலை விபத்திலிருந்து விலக விரும்பவில்லை. அணு உலைகள் எப்பொழுதுமே ‘பூவுலகி’ற்கு நிரந்தரத் தலைப்புச் செய்திதான். அணு சக்தியும், அணு உலைகளும் எப்பொழுதுமே மனிதனின் சிறிய கைகளுக்குள் கட்டுப்பட்டு நிற்கும் என்பது மடத்தனம். செர்னோபில், மூன்று மைல் தீவு, புகுஷிமா, இன்னும் எண்ணற்ற விபத்துகள் நடந்தாலும் அணுகுண்டுகளும், அணு உலைகளும் ஒரு நாட்டின் ஆணாதிக்க விறைப்புத்தன்மையின் குறியீடாக இருப்பதால் யாருக்கும் பிற உயிர்களைப் பற்றிக் கவலையில்லை. புகுஷிமா அணு உலை விபத்து நடந்த பிறகு ஜெர்மன் அரசு 2022க்குள் தன்னுடைய அனைத்து அணு உலைகளையும் மூடப்போவதாக அறிவித்திருக்கிறது. புகுஷிமாவின் எல்லா அபாயங்களையும் கண்ணால் பார்த்த பிறகு இந்தியா மேலும் ஐந்து அணு உலைகளைக் கட்டப்போவதாக அறிவித்துள்ளது. இதை விட நமக்கு அபாயம் என்னவெனில் 2022க்குள் 20 புதிய அணு உலைகளைக் கட்டப்போவதாக சீனா அறிவித்துள்ளது.

1960களில் இருந்து அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவோ 100 வருடங்களுக்கும் மேலாக நிலநடுக்கத்தின் பிடியில் இருந்து வருகிறது. நில நடுக்கத்தில் மிதக்கும் அணு உலைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அணு உலை விபத்து என்பது உலக அளவில் முற்றிலும் வேறான ஒரு பிரச்சனை. ஆனால் ‘இந்தி யாவில் அணு உலைகள்’ என்பது நாடே மூழ்கிப்போகும் அள விற்குப் பெரிய பிரச்சனை. ஏனெனில் இந்தியாவில் அழிவுகளும், விபத்துக்களும் நடந்த பிறகு நாமும், நமது அரசும் எவ்வாறு அதைக் கையாள்கிறோம் என்பதை வைத்தே சுற்றுச்சூழல்வாதிகள் அணு உலை கள் வேண்டாமென்கிறார்கள். போபால் விபத்து ஒன்றே போதும், நமது அரசின் வேகத்தையும், கரிசனத்தையும் கணிப்பதற்கு.

இந்தியாவில் விபத்துக்களும், அழிவுகளும் குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமே பாதிக்கிறது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தியாவில் ‘சமூகம்’ என்பதே ‘சாதிச் சமூகம்’ என்றுதான் பார்க்க வேண்டும். எனவேதான் அம்பேத்கர் இந்தியா ஒரு தேசமே அல்ல என்று குறிப்பிட்டார். இதை எப்படி புரிந்து கொள்ளலாம் எனில் போபால் விபத்தில் இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை. ஆனால் டெல்லியில் உபகார் திரையரங்கம் எரிந்தபோது அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினர். நாடே கொந்தளித்தது. போபால் அழிவை விட திரையரங்க எரிப்பு முக்கியமாக மாறி நீதி வழங்கப்பட்டது. போபா லில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி யாருக்கும் கரிசனமில்லை. அதே நிலைமைதான் அணு உலைகளில் நடைபெறப்போகிறது. அணு உலைகளைச் சுற்றி இருப்பவர்கள் மீனவர்களும், ஏழை மக்களும்தான். அதிகம் பாதிக்கப்படுவர் அவர்களே. நாம் மீண்டும் நினைவூட்டவேண்டியது என்னவெனில் அணு உலையில் விபத்து என்று ஏற்பட்டால் கதிர்வீச்சுக்கு சாதியும், வர்க்கமும் கிடையாது, எல்லோரும் அழிந்து போவோம் என்பதுதான். அணு உலைகளின் முன் நாம் அனைவருமே சின்னஞ்சிறு உயிர்கள்தாம். அதை எதிர்த்துப் போராட வேண்டியதும் சின்னஞ்சிறு உயிர்களாகிய நாம்தாம்.

Pin It